Saturday, March 31, 2018

AF


ரகசியத்தை சொல்லட்டுமா?
J.K. SIVAN

கோபம் என்பது திடீரென்று வருவது. ஆனால் எனக்கு சொல்லி வைத்தாற் போல் ஒரு நாள் கோபம் வரும். யார் மீது?. என் மீதே தான், ஒரு குறிப்பிட்ட நாள் மீது. சிரிப்பும் வரும் ஒருவர் மீது. ஸ்ரீமான் சூளைமேடு சுப்ரமணிய ஐயர் என்பவர் மீது. என்னை உலக முட்டாள் தினத்தில், ஏப்ரல் முட்டாளாக்கிய மஹாநுபாவன்.

ஏப்ரல் முதல் நாள் என் மனைவி பிறந்தாள். பரிசுகள் வாழ்த்துகள் எல்லாம் நிறைய பெற்று களிக்கிறாள். எனக்கும் அன்று நிறைய வாழ்த்துக்கள் வருகிறது. அவள் பிறந்ததற்காகவோ அவள் கணவன் என்பதாலோ இல்லை சார், நான் ''பிறக்காமல்'' பிறந்ததற்காக. உலகத்தில் அந்த நாள் நான் 80க்குள் நுழைந்தாதாக அர்த்தம். .

உலகம் பூரா எனக்கு தெரிந்தவர்கள் என்னை வாழ்த்திடுவது ஏப்ரல் 1ம் நாள். ஒரு ''உம்மையை சொல்வதானால் '' அது 'நான் பிறக்காத எனது பிறந்த நாள்' .d

பிறந்த நாள் அன்று இப்போது எல்லோருமே ஒரே வீட்டில் இருந்தாலும் ஒருவரை ஒருவர் நேரில் பார்க்காமலேயே. பக்கத்து அறையிலிருந்தே வாழ்த்து கூற முடிகிறது. வாட்சாப், face book, மெஸ்செஞ்சர், ஐபேட், லேப்டாப் போன்ற வசதி உபகரணங்களினால் முடிகின்ற சமாசாரம். அநேகமாக மொபைல் போனில் sms அனுப்புவதிலும், வாட்ஸாப்பில் வாழ்த்துவதுமாக மனிதே நேயம் சுருங்கியுள்ளது.

சற்றைக்காலத்துக்கு முன்பு க்ரீடிங் கார்ட் இமெயிலில் வந்து கொண்டிருந்தது.

அதற்கும் முன்பு போஸ்டில் '' சார், போஸ்ட்'' என்று கூவிக்கொண்டு வாசலில் விழுந்தது.

அதற்கும் முன்னால். டெலிபோனில் ''அல்லோ அல்லோ'' என்று கத்தி நான்கு ஐந்து முறை கட் ஆகி, ராங் நம்பர்களோடு கொர கொர வென்ற சத்தத்தோடு அலைமோதும் இரைச்சலோடு ''என்னடா சிவப் பயலே, சவுக்கியமா. உனக்கு பொறந்தநாளாச்சே இன்னிக்கு. க்ஷேமமாக இரு'' என்று பெரியவர்கள் குரல் கேட்கும். ''சாப்பிட்டியா'' என்று நடு ராத்திரி நன்றாக தூங்கும்போது கூட உள்ளூரிலிருந்து கூட டெலிபோன் அலையோசையோடு வெளியூர் கால் மாதிரி வரும்.

அந்த கால கட்டத்திற்கும் முன்பு பின்னோக்கி போனால், ''' இப்பவும் அனேக ஆசீர்வாதம், உன்னுடைய பிறந்த நாளுக்கான வாழ்த்துக்களை அனுப்புகிறேன். திட காத்ரமாக நோய் நொடியின்றி சிறஞ்ஜிவியா இருக்க பகவானைப் பிரார்த்திக்கிறேன் '' என்று போஸ்ட்கார்டில் ஒண்ணரைப்பக்கம் சிறிய எழுத்துக்களில் 100 வரியாவது எழுதி போன வாரம் எழுதினது சென்னைக்கு நான்கு நாள் கழித்து வந்து சேரும்.

அதற்கும் முன்பு -- நாம் இப்போது இன்னும் 50- -60 வருடங்களை கடந்து பின்னால் சென்று விட்டோம். --- அவரவர் வீட்டில் பாயசம் மட்டும் இலையில் கொஞ்சம் விழும். வழக்கமானவர்களைவிட அண்டை அசலில் இருந்து சில நெருக்கமான உறவினர் வருவர். பெரியவர்கள் நமஸ்காரம் பெற்று ஆசிதருவர். சிறியவர்கள் நமக்கு நமஸ்காரம் பண்ணி கையில் சில்லறை பெறுவார்கள்.

ஒரு விஷயம். பிறந்த நாளை ஆங்கிலேய மாதத்தில் தேதியில் கொண்டாடும் வழக்கமில்லை. தமிழ் மாசம் தேதி தான் ஏற்றுக் கொள்ளப்படும். உள்ளூர் கோவிலில் ஒரு அர்ச்சனை செய்யப்படும்.

வசதி இருந்தால் ஒரு வேஷ்டி துண்டு வாங்குவோம் அல்லது யாராவது பெரியவர்கள் கொடுப்பதோடு சரி.

விஷயத்துக்கு வருகிறேன்.

