திருக்குறுக்கை வீரட்டேஸ்வரர் J.K. SIVAN
என் நண்பர் ஸ்ரீ அரும்பாக்கம் ஸ்ரீனிவாசனுடன் காரில் ஆலயங்கள் சென்ற அநுபவங்களை நினைவு கூர்ந்து எழுதிவருகிறேன். அதில் ஒன்று தான் இந்த கட்டுரையில் இடம் பெறுகிறது.
காவிரி நதி வடகரை ஆலயங்களில் அற்புதமான ஒரு ஆயிரம் வருஷ கால சிவன் கோவில் திரு குறுக்கை என்ற ஊரில் இருக்கிறது. மிகப் பழமை வாய்ந்த கோவில். ஐந்தடுக்கு பழைய ராஜகோபுரம். ரெண்டு பெரிய ப்ரஹாரங்கள். அஷ்ட வீரட்டானங்களில் இது ஒரு முக்கிய ஸ்தலம். சிவன் ஸ்வயம்பு லிங்கம். அம்பாள் ஞானாம்பிகை. இந்த ஆலயத்தில் ஒரு விசேஷம் இங்கே விநாயகருக்கு கைகள் சின்னது. குறுகியது. அதனால் குறுங்கை என்று இந்த வூருக்கு பெயர் நாளடைவில் குறுக்கை ஆக மாறிவிட்டிருக்கலாம். கடுக்காய் மரம் தான் இங்கே ஸ்தல விருக்ஷம்.
மயிலாடுதுறையிலிருந்து 12 கி.மீ. . மயிலாடுதுறை - மணல்மேடு பேருந்துச் சாலையில் நீடூர் தாண்டி ‘கொண்டல், பாலந்தாண்டி, ‘கொண்டல்’ ஊரையடைந்து, ‘கொருக்கை’ என்று வழிகாட்டிப் பலகை (கைகாட்டிமரம்) உள்ள (குறுக்கைச்) சாலையில் இடப்புறமாக 3 கி.மீ. சென்று (குறுகியபாதை) பாலத்தைக் கடந்து இத்தலத்தை அடையலாம். தெருக்கள் மோசமில்லை.
திருக்குறுக்கை சிவபெருமானின் அட்டவீரட்டானத் தலங்களில் ஒன்றாகும். இத்தலம் மன்மதனை எரித்த தலம். சூரபன்மன், தாரகன் ஆகிய அசுரர்களின் தொல்லைகளை தீர்க்க சிவபெருமான் ஒரு குமாரனைத் தோன்றச் செய்ய வேண்டும் என்பதற்காக தேவர்களை மன்மதனை சிவனின் தவம் கலைக்க செய்ய, அவனும் அவர் மீது மலர்க்கணை தொடுக்க, தவம் களைந்த சிவன் நெற்றிக்கண்ணை திறக்க மன்மதன் எரிந்து சாம்பலானான். ப் பார்க்க அவன் எரிந்து சாம்பலானான். மன்மதனின் மனைவி ரதி இறைவனிடம் அழுது கணவனின் பிழை பொறுத்தருள பிரார்த்தித்தாள். இறைவன் ரதியிடம் தான் பூலோகத்தில் பார்வதியை மணம் புரிந்து கொள்ளும் போது மன்மதனுக்கு சாபவிமோசனம் கிட்டும் என்று அருள் புரிந்தார்.
இந்த வீரட்டேஸ்வரர் ஆலயம் மேற்கு பார்த்திருக்கிறது. கோபுரத்தில் பைரவர், காமதகனர் சுதைச் சிற்பங்கள் காண்கிறது. வாசலில் கரையில்லாத ஒரு குளம் .தீர்த்தம் சூலகங்கை.
உள்ளே மண்டபத்தின் வடக்கே, தெற்குப்பக்கம் பார்த்தவாறு அம்பாள் சந்நிதி. ஞானாம்பிகை. அதை ஒட்டி காமதகனமூர்த்தி சபை. இதில் சிவபெருமான் யோகமூர்த்தி. இடது காலை மடித்துக் குத்திட்டு வலது காலை தொங்கவிட்டுக் கொண்ட கோலம். சிவபெருமானைச் சுற்றி சனகாதி முனிவர்கள்.
