Saturday, February 24, 2018

MY ANCESTORS

என் தாய் வழி முன்னோர்கள்        J.K. SIVAN                  

                            கணபதி சாஸ்திரியின்  கங்காஸ்நான  யாத்திரை

 கடவுள்  மனிதனைப் படைக்கும்போது   பாரபட்சமின்றி தான்  அவர்களுக்கு அறிவைக்கொடுத்தான். எல்லோருக்கும் ஒரே அளவு எடை தான் மூளை என்று விஞ்ஞானம் கூறுகிறது. படிக்கிறோம்.   சிலருக்கு  அதை  உபயோகித்து  கல்வியறிவு,  நல்ல  குணத்தை எல்லாம்  தேடிக்கொள்ளமுடிந்தது.முடிகிறது.   சிலர் பணத்தைத் தேட  முயலவில்லை. பலருக்கு முயன்றும் முடியவில்லை.  சிலருக்கு  இருந்ததையும்  பரோபகாரமாக  கொடுக்கும்  தயாள  குணம்  மட்டும் அமைந்தது.  அவர்கள்  ஏழை என்று சொல்லும்படியாக வாழ்ந்தார்கள்.  ஏழையிடம்  கல்வியும்  குணமும் மட்டும்  இருந்தால்  போதுமா. யார்  மதிப்பார்கள்?  

குணவான் எல்லோரையும் அறிவினால்  மகிழ்வித்தான். அவனிடம்  கல்வி  இருந்தது.  சரஸ்வதி  தேவி  நிரம்பி எல்லா இடத்தையும் பிடித்துக் கொண்டதால்  அவன் வீட்டில்  லக்ஷ்மிக்கு  இடமே இல்லையே  என் செய்வான்?  அவனது கல்வி ஞானம்,  நேர்மை

,  புத்தி கூர்மை, தயாளம், பக்தி  எல்லாம்  அவனிடம்  பணம்  இல்லாததால்  சோபிக்க வில்லை.  அந்த  ஒளவைகிழவி சும்மாவா  சொன்னாள்.

 ''கல்லானே ஆனாலும் கைப்பொருள்ஒன் றுண்டாயின்
எல்லாரும் சென்றங் கெதிர்கொள்வர் - இல்லானை
இல்லாளும் வேண்டாள்(;) மற் றீன்றெடுத்த தாய்வேண்டாள்
செல்லா(து) அவன்வாயிற் சொல் ''

 அவன் கல்வியை  யார்  மதித்தார்கள்?   பெற்ற தாயும்  அவள்  பெற்றதில்,  எவனிடம் கொஞ்சம்  பணம்  இருந்ததோ அவனையே  நாடினாள்.  மனைவியோ  கணவன்  எதாவது  அறிவுரை கூறினாலும்   '' இதுலே  ஒண் ணும்  குறைவில்லை.   ஒரு  நாலு காசு  சம்பாதிக்க  துப்பில்லை, யோக்யதை இல்லை. அதிகாரம் அட்வைஸ் மட்டும் தூள் பறக்கிறது.   ஏட்டு சுரைக்காய்  கறிக்கு உதவுமா?''  என்று  இன்றும்  சில வீடுகளில்  உதிர்க்கும்  பொன்மொழி  நம்  காதில் விழாமலா இருக்கிறது.  
 '' பள்ளிக்கூடமா?  அப்படியென்றால்?''  என்று  கேட்கும்  ஒருவனிடத்தில்  நிரம்ப  செல்வம் இருந்தது. அவன் வீட்டில் பாவம்  சரஸ்வதி நுழையக்கூட  இடமில்லாமல்   லக்ஷ்மி  பிடித்துக்கொண்டிருந்தாள்.  அவனைத்தேடி  எல்லோரும்  சென்றார்கள். அவன்  எது சொன்னாலும்  அது வேத வாக்காக எடுத்துக்கொண்டார்கள்.

 நம்  முன்னோர்கள்  சற்று மாறு பட்டு  நடந்தார்கள்.  ஔவையார்  ஆட்களாக  அவர்களில் சிலர் இருக்கவில்லை.

சென்னையை  அடுத்த  மணலி  என்ற  ஊரில் ஒரு  தர்மவான்  பரம்பரையாக  புகழுடன் வாழ்ந்தார். அவர் பெயர்  மணலி சின்னையா  முதலியார்.