எனக்கு இன்று ஆங்கிலேய கணக்குப்படி ஏப்ரல் முதல் தேதி பிறந்த நாள். 79 முடிந்தாகி விட்டது. 80ல் காலை வைக்கிறேன். இது எனது உத்தியோக தஸ்தாவேஜ், பாஸ்போர்ட், பான் கார்டு ட்ரிவிங் லைசென்ஸ், ஆதார் கார்டு பிரகாரம் அன்று தான் பிறந்ததாக ஐதீகம். ஆனால் ஒரு ரகசியம். நான் இன்று பிறக்கவில்லை. நான் பிறக்காமலேயே பிறந்ததற்கு எனக்கு இன்று வாழ்த்துகள் வருகிறது. ஒரு தரம் என்னுடைய பிறந்தநாள் பற்றி எனது தந்தையிடம் பேசியது கவனத்திற்கு வருகிறது.

'' நான் ஏப்ரல் முதல் நாளிலா பிறந்தேன்.?''

''இல்லியே.''

''பின் எதற்கு இந்த தேதி கொடுத்தீர்கள் பள்ளியில்'?'

'' ஒ அதுவா'' என்று மெதுவாக சிரித்தார்.

'' என்ன சொல்லுங்கோ ?''

'' ஒன்றுமில்லை. உன்னைப் பள்ளிக்கூடம் சேர்க்கும்போது ஸ்கூல் வாத்தியார் சுப்ரமணிய அய்யர் ''உம்ம பையனுக்கு என்ன பிறந்த தேதி ? என்று கேட்டார்.

மூக்குக் கண்ணாடிக்கு மேல் வழியாக என் அப்பாவைக் கேட்டு விட்டு சுப்ரமணிய ஐயர் கட்டை ஸ்டீல் நிப் பேனாவை பதிவு ரிஜிஸ்தரிடம் கொண்டு போயிருக்கிறார்.

''எனக்கு சட்டென்று உனது பிறந்த தேதி ஞாபகத்துக்கு வரவில்லை (இதைச் சொன்ன அன்றைக்கு கூட அவருக்கு எனது உண்மை பிறந்த தேதி தெரியாது. பெரிய குடும்பம். நிறைய குழந்தைகள், பலதில் சிலது அல்பாயுசில் மரணம். எஞ்சியதில் மிஞ்சியதற்கு எதற்கு என்ன பிறந்த தேதி என்று அவரால் எப்படி சொல்லமுடியும்?) கிட்டத்தட்ட எல்லா குடும்பங்களிலும் இது தான் நடைமுறையில் அக்கால வழக்கம்.. வைத்த பெயர் ஒன்று, அழைக்கும் பெயர் வேறு. பள்ளியில் இன்னொன்று.

''சரி அப்பறம் என்னாச்சு?''

'சுப்ரமணிய அய்யர் சீக்ரம் சொல்லுங்கோ நிறைய வேலை இருக்கு. ரிஜிஸ்டரில் என்ட்ரி பண்ணனும் என்று என்னை அவசரப்படுத்தினார். எனக்கோ சட்டென்று ஞாபகம் இல்லை '' என்றார்

''புரட்டாசிலே மஹம், ஆனால் என்ன வருஷம் என்று தான் யோசிக்கிறேன்....'' என் அப்பா.

''இங்க்லீஷ் தேதி தான் வேணும். அதைச் சொல்லுங்கோ முதல்லே.''

''.............................''

அப்பாவின் யோசனையை அறுத்தவாறு சுப்பிரமணியர் பார்வை என் மீது விழுந்தது.

''டேய் இங்க வா'' என்று என்னைக் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு போய் கதவின் நிலைப்படியில் நிற்க வைத்தார் சுப்ரமணிய அய்யர். கதவின் நிலையில் பென்சில் கோடுகள் சில தெரிந்தன. என் தலை உச்சி அருகே ஒரு கோடு தென்பட்டது. பரவாயில்லே உயரம் சரியாகத்தான் இருக்கு.

''டேய் பயலே, உன் வலது கையால தலைக்குமேலே கொண்டு போய் இடது காதைத் தொடு''. கஷ்டப்பட்டு தொட்டேன்.

'' சரி பரவாயில்லை. ஆறு வயசுன்னு போடறேன். இன்று என்ன தேதியோ அது லேர்ந்து 6 வருஷம் முன்னாலே' அப்பதான் அட்மிஷன் கிடைக்கும். இல்லேன்னா HM சுந்தரேசன் தொலைச்சுடுவான் என்னை''.

''சரி'' என்றார் அப்பா

''புரியறதா கிருஷ்ணய்யர் உங்களுக்கு ? இன்றைய தேதிக்கு உங்க பையனுக்கு 6 வயது என்று எழுதிக்கிறேன்? '' என்று என்னை எக்ஸ்ரே கண்களோடு கண்ணாடி வழியாக பார்த்தார் வாத்தியார் சுப்ரமணிய அய்யர் ( பாதிநாள் தலைமை ஆசிரியர் வரமாட்டார் எனவே சு. அ. தான் பள்ளிக்கூடத்தின் சர்வாதிகாரி) .

'இல்லேன்னா. இப்படி செய்யட்டுமா? 6 வருஷத்துக்கு முன்னாலே ஏப்ரல் முதல் தேதி என்று போட்டுக்கட்டுமா?'' என்று கேட்டார் சு. அ ,

'' அப்படிப் போட்டால் என்ன ஆகும்? - என் அப்பா.

