Wednesday, February 21, 2018

THIRUVISANALLUR AIYAVAAL

திருவிசநல்லூர் ஐயாவாள் J.K. SIVAN

சந்தர்ப்ப,சூழ்நிலைகள், சமயங்கள், எல்லோருக்கும் கிருஷ்ணன் ஒன்றாகத்தான் அருள்கிறான். சிலர் அதை கண்டுகொள்வதே இல்லை. குறை மட்டும் கூறுகிறார்கள். விழித்திருந்தோரெல்லாம் பிழைத்துக் கொண்டார்.

சில நேரங்களில் சில நல்ல சந்தர்ப்பங்கள் நமக்கு உதவுகின்றன. ஒரு முறை, ஒரே முறை, சில வருஷங்களுக்கு முன்புநடந்ததை நினைவு கூர்வோம். அந்த ஊரை திருவிசலூர் என்கிறார்கள், திருவிசநல்லூர் என்கிறார்கள், எங்கள் வீட்டில் நல்லூர் தான் . அங்கே அற்புதம் ஒன்றைக் கண்டேன்.

அது எப்போதாவது நடக்கும் விஷயம் அல்ல. எப்போதும் வருஷா வருஷம் அந்த ஒருநாள் நடக்கும் அதிசயம். கார்த்திகை அமாவாசை அன்று ஒரு ஸாதாரண வீட்டில், ஒரு சாதாரண கிணற்றில் முதல் நாள் பார்க்கும்போது எங்கோ அதல பாதாளத்தில் கீழே தண்ணீர் தெரிந்தது. மறுநாள் அதிகாலையில் கிணறு பொங்கி வழிகிறது. சாதாரண நீர் அல்ல. கங்கா ஜலம் . இதை பொய்யென்று மறுப்பவரோடு எனக்கு எந்த வாதமும் கிடையாது. ஆமாம் என்று ஒப்புக்கொள்வாரகளில் நானும் ஒருவன் என்று இருப்பதால் தவறில்லையே.

ஏன் அன்று மட்டும் அமைதியான அந்த கிராமம் புத்துயிர் பெற்று அநேக கார்கள், பஸ்கள், வாகனங்கள், எங்கெங்கோ இருந்தெல்லாம் மனிதர்கள் கூட்டம் ஆயிரத்தில், அங்கே கூடவேண்டும்?

இதற்குப் பின்னணி தெரியவேண்டாமா? அது தான் இந்த கட்டுரை.

லிங்கராயர் என்கிற மைசூர் சமஸ்தான பிராமண வித்துவானுக்கு ஸ்ரீதர வெங்கடேசன் ஒரே பிள்ளை. சிவ பக்தன். அப்பா காலமான பிறகு பிள்ளைக்கு அந்த உத்யோகம் தந்தார்கள். ஸ்ரீதரன் வேண்டாமென்று உதறிவிட்டான். மனம் உஞ்சவிருத்தியில் சிவனை ஆராதனை செய்தும் நாம சங்கீர்த்தனத்திலும் பரம சந்தோஷம் கிடைத்தது. மனைவி அம்மா ஆகியோரும் அவனை பின்பற்றினார்கள். க்ஷேத்ராடனம் செய்தனர். திருச்சியில் நாயகர் வம்சம் ஆண்டது. சைவ வைஷ்ணவ பேதம் அதிகம் இருந்த காலம். ஒரு பிராமணருக்கு அங்கே ஒரு பிள்ளை பிறந்தான். திடீரென்று நோய்வாய்ப்பட்டு நினைவற்று மிக மோசமான நிலையில் இருந்தான். விஷயமறிந்த ஸ்ரீதர வெங்கடேசன் அந்த வீட்டுக்கு சென்றார். சிவனை வேண்டி தியானித்தார். ஜெபம் செயது மந்த்ர ஜலத்தை அவனுக்கு ஒரு உத்ரணி கொடுத்ததும் அந்த பையன் எழுந்து நடமாடினான். பழையபடி ஆனான். சேதி எங்கும் பரவியது. அந்த சின்னஊரிலும் அண்டை அசல் ஊர்களிலும் ஐயாவாள் பேர் திமிலோகப்பட்டது.

