Tuesday, March 6, 2018

PESUM DEIVAM

பேசும் தெய்வம் - J.K. SIVAN

தீர்க்க தரிசனம்

பிப்ரவரி மாதமே இன்னும் முடியவில்லை. அதற்குள் இவ்வளவு கொளுத்தும் வெயிலா? ஒரு ஈர துண்டை மேலே போட்டுக்கொண்டு அறையில் உட்கார்ந்திருந்தேன். மேலே மின் விசிறி நெருப்பை வீசிக்கொண்டு இருந்தது. ஈர துண்டு அதை எதிர்த்து என்னை கொஞ்சம் குளிர்வித்துக்கொண்டு இருந்தது.

டொக் டொக் என்று கதவைத் தட்டினது யார்? எழுந்து கதவைத் திறந்தபோது வாசலில் மார்க்கண்டேயன் என் தூரத்து உறவினர். திருச்சிக்காரர்.

எங்கே இந்த வெய்யிலில் வந்தீர்கள்?

''என் நண்பன் வீட்டில் ஒரு ஆண்டுநிறைவு, என்னால் தட்ட முடியவில்லை. அங்கே சென்று குழந்தையை வாழ்த்தி விட்டு இங்கே வந்து உங்களையும் பார்த்து பேச விரும்பினேன். முக்யமாக...

என்ன?

பெரியவா கர்நாடகாவில் எங்கோ ஒரு டாக்டரை ஞாபகம் வைச்சுண்டு பார்த்தாராமே. அப்படி ஒரு அதிசயம் நடந்ததாமே. அது என்ன தெரியுமா?

நானும் எங்கோ படித்தது ஞாபகம் இருக்கிறது. சொல்கிறேன் கேளுங்கள்:
நேபாள மன்னரது வேண்டுகோளை ஏற்று பெரியவா மடத்து சிப்பந்திகளோடு பிரயாணம் தொடங்கினார். போற வழியில் எல்லா இடத்தி லேயும் ஜன வெள்ளம் அலைமோதியது. அவர்களை ஆசீர்வதித்தபடியே தனது யாத்திரை தொடர்ந்தார் பெரியவா.

அவர் தான் வேக வேகமாக நடப்பாரே . அவர் வேகத்துக்கு மற்ற மடத்து ஆசாமிகளால் ஈடு கொடுக்க
முடியவில்லை. எல்லோர் காலும் சிவப்பாக, கல் குத்தி, காயம் பட்டு, அடிபட்டு, ரத்தம் கசிந்து சிந்தி நடக்கவே கஷ்டமாக போய்விட்டது.

கர்நாடக எல்லை வந்தாயிற்று. அங்கே ஒரு கிராமத்துக்குள் பிரவேசித்தார் ஸ்வாமிகள். செய்தி பரவி கிராமமே திரண்டது. சகல மரியாதைகளுடன் வரவேற்று ஆரவாரமாக ஊர்வலம். பெரியவா மற்றவர்களால் நடக்கமுடியவில்லை, பாதங்கள் சிவந்து ரத்தக்கசிவு. பெரியவாவின் கூர்மையான பார்வை இதை கவனித்துவிட்டது. ஆனால் ஒன்றும் பேசவில்லை. சற்று நேரம் யோசனையில் ஆழ்ந்தார்.

அந்த ஊர்பக்கத்திலிருந்து ஒரு டாக்டர், நஞ்சப்பான்னு காஞ்சிபுரம் வருவாரே.. அந்த ஊர் பேர் சொல்லி அது எங்கே இருக்கிறது'' என்கிறார்.

''இங்கே தான் பக்கத்திலேயே இருக்கிறது என்று அறிந்ததும் ''உங்களில் யார் யாருக்கு நடக்க முடியுமோ அவா ரெண்டு மூணு பேர் மட்டும் அந்த ஊருக்குப் போங்கோ. டாக்டர் நஞ்சப்பாவை பார்த்து, ‘பெரியவா உங்களைப் பார்க்கணும்னு சொன்னார்னு அவரை இங்கே அழைச்சுண்டு வாங்கோ!’’என்றது பேசும் தெய்வம்.
அவர்கள் சென்றார்கள்.

