Wednesday, February 7, 2018

KOORATHAZHWAR

''அருமையான குரு அபிமான சிஷ்யன்'' 4
. J.K. SIVAN

இத்தொடர் இந்த பதிவுடன் நிறைவு பெறுகிறது.

கண்ணிழந்த கூரேசன்மெதுவாக ஸ்ரீரங்கம் திரும்பினார். திருக்கோஷ்டி நம்பிகள், திருமலை ஆண்டான் , திருவரங்க பெருமாள் அரையர் என்று ஒவ்வொருவராக மஹா புருஷர்கள் எல்லாம் மறைந்து போய் விட்டார்களே. திருப்பதியில் ராமானுஜரின் நெருங்கிய உறவினர் ஸ்ரீ சைல பூரணரும் இல்லை. திருக்கச்சி நம்பிகளும் விண் எய்திவிட்டார்.கூரேசருக்கு ஸ்ரீ ரங்கம் வெறிச்சோடியது போல் தோன்றியது. தனிப்பட்டு விட்டோமோ?

மனம் கலங்கிய கூரேசர் ரங்கநாதனே கதி என்று தனிமையில் மன வியாகூலத்தை ரங்கனிடம் கொட்ட ஆலயம் சென்றபோது ஆலய வாசலிலே காவலர்கள் தடுத்தனர்.

''அரசனின் ஆணை, யார் ராமானுஜரைத தம்முடைய குரு அல்ல என ஒப்புக்கொள்கி றார்களோ அவர்கள் மட்டும் ஆலயத்தில் அனுமதிக்கபடுவர்".

“ஓ அப்படியா, ஐயா ! உங்கள் அரசரிடம் சொல்லுங்கள் ராமானுஜரை இகழ்ந்து புறக்கணித்துவிட்டு கூரேசனுக்கு ரங்கன் இந்த ஜென்மத்தில் மட்டு மல்ல எந்த ஜென்மத்திலும் தேவையில்லை”

வெகுண்ட கூரேசர் வீடு திரும்பினார். “ஆண்டாள், பசங்களைக் கூப்பிடு. அரங்கனைப்
பார்க்கமுடியாத ஸ்ரீரங்கம் இனி நமக்கில்லை. வேறெங்காவது செல்வோம்”.

அவர்கள் அவ்வாறே திருமாலிருஞ்சோலை (மதுரை அருகே) சென்று குடியேறி தனிமையில் வாழ்ந்தனர். காலம் மாறியது. கிருமி கண்ட சோழன் மாண்டான். ஆட்சி மாறியது. பல வருஷங்கள் ஓடிவிட்டது.

நூறு வயதான ராமானுஜரும் ஸ்ரீரங்கம் மீண்டார். கோலாகல வரவேற்பு. பிரபந்தங்கள் பாசுரங்கள் எதிரொலிக்க ஸ்ரீவைஷ்ணவ பக்த கோடிகள் உற்சாகமாக அவரை வரவேற்றனர். அவர் கண்களோ கூரேசனை தேடியது. கூரேசர் வீட்டு வாசலை அடைந்தார்.

கூரேசர் ராமானுஜர் வரவை அறிந்து குடும்ப சகிதம் ஸ்ரீரங்கம் விரைந்தார். கண்ணிழந்த கன்று தாய்ப் பசுவை ஆர்வமாக நாடியது. ஸ்ரீ ரங்கத்தில் தான் இருந்த வீடு தேடி ஆசார்யன் வந்ததாய், தன்னை காணோமே என்று வருந்தியது கேட்டு புளகாங்கிதம் அடைந்தார் கூரேசர்.

ஸ்ரீரங்கத்தில் மீண்டும் பல வருஷங்கள் கழித்து ஆச்சார்யனும் சிஷ்யனும் சந்தித்தனர். நா எழவில்லை இருவருக்கும். எண்ணங்கள் ஓடின, காஞ்சியில், ஸ்ரீரங்கத்தில், காஷ்மீரில், ஸ்ரீபாஷ்யம் எழுதியது என்று எத்தனையோ எண்ண ஓட்டத்துக்கு எல்லையே இல்லை. எத்தனை எத்தனை இடையூறுகள், இன்னல்கள்,எதிப்புகள், விவாதங்கள்! இருவரும் ஒன்றாக அல்லவா எல்லாவற்றையும் கடந்தோம்.

ராமானுஜர் கண்களில் காவேரி. கூரேசருக்கோ கண்ணே இல்லையே.!! விழியற்று பேச்சற்று தடுமாறித் தத்தி ராமானுஜரின் கால்களில் விழுந்தார். குருவின் பாத கமலங்களை கெட்டியாக இரு கரங்களாலும் பிடித்து கொண்டார். அமைதி நிலவியது. பாசத்தோடு கூரேசரைத் தொட்டு தூக்கி மார்போடு அணைத்து கொண்டார் ராமானுஜர்.