அரசன் முதல் ஆண்டி வரை ஜனங்கள் ஸ்ரீதர வெங்கடேச ஐயாவாள் அங்கேயே இருக்கவேண்டும் என்று வற்புறுத்தினார்கள். ஆனால் அவர் தஞ்சை ஜில்லாவுக்கு நடந்துவிட்டார். அப்போது தஞ்சை நகரம் ஷாஹாஜி என்ற மராத்தி ராஜாவால் ஆளப்பட்டு வந்தது. அரசன் அவரை கௌரவித்து வரவேற்றான். பிறகு அங்கிருந்து மெதுவாக நழுவி திருவிசநல்லூர் வந்துவிட்டார். நிறைய ஸ்லோகங்கள், வியாக்கியானங்கள் எழுதினார் .பதமணி மஞ்சரி, பகவன் நாம பூஷணம், தயா சதகம், ஸ்துதி பத்ததி, சிவபக்தி கல்பலதா. ஷிவா பக்த லக்ஷணம், அச்சுதாஷ்டகம், முதலிய புத்தகங்கள் அவரால் வெளிவந்தன.

நாமசங்கீர்த்தன ஜாம்பவான் பகவன் நாமா போதேந்திர ஸ்வாமிகளை அறியாதவர்கள் கிடையாது. ஐயாவாளின் சம காலத்தவர். க்ஷேத்ராடனம் செல்பவர். ராமேஸ்வரம், பழனி, ஸ்ரீரங்கம், திருவானைக்கோவில், கும்பகோணம் என்று பல க்ஷேத்ரங்கள் சென்று பகவன் நாம சங்கீர்த்தனம் செய்தவர் திருவிடை மருதூர் வந்தபோது ஸ்ரீதர அய்யாவாளை சந்தித்து அளவளாவினார். திருவிச நல்லூர் வந்தபோது அவரது ஸ்தோத்திரங்கள் பற்றி அறிந்து சந்தோஷித்தார்.

ஐயாவாள் திருவிடைமருதூர் மகாலிங்க பிரியர். பரம பக்தர். திருவிடை மருதூர் நடக்கும் தூரம் தான். ஒருநாள் கூட அவரை தரிசிக்காது போஜனம் கிடையாது. ஒரு நாள் மகாலிங்கத்தை பார்க்க காவிரியை கடக்க முடியாதபடி வெள்ளம். கோபுரதரிசனம் செய்து ''ஆர்த்தி ஹர ஸ்தோத்ரம் '' பாடினார். அன்று அவருக்கு போஜனம் கிடையாது.

எப்படி ஆற்றைக்கடந்து மகாலிங்க தரிசனம் செய்வது? ஆற்றின் கரையில் தேங்கிய ஜலத்தில் தவளைகள் ''கர'' ''கர'' வென்று விடாமல் சேர்ந்து கத்தியது அவருக்கு மனதில் ''ஹர ஹர ''என்று மகிழ்வித்தது. வெகு நேரம் நின்றார்.

திடீரென்று ஒரு சிவ பக்தர், அதுவும் திருவிடை மருதூர் மகாலிங்க ஆலய சிவாச்சாரியார் ஒருவர் அங்கே வந்தார். அவருக்கு தெரியும் ஐயாவாள் அன்று சிவதர்சனம் பண்ணமுடியாதே என்று.

'என்ன ஐயாவாள் தரிசனம் எப்படி பண்றதுன்னு யோசனையா?''

'ஆமாம் சுவாமி. ஒரு நா கூட மகாலிங்கத்தை பாக்காம இருக்க முடியாதே''

''அப்படின்னா, இந்தாங்கோ பிரசாதம். இன்னிக்கு அபிஷேகம் அலங்காரம் பிரமாதமா நடந்தது'. சிவாச்சாரியார் மடியிலிருந்து ஒரு சுறுக்குப்பை யை எடுத்து மகாலிங்க விபூதி '' அளித்தார்.

