அருமையான குரு அபிமான சிஷ்யன் 2.
J.K. SIVAN
ஸ்ரீ ராமானுஜரின் ஸ்ரீ வைஷ்ணவ சம்ப்ரதாயம், ஸ்ரீ பாஷ்யம், வேதாந்த தீபம், வேதாந்த சாரம், வேதார்த்த சங்க்ரகம், கீதா பாஷ்யம் கிரந்தங்கள் அழகாக உரு பெற்றன. எங்கேயோ ஒரு நெருடல் ஸ்ரீ ராமானுஜருக்கு. விசிஷ்டாத்வைத சித்தாந்தம் பூரணமாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமானால் வியாசரின் " போதாயன வ்ருத்தி" என்கிற ஓலைச் சுவடு நூல் அவசியம். அதிலிருந்து மேற்கோள் காட்ட வேண்டும். அதை எங்கே தேடுவது? காஷ்மீரத்தில் ராஜாவுடைய லைப்ரரியில் இருக்கலாம் என்று அறிந்தார். ஆனால் அது கிடைக்குமா ? மற்ற பாஷ்ய காரர்கள் உரை (குகதேவர், பருசி, தங்கா, திராமிடர்) எல்லாம் கூட ஒரே இடத்தில் காஷ்மீரத்தில் கிடைக்குமாமே !.
ஸ்ரீ ராமானுஜர் வயதான காலத்திலும் கால்நடையாக திக்விஜயம் கிளம்பினார். போகுமிடமெல்லாம் விசிஷ்டாத்வைத பிரசாரம்! அப்படியே காஷ்மீரம் வரை நடந்தார். எங்கெங்கெல்லாம் தங்கினாரோ அங்கெல்லாம் ராமானுஜ கூடங்கள், மடங்கள் எல்லாம் உருவாயின. கூரேசன் முதலான சிஷ்ய கோடிகள் ஸ்ரீரங்கத்திலிருந்து பின் தொடர்ந்தனர். காஷ்மீர் ராஜா அவ்வளவு சீக்கிரத்தில் ராமானுஜரையும் விசிஷ்டாத்வைத சித்தாந்தமும் ஏற்றுக்கொள்வானா? அவனது ராஜ சபையில் நாட்கணக்கில் பண்டிதர்களுடனும், வேதாந்திகளுடனும் விவாதம். ராமானுஜரின் சாஸ்த்ர ஞானம் அனைவரையும் அதிசயிக்க வைத்து முடிவில் ராமனுஜரின் மகிமை பெருமை எல்லாம் ராஜா உணர்ந்தான்.
0கூரேசனுக்கு ராஜாவின் லைப்ரரியில் வேண்டிய ஓலைச்சுவடி தேட அனுமதி கிடைத்தது. தோற்ற அரண்மனை பண்டிதர்களுக்கு பொறாமை ஞாயம் தானே? போதாயன வ்ருத்தி ஓலைச்சுவடி கிடைக்காதபடி செய்ய எண்ணம் வந்தது. ஓலைச்சுவடி லைப்ரரியை விட்டு வெளியே நகரக்கூடாது. அங்கேயே படிக்கப்பட வேண்டும் என்று ராஜாவின் அனுமதி பெற்றார்கள். இதற்கு ஒப்புக்கொண்டு ஸ்ரீ ராமானுஜரும் கூரேசரும் அங்கேயே படிக்க ரெடி. ஆனால் ஓலைச்சுவடியிலிருந்து குறிப்பு எடுக்ககூடாது என்று மற்றொரு கெடுபிடியும் போடப்பட்டது. விடுவாரா கூரேசர்?. ஆஹா அப்படியே அன்று அனைத்து ஓலைச்சுவடிகளையும் மனப்பாடம் செய்ய ஆரம்பித்தனர் இருவரும். வேறு வழியில்லை இந்த இருவரையும் கொல்வது தான் முடிவு என பண்டிதர்கள் தீர்மானிக்க இருவரும் காஷ்மீரை விட்டு வெளியேறினர்.
ஸ்ரீரங்கம் திரும்பியதும் ஸ்ரீ பாஷ்யம் எழுத தொடங்கினர். கூரேசரின் அபார ஞாபக சக்தியால் ஓலைச்சுவடியின் அத்தனை விஷயங்களும் எழுத்தில் மிளிர்ந்தது. பல வருஷங்கள் ஆயிற்று இந்த அதிசயத்தை பூர்த்தி செய்ய. ஸ்ரீ ராமானுஜருக்கு பரம திருப்தி. கூரேசனின் புத்தி கூர்மையால் தான் தன் எத்தனையோ வருட கனவு நிறைவேறியது என மன நிறைவு.
ஸ்ரீ வைஷ்ணவமும் ஸ்ரீ ராமானுஜ ப்ரபாவமும் நாடெல்லாம் இப்போது பரவியது. அநேக சிஷ்யர்களும் தொண்டர்களும் அவர் பின் இப்போது. ராமானுஜர் வாசம் செய்த ஸ்ரீ ரங்கம் தான் வைஷ்ணவத்தின் தலைநகர் என ஆயிற்று. ஆசார்யனுக்கு தனது குருவுக்கு வாக்களித்ததை நிறைவேற்றியதில் களிப்பு.
