அண்மையில் நாம் இழந்த ஒரு மஹா புருஷர்
J.K. SIVAN
'' அவாளுக்கு என்ன பேர்?''
''ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் சேவா சங்கம்''
''என்ன பண்றா?''
பெரியவா காதில் skss பற்றிய சேதி விழுந்தது. குழந்தைகளுக்காக ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதிய நமது இலவச வெளியீடுகள் அவர் கைகளில் தவழ்ந்தது. விசாரித்தார். சந்தோஷப்பட்டார். அவரது 81வது ஜெயந்தி விழா வெகு சிறப்பாக சென்னை கிருஷ்ண காண சபாவில் தி.நகரில் 3.10.2015 அன்று நடந்தது. ஒவ்வொரு ஜெயந்தியின் போதும் தனது ஜெயந்தியோடு ஒட்டி மக்கள் சேவை, மகேசன் சேவையில் மிகச்சிறப்பாக , ஈடுபடுபவர்களை ஊக்குவித்து பாராட்டுவது வழக்கம்.
ஆச்சர்யமாக, இந்த வைபவத்தில், கிருஷ்ண கான சபாவில் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் சேவா சங்கத்தின் ஆன்மீக இலவச நூல்கள் இளைய தலைமுறையை அடைய இரவு பகல் சேவை செய்து உழைக்கும் அடியேனை பாராட்டி ''பகவத் சேவா ரத்நா '' விருதை வழங்கினார் புதுப்பெரியவா. ஒருநாளைக்கு ஒரு லக்ஷத்துக்கும் அதிகமான இந்துக்கள், உலக அளவில் அன்றாடம் படித்து மகிழ பலபல ஆன்மீக செய்திகளை, மின்னஞ்சல், முகநூல், வாட்சாப் தொலைபேசி கருவி மூலம், சென்றடையும் சேவையில் என்னை ஈடுபடுத்திக்கொண்டு வரும் எனது வாழ்வில் இந்த எண்பது வருஷங்களில் அடையாத பெரும் பாக்யம் இந்த பெரியவாவின் விருது என்று கருதுகிறேன்.
சில மகான்களை நாம் அவர்கள் வாழ்நாளில் சரியாக புரிந்து கொள்வதில்லை. சில துறவிகள் தங்கள் கடமையை ஆற்றும்போது தமது சக்தியை காட்டிக்கொள்ளமாட்டார்கள். சேஷாத்திரி ஸ்வாமிகள், தபோவனம் ஞானந்தர், எண்ணற்ற யோகிகள் போல். உலகம் பின்னால் அதை உணர்ந்து பேசும்போது அவர்கள் இருக்க மாட்டார்கள்.'' நான் தான் கடவுள் என்னை வணங்கு என்று அப்பாயிண்ட்மெண்ட் கொடுத்து ரூபாய் ஆயிரத்துக்கு ஒரு மாதிரி, ஐந்தாயிரத்துக்கு வேறு மாதிரி விசேஷமான தரிசனம், அருள்வாக்கு கொடுக்கும் வியாபாரிகள் அல்ல அவர்கள்.
''நான் இச்சா சக்தி என்றால் ஜெயேந்த்ரர் க்ரியா சக்தி '' என்று மகா பெரியவா பரமாச்சாரியார் சொல்லியிருக்கிறார். மஹா பெரியவா இருந்த இடத்திலேயே உலகில் ஆன்மீக சக்தியை பரப்பினாலும் சங்கர மடத்தின் சமூக, மக்கள், பக்தி, ஆன்மீக சக்தியை, சேவையை, உலகளாவ மெச்ச வைத்த ஒரு காவியுடை துறவி புதுப் பெரியவா. காஞ்சி மடத்தின் பெயர் ஒவ்வொரு ஹிந்துவுக்கு உலகளவில் புரிய, தெரியவைத்தவர் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி.
நீ எழுது என்று சொன்னதும் குருவின் வாக்கை நிறைவேற்ற ''ப்ரம்ம சூத்ர பாஷ்யத்தை ''குரு ப்ரியா' என வழங்கியவர். ஒவ்வொரு ஆன்மீகம் தேடும் மாணவனும் எளிதில் புரிந்து கொள்ள சுருக்கமாக எழுதப்பட்ட நூல்.
