கிருஷ்ண பசியும் தாகமும்
J.K. SIVAN
''நெஞ்சத்தை அள்ளிக்கொஞ்சம் தா'' என்று ஒரு பாட்டு இன்று கேட்க நேர்ந்தது முக்கியமல்ல. அந்த வரி சிந்திக்க வைத்தது.
நெஞ்சத்தை ஸ்பூனால் கொஞ்சமாக தரமுடியவே முடியாது. அப்படியே ''அள்ளி '' தான் தரமுடியும். அளவினால் அல்ல, அதன் அடர்த்தியால்! காரணம் நெஞ்சம் எதையும் கொஞ்சமாக நிரப்பிக் கொள்ளாது. சுகமோ துக்கமோ அதில் நிரம்பி தான் இருக்கும்.
என்னதான் எழுதினாலும் பேசினாலும் படித்தாலும் கேட்டாலும் ராதா--கிருஷ்ணன் பிரேம பந்தம் புரியாது. புரிய வைக்கவும் முடியாது. பாதம் ஹல்வா அன்று அதன் படத்தை பல விதத்தில் வண்ணத்தில் பிரசுரித்தாலும், நாள்கணக்கில் அதன் ருசியை பற்றி எடுத்துரைத்தாலும், அதன் செய்முறை பக்குவம் பற்றி எழுதினாலும், அதன் உண்மையான ருசி தெரியப்போவதில்லை. ஒரு விள்ளல் வாய்க்குள் போனால் அன்றி ருசி அறியமுடியாது. அந்த விள்ளலில் அதன் முழு ருசியும் மணமும் அடக்கம்.
இது போல் ராதா-கிருஷ்ண பிரேமையை மனத்தில் உருவகப்படுத்திக்கொண்டு கண் மூடி ரசித்தால் மட்டுமே அதன் ருசி புரிபடும். அன்பு பாசம் நேசம் என்றால் என்ன என்று தெரியவரும். இது அவரவர் தனிப்பட்ட அனுபவத்தில் தான் உணர வேண்டியது.
கடவுளை வேண்டும்போது அவர் எப்படி இதை நிறைவேற்றுவார், எங்கு, என்றைக்கு, எவர் மூலம், என்ற எண்ணம் கூடவே எழுந்தால் அது முழு மனதுடன், நம்பிக்கையுடன் கடவுளை வேண்டுவது ஆகாது. அதற்குபெயர் சந்தேகம். ராதா கண்ணனை முழுமையாக நம்பினாள், தானே கண்ணன் தான் என்று பாவித்தாள். சரணாகதியின் உச்ச நிலை இது. மீராவின் பாடல்களிலும் இந்த த்வனி எதிரொலிக்கும். ஆண்டாளும் தன்னை வேறாக உணரவில்லை.
ராதை மற்ற கோபியரின் தலைவி எனக் கோரவில்லை. அப்படி நினைக்கவே இல்லை. அவளது கிருஷ்ண பக்தியும் பிரேமையும் தானாகவே மற்ற கோபியரை அவளை வணங்கச் செய்தது. அடி தொட்டு பின்பற்றசெய்தது. எந்த காரணத்தைக் கொண்டும் நம்மிடைய உலவுகின்ற சில படங்களில், நாட்யங்களில், நாடகங்களில், தொலைக் காட்சிகளில், கதைகளில், கவிதைகளில், சினிமா பாடல்களில் வர்ணிக்கப்படுகின்ற ராதாவை, ராதா கிருஷ்ணன் காதலை, பிரேமையை, மட்டமாக இது தானா என்று எடை போட வேண்டாம். உங்கள் மனதில் நீங்கள் போடும் அந்த பக்தியின் எடை உன்னதமாக உங்களுடையதாகவே இருக்க வேண்டும். மற்றவரிடம் கடன் வாங்கிய கருத்தாக அமைந்தால் அதை உணரமுடியாது. தூய பக்தி விரகத்தை விரசமாக்கக் கூடாது. புனிதம் கெட்டுவிடும். பெருமை மங்கிவிடும். உயர்ச்சி தாழ்ந்து விடும்.
ஆங்கிலத்தில் ஒருவர் எழுதின RADHA என்கிற எழுத்தை திருப்பிப்போட்டால் ARADH என்று வருகிறதே ஓஹோ ராதா என்ற சொல்லே கிருஷ்ண ஆராதனை யின் பிரதிபலிப்போ, தத்துவமோ? ராதா ஒவ்வொரு செயலிலும் சொல்லிலும் எண்ணத்திலும் கண்ணனையே ''ஆராதி''த்தவள் . அல்லது ADHAR என்று படித்தாலும் அவள் கிருஷ்ண பக்தியின் 'ஆதார'' மாக காண்பவள் என அறிய முடிகிறதே.
ஒரு குட்டிக் கதை சொல்லி நிறுத்தட்டுமா?
ராதா ஒரு முறை ஒரு கிராமத்துக்கு போக நேர்ந்தது. உச்சி வெயில். நேரம் ஆக ஆக சுடு மணலில் நடந்து கொண்டிருந்த ராதாவிற்கு எங்காவது ஒரு மர நிழலில் சற்று இளைப்பாரலாமே என்று தோன்ற எங்கும் மரமோ நிழலோ எதுவுமே இல்லை. அவள் விடுவிடுவென்று சுடு மணலில் மேலும் நடந்தாள். கண்ணன் நினைவு வந்தும் அவள் அவனை நினைக்க மறுத்தாள் . ஏன் கண்ணனை நினைக்கவில்லை?