அதன் பிறகு பெரியவா பக்கத்தில் இருந்த அம்மன் கோயில் மண்டபத்தில் தங்கி விட்டார். மீதி பேரை அந்த கிராம வைதீக பிராமணர்கள் தங்கள் இல்லங்களுக்கு அழைத்துச் சென்றனர்.

ரெண்டு மடத்து சிஷ்யகோடிகள் தேடி கண்டுபிடித்து டாக்டர் நஞ்சப்பாவைப்பார்த்து விஷயம் சொல்லியபோது டாக்டருக்கு ஆச்சரியம்!

'' அடாடா, பெரியவாவின் ஞாபகசக்தி எப்படிப்பட்டது. காஞ்சி மடம் சென்று பெரியவாளை நான் தரிசித்தது ஒரே ஒரு முறைதான். அதுவும் சுமார் பத்தாண்டுகளுக்கு முன்னதாக, எனினும் பெரியவா என்னை மறக்காமல் இருக்கிறாரே’ '' கொஞ்சமும் கால தாமதம் மதிக்காமல் டாக்டர்கள் அந்த மடத்து சீடர்களுடன் காரில் ஏறிப் புறப்பட்டார்.

கிராமத்தில், அம்மன் கோயில் முன்பாக காரைநின்றது. டாக்டர் நஞ்சப்பா பரமாச்சார்யரின் பாதங்களில் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தார்.

அவரிடம் தொழில், குடும்ப நலன்களைப் பற்றி விசாரித்த பெரியவா, தம்முடன் வந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்குமாறு கேட்டுக் கொண்டார். டாக்டர் மடத்துப் பணியாட்களின் பாதங்களைப் பரிசோதித்து, காயங்களுக்கு உரிய மருந்திட்டு, தேவைக்கேற்ப கட்டும் போட்டு விட்டார்.

‘டாக்டர் ஐயா, நீங்க ஒரு உபகாரம் பண்ணணும்’’ என்றனர் மடத்தின் பணியாட்கள்.

‘‘என்ன செய்யணும், சொல்லுங்க ளேன்.’’

‘‘ஒண்ணுமில்லே… கால்கள் குணமாக ரெண்டு நாளாகலாம். அதுவரை இங்கேயே தங்கலாம் னு நீங்கதான் பெரியவாகிட்டே சொல்லணும்.’’

அவர்களின் நிலைமை டாக்டருக்கு புரிந்தது. ‘சரி’ என்று சொல்லி, பெரியவாளிடம் சென்றவர் தரையில் அமர்ந்தார். பிறகு, ஏதோ சொல்ல முற்பட்டவரைக் கையமர்த்திய பெரியவா,

‘‘என்ன… ரெண்டு நாட்கள் இந்தக் கிராமத்துலேயே தங்கிட்டுப் போங்கோனு என்கிட்டே உங்களைச் சொல்லச் சொன்னாளா?’’ என்றார் பெரியவா.

டாக்டருக்கு வியப்பு. ‘பெரியவா தங்கியிருப்பது கோயில் மண்டபத்தில். அப்படியிருக்க அடுத்த வீதியில் தங்கி இருக்கும் பணியாளர்கள் சொன்னதை அட்சரம் பிசகாமல் நம்மிடம் சொல்கிறாரே!’ என்று அதிசயப்பட்டார் டாக்டர் நஞ்சப்பா.



‘‘கவலைப்படாதீங்கோ… ரெண்டு நாள் என்ன… அவாளோட கால்கள் குணமாகற வரைக்கும் இங்கே தங்கி, அப்புறம்தான் பொறப்படுவேன்’’ என்று அந்த நடமாடும் தெய்வம் புன்னகைக்க… கண்ணீர் மல்க கைகூப்பி நமஸ்கரித்தார் டாக்டர் நஞ்சப்பா.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...