கர்ப்ப கிரஹத்தில் வீரட்டேஸ்வரர் சதுரமான ஆவுடையார் மேல் லிங்கத் திருமேனியுடன் சுயம்புவாக காட்சி தருகிறார். லிங்கத்தை உற்றுப் பார்த்தால் மன்மதன் சிவபெருமான் மேல் எய்த ஐவகை மலர்களும் குறிப்பாக தாமரை மலர் பதிந்திருப்பதைக் காணலாம்.
இங்கே முருகன் ஒரு முகமும் நான்கு கரமும் கொண்ட வர. உற்சவர் வில்லேந்திய முருகன்.
தலம் பெயர் வரலாறு: புராண காலத்தில் தீர்த்தவாகு என்ற முனிவர் சிவபெருமான் எழுந்தருளியுள்ள ஆலயங்களுக்குச் சென்று இறைவனுக்கு ஆகாய கங்கை நீரைக் கொண்டு அபிஷேகம் செய்யும் இயல்புடையவர். கோவிலின் நுழைவு வாயிலுக்கு முன் இருக்கும் சூல தீர்த்தம் கங்கையைவிட புனிதமானது. இதன் பெருமை அறியாது தீர்த்தவாகு முனிவர் இத்தலத்தை அடைந்து கங்கையைக் கொண்டுவர விரும்பி தன் நீண்ட கைகளை உயரத் தூக்க அவை குறுகின. அக்காரணத்தால் இத்தலத்தின் பெயர் குறுக்கை என்று வழங்கலாயிற்று. இவ்வாலயத்தில் குறுங்கை விநாயகர் சந்நிதியில் அவருக்கு அருகில் குறுங்கை முனிவரின் உருவம் உள்ளது. குறுங்கை விநாயகர் ஆவுடையார் மீது இருப்பது விசேஷமானது.
மக்கள் வழக்கில் ‘கொருக்கை’ என்று வழங்குகிறது.
அட்ட வீரட்டத் தலங்களுள் ஒன்று, மன்மதனை எரித்த தலம். “ஆடல் அநங்கனை அமுது செய்த செங்கணான் இருக்கை ஈது” என்பது திருவிளையாடற்புராணத் தொடர். இத்தலம் திருக்குறுக்கை வீரட்டம் எனப்படும்.
தருமையாதீனத் திருக்கோயில். கோயில்வரை வாகனங்களில் செல்லலாம். இங்குள்ள சூல தீர்த்தத்தின் பெருமையறியாது, ‘தீர்க்கபாகு’ என்னும் முனிவர், கங்கை நீரைப் பெறவேண்டித்தம் கைகளை நீட்டியபோது அக்கைகள் குறுகிவிட்டன. அதுகண்டு தம்பால் பிழை நேர்ந்தது எண்றெண்ணித் தலையைப் பாறைமீது மோதமுற்பட, இறைவன் காட்சி தந்து, அவர் உடற்குறையைப் போக்கினார் என்பது தலவரலாற்றுச் செய்தி. ‘குறுங்கை முனிவர்’ இவர் பெயரால் இத்தலம் அழைக்கப்பட்டு, நாளடைவில் ‘குறுக்கை’ என்று ஆனதாகச் சொல்லப்படுகிறது.
யோகீசபுரம், காமதகனபுரம், கம்பகரபுரம் என்பன இதன் வேறு பெயர்கள். இலக்குமி, திருமால், பிரமன், முருகன், ரதி ஆகியோர் வழிபட்ட தலம்.
அப்பர் பாடல் பெற்றது.
வாயிலில் உள்புறமாகத் துவாரகணபதியும் சுப்பிரமணியரும் உள்ளனர். வெளிச்சுற்றில் தோட்டம் மட்டுமே - சந்நிதிகள் ஏதுமில்லை. கொடிமரம் இல்லை. நந்தி, பலிபீடம் மட்டும் உளது. வௌவால் நெத்தி மண்டபம். இம் மண்டபத்தில் இடப்பால் அம்பாள் - ஞானாம்பிகை சந்நிதி உள்ளது. தெற்கு நோக்கியது. நின்ற திருக்கோலம். நான்கு திருக்கரங்கள். எதிரில் நந்தி, பலிபீடம் உள்ளது. இருபுறமும் துவாரபாலகியர் உள்ளனர். மண்டபத்தின் ஒருபுறம் பள்ளியறை உள்ளது.