'' நீங்கள் ஜூலை 1 அன்று வந்திருக்கேள் . ஏப்ரல் 1 என்று D.O .B. போட்டால் மூன்று மாதம் பையன் முன்னாலேயே பிறந்ததாக காட்டும். 6 வயது தாண்டிட்டுது என்று ரெகார்டு பேசும் . சந்தேகமில்லாமே பள்ளியில் சேர்த்துக் கொள்வோம். தேதியும் சுலபமா கவனத்திலே நிக்கும். உங்களுக்கும் உங்கள் பிள்ளை சிவன் பிறந்த தேதி சட்டென்று ஞாபகம் இருக்கும். இப்படி யோசிக்கவோ தடுமாறவோ வேண்டாமே.

''ததாஸ்து'' என்றிருக்கிறார் அப்பா.

இப்படியாகத்தானே இந்த பூவுலகில் நான் சத்தியமாக பிறக்காத ஏப்ரல் முதல் நாள் 1939 அன்று அரசாங்க கணக்கு தொடங்கும் நாளில் ''பிறந்து'' நிறைய பேரிடம் வாழ்த்துகளை வாங்கிக்கொண்டு நன்றி சொல்லிக்கொண்டிருக்கிறேன். என்னைவிட ஒரு சிறந்த ஏப்ரல் முதல் நாள் ''அறிவாளியை'' பார்த்ததுண்டா?

வருஷாவருஷம் என் அம்மா எப்பவோ சொன்ன கணக்குப்படி புரட்டாசி மக நக்ஷத்ரம் அன்று வீட்டுக்கருகில் இருக்கும் திருமால் மருகன் கோவிலில் அர்ச்சனை நடந்து வருகிறது. வீட்டில் பாயசத்தோடு சாப்பாடு. ஒரு மேல் துண்டு புதுசாக அன்று போட்டுக்கொள்கிறேன். அது வெளியே அதிகம் தெரியாத பிறந்தநாள் ரகசிய விழா.



அக்டோபர் 9 என்று ஆங்கில பிறந்த நாள் என் குழந்தைகள் பேரன் பேத்திகள் கொண்டாடி ஏதேதோ பரிசுகள் அளிக்கிறார்கள். எனவே எனக்கு மூன்று பிறந்தநாள்கள். உலகறிந்த சுப்ரமணிய அய்யர் ரெஜிஸ்டரில் தோற்றுவித்த பிறந்த நாள் ஏப்ரல் 1. அதன்படி நான் 79 வருஷங்கள் ப்ரயோஜனமின்றி வாழ்ந்து 80லும் அப்படியே காலம் தள்ள போகிறேன்.

Friday, March 30, 2018

VEDIC RAVI




கிழக்கு தாம்பரத்தில் பலே ஜோர் கல்யாணங்கள்.- J.K. SIVAN

பங்குனி உத்தரம் என்பது சுருக்கமாக பங்குனி மாதத்தில் வரும் உத்தர நட்சத்திர தினம். முருகனுக்கும் தேவானைக்கும் திருமணம். ஸ்ரீ ராமர், லக்ஷ்மணன், பரத, சத்ருக்னர்களுக்கு கல்யாணமான நாளாகவும் வருஷா வருஷம் கொண்டாடப்படுகிறது. இந்த வருஷம் அது ஒரு நல்ல வெள்ளிக்கிழமை அன்று வேறு வந்தது. (GOOD FRIDAY). இதே நாளில் பரமேஸ்வரனுக்கும் பார்வதிக்கும் சோமசுந்தரர் என்றும் மீனாட்சி என்றும் நாமம் கொடுத்து திருமண நாள். மதுரையில் மீனாட்சி கோவிலில் கேட்கவேண்டுமா கூட்டத்துக்கு. சிகரம் வைத்தாற்போல் இன்று தான் ஆண்டாள் ரங்கநாதர் கல்யாணம். மொத்தத்தில் சிறந்த கல்யாண நாள்.

இந்த சிறப்பு மிக்க நாளில் 30.3. 2018 பங்குனி உத்தரத்தில் இன்னும் சில அறுபதாம், எழுபதாம், எண்பதாம் கல்யாணம் நடந்தால் எப்படி இருக்கும் என்று நேற்று நேரில் என்னோடு வந்தவர்களுக்கு தான் தெரியும்.

ஒரு கல்யாணத்திலேயே ரொம்ப சந்தோஷம். 52 ஜோடி கல்யாணங்களில் எத்தனை சந்தோஷம் இருக்கும். அதுவும் இன்னொரு சுவாரசிய சங்கதி. அந்த 52 ஜோடிகளின் பிள்ளை, பெண், பேரன் பேத்தி உறவினர் கூட இல்லாமல் சில ஜோடிகள். அவர்களுக்கு இத்தனை உறவும் நீங்களும் நானும் நம்மை இணைத்து இத்தகைய அற்புதங்களை நிகழ்த்தி வரும் ஸ்ரீ வேதிக் ரவி என்ற அதிசய மனிதரும் தான். அவரோ ஒரு பிரம்மச்சாரி வேத பிராம்மணர். வேத மந்திரங்களை சிறப்பாக பிரயோகிக்க சிறந்த பண்டிதர்கள் வரவழைக்கப்பட்டனர். ஒரு 105 வயது மிக ஆரோக்ய உற்சாக பாட்டி கலந்து கொண்டு சிறப்பித்தாள் . என்னை ஆசிர்வதித்தாள். அவளே இந்த வயதிலும் ஒரு மூத்தோர் இல்லம் நடத்தி வருகிறாள் என்பது தான் ஆச்சர்யம்.