கூரேசருக்கு மட்டும் தனக்கு ஒரு பிள்ளை இல்லை என்ற குறை. உஞ்சவ்ரத்தியில் தான் அவர் குடும்பத்தின் காலக்ஷேபம் நடந்தது.
ஒருநாள் கொட்டும் மழை ஒரு கணமும் நிற்கவில்லை. எனவே கூரேசருக்கு உஞ்சவ்ரத்திக்கு வெளியே போக முடியாததால் அவருக்கும் மனைவிக்கும் அன்று உணவில்லை. துளசி ஜலம் தான் ஆகாரம். அன்றிரவும் வாயு பக்ஷணம் தான் போலும். ஆனால் கூரேசருக்கோ பரம சந்தோஷம். இன்று திருவாய் மொழி படிக்க நிறைய நேரம் கிடைத்ததே என்று!!!. ஆண்டாளுக்கோ நெஞ்சிலும் வயிற்றிலும் வலி. தனக்கு பசி என்பதற்காக அல்ல, கணவர் பட்டினி கிடப்பதைப் பார்த்து!!!.
நேரம் ஓடிக்கொண்டே இருந்தது. ஸ்ரீ ரங்கம் ஆலயத்தில் கணீர் என்று ஆலய மணி சாயந்தர நைவேத்ய பூஜையை அறிவித்தது. ஆண்டாள் அம்மாள் கண்களில் தாரை தாரையாக கண்ணீர். அவள் மனத்தில்
"ஹே!! ரங்கநாதா உன் பக்தன் இங்கே ஆகாரமின்றி வாட உனக்கு மட்டும் உண்ண மனம் வருகிறதா?” என்ற ஏக்கம் த்வனித்தது .
ரங்கன் இதைக் காதால் கேட்டு சும்மாவா இருப்பான்? கோவில் பிரதான பட்டாச்சார்யர் உத்தம நம்பியின் கனவில் ரங்கனின் கட்டளை :
”உடனே பிரசாதங்களுடன் கூரேசன் வீட்டுக்கு போ. என் பக்தன் பசியோடு உள்ளான். என் ஆசிகளையும் பிரசாதத்துடன் அனுப்பினேன் என்று சொல்".
உத்தம நம்பிக்கு உடல் சிலிர்த்தது வியர்க்க விருவிருக்க ஓடினார். மேள தாளங்களுடன் ரங்கனின் நைவேத்ய பிரசாதங்களுடன் அனைவரும் புடை சூழ நள்ளிரவில் கூரேசன் வீட்டுக்கு நடந்தார். வெறும் ஜலம் அருந்தி படுத்திருந்த கூரேசன் திடுக்கிட்டார். உத்தம நம்பி சொன்னதை அவரால் நம்பவே முடியவில்லை. ரங்கனின் கருணை அவரை திக்குமுக்காட வைத்தது. ஆண்டாள் அம்மா மனதில் நன்றியுடன் ரங்கனை வணங்கினாள்.
”இது ரங்கன் அனுப்பிய பிரசாதம். அவசியம் நீங்கள் ஏற்றுகொள்ள வேண்டும்” என்றாள். கூரேசன் மனதில் ஒரு ஐயம். ஒருவேளை இது ஆண்டாளின் வேலையோ? என்று. அவரது கேள்விகளுக்கு விடையாக, தான் ரங்கனிடம் மனதில் முறையிட்டதை ஒப்புக்கொண்டாள்.
"ஆண்டாள், நீ என்ன காரியம் செய்து விட்டாய் ஒரு கவளம் சோற்றுக்காக அந்த பேர் அருளாளனை சோதிக்கலாமா? "
அன்று இரவு ரங்கன் கூரேசன் கனவில் தோன்றி " கூரேசா! நான் உனக்கு அனுப்பியது வெறும் சோறு மட்டும் அல்ல. உனக்கும் ஆண்டாளுக்கும் பிறக்கப்போகிற இரண்டு குழந்தைகளுக்கான வரப்ரசாதமும் கூட . அவர்கள் எம் குழந்தைகளும் ஆவர். எம்மை அவர்களில் நீங்கள் இருவரும் காண்பீர்”
ரங்கனின் ஆசியை கனவில் கேட்ட கூரேசர் ஆனந்தத்தில் குதித்து எழுந்தார்.
"அடியே, ஆண்டாளே, இந்த அதிசயத்தைக் கேள்" என்று கூரேசர் அவளை எழுப்பி விவரம் சொன்னதில் அவளது சந்தோஷத்தை எழுத எனக்கு வார்த்தை இல்லை. ராமானுஜருக்கும் இந்த விவரம் சென்றது.
ஒரே வருடத்தில் இரு பிள்ளைகள் பிறந்தன. ராமானுஜரே அவர்களுக்கு “வியாச பட்டர்” “ பராசர பட்டர்” என நாமகரணம் செய்வித்தார். பிற்காலத்தில் பராசர பட்டரே ராமானுஜரின் வாரிசாக ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ சம்பிரதாய ஆன்மீக சாம்ராஜ்யத்தை நிலை நிறுத்தியவர்.
தொடரும்
No comments:
Post a Comment