வாயிலைக் கடந்து அடுத்த மண்டபத்தையடைந்தால் இடப்பால் வள்ளி தெய்வயானை சுப்பிரமணியர் தரிசனம். அடுத்து கஜலட்சுமி தரிசனம். பக்கத்தில் தலமூர்த்தியாகிய ‘காம தகன மூர்த்தி’ சந்நிதி உள்ளது. இடக்காலை மடித்து, வலக்காலைத் தொங்கவிட்டு, வலக்கை அபயமுத்திரையுடன், இடக்கையை மடக்கிய கால்மீது வைத்து, அமர்ந்த திருக்கோலத்தில் இம்மூர்த்தி காட்சியளிக்கின்றார். களிற்றுப்படிகள் உள்ளன. சந்நிதியின் உள்ளே பக்கத்தில் உமையும் எதிரில் ரதி, மன்மதன் உற்சவத் திருமேனிகளும் உள. சுவாமிக்குப் பக்கத்தில் சனகாதி முனிவர்களின் திருமேனிகள் உள்ளன. மன்மதன் கையில் கரும்பு வில்லும், ரதியின் கையில் கிளியும் உள்ளன.
காமதகனவிழா மாசிமகத்தன்று, இக்கோயிலில் சிறப்பாக நடைபெறுகின்றது. குறுங்கை விநாயகர் - தலவிநாயகர் சந்நிதி உள்ளது. இச்சந்நிதியில் விநாயகர் சதுர ஆவுடையாரில் அமர்ந்த கோலத்தில் உள்ளார். பக்கத்தில் தீர்த்தபாகுமுனிவர் உருவம் உளது. அடுத்து, நின்ற கோலத்தில் ‘சோகஹரேஸ்வரர்’ காட்சிதரும் சந்நிதியுள்ளது.
உள்பிராகார வலம் முடித்துப் படிகளேறி, மண்டபத்தை அடையலாம். மண்டபத்தின் வலப்பால் நவக்கிரக சந்நிதி. வாயிலைக் கடந்து உள்சென்றால் இடப்பால் நடராசசபை உள்ளது. எதிரில் வாயில் உள்ளது. இச் சபையில் சிவகாமி, மாணிக்கவாசகர் திருமேனிகள் உள. இச் சபை, ‘சம்பு விநோத சபை’, ‘காமனங்கநாசனி சபை’ எனப் பெயர் பெறும்.
துவாரபாலகர்களைக் கடந்து உட்சென்றால் நேரே மூலவர் தரிசனம். சுயம்பு மூர்த்தி. சதுர ஆவுடையார் - உயர்ந்த பாணம், மன்மதன் எறிந்த பஞ்ச பாணங்களுள் (ஐந்து அம்புகளுள்) ஒன்றான பத்மம் (தாமரை) பதிந்துள்ள அடையாளம் சுவாமி பீடத்தின் முன்புறத்தில் நடுவில் உள்ளது. நிறைவான தரிசனம். நாடொறும் நான்கு கால பூஜைகள் முறையாக நடைபெறுகின்றன. பெருவிழாக்களும் மாதாந்திர விழாக்களும் முறையாக நடைபெறுகின்றன. மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் பாடியுள்ள தலபுராணம் உள்ளது. சோழ, விஜயநகர மன்னர்கள் காலத்திய கல்வெட்டுக்கள் இக்கோயிலில் உள்ளன.
“நீற்றினை நிறையப் பூசி நித்தலும் நியமஞ்செய்து
ஆற்றுநீர் பூரித்தாட்டும் அந்தண னாரைக் கொல்வான்
சாற்றுநாள் அற்றதென்று தருமராசற்காய் வந்த
கூற்றினைக் குமைப்பர்போலும் குறுக்கை வீரட்டனாரே.”
