குந்தியின் பிரார்த்தனை....4 J.K. SIVAN
ராமன் ராஜகுமாரனாக பிறந்து வாழ்ந்து ராஜாவாகவே மறைந்தான். கிருஷ்ணன் ராஜகுமாரனாக பிறந்தும் ஒரு சாதாரண பசுமேய்க்கும் இடையர் குடும்பத்தில் வளர்ந்து எல்லோருடனும் இயற்கையாக சகஜமாக பழகினவன். குந்தி ஒரு ராணி. குந்தி போஜன் மகள். துர்வாசரால் புகழப்பட்டவள். பக்தை.
யசோதைக்கும் நந்தகோபனுக்கும் கிருஷ்ணன் ராஜவம்சம் என்பது தெரியாமலே அவனை அன்போடு வளர்த்தனர். கிருஷ்ணனுக்கோ எல்லாம் தெரிந்து அவன் நினைத்தபடி நிகழ்வுகள் எல்லாமே நடந்தவை. ஞானிகள் கிருஷ்ணன் சர்வ காரணன் என்று அறிந்து போற்றினார்கள். விரிந்த மனம் கொண்டவன் எவனும் கிருஷ்ணனை மஹா ஆத்மா என அறிவான்.அவன் நம் எல்லோரையும் அறிவான். நாம் தான் அவனை தெரிந்து கொள்வதில்லை. புரிந்துகொள்பவன் அதிருஷ்ட சாலி. அறிந்தும் தெரிந்தும் கொண்டு சுகமடைவான்.ஒரு பணக்காரனின் பிள்ளை உடுத்த உடை, உண்ண உணவு, உறங்க இடம் பற்றி என்றாவது கவலை கொள்வானா? நாம் அனைவரும் கிருஷ்ணனின் பிள்ளைகள், நமக்கு ஏது பொருளாதார பிரச்னை? அவன் எல்லாம் உடையவன். நம் மேல் அன்புகொண்டவன். ''யாம் இருக்க பயம் ஏன் ?'' என்று உரைப்பவன். நமக்கினி பயமேது! இப்படியொரு மனநிலை கொண்டவள் குந்தி.
நமது வாழ்வில் நாம் உழைத்து எல்லாம் சம்பாதித்து நமது முயற்சியால் எல்லாம் அடைவதாக சுபிக்ஷமாக இருப்பதாக பகல் கனவு காண்கிறோம். அவனன்றி ஓர் அணுவும் அசையாது என அழுத்தமாக உண்மை அறிந்தவர்கள் நாம் எப்போதும் சுபிக்ஷமாகவே இருப்போம் என்று அறிந்தவர்கள். சுபிக்ஷம் என்பது அவரவர் டிக்ஷனரியில் வெவ்வேறு அர்த்தம் கொண்ட வார்த்தை. நாம் எப்படி எல்லாம் முற்பிறவிகளில் இருந்தேனோ, நாயாக, பறவையாக, விலங்காக... எல்லாம் என் முயற்சியாலா அப்படியெல்லாம் வாழ்ந்தேன். கஷ்டப்பட்டேனா?. அந்தந்த வாழ்க்கை வாழும் ஜீவன்கள் கஷ்டமா படுகிறது? கல்லினுள் தேரைக்கும் கருப்பை உயிர்க்கும் புல்லுணவே தந்து பாதுகாப்பவன் ''காக்கும் கடவுள்'', '' கோவிந்தன்', ' என்ற பேரோடு தான் இருக்கிறானே!
கஷ்டம் என்று ஏதாவது இருந்தால் அது நமது கர்ம பலனால் . அதையும் தணிக்க அவன் இருக்கும்போது நாம் தானே அதற்காக வேண்டியதை, அதாவது அவனை சரணடைவதை, வேண்டுவதைச் செய்வதில்லை. அவனென்ன செய்வான்?