நிறைய பேர், நிறுவனங்கள் இந்த கோலாகல வைபவத்தில் கலந்து கொண்டனர். காலையில் சிற்றுண்டி, வேத பாராயணம், ஹோமங்கள், ருத்ர அபிஷேகங்கள், சீர் வரிசைகள், புது வஸ்திரங்கள், முரளிதர ஸ்வாமியின் துளசி மலை, வெள்ளி டாலர் வேறு. சிலரது பரிசுகள். இந்த தினத்தில் புவனேஸ்வரி தார்மீக ட்ரஸ்ட் நிறுவனத்தாரின் (வேதிக் ரவியுடைய அற்புத நிறுவனம்) விளம்பி வருஷ புது பஞ்சாங்கம் வெளியீடு. நான் இந்த பஞ்சாங்கத்தின் முதல் பிரதி பெற ஸ்ரீ க்ரிஷ்ணார்ப்பணம் சேவா சங்க சார்பாக (உங்கள் சார்பாக) அழைக்கப்பட்டேன். பஞ்சாங்க உபயோகம் அதன் சிறப்பு பற்றி கொஞ்சம் பேசினேன். முக்கியமாக சதாபிஷேக, பீமரத சாந்தி, சஷ்டியப்த பூர்த்தி தம்பதிகளுக்கும் நானும் மரியாதை செய்ய அழைக்கப்பட்டேன். அவர்கள் அனைவருமே மூன்று வயோதிகர்கள் இல்லத்தில் இருந்து அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டவர்கள். மீதியை இத்துடன் இணைத்துள்ள படங்கள் சொல்லும். நீங்களும் நானும் நம் வீட்டாரும் தான் சீர் கொண்டு வந்து தந்தார்கள். நாதஸ்வர தவில் வாத்யம், அனைவருக்கும் கல்யாண சாப்பாடு இதெல்லாம் நிறைய பேருடைய கைங்கர்யம். பணத்தை நல்ல முறையில் செலவு பண்ண வேண்டும் என்பது இதிலிருந்து தெரிந்து கொள்ளவேண்டிய ஒரு பாடம்.

அப்புறம் வீடியோ போட்டோக்கள் சில வந்து சேரலாம். பல அறிஞர்கள் பங்கேற்று பேசியதையும் கேட்போம்.






















pesum deivam



பேசும் தெய்வம்:

                             பெரியவா நீங்க சொல்லுங்கோ: 

எங்கள் வீட்டில் யாரும் இல்லை.  நானும் வாசலில் உள்ள  தூங்கு மூஞ்சி மரமும் தான் அசைகிறோம். வீடு நிசப்தம். வழக்கமாக சண்டை போடும் கருப்பு நாயும் அதன் நண்பனா,  நண்பியா  ஒரு பிரவுன் நாய்  அது ரெண்டையும் காணோம். சாப்பிட்டுவிட்டு என் வீட்டு கேட் அருகே  நிழலில் ஏதாவது ரகளை பண்ணிக்கொண்டிருக்கும்.  வெயிலுக்கு எங்கே ஜிலு ஜிலு வாசமோ!!

எனது அறையில் எதிரே மகா பெரியவர். என் பார்வை அவரிடம் போகிறது. அபய  ஹஸ்தம் எப்போதும் எனக்கு தெம்பளிக்கும். என் மனதை குளிர்விக்கும். என்னை மகிழச்செய்யும்  சந்தோஷ முகம். 

''என்னடா பாக்கிறே ?''

''இல்லே பெரியவா உங்களை சில கேள்விகள் கேட்டு ரொம்ப நாளாச்சே ன்னு யோசித்தேன்''

''என்னை கேள்வி கேட்க நாளு  கிழமை பாக்கணுமா நீ?''

''மனிதனும் மிருகமும் ஒரே மாதிரி இருக்காளா,  அறிவு தான் ஐந்து ஆறு என்று யாரோ நேரில் எண்ணி பார்த்ததைப்போல கணக்கு போட்டு சொல்றா? என்ன கணக்கோ?'' சில சமயம்  மிருகங்களை கவனிக்கும்போது நமக்கு தான் ஐந்து அறிவோ என்று தோன்றுகிறது எனக்கு பெரியவா''
பெ:  ''மிருகங்கள் குறுக்குவாட்டில் (horizontal) வளர்றது.  அதாலே   அதுக்கு  ‘திர்யக்’ என்று  பேர்.  மனுஷன் உசரமா  மேல்நோக்கி (vertical) வளர்ரான் .  அதனாலே  மனிதன் மற்றப் பிராணிகளை விட உசந்த நோக்கத்தைப் பெறணும் இல்லையா?   அப்படி பண்ணினால்   மனுஷன் தான் சகல ஜீவ ராசிகளையும் விட அதிகமான சுகத்தை அநுபவிக்கலாம்.   ஆனால்  PRACTICAL லா  நடைமுறையில் பார்த்தா மிருகங்களை விட மனிஷன் தான்  ரொம்ப  துக்கத்தை  அநுபவிக்கிறான். மிருகங்களுக்கு நம்மைப் போல் இத்தனை காமம், இத்தனைக் கவலை, இத்தனை துக்கம், இத்தனை அவமானம் எதுவுமே  இல்லை.  இதெல்லாம் விட  அதுகளுக்கு  பாபமே இல்லை. பாவங்களைச் செய்து துக்கங்களை நாம்தான் அநுபவிக்கிறோம்.

