11 அமிர்தம் தேடி பறந்த கருடன்
கருடன் நிஷாதர்கள் இருந்த தீவை வேகமாகப்பறந்து நெருங்கினான். எதிர்த்த அவர்களைக் கொன்று தின்றான்.அவனுக்கிரையான நிஷாதர்களில் ஒரு பிராமணனும் அவன் மனைவியும் இருந்தனர். மற்றவைகளை, மற்றவர்களை விழுங்கிய கருடனின் தொண்டையை பிராமண தம்பதியர் அடைத்துக் கொண்டு நின்றார்கள்.
''ஒ,பிராமணரே வெளியே வாருங்கள் என் எதிரியல்ல நீங்கள்'' என்றான் கருடன்.
''கருடா, என் மனைவி முதலில் வெளியே வரட்டும். அவள் நீ விழுங்கிய நிஷாதர்களில் ஒருவள்.''
''சரி, அவளையும் அழைத்துக்கொண்டு வெளியே வாருங்கள்'' என்றான் கருடன். அவர்கள் இருவரும் கருடன் வாயிலிருந்து வெளியே வந்ததும் அவர்களை ஜாக்கிரதையாக அங்கே தங்கவைத்துவிட்டு கருடன் பறந்தான். வழியில் தந்தை காச்யபரைக்கண்டு வணங்கினான். '' தந்தையே, குருவே, எனக்கு அமிர்தத்தை வென்று வர சக்தி அருளவேண்டும். அதற்கேற்ற ஆகாரம் வழியில் எனக்கு கிடைக்க வரம் தர வேண்டும்'' என்றான் கருடன்.
''காச்யபர் ''கருடா, நீ செல்லும் வழியில் ஒரு பெரிய ஏரி குறுக்கிடும். அந்த ஏரி புனிதமானது. அதில் ஒரு யானை எப்போதும் மூழ்கி, அதன் தமையனான ஒரு ஆமையை வெளியே இழுக்க முயற்சிக்கும். அதன் கதை சொல்கிறேன் கேள்.''
இந்த இடத்தில் நைமிசாரண்யத்தில் குழுமியிருந்த ரிஷிகளில் ஒருவரான சௌனகர் உக்ரஸ்வரரைப் பார்த்து ''இது என்ன கதை புதிதாக. சொல்லுங்கள்'' என்றார், சிரித்துக்கொண்டே சௌடி(உக்கிரஸ்வரரின் இன்னொரு பெயர்) காச்யபர் கருடனுக்குச் சொன்ன கதையை விளக்குகிறார் :
''ஒருகாலத்தில் ஒரு வயதான ரிஷி. விபத்வசு என்று பெயர். பொல்லாதவர். அவருக்கு தம்பி ஒருவன். சுப்ரிதிகன் என்று பெயர். ஒன்றாக அண்ணனுடன் வாழ விருப்பமில்லாதவன். தனது சொத்துகளைப் பிரித்துக் கொண்டான்.
''ஹே, சுயநலத்துடன் திரியும் சுப்ரிதிகா, நீ ஒரு யானையாகப் பிறப்பாய்'' என்று அண்ணா ரிஷியிடம் சாபம் பெற்றான் தம்பி ரிஷி .
'' நீயும் ஒரு ஆமையாகப் போய் விடுவாய்'' என்று தம்பியும் பதில் சாபமிட்டான். இருவரும் ஒருவரை இவ்வாறு சபித்துக்கொண்டதால் இருவருமே யானையும் ஆமையுமானார்கள். அப்படியும் அவர்கள் விரோதம் தொடர்கிறது. பிளிறிக்கொண்டு 6 யோசனை உயரம்,12 யோசனை அகலம் கொண்ட யானை, தும்பிக்கையைச் சுழற்றிக்கொண்டு நீரில் ஆமையை நெருங்க அது 3 யோசனை உயரம் 10 யோசனை அகலத்தில் இருந்த ஆமையும் யானையை நீரிலிருந்து எதிர்க்க இந்த துவந்த யுத்தம் வெகு காலமாக அந்த ஏரியில் தொடர்கிறது.
''என் மகனே கருடா, நீ அந்த யானையையும் ஆமையையும் கொன்று தின்றுவிடு, பிறகு அம்ருதத்தைத்தேடிக் கொண்டு செல்' என்றார் காச்யபர்.
கருடன் அந்த பெரிய ஏரியை நோக்கிக் குவிந்து இறங்கினான். தனது வலிமை மிக்க கால்களால் கோழிக்குஞ்சை இறுக்குவதைப் போல அந்த யானையையும் அதோடு மோதிய ஆமையையும் கவர்ந்து கொண்டு பறந்தான். அலம்வா என்ற ஒரு புனித க்ஷேத்ரம். அதில் தெய்வீக மரங்களும் தேவதாருக்களும் உண்டு. அவனது இறக்கையில் பட்டு காற்றுப் புயலாக வீச, அது அந்த ''கேட்ட வரம் தரும்'' மரங்களைத் தாக்க அவை பேயாக ஆடின. மற்ற மரங்களும் நடுங்கின. ஒரு பெரிய ஆலமரம் (பல யோசனை அகலம் நீண்ட கிளைகளையும் பறந்து கிடந்த விழுதுகளையும் உடையது) பேசியது.
''அப்பா கருடா, நீ தயவு செய்து என் மீது அமர்ந்து இளைப்பாறு. நீ கொண்டுவந்த யானையையும் ஆமையையும் ஆகாரமாக உண்டு பசி தீர்த்துக் கொள் '' என வரவேற்றதும் கருடன் அதன் ஒரு பெரிய கிளை ஒன்றின் மேல் அமர்ந்தான். அவன் பளுவைத் தாளாமல் அந்தப்பெரிய மரத்தின் கிளை ஒடிந்தது.