பூஜைகள், தியானம், அருளாசி, தரிசனம், குருவந்தனம் தவிர, நாடெங்கும் வேத பாடசாலைகள் நிறுவி பாரம்பரியம் காத்தவர். ஆலயங்கள் எத்தனையோ கேட்பாரின்றி, வழிபாடின்றி நமது தமிழ் நாட்டிலேயே பல இடங்களில் இடிந்து, இடிக்கப்பட்டு, மறைந்து, அழிக்கப்பட்டு, சிதிலமான மற்றும் முழு பழைய காலஆயிரக்கணக்கான, நூற்றுக்கணக்கான வருஷங்களாக பூஜிக்கப்பட்ட விக்கிரஹங்கள் வழிபாடின்றி வெய்யிலிலும் மழையிலும் வெளியே, வயலில், எங்கோ மூலையில் இருப்பதை எல்லாம் ஒரு பூரண தீவிர சக்தியோடு வெளிக்கொணர்ந்து அவற்றை புனருத்தாரணம் செயது மீண்டும் வழிபாட்டுக்கு உகந்ததாக செய்யும் திருப்பணி தான் ஆலயவழிபாட்டுக் குழு. அதில் நானும் ஒரு அங்கத்தினன் என்ற பெருமை என் பாபங்களை தொலைக்கும். பல இடங்கள் இவ்வாறு சென்ற ஆங்காங்கு உள்ளூர் மக்களை வழிபாட்டு முறைகள் அறிய செய்திருக்கிறோம். இது தவிர தீவிரமாக ஹிந்து மதத்தினரை மதம் மாற்றும் முயற்சிகளை தக்க சமயம் தடுத்து, குறைத்து, நமது மதத்தின் பெருமையை ஒவ்வொருமூலையிலும் தெரியச் செய்தவர் புதுப்பெரியவா. அகில இந்திய அளவில்,பிற மதத்தினரும் போற்ற,மரியாதை பெற்றவர் அவர்.
எத்தனை ஹிந்து மருத்துவ சிகிச்சை மனைகள், குழந்தைகளுக்கு விசேஷ மருத்துவ மனை, கண் வியாதி நீக்கும் சங்கர கண்ணொளி மருத்துவ மனைகள் ஏழைகளுக்கு, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சலுகைகள், கல்லூரிகள், பள்ளிகள் , கல்விச்சாலைகள், வேத பாடசாலைகள் அடாடா, நாடெங்கும் இந்துமதத்தின் பழம்பெருமைகளை மீண்டும் '' புது'' ப்பித்து தந்த அந்த துறவிக்கு என்ன பொருத்தமான பெயர் ஆஹா. ''புதுப்பெரியவா''. அதற்கு என்ன பரிசு. ஏளனம். அபகரிக்கும் கும்பலின் ஆக்கிரமிப்பு. அடாவடி குற்றச்சாட்டுகள். தண்டனை. அவமரியாதை. எதையும் தாங்கும் அந்த இதயத்திற்கு எப்பவோ வலித்திருக்கும்.
அவர் யார்? நடமாடும் கடவுளாக நாம் பூஜிக்கும் மஹா பெரியவாள், நாடு முழுதும் தேடி, நன்றாக யோசித்து ஆற அமர அலசி, தேர்ந்தெடுத்த ஒரு 19வயது சிறந்த சரியான வாரிசு என்ற சுப்பிரமணியன். சொந்த ஊரே ''இருள் நீக்கி''. அஞ்ஞான இருள்,அதர்ம இருள், அக்கிரம இருள், ஆன்மீகத்தில் சிறந்த இந்த பழம்பெரும் பாரத நாட்டை சூழ்ந்து பூதாகாரமாக வளர்கிறதே இதை நீக்க ஒரு ஞான ஒளி வேண்டுமே என்று மஹா பெரியவா தீர்க்க தரிசனமாக கண்டெடுத்து 69வது பீடாதிபதியாக தனக்கு அடுத்த வாரிசாக நியமித்தனர். அவரே புதுப்பெரியவா. ஜன ஆகர்ஷணமும், தன ஆகர்ஷணமும் இவரை அன்றி எந்த மடாதிபதிக்கும் இந்த அளவு கிட்டவில்லை. போற்றுதல் தூற்றுகள் எல்லாவற்றுக்கும் பிரதிபலிப்பு களங்கமற்ற குழந்தையின் புன்சிரிப்பே.