विषान्महाग्ने: पुरुषाददर्शनादसत्सभाया वनवासकृच्छ्रत: ।
मृधे मृधे sनेकमहारथास्त्रतो द्रौण्यस्त्रतश्चास्म हरे sभिसक्षिता: ॥७॥
8..24 viṣān mahāgneḥ puruṣāda-darśanād
asat-sabhāyā vana-vāsa-kṛcchrataḥ
mṛdhe mṛdhe ’neka-mahārathāstrato
drauṇy-astrataś cāsma hare ’bhirakṣitāḥ
''கிருஷ்ணா, அப்பப்பா, இப்போது நினைத்துப் பார்த்தால் கூட என் உடல் நடுங்குகிறதே. ஒன்றா இரண்டா எங்களுக்கு வந்த சோதனைகள். சிறுவயதிலேயே என் பிள்ளைககளுக்கு விஷ உணவை கொடுத்தான் துரியோதனன். அரக்கு மாளிகையில் கூண்டோடு எங்களை தீயில் எரிக்க திட்டமிட்டான். எண்ணற்ற அசுரர்களை எங்கள் வாழ்வில் சந்தித்தோம். காட்டில் உண்ண உணவின்றி, இருக்க இடமின்றி அலைந்தோம், ஒருநாளா இரு நாளா, பன்னிரண்டு வருஷங்கள், படைகளை வேறு ஏவி எங்களை அழிக்க ப்ரயத்தனம் செய்தான். மஹா ரதர்கள் எதிர்த்தார்கள். கடும் ஆயுதங்கள் அஸ்திரங்கள் என் குழந்தைகளை அழிக்க வந்தன. துரோணன் மகன் அஸ்வத்தாமன் எங்கள் வம்சத்தை நாசமாக்கினான். அவனது கொடிய ஆயுதத்திலிருந்து உத்தரை வயிற்றில் பாண்டவ வம்சம் வளர பரீக்ஷித் உயிரை காப்பாற்றினாய். எந்த துன்பம் வந்தபோதிலும் அவற்றிலிருந்தெல்லாம் அவ்வப்போது தக்க தருணத்தில் வந்து எங்களை காப்பாற்றினவன் நீ அல்லவா? தீன ரக்ஷகா. திக்கற்றோர்க்கு தெய்வமே துணை என்பதின் அர்த்தம் புரியவைத்தவனே கிருஷ்ணா.
विपद: सन्तु ता: शश्वत्तत्र तत्र जगद्गुरो ।
भवतो दर्शनं यत्स्यादपुनर्भवदर्शनम् ॥८॥
vipadaḥ santu tāḥ śaśvat
tatra tatra jagad-guro
bhavato darśanaṁ yat syād
apunar bhava-darśanam
என் கஷ்டங்களை வரிசைப்படுத்தி சொன்னேனே. இனி அந்தமாதிரி துன்பங்கள், துயரங்கள் கஷ்டங்கள் என்னை அணுகக்கூடாது என்பதற்காகவா? இல்லவே இல்லவே, லோகநாயகா, லோக சம்ரக்ஷகா, இதோ பார் உன்னிடம் என் பிரார்த்தனை விசேஷமானது. நான் எல்லோரையும் போல் இல்லை. எனக்கு இதைவிட இன்னும் அதிக துன்பங்கள் துயரங்கள் கஷ்டங்கள் மேன் மேலும் வரவேண்டும், தொடரவேண்டும். ஏன் தெரியுமா, அப்போது தான் என் மனம் எப்போதும் உன்னையே வேண்டும். நீயும் உடனே வருவாய். அப்படியாவது உன்னோடு இருக்க முடியும் இல்லையா கிருஷ்ணா? உன் முகம் தோன்றினவுடனேயே கதிரவனைக் கண்ட பனி போல் என் துன்பங்கள் என்னை விட்டு ஓடுமே.. உன் முகம் ஒன்றே எனக்கு சகல சந்தோஷங்களையும் வார்த்தையில் வர்ணிக்க, விவரிக்கமுடியாத மகிழ்ச்சியை, ஆனந்தத்தை அளிக்குமே பரந்தாமா. அதற்கப்புறம் பிறப்பேது இறப்பேது..
No comments:
Post a Comment