அவர்  முன்னோர்களில் ஒருவர்  இன்றைக்கு  நானூறு  வருஷங்களுக்கு முன்  பிரசித்தி பெற்று  வாழ்ந்த  மணலி முத்துக்ருஷ்ண முதலியார்.  அவர்  ஒரு  தர்ம பிரபு. அவர்காலத்தில் வாழ்ந்த ஒருவர்  தஞ்சை ஜில்லா,   சீர்காழி தாலுக்கா, தில்லை யாடி  கிராமத்தை சேர்ந்த, இலக்கிய  இலக்கண  நிபுணர்,  சைவ வேளாளர் மரபில் உதித்தவர், வடமொழியில் வல்லவர், சங்கீதத்தில்  அபார ஞானம் கொண்டவர், கம்ப ராமாயணத்தை  சிறப்புற  பிரசங்கம்  செய்து  வந்தவர் .---   இவர் யாராக  இருக்க முடியும்  என்று  யூகித்தீர்களா?

வேறு யாரு மில்லை.

சாக்ஷாத்  ஸ்ரீ  ராமநாடக கீர்த்தனை  எழுதிய  அருணாசல  கவிராயர் தான்.   ராம  காவியத்தை  நாடக  ரூபத்தில் மிகச்சிறந்த எளிய  பாடல்களாக  இயற்றி  ராகம் அமைத்து ஏறக்குறைய  500  ஆண்டுகளானாலும்  இன்றும் அவற்றை  என்றும்  அழியாது,   நமை எல்லா  பாடகர்களும் பாடி  மகிழ்விக்கும்படி செய்த மகான்.

அருணாச்சல கவிராயர்  முதன்  முதலில்  இந்த  ராமநாடக கீர்த்தனையை  இயற்றி   அரங்கேற்றம் செய்தது மேற் சொன்ன மணலி முத்துகிருஷ்ண  முதலியார் சபையில் தான்.

 இப்படி அவரை  ஆதரித்து  அவருக்கு  பொருளுதவி செய்து அவரது  ராமநாடக கீர்த்தனைகளை  பிரபலமாக்கிய பெருமை  முதலியாருடையது  என்று நன்றி கூர்ந்து  அருணாச்சல கவிராயர்  அவர் மேல்  ஒரு  கவி இயற்றினார்.

 ''தனம்  தந்தான் கனகாபிஷேகம்  தந்தான்
           களங்கமிலாக் கருப்பொருளை அழைத்துத்  தந்தான்
மனம் தந்தான்  முடி சூட்டுமாலை  தந்தான்
          வாணி சிங்காதனத்திருத்தி வரிசை தந்தான்
இனம் தந்தான்  ராம கதை எவர்க்கும் தந்தான்
            எனை  ராமாயணக்  கவிஞன் என  பேர்  தந்தான்
அனம்  தந்தான் மணலி முத்துக்ருஷ்ண பூபன்
           அகம் தந்தான் இருமையிலும் சுகந்தானே. ''

இந்த  பேர்  பெற்ற  முத்துக்ருஷ்ண  முதலியார்  சந்ததியில்  தான்  மேற்சொன்ன  சின்னையா  முதலியார் வளர்ந்தார், வாழ்ந்தார்.  இவரும் பல  சங்கீத  சாஹித்ய வித்வான்களை  ஆதரித்தார்.

 எனது தாய் வழி முப்பாட்டனார்  கனம்  கணபதி சாஸ்த்ரிகள் காசி யாத்திரை செல்ல  புறப்பட்டு  சென்னைபட்டணத்துக்கு   குடும்பத்தோடு  வந்தார் அல்லவா? சென்னை கிருஷ்ணப்ப நாயக்கன்  அக்ரஹாரத்தில் ஒரு  வீடு பிடித்து  ஜாகை அமைத்தார்.  அவர் வாடகைக்கு அமர்த்திய  வீடு முதலியாரின்  வீட்டு ப்ரோஹிதருக்கு  சொந்தமானது.  அப்போது வாடகை  அரை ரூபாய் மாதத்திற்கு. கூடம், சமையல் கட்டு, கொல்லை, தாழ்வாரம், ஒரு படுக்கை அரை பூஜை உக்ராண ரூம் வாசல் திண்ணை.

'சுவாமிகளே,  தாங்கள்  யார்? ''

 ''நான்  தஞ்சாவூர்  சரபோஜி மகாராஜாவின்  அரண்மனையில்  சங்கீத  வித்வான்'. கணபதி சாஸ்திரிகள்  என் பெயர். '

 ''சுவாமிகள் என்ன  காரியமாக  சென்னப்பட்டணம்  குடும்ப சஹிதம் வந்தீர்களோ?''

''மகாராஜா  மராட்டியர்.  தமிழர்களுக்கு  அங்கு  அவ்வளவு அனுகூலமாகப்   படவில்லை. காலமும்  வறண்டு  வருமையாக போய்  விட்டது.   எனக்கோ சந்ததியில்லை.  நான், என் தாயார், மனைவி  மூவரும்  கங்காஸ்நானம் செய்ய  ஊரை விட்டு புறப்பட்டோம். ஈஸ்வரன்,  அந்த  தசரத  ராமன்  விட்ட வழி''

''  காசி யாத்திரை  நீண்ட   பிரயாணமாச்சே. கைச்செலவுக்கு  பணம்  வைத்திருக்கிறீர்களா?''