யோசிச்சு பார்.  மிருகங்களுக்குக் கொடுத்திருக்கும் சௌகரியங்களை ஸ்வாமி நமக்குக் கொடுக்கவில்லை என்று தோன்றும். நம்மை யாராவது அடித்தால் திருப்பி அடிக்க ஓர் ஆயுதமும் நமக்கு இல்லை. மாட்டை அடித்தால் அதற்குக் கொம்பு கொடுத்திருக்கிறார். அதனால் திருப்பி முட்ட வருகிறது. புலிக்கு நகம் றார். நமக்குக் கொம்பும் இல்லை. நகமும் இல்லை. குளிரிலிருந்து காப்பாற்றிக் கொள்ள ஆட்டுக்கு உடம்பில் கம்பளி மாதிரி போர்வை வைத்திருக்கிறார். வேறு மிருகங்களுக்கும் போர்வை வைத்திருக்கிறார். மனிதன் ஒருவனைத்தான் வழித்து விட்டு இருக்கிறார். யாராவது அடிக்க வந்தால் எதிர்க்க முடியவில்லை. குதிரைக்குக் கொம்பு இல்லா விட்டாலும் ஓடுவதற்கு வேகம் கொடுத்திருக்கிறார். அதுவும் நமக்கில்லை.''

''வாஸ்தவம் பெரியவா.  ஆனா  நமக்கு புத்தி இருக்கு  இல்லையா. அது பெரிய  உதவி இல்லையா சொல்லுங்கோ ''

பெ:  ''கேள். ஸ்வாமி மனிதனுக்குத்தான் புத்தியை அதிகமாக வைத்திருக்கிறார்.  அது சரி தான்.
அந்த புத்தியை அவன் எப்படி உபயோகிக்கிறான் என்று கவனித்தாயா?

குளிரிலிருந்து காப்பாற்றிக் கொள்ள வேண்டுமானால், மற்றப் பிராணிகளின் போர்வையை இவன் பறித்துக் கொண்டுவிடுகிறான்; கம்பளியாக நெய்து கொள்கிறான். வேகமாகப் போக வேண்டுமா? வண்டியிலே குதிரையைக் கட்டி, அதன் வேகத்தை உபயோகப் படுத்திக் கொள்கிற சாமர்த்தியத்தை இவனிடத்தில் ஸ்வாமி வைத்திருக்கிறார். தன் சரீரத்திலேயே தற்காப்பு இல்லாவிட்டாலும், வெளியிலிருந்து தினுசு தினுசான ஆயுதங்களைப் படைத்துக் கொள்கிறான். இவ்வாறாக புத்தி பலம் ஒன்றை மட்டும் கொண்டு, மற்ற ஜீவராசிகள், ஜடப்பிரபஞ்சம் எல்லாவற்றையும் மனிதனே ஆளுகிறான்.

''ஆமாம் பெரியவா.  மனுஷன் உலகத்திலே  சௌகரியமாக தான் வாழறான்''

பெ:  ''மிருகம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு  இடத்திலே தான் இருக்கும். குளிர்ப் பிரதேசத்துக் கரடி நம் ஊரில் வாழாது.  பனிக்கட்டி இருக்கிற இடத்திலே சுகமாக உலவும். இங்குள்ள யானை அங்கே  ஒரு நிமிஷம் கூட  வாழாது. ஆனால் மனிதன் உலகம் முழுவதும் எங்கே வேணுமானாலும்  போய்  வாழ்கிறான். அங்கங்கே அவன் தன் புத்தியை உபயோகப்படுத்தித் தனக்குச் சாதகமாகச் சூழ்நிலையைச் செய்து கொள்வான் என்று சுவாமி அவனை  இஷ்டப்படி சுற்ற  விட்டிருக்கிறார்.

''ஆனா  மனுஷன் தன்னுடைய  புத்தியை சரியாக உபயோகிக்கிறதில்லையே பெரியவா''

பெ:   ''ஆமா,  இந்த உயர்ந்த புத்தியை கொடுத்தும்  கூட  மனிஷன் கஷ்டப்படுகிறான்; துக்கப்படுகிறான்; பிறந்து விட்டதாலே  இவ்வளவு கஷ்டம்; இனி பிறக்காமலிருக்க வேண்டுமானால் என்ன பண்ணுவது? பிறப்புக்குக் காரணம் என்ன? நாம் ஏதோ தப்புப் பண்ணியிருக்கிறோம். அதற்குத் தண்டனையாக இத்தனை கசையடி, சவுக்கு அடி,  வாங்க வேண்டும் என்று விதி. ஆகவே  இந்த உடம்பை எடுத்து அவற்றை வாங்குகிறோம். பத்து அடி ஆன பிறகு இந்த உடம்பு போய்விட்டால், இன்னோர் உடம்பு வருகிறது. பாக்கி அடியை அந்த உடம்பு வாங்குகிறது. காமத்தினால், பாபத்தைச் செய்வதனாலே ஜனனம் வருகிறது. காரியம் எதுவும் பண்ணாமல் இருந்துவிட்டால் ஜனனம் இல்லை. கோபத்தினாலேயே பல பாபங்களைச் செய்கிறோம். கோபத்துக்குக் காரணம் ஆசை, காமம். முதலில் காமத்தை, ஆசையை ஒழிக்க வேண்டும். பற்றை நிறைய வளர்த்துக் கொண்டு காரியம் செய்யாமல் இருப்பது என்றால் முடியாது. பற்றை ஒழித்து விட்டால் பாபம் செய்யாமல் இருக்கலாம்.