அந்த கிளையின் எங்கோ ஒரு ஓரத்தில் வலகில்ய ரிஷிகள் சிலர் தலைகீழாகத் தொங்கி தவம் செய்து கொண்டிருந்தனர். அந்த பிரம்மாண்ட கிளை ஒடிந்து கீழே விழுந்தால் அவர்களும் உயிரிழக்க நேருமே என்று கருடன் தனது அலகால் அந்த ஒடிந்த கிளையைத் தாங்கிக் கீழே விழாமல் தூக்கிப் பிடித்தான். பறந்தான். நிஷ்டை கலைந்த ரிஷிகள் அந்த பிரம்மாண்ட கிளை ஒரு பறவையின் எடை தாளாமல் உடைந்ததையும் அவர்கள் கீழே விழாமல் சமயோசிதமாக கருடன் தனது அலகில் அந்த உடைந்த மரக்கிளையைத் தாங்கிகொண்டு பறந்து ஒரு சரியான இடம் தேடி அவர்களை இறக்க முயற்சிப்பதும் கண்டு அதிசயித்தனர். கால்களில் யானை ஆமை வசமாக பிடிக்கப்பட்டு அலகில் பெரிய மரக்கிளையில் ரிஷிகளையும் சுமந்து கருடன் கந்தமாதன மலையை அடைந்தான். அங்கே தனது தந்தை காச்யபர் காட்டில் தவமிருந்ததால் அவரை வணங்கினான்.
''அப்பா, கருடா, வேகம் வேண்டாமடா.வலகில்ய ரிஷிகள் சூரிய ஒளியையே ஆகாரமாக கொண்டு தவமிருப்பவர்கள். தவம் கலைந்து அவர்கள் கோபத்துக்கு, சாபத்துக்கிரையாகாதே'' என்று அறிவுரை கூறி காச்யபரே அந்த முனிவர்களை நோக்கி ''சிறந்த தவ ஸ்ரேஷ்டர்களே, என் மகன் கருடன் கெடுதல் செய்பவன் அல்ல. நல்லதையே நினைத்து உதவுபவன். அவனுக்கு உங்கள் ஆசியைத்தாருங்கள்'' என்று வேண்டினார்.''
உக்ரஸ்ரவர் இவ்வாறு சொல்லி நிறுத்தினார். சௌனகர் முதலான ரிஷிகள் வேறு ஆர்வமாக அவர் சொல்வதை கேட்டுக்கொண்டு மேலும் தொடர காத்திருந்தனர். சௌடி மேலும் சொல்கிறார்:
''ஒடிந்த கிளையில் தலைகீழாக தொங்கிக்கொண்டிருந்த ரிஷிகள் காச்யப ரிஷியின் மூலம் கருடனைப் புரிந்துகொண்டு மெதுவாக அந்த கந்தமாதன மலையில் இறங்கி அனைவரும் ஹிமவத் பர்வதம் நோக்கி நடந்து சென்றனர். கருடன் காஸ்யபரிடம் கேட்டான்.
''தந்தையே, இந்த பிரம்மாண்ட ஒடிந்த ஆலமரக் கிளையை மனித சஞ்சாரமில்லாத இடமாக எங்கே வீசட்டும்? ''என்று கேட்டான். காச்யபர் ஒரு பனி படர்ந்த மலையைக் குறிப்பிட்டுச் சொல்ல, அங்கே கிளையோடும், யானை ஆமையோடும் கருடன் பறந்தான். ஆயிரம் யோசனை தூரத்தில் இருந்த அந்த பனிமலையை அரைக் கணத்தில் விரைவாக கருடன் அடைந்து அந்த பிரம்மாண்ட கிளையை அதன் மீது வீச பனி மலையின் சிகரங்கள் சிதறின. பனிமலையின் உச்சியில் அமர்ந்த கருடன் யானையையும் ஆமையையும் விழுங்கினான். அங்கிருந்து பறந்தான். கருடன் கிளம்பிய நேரம், ஆகாயத்தில் இடி முழங்கியது. மின்னல் கண்ணைப் பறித்தது. இந்தரனின் வஜ்ராயுதம் மற்ற ஆயுதங்களோடு மோதி பேரிரைச்சலுடன் ஒளியையும் தீப்பிழம்புகளையும் பரப்பியது. தேவாசுர யுத்தத்தில் கூட இப்படிப்பட்ட சப்தம் இல்லை. வசுக்கள், ருத்ரர்கள், ஆதித்யர்கள், சாத்யர்கள்,மருத்துகள், இதர தேவாதி தேவர்கள் தங்களுக்குள் ஒருவரை ஒருவர் மோதினார்கள். வானமும் பூமியும் பொடிபட நடுங்கியது. ரத்தம் சிதறியது, மழையாக பொழிந்தது. இந்திரன் கலங்கினான்.
தொடரும்
MY MAHABHARATHAM BOOK IN TWO VOLUMES '' AINDHAM VEDHAM'' OF ABOUT 1000 PAGES IN ART PAPER WITH MULTI COLOR PICTURES IS AVAILABLE FOR A MINIMUM DONATION OF RS. 1000. THIS IS NOT FOR SALE, BUT TO MEET THE PRINTING EXPS ONLY. INTERESTED MAY CONTACT ME. J.K.SIVAN 9840279080 OVER PHONE OR WHATSAPP MSG. RECEIPT WILL BE ISSUED FOR DONATION
No comments:
Post a Comment