யாரோ கேட்டதற்கு அவர் சொன்ன ஒரு முத்தான வார்த்தை :
''இந்த ஐம்பது வருஷமா மடத்தில் ஜகதகுரு என்று நான் இருந்து என்ன பயன். நான் என்ன செய்தேன்?. அது எப்படி ப்ரயோஜனமா மக்களுக்கு போய் சேர்ந்தது?. அப்படிப்பட்ட செயல் செயதிருந்தா, அது தானே பேசும். நாம் தம்பட்டம் அடிக்கவேண்டாம் '' .
இது 2003 பீடாரோஹண ஜெயந்தி மஹோத்சவத்தில் ஓப்பனா அடக்கமாக அவர் சொன்ன இதயத்திலிருந்து எழும்பின வார்த்தை.
புதுப்பெரியவா எப்போதும் '' மானவ சேவா தான் மஹேஸ்வர சேவா'' என்று சொல்லிண்டே இருப்பார். அதே ஜபம் என்கிறார் இளைய பால பெரியவர், ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி .
பட்டி தொட்டியில் எல்லாம் ஆன்மீக வகுப்புகள் , குழந்தைகளுக்கு தேவாரம், திருப்புகழ், போன்ற இனிய பாடல்கள் சொல்லித்தர ஏற்பாடு போட்டிகள் வைத்து பரிசு. கிராம மக்களின் பஜனை சபைகள், கூட்டு அமைப்புகளுக்கு வாத்தியங்கள், அவர்களை எல்லாம் அழைத்து பாராட்டு, இதை எல்லாம் அவர் செய்வதை நான் என் கண்ணால் அனைத்தையும் பார்த்திருக்கிறேன். பங்கேற்றிருக்கிறேன்.
இதுவரை கைலாசம், கேதார்நாத் சென்ற சங்கராச்சார்யர்கள் இருவரே. ஆதி சங்கரர், 69வது சங்கரரான ஜெயேந்திரர்.
இரு நூறு வருஷங்களுக்கு முன்பு தஞ்சாவூர் வெண்ணாத்தங்கரையில் உள்ள சாத்தனுர் கிராமம் இப்போது உருவத்தில் மட்டும் இல்லை பேரிலும் சிறிது மாறி தண்ணீர் குன்றம் சாத்தனூராகிவிட்டது. அந்தக்காலத்தில் இருந்த வடம பிராமண குடும்பத்தில் ஒருவர் தான் கேசவய்யர்.ரிக்வேதகாரரர். ஒளஸத்ய கோத்ரம். அந்த வம்சத்தில் பிறந்த ஒருவர் பஞ்சாபகேசய்யர் . அவர் மனைவி யோகாம்பாள். அவர்கள்மகன் மஹாதேவய்யர்.
மஹாதேவய்யர் இருள்நீக்கி எனும் ஊரை சேர்ந்த ராமாமிர்தம் அய்யர் மகள் சரஸ்வதியை மணந்தார். ரயில்வே உத்யோகம். அந்த ஊர் மன்னார்குடி யிலிருந்து 3 கி.மீ.
ஒருநாள் மஹாதேவய்யர் வீட்டுக்கு ஒரு சந்நியாசி வந்தார். தம்பதிகள் அவரை உபசரித்தனர். சில ப்ராயச்சித்தங்கள் செய். நல்ல பிள்ளைக்குழந்தை, சத் புத்திரனாக பிறப்பான் என்று ஆசிர்வதித்தார் அந்த யோகி.
நமது அஞ்ஞான இருள் நீக்கியாக அவதரித்தவர் தான் ஸரஸ்வதி பெற்றுத்தந்த செல்வம் ஜெயேந்திர சரஸ்வதி.
No comments:
Post a Comment