‘நிறைமறைக்காடு தன்னில் நீண்டெரி தீபந்தன்னைக்
கறை நிறத்தெலிதன் மூக்குச் சுட்டுடக்கனன்று தூண்ட
நிறைகடன் மண்ணும் விண்ணும் நீண்டவானு லகுமெல்லாம்
குறைவறக் கொடுப்பர்போலும் குறுக்கை வீரட்டனாரே.’ (அப்பர்)
- மணஞ்சேர்ந்து
வாரட்ட கொங்கை மலையாளொடுங் கொறுக்கை
வீரட்டமேவும் வியனிறைவே. (வள்ளலார் அருட்பா)
இந்த ஆலயத்தை ஒட்டி விபூதி குட்டை என்று ஒரு பள்ளம். அதில் மணல் வெள்ளை வெளேரென்று விபூதியாக உள்ளது. கம்மென்று விபூதி வாசம் வேறு. மன்மதனை இங்கே சிவன் எரித்ததால் அவன் சாம்பலாகி அதுவே விபூதியாக நிறைந்திருக்கும் குட்டை. மற்ற இடத்தில் எல்லாம் மண் சிவப்பு அல்லது சாதாரண மண்.
காம தகன மூர்த்தியாக சிவன் இங்கே ஆடும் நடனம் வீரநடனம்.
பழங்காலத்தை சேர்ந்த இந்த ஆலயத்தில் நிறைய படிக்கமுடியாத கல்வெட்டுகள் உள்ளன. கோவிலைப் பற்றி நிறைய சொல்லப்பட்டிருக்கும். யார் அக்கறையோடு இதெல்லாம் நமக்கு படித்து சொல்லப்போகிறார்களோ?
பக்கத்தில் தனியாக துர்கா பரமேஸ்வரி ஆலயம் இருக்கிறது. மரத்தாலான ரிஷப, மூஞ்சூறு, மயில், ஹம்ச வாகனங்கள் உள்ளன.
12ம் நூற்றாண்டில் இந்த ஊர் விக்ரம சோழ சதுர்வேதி மங்கலம் என்று சீரும் சிறப்புமாக இருந்தது. இப்போது வெறிச்சோடி காண்கிறது. நாங்கள் சென்றபோது நாங்கள் மட்டும் தான். தர்மபுரி ஆதீன மட நிர்வாகத்தில் இருந்தாலும் கவனிப்பு இல்லாத நிலையில் காட்சி அளிக்கிறது.
திருப்பி திருப்பி ஒரு சில கும்பலான கூட்டம் சேரும் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் இது போன்ற பழைய சிவ வைணவ ஆலயங்களுக்கும் சென்று தம்மாலான உதவிகளை செய்யவேண்டும். இவைகளை அழியவிட்டால் நாம் துரோகிகள். ஆலய பணி செய்யும் அர்ச்சர்களுக்கு வருமானமே இல்லை. சம்பளமே ஐநூறு ரூபாய்க்கு கீழே தான். விலைவாசி அதிகரித்த இந்த நாளில் அந்த சம்பளம் கூட பல மாதங்களாக தரப்பட வில்லை. இப்படி ஒரு ஆலய பணி புரியும் அரசாங்க நிர்வாகம் நம்மைத்தவிர வேறு எவருக்கும் கிடைக்காது.
இவ்வாலயம் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
THIS BLOG REPRESENTS THE SPIRITUAL, EDUCATIONAL, HISTORICAL, NOSTALGIC RECOLLECTIONS OF J.K. SIVAN BESIDES HIS STORIES AND TRAVELLOGUES & PILGRIMAGES AND PICTURES
Subscribe to:
Post Comments (Atom)
About Me - YOUR FRIEND
GHANTASALA SONG
கண்டசாலா விருந்து ஒன்று. #நங்கநல்லூர்_J_K_SIVAN ''தண்ணொளி வெண்ணிலவோ'' என்ற அருமையான கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...
-
அங்க சாஸ்திரம் - சாமுத்திரிகா லக்ஷணம் J.K. SIVAN நமது உடல் ஒரு அற்புத அதிசய சுரங்...
-
நீங்கள் என்ன கோத்ரம்? நாம் அடிக்கடி உபயோகிக்கும் ஒரு வார்த்தையை சரியாக புரிந்து கொள்வதில்லை. சடங்குகளில், ஆல...
No comments:
Post a Comment