ஐயாவாள்வீட்டுக்கு போகும் வழியில் தான் அவருக்கு ஞானோதயம் தோன்றியது. ஆற்றில் தான் வெள்ளம் கரைபுரண்டு நேற்று சாயந்திரத்திலிருந்து படகுகள் கூட அக்கரை செல்ல முடியவில்லையே. எப்படி அந்த சிவாச்சாரியார் ஆலயத்திலிருந்து ஆற்றைக் கடந்து வந்திருக்க முடியும்.. என்று ? உடலிலோ விபூதியிலோ கொஞ்சமும் ஈரமே இல்லையே. மறுநாள் வழக்கம்போல் வெள்ளம் விடிந்தபின் ஆற்றைக் கடந்து மகாலிங்க தரிசனம் செய்தபோது அந்த சிவாச்சார்யரைப் பார்த்தார். மனதில் இருந்த சந்தேகத்தை கேட்டார்.

''சிவாச்சாரியாரே, நேற்று நீங்கள் எப்படி ஆற்றைக் கடந்துவந்து எனக்கு விபூதி பிரசாதம் தந்தீர்கள்?.''
'' நானா, நேற்று வந்தேனா? நேற்று எங்குமே நான் போகவில்லையே. ஆற்றை எப்படி கடக்க முடியும். நிச்சயம் நான் வரவில்லை நேற்று'' என்கிறார் சிவாச்சாரியார்.

''ஆஹா, சிவாச்சாரியார் உருவில் வந்தது மஹாலிங்கமே'' என ஐயாவாளுக்கு புரிந்தது. மனம் நெகிழ்ந்தது. தான் பாடினி கிடைக்கக் கூடாது என்ற பரமேஸ்வரன் கருணை நெஞ்சை உலுக்கியது. நன்றிப் பெருக்கோடு மகாலிங்கத்தின் மேல் ஐயாவாள் அப்போது ஸ்ரிஷ்டித்தது தான் ''தயாஷ்டகம் ''
எனக்கு ரெண்டு வரம் தா. மகாதேவா ஒன்று உன்னை இடைவிடாமல் நினைத்துக் கொண்டே இருக்க வேண்டும். அடுத்தது சிவா, உன் நாமம் என்நாவில் எப்போதும் இருந்து கொண்டே இருக்கவேண்டும்''

அய்யாவாளுக்கு மிகவும் இரங்கிய, கருணை உள்ளம். தாராள மனசு. ஒருநாள் காவேரியில் ஸ்நானம் செய்த்துவிட்டு ஸ்லோகம் சொல்லிக்கொண்டே நடந்து வந்தவர் வீட்டில் அன்று அவர் தகப்பனாருக்கு ஸ்ரார்த்தம். பிராமணர்கள், சாஸ்திரிகள் வரும் நேரம். ஸ்ரார்த்தம் எப்போதும் உச்சி காலத்துக்கு மேல் தான் என்பதால் அவர் மனைவி ஒவ்வொன்றாக எல்லா பக்ஷணங்கள், சமையல் அயிட்டங்கள் எல்லாம் செயது வைத்துவிட்டாள்.