''பெரியவா  மனுஷன் இப்படி ஆசைபடக்  காரணம் என்ன?''

பெ:  '' நம்மைத் தவிர இன்னொன்று இருப்பதாக எண்ணுவதால் தானே  அதனிடம் ஆசை வருகிறது. வளருகிறது. உண்மையில் சாந்தமாகிய ஒரே சிவமே எல்லாமாக இருக்கிறது.
ஒரு மாடு கண்ணாடியில் தன்னைப் பார்த்துவிட்டு, இன்னொரு மாடு இருப்பதாக நினைத்து அதை முட்டப்போகிறது. ஒரு மனிதன் தன் பிரதி பிம்பத்தைப் பார்க்கிறான். அதை  இன்னொரு மனிதனாகவா அவன் நினைக்கிறான்? இரண்டும் ஒரே பொருள் என்பது அவனுக்குத் தெரிந்து சாந்தமாக இருக்கிறான். இப்படியாக நாம் பார்க்கிற அனைத்துமே ஒன்றுதான். இரண்டாவது என்று எண்ணினால் ஆசை வரும். ஆசை வருவதனால் கோபம் வருகிறது. கோபம் வருவதனால் பாபங்களைச் செய்கிறோம். அதனால் ஜன்மம் உண்டாகிறது. எல்லாம் ஒன்று என்ற ஞானம் நமக்கு வந்துவிட்டால், வேறு பொருள் இல்லாததனாலே ஆசை இல்லை; கோபம் இல்லை; பாபம் இல்லை; காரியம் இல்லை; ஜனனம் இல்லை; துன்பமும் இல்லை.''

''ஆஹா  அற்புதம் . பெரியவா நீங்க பெரியவாள் தான் இன்னொருத்தரை ஈடாக சொல்ல வாய்ப்பில்லை எனக்கு . நீங்க சொன்னேளே  அந்த இந்த ஞானத்தை எப்படிப் பெறுவது?''

'பெ:  '' நம்மைப் பெற்ற அம்மா உடம்புக்குப் பால்கொடுப்பாள். அறிவுக்கு ஞானப்பால் கொடுப்பவள் அம்பாள்தான். ஞான ஸ்வரூபமே அவள்தான். அவளுடைய சரணாரவிந்தங்களைப் பற்றிக் கொண்டு அவளுடைய ஸ்வரூபத்தோடு நம்மை நாம் கரைத்தாலே ஞானம் வரும்; மனிதன் அப்போது தெய்வமாவான்.
புரியும்படியாக இன்னொருதடவை சொல்றேன் கேட்டுக்கோ: எல்லோர்கிட்டையும் சொல்லு: அதுக்கு தான் உனக்கு சொல்றேன் புரியறதா?''

''முதலில் மனிதனை மிருகமாக இல்லாமல் மனிதனாக ஆக்க வேண்டும். அப்புறம் அவனைத் தெய்வமாகவே உயர்த்திவிட வேண்டும். இந்தக் குறிக்கோளுடன்தான் சகல மதங்களும் உண்டாகியிருக்கின்றன. சித்தாந்தம், தத்துவங்களில் அவற்றுக்குள் எத்தனை பேதமிருந்தாலும், இப்போதிருக்கிற மாதிரி மனுஷ்யனை ஒரே காமக் குரோதாதிகளுடன் இருக்க விடக்கூடாது; இவனை நல்லவனாக ஆக்கி அன்பு, அடக்கம், சாந்தம், தியாகம் முதலிய குணங்கள் உள்ளவனாகப் பண்ண வேண்டும் என்பதில் எல்லா மதங்களும் ஒரே குரலில்தான் பேசுகின்றன.

Thursday, March 29, 2018

GOOD FRIDAY



இன்று நல் வெள்ளிக்கிழமை 30.3.2018
J.K. SIVAN

ஏன் சார் கிழமைகளில் எது புனிதமானது?

சுப்புணி, எல்லா கிழமைகளுக்கும் புனிதமானது தான். நாம் ஹிந்துக்கள் ஒவ்வொரு கிழமையும் ஒரு கிரகத்துக்கு என்று ஒதுக்கி வைப்பவர்கள், அதிலும் வெள்ளிக்கிழமை கேட்கவேண்டாம். அம்பாளை தாயாரை வழிபடும் நாள். சுக்ரனுக்கு உகந்தநாள். வெள்ளி. சுக்ர கிரஹம் .

மற்றவர்களும் இதை வணங்குகிறார்கள். புனிதமான வெள்ளி என்று?

ஓஹோ கிறிஸ்தவர்களை சொல்கிறீர்களா. ஆமாம் என்றோ வருஷத்தில் ஒருநாள் ஒரு வெள்ளிக்கிழமை நல்ல வெள்ளிக்கிழமை அவர்களுக்கு. GOOD FRIDAY.

ஏன் சார் அப்படி ?