''வாயில்  வித்தை  இருக்கிறது.  ஹ்ருதயத்தில்  ராமன்  இருக்கிறான்.  வேறு என்ன வேண்டும்,  எது குறைவு?''

 ப்ரோஹிதர்  ரொம்ப  சந்தோஷம் அடைந்தார்.
ப்ரோஹிதர்தனது வீட்டில் வாடகைக்கு இருந்த  கணபதி சாஸ்த்ரிகளின் நித்ய  பூஜை , ராமத்யானம்,  சங்கீத  வித்தை,  ஆகியவற்றில் தனை  இழந்தார்.

ஒருநாள்  கணபதி சாஸ்திரிகளிடம் சொன்னார்:

''உங்களுக்கு  நல்ல  காலம் பிறந்து விட்டது. எங்கள்  பிரபு  மணலி  சின்னையா முதலியாரிடம்  நாளை  உங்களை அழைத்துப்போய்  அறிமுகம் செய்து வைக்கிறேன்.

மறுநாள்  கணபதி சாஸ்த்ரிகள்  முதலியார் சமூகத்தில்  பேட்டி  கொடுக்கப்பட்டு  முதலியாருக்கு    சில அருணாச்சல  கவிராயர்  கீர்த்தனைகளை பாடிக்காட்டினார்.

''அடடா,   என்ன  அற்புதமாக  பாடுகிறீர்கள்.  எனக்கு  முழுதுமாக  ராம நாடக கீர்த்தனைகளை  பாடிக்காட்ட வேண்டும். அது  எங்கள் குலத்துக்குப்  பெருமை தந்த  சாஹித்யம்'' என்றார்  சின்னையா  முதலியார்.  அந்த காலத்தில்  வேறு  சங்கீத  ரூபத்தில்  பாடி  கதையும்  சொல்ல எந்த  கீர்த்தனையும்  இல்லை. கர்நாடக  ராக பாவங்களை தாளக்கட்டோடு, அழகாக  விஸ்தரித்து பாட,  நவரசங்களோடு பக்தி பெருக.   உள்ள முருக,  அமைந்த  தெய் வீகமான   ராம கதை  அருணாச்சல கவிராயர்  பாடியதொன்றேயாகும். அன்றிலிருந்து  இன்றும் என்றும்  ஜீவநதியாக  சங்கீத  உலகை  வாழ  வைக்கிறது.  இன்றும் எத்தனையோ வித்துவான்கள் பல கச்சேரிகளில் அருணாச்சல கவிராயரின் ராமன்நாடக கீர்த்தனைகளை பாடி மகிழ்விக்கிறார்கள். சமீபத்தில் நெய்வேலி சந்தான கோபாலன் பாடிய ''ராமனுக்கு மன்னன் முடி....''பாடலில் என்னை மறந்தேன்.  இழந்தேன்.

 அருணாச்சல கவிராயரை முன்னோடியாக  கொண்டு தியாக ராஜச்வாமிகள் கீர்த்தனம், தீட்சிதர்  கீர்த்தனை, சாமா  சாஸ்த்ரிகள் கிருதி, மதுர கவி,  க்ஷேத்ரஜ்னர் பதம்,பெருங் குன்னம் சுப்பராமய்யர் பதம்,  கவி குஞ்சர பாரதிகள்  ஸ்காந்த பதம், (கவி குஞ்சர பாரதி, கோடீஸ்வர ஐயர் எனது தாய்வழியில் ஒரு முன்னோர்.  அஷ்ட சஹஸ்ர ஒளி விளக்குகள்) அனந்த பாரதி பாகவத  பதம்,  வேலூர் சுப்பராய நாயுடு  பாரத கீர்த்தனை,  திருவிளையாடலை பாடிய புதுக்கோட்டை சமஸ்தானம்   செட்டிநாடு சுப்பய்யர்  கீர்த்தனை, வையச்சேரி ராமஸ்வாமி பாரதிகளும்  மேற்படியாரின்  அருமைச் சகோதரர் கான சிரோமணி மகா வைத்தியநாத சிவன் முதலியோர்  அமைத்த சிவ  தொண்டர்  புராண  மெட்டுகளும்   உருவாயின.  அனைத்துக்கும்  அடிப்படை  அருணாச்சல  கவிராயர்  எழுதிய  ராம  நாடக கீர்த்தனைகளின்  பதம் தான். இதை  அறியாதார்  அறியாதாரே.

மறுநாள்  மணலியில்  ராம நவமி  உற்சவம். அப்போது  என்ன நடந்தது?

 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...