அந்த நேரம் பார்த்து அவர் வீட்டு வாசலில் ஒரு பரம ஏழை. தாழ்ந்த குலத்தவன் பசி மயக்கத்தில் விழுந்து கிடந்தான். அவர் மனதில் பெருகிய கருணை, இரக்கம், உடனே உள்ளே சென்று தயாராக இருந்த உணவை எடுத்து வந்து அவனுக்கு அளிக்க செய்தது. அவர் தான் எல்லோரிலும் மஹா தேவனைப் பார்ப்பவர் ஆயிற்றே. மடி சமையல் தான் பங்கப் பட்டுவிட்டதே. அதை கொண்டு போய் கொட்டினாள் அவர் மனைவி. மீண்டும் ஸ்நானத்தை செய்து விட்டு திரும்பவும் சமைக்க ஆரம்பித்தாள். . சற்று நேரத்திற்கெல்லாம் காவேரி ஸ்நானம் பண்ணிவிட்டு பிராமணர்கள் ஸ்ராத்த விதிப்படி ஹோமம் செய்ய வந்துவிட்டார்கள். தங்களுக்கு தயாரிக்க பட்ட உணவை ஒரு தாழ்ந்த குலத்தவன் ஏற்கனவே உண்டுவிட்டான் என்று அறிந்ததும். மிக்க கோபம் கொண்டார்கள். உலகமே முழுகிப்போய்விட்டதாக கூச்சல் போட்டு ஊரைக் கூட்டி விட்டார்கள். அந்த காலத்தில் தாழ்ந்த வகுப்பினருக்கு முதலில் அன்னம் அளித்து பிறகு மற்றவர்கள் சாப்பிடுவது ஒரு மன்னிக்கமுடியாத குற்றமாக இருந்தது. எனவே ச்ராத்தம் நின்றுவிட்டது. ஊர் கட்டுப்பாட்டுக்குள் ஐயாவாள் குடும்பம் வைக்கப்பட்டு ஜாதிப்ரஷ்டம் பண்ணாத குறை.

ஊர் பஞ்சாயத்து எல்லோருமாக சேர்ந்து நீங்கள் பண்ணின அபச்சாரத்துக்கு கங்கையில் குளித்து விட்டு பாபத்தை போக்கிக் கொள்ளவேண்டும் என்று கட்டளையிட்டார்கள்.

அந்த நேரத்தில் மூன்று பிராமணர்கள் வெளியூர்காரர்கள் ஸ்ரீதர ஐயாவாள் தர்மிஷ்டர், பரோபகாரி, ஒரு ஏழைக்கு பசிப்பிணியிலிருந்து உயிர்காத்தவர் என்று அறிந்து அவருடன் இருந்து ஸ்ரார்தத்தை நடத்திக் கொடுத்தனர். ஒருவேளை ப்ரம்மா விஷ்ணு மஹேஸ்வரர்களோ!.

அடுத்த வருஷம் ஸ்ரார்த்தத்துக்கு யாரும் உள்ளூரில் வரவில்லை. அவர் செய்த பாபம் தொலைய அவர் கங்கையில் ஸ்னானம் செய்தால் தான் மீண்டும் உள்ளே காலடி எடுத்து வைப்போம் என்று சொல்லிவிட்டார்கள் பிராமணர்கள்.

திருவிசைநல்லூர் எங்கே, கங்கை எங்கே! கண்ணை மூடி சிவனை பிரார்த்தித்தார் ஐயாவாள். கடகட வென்று கங்காஷ்டகம் ஸ்லோகம் வந்தது.
நேரம் வந்துவிட்டது. விடுவிடென்று திருவிடைமருதூர் மகாலிங்கம் சந்நிதியில் நுழைந்தார் ஐயாவாள். அர்ச்சகர்கள் தடுத்தார்கள். லக்ஷியம் பண்ணாமல் உள்ளே ஓடி மகாலிங்கத்தை தழுவினார். ஒன்றரக் கலந்துவிட்டார் என்பார்கள். முடிந்தவர்கள் கார்த்திகை அமாவாசை அன்று அந்த சின்னக்கிணற்றில் கங்கை பிரவாகத்தை பார்க்கலாம். நான் பார்த்துட்டேன். ஊரில் யார் வீட்டிலேயும் சாப்பாடு. நிறைய பருப்பு, எண்ணெய் தயிர், அரிசி வாங்கி கொடுத்தோமானால் மற்றவர்களுக்கும் உணவு தர சௌகரியமாக இருக்கும்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...