கால்வரி என்கிற இடத்தில் ஒரு வெள்ளிக்கிழமை தான் சிலுவை சுமக்க வைச்சு இயேசுவை கை கால்களில் ஆணி அடித்து முள் தலையில் சுற்றி தொங்கவிட்டார்கள். அவர் மரணம் அடைந்தார். மூன்றாம் நாள் உயிர்ப்பித்தெழுந்தார் என்று படித்திருக்கிறேன். கேள்விப்பட்டிருக்கிறேன். அதை புனித நாளாக கொண்டாடுகிறார்கள். நமக்காக ஒருவர் தன்னுயிரை விட்டாரே என்று.

இதை பல இடங்களில் கருப்பு வெள்ளி, பெரு வெள்ளி, புனித வெள்ளி என்றும் சொல்வ
துண்டு. ஊருக்கு ஊர் மாறுபடும். Holy Friday, Great Friday, and Black Friday.

அது good friday இல்லை. god friday. நம் ஊரில் கோவில்கள் ஊர்கள் பேர் போல் அதுவும் நாளடைவில் god , good ஆகிவிட்டது என்கிறார்கள். எனக்கு தெரியாது.

பைபிளில் ஒரு சங்கதி. கெத்சமெனே என்கிற ஊர் தோட்டத்தில் இயேசு ஒளிந்திருந்தபோது அவருடன் கூடவே இருக்கும் ஒருவன் இஸ்காரியோத் முப்பது வெள்ளிக்கு ஆசைப்பட்டு யேசுவைத் தேடிக்கொண்டிருந்த எதிரியான ராஜாவிடம் காட்டிக்கொடுத்து விடுகிறான். ''இயேசுவை நான் காட்டுகிறேன் வா'' என்று ராஜாவின் வீரர்களை அழைத்துக் கொண்டு தோட்டத்திற்கு சென்றவன்

''எல்லோரும் தாடி மீசையோடு நீளமாக தொள தொள வென்று அங்கி அணிந்து கொண்டிருப்
பார்கள். நான் யாரை அணைத்து கன்னத்தில் முத்தம் கொடுக்கிறேனோ அவர் தான் இயேசு. அவரைப் பிடித்துக் கொண்டு போங்கள் ''
என்றவன்.

யேசுவைப் பிடித்துக்கொண்டு போய் விசாரணை என்ற பேரில் தேச துரோகம், ராஜாவுக்கு வரி ஏய்ப்பு, தானே ராஜா என்று அறிவித்தது போன்ற குற்றங்கள் சுமத்தப் பட்டது. அவர் பதிலே சொல்லவில்லை. இயேசுவை ரோமாபுரி கவர்னர் பிலேட் முன் கொண்டு நிறுத்தினார்கள். அவன் இயேசுவை குற்றவாளியாக கருதவில்லை. யூதர்களிடம் அபிப்ராயம் கேட்டு அவர்களும் குற்றம் நிரூபணம் இல்லை என்கிறார்கள். பிலேட் இயேசு கலிலீ என்றதால் ராஜா ஹெரோட் முன் கொண்டு நிறுத்தி அவனும் இயேசு குற்றவாளி இல்லை என்றான். சவுக்கடி கொடுத்து விடுதலை செய்யலாம் என்று பிலேட் எண்ணினான். இயேசு தன்னை கடவுளின் மைந்தன் என்று சொன்னது குற்றம் என்று அர்ச்சகர்கள் சொல்ல பிலேட் கலங்கினான். ஒருவேளை கடவுளின் மைந்தனாக இருந்தால்?? என்ன செய்வது என்று யோசித்தான். ஏசுவுக்கு எதிரானோர் கொந்தளிக்க வேறு வழியின்று பிலேட் ''நாசரேத்தை சேர்ந்த இயேசு, யூதர்களின் ராஜா'' என்ற வாசகத்தை சிலுவையில் செதுக்கி அதை யேசுவையே சுமக்க வைத்து கால்வரி என்ற இடத்துக்கு கொண்டு சென்றார்கள். மற்ற ரெண்டு சாதாரண குற்றவாளிகளுக்கும் அன்று அதே தண்டனை. மூன்று சிலுவைகள்.

இயேசு சிலுவையில் ஆறு மணி நேரம் வேதனைப்பட்டதாக தெரிகிறது. கடைசி மூன்று மணி நேரம் உச்சிப்பகல் பொழுதிலிருந்து மாலை மூன்று மணிவரை எங்கும் இருள் சூழ்ந்தது. இயேசு சிலுவையிலிருந்து பேசின வார்த்தை

''இறைவா என் இறைவா, என்னை ஏன் கைவிட்டாய்?'' (PSALM 22 ).

இயேசுவின் மூச்சு நின்றது. பூமி நடுங்கியது. கட்டிடங்கள் நொறுங்கி விழுந்தன. சூரைக் காற்று. யூதர்களின் கோவில் ஆட்டம் கண்டு விழுந்தது. யூத மக்கள் ஓடி வருகிறார்கள் அவர்கள் வழி படும் ஆலய அர்ச்சகரை விட இயேசுவை நம்புகிறார்கள். சிலுவையில் மூவரையும் கண்காணிக்கும் காவலன் உரக்க கத்துகிறான்

''ஆம் உண்மையில் இயேசு தான் கடவுளின் மைந்தன்'. (Matthew 27:45–54)

இயேசு இறந்து போய்விட்டாரா என்று பிலேட் கேட்கிறான். காவலன் ஒரு ஈட்டியால் இயேசுவின் இடுப்பு பகுதியில் குத்தி ரத்தம் நிணம் வந்து விட்டது. இறந்தாகி விட்டது என்கிறான். (Mark 15:45).