'' மாட்டேன் மாட்டேன், அவனை நினைத்தால் அவன் இங்கு என்னோடு வந்து பாவம் அவனும் இந்த சுடுமணலில் வாடுவான். இது என்னோடு போகட்டும். நிழலில் சென்று அவனை நினைத்து அவனோடு இளைப்பாறுகிறேன்'' .
''கண்ணா நீ என் கண்ணின் பாவை. என்னுள்ளே இருப்பவன். உன்னை உணர நீ என்னெதிரே தோன்றிய சிறு குழந்தை என்று வைத்துக்கொண்டால், என் விழியின் சக்தியின்றி, கண்ணில் பாவையின்றி, பார்வை இன்றி, உன்னை எவ்வாறு காண்பேன்? சிறு குழந்தையாக நிற்கும் உன்னை எவ்வாறு கண்டு ரசிப்பேன்? எனக்கு பார்வையும் நீ, நான் பார்க்கும் காட்சியும் நீ. உன்னுடைய மனித உருவை எனக்கு காட்டுகிறாயா? ''
ராதா இவ்வாறு காண ஏங்கும்போது அவன் மதுராவில் அன்றோ இருந்தான். அவள் கண்ணை மூடினாள் , அவள் முன் கண்ணன் தோன்றினான். ''கோபாலன் வந்தான் கோவிந்தன் வந்தான்'' என்று கோபியர் ஆடிப்பாடும்போது ராதை அவன் வந்ததை பரிபூர்ணமாக உணர்ந்தாள். அவனை வழக்கமாக சந்திக்கும் மதுவனத்துக்கு ஒரே ஓட்டம் ஓடினாள். கண்ணன் இருந்த இடம், அவன் இன்னும் அங்கேயே இருப்பான் என்று காலமெல்லாம் யமுனையின் சுடுமணலில் கொட்டும் மழையில் நின்றாள் . வனங்களில் அலைந்து தேடினாள். பறவைகளையும் பசு கன்றுகளையும் நீங்கள் கண்ணனைக் கண்டீர்களா/'' என்று வினவினாள் . நம்மால் முடியுமா. முயற்சிக்கிறோமா. முயற்சி திருவினை ஆக்குமே, கண்ணன் தோன்றுவானே! இன்றும் பிருந்தாவனம் யமுனை நதிக்கரை மதுரா என்று கண்ணன் இருந்த இடங்களுக்குச் சென்று அவனை நினைக்கும்போது ஒரு புத்துணர்ச்சி அவனை என்னுள் உணர வைக்கிறதே. ராதாவை நெஞ்சில் நிரப்பிக்கொண்டு இருக்கிறேனே'' என்று சொல்பவர்கள் இன்னும் இருக்கிறார்கள்.
''ராதா, உனக்கு என்ன வேண்டும் சொல்'' என்றான் கிருஷ்ணன்.
''நீ. உன் நினைவு''
அவள் பாடினாள். பாடிக்கொண்டே இருந்தாள்.
''கிருஷ்ணா உனக்கு நினைவிருக்கிறதா? நீ அந்த காளிங்கன் பாம்பின் மீது நர்த்தனம் ஆடினாயே, நீ ஆடிய ஆட்டத்தில் உன் காலில் நீ அணிந்திருந்த தண்டை கொலுசு ஜிங் ஜிங் என்று ஒலித்ததே அதை இன்னொரு முறை கேட்கவேண்டுமே?''
அடுத்த கணமே, அவள் காதில் அந்த ஒலி மீண்டும் கணீர் என்று கேட்டது.
நாம் இப்போது எதற்கெடுத்தாலும் தேங்க்ஸ் என்கிறோம். அவள் பேசாமல் ஆனந்தக் கண்ணீர் உகுத்தாள். தனை மறந்த நிலை அடைந்தாள் . .
ராதாவை உணர அவளுக்கிருந்த கிருஷ்ண ''பசியும் தாகமும்'' இருக்க வேண்டும். அவள் பக்தியும் பிரேமையும் எவ்வாளவு ஆழம் என்பதை நாமும் மூழ்கினால் தான் புரியும்.
THIS BLOG REPRESENTS THE SPIRITUAL, EDUCATIONAL, HISTORICAL, NOSTALGIC RECOLLECTIONS OF J.K. SIVAN BESIDES HIS STORIES AND TRAVELLOGUES & PILGRIMAGES AND PICTURES
Subscribe to:
Post Comments (Atom)
About Me - YOUR FRIEND
GHANTASALA SONG
கண்டசாலா விருந்து ஒன்று. #நங்கநல்லூர்_J_K_SIVAN ''தண்ணொளி வெண்ணிலவோ'' என்ற அருமையான கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...
-
அங்க சாஸ்திரம் - சாமுத்திரிகா லக்ஷணம் J.K. SIVAN நமது உடல் ஒரு அற்புத அதிசய சுரங்...
-
நீங்கள் என்ன கோத்ரம்? நாம் அடிக்கடி உபயோகிக்கும் ஒரு வார்த்தையை சரியாக புரிந்து கொள்வதில்லை. சடங்குகளில், ஆல...
No comments:
Post a Comment