நந்தவனம் போன்ற ஒரு மரங்கள் செடிகொடிகள் சூழ்ந்த இடத்தில் ஒரு மலை குகையில் ஒரு கல்லறை கட்டி அதில் இயேசுவின் உடல் வாசனை திரவியங்கள் சாற்றி புதிய துணியால் சுற்றி உள்ளே வைக்கப் படுகிறது. (Matthew 27:59–60) ஒரு பெரிய பாறையை உருட்டி அந்த குகையின் வாயில் மூடப்படுகிறது. சூரியன் அஸ்தமனமானான் (Matthew 27:60). (Luke 23:54–56). Matt. 28:1

ரெண்டு நாள் கழித்து விடியற்காலையில் மேரி மெகதலீன் வந்து அந்த குகையைப் பார்க்கிறாள். உள்ளே எட்டிப்பார்த்தவள் ''யேசுவைக் காணோமே. எழுந்து விட்டார் '' என்கிறாள். .(Matt. 28:6) அந்த ஞாயிறு தான் ஈஸ்டர் ஞாயிறு Easter Sunday (or Pascha),

சில கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்கு அன்றைய உபவாசம் என்பது ஒரு முழு சாப்பாடு, ரெண்டு குட்டி பலகாரம். ரெண்டு பலகாரமும் சேர்ந்து ஒரு முழு சாப்பாடுக்கு ஈடாகக் கூடாது. மாமிசம் சேர்க்க கூடாது.
ஆகவே சில இடங்களில் இதை ''மீன் வெள்ளி'' (fish friday ) என்று மாமிசத்தை மட்டும் ஒதுக்கி 'ஜல புஷ்ப''த்தை சாப்பிடும் வழக்கம் உள்ளது.

1662ம் வருஷத்திய பொது பிரார்த்தனை புஸ்தகம் நல் வெள்ளிக்கிழமை என்ன செய்யவேண்டும், எப்படி கொண்டாட வேண்டும் என்று சொல்லவில்லை. உள்ளூர் வழக்கம் அன்று சிலுவையிலிருந்து கடைசி 7 வார்த்தைகள் அப்புறம் மூன்று மணி நேர பிரார்த்தனை என பழக்கப்படுத்திவிட்டது.

மாண்டி வியாழன், நல் வெள்ளி, புனித சனிக்கிழமை என்று வரிசையாக கொண்டாடும் பழக்கமும் உண்டு. இதெல்லாம் ஈஸ்டர் பிரார்த்தனைக்குட்பட்டது. மெழுகுவர்த்திகள் நிறைய எரியும்.

சில கிறிஸ்துவர்களுக்கு அன்று உபவாசம். ஒரு தடவை மட்டும் சிம்பிளாக மாமிசம் இல்லாமல் சாப்பிடலாம் என்று சாஸ்திரம். சில ப்ரோட்டஸ்டண்ட்கள் அன்று விசேஷ பிரார்த்தனை ஜெபங்கள் செய்வார்கள்.

நல் வெள்ளிக்கிழமை ஒரு விடுமுறை நாள்.

என் நண்பன் கோபு '' குட் ஃப்ரைடே என்னிக்கு வரது? . சனி ஞாயிறோடு ஒட்டி வந்தா எங்கேயாவது ஊருக்கு போகலாமே' என்றபோது அவனுக்கு பதில் சொல்லி நேரத்தை வீணாக்கவில்லை. நமது தேசத்தில் விடுமுறை.

மலேசியா முஸ்லீம் நாடு என்றாலும் நல்ல வெள்ளிக்கிழமை அன்று விடுமுறையை கூடுதல் சந்தோஷத்தோடு அனுபவிக்
கிறார்கள்.

பிலிப்பைன்ஸ் நாட்டில் சில தீவிர ஏசு பக்தர்கள் தாங்களும் சிலுவையில் அறைந்து கொள்கி
றார்கள். கை கால்களில் ஆணி. சவுக்கடிகள். . இதற்கு மேல் என்னால் எழுத கை நடுங்குகிறது.

அங்கே மத்தியானம் மூணு மணிக்கு தான் ஹோட்டல்கள், கடைகள் திறக்கும். அப்போது தான் இயேசுவை சிலுவையில் அறைந்த நேரமாம். பாதிரிகள் மற்றும் பக்தர்கள் சிலுவை சுமந்து செல்வார்கள். சிலுவையை நல்லடக்கம் செய்வார்கள். பிரார்த்தனை நடக்கும். மௌன ஊர்வலம்.

பிரிட்டன் ஆஸ்திரேலியாவில் சுட சுட சிலுவை ரொட்டி (hot cross buns ) சுட்டு தின்பார்கள்.

உலகளவில் ஈடுபடும் பங்கு சந்தை வங்கிகள் எல்லாமே நல் வெள்ளிக்கிழமை விடுமுறை அனுஷ்டிக்கும்.

ஈஸ்டருக்கு முன்பு வரும் வெள்ளிக்கிழமை நல் வெள்ளிக்கிழமை என கொண்டாடுகிறார்கள். இதை ஒவ்வொரு நாடுகளில் என்னென்னமோ விதமாக கணக்கிடுவது வழக்கமாகிவிட்டது. நல் வெள்ளிக்கிழமை வெவ்வேறு தேதிகளில் வந்தாலும் வெள்ளிக்கிழமை தான் வரும்.


RESPECT ALL RELIGIONS

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...