“என் அருமை கூரேசரே, என்ன செய்தீர் நீர், எனக்காகவும் ஸ்ரீ வைஷ்ணவத்துக்காகவும் உமது கண்களையே தியாகம் செய்த மஹாபுருஷரே !

பன்னிரண்டு வருஷங்கள் கழித்து மீண்டும் ஆச்சர்யனின் அமுத குரலை கேட்ட கூரேசர் வானில் பறந்தார்.

“சுவாமி, நான் எங்கோ எப்போதோ யாரோ ஒரு சிறந்த ஸ்ரீ வைஷ்ணவனின் நெற்றியை பார்த்து இவன் எவ்வளவு அலங்கோலமாக ஊர்த்வ புண்ட்ரம் சாற்றிக் கொண்டிருக்கிறான் பார்” என்று கேலி செய்திருப்பேனோ என்னவோ. அந்த பாவப் பிராயச்சித்தமாக எனக்கு விழிகளை இழக்கும் தண்டனை கிடைத்ததாக கருதுகிறேன்”’

” நீராவது பாவம் செய்வதாவது!. கூரேசரே , நான் செய்த பாபத்திற்காக தான் உமக்கு இந்த தண்டனை.. நடந்ததெல்லாம் போகட்டும் என்னோடு வாரும் . நீரும் நானும் செய்ய வேண்டியது அநேகம் இன்னும் உள்ளது” . கை பிடித்து கூரேசரை ஆசார்யன் கூட்டி சென்றார், நிஜமும் நிழலும் ரங்கநாதர் ஆலயம் அடைந்தது. ஸ்ரீ வைஷ்ணவம் மீண்டும் துளிர்த்தது. கிருமி கண்ட சோழன் காலத்தில் ஆலயம், ஸ்ரீவைஷ்ணவ சம்பந்தமான அனைத்து பள்ளிகள், மடங்கள் நூலகம் எல்லாம் நாசமாகி இருந்தது. இருவரும் தவறுகளை எல்லாம் திருத்துவதில் முனைந்தனர்.

ராமானுஜர் ஆதிசேஷன் அவதாரம். லக்ஷ்மண பெருமாளாக ராமருக்கு அவர் ஆற்றிய தொண்டு ராமரை நெகிழ வைத்து எப்படி கைம்மாறு செய்வது என தோன்றி கூரேசனாக அவதரித்து ராமானுஜருக்கு சேவை செய்வதன் மூலம் கடனை தீர்த்து கொண்டார் என சொல்வதுண்டு.

ராமானுஜருக்கு வயது நூறைத்தாண்டி விட்டது. கூரேசரும் இப்போ கிழவர், கண்ணற்றவர் ஒரு நாள் ரங்கநாதரை தரிசனம் செய்துவிட்டு அங்கேயே நின்றார் கூரேசர்.

”என்ன கூரேசா ஏதோ சொல்ல நினைக்கிறாய் போலிருக்கிறதே?” என்றான் ரங்கன்

“எனக்குக் குறை யொன்று மில்லை கோவிந்தா! . எதோ உன் முன்னால் நின்று ஆத்ம திருப்திக்கு மனசுக்குள்ளேயே பாடவேண்டும் என தோன்றியது.”

"எனக்கும் உன்னை கண்டதில் ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது. எதாவது என்னிடம் கேளேன் ??”

“ரங்கா ! என்ன விளையாடுகிறாயா எனக்கு தான் ஒரு குறையும் நீ வைக்கவில்லை என்றேனே . நான் என்ன கேட்பேன் உன்னிடம்?”

“அப்படியொன்றுமில்லை, நீ எதாவது கேட்டே ஆகவேண்டும் உனக்கில்லை என்றால் ரங்கநாயகிக்காகவாவது, என் ராமானுஜனுக்காவாவது எதையாவது கேள்!!”

“சரி ரங்கா, என்னை இந்த உடலில் இருந்து விடுவித்து உன் பாத கமலத்தில் சேர்த்து கொள்ளேன் !”

“”ஹு ஹும்” ” இல்லை வேறே எதாவது கேள் கூரேசா !!”

“வேறே ஒன்றுமே இல்லையே என்ன கேட்பேன்.?!””

“சரி உன் விருப்ப படியே ஆகட்டும். உனக்கு மட்டும் அல்ல, உன்னைச் சார்ந்த அனைவருக்கும் நீ கேட்ட வரம் அளிக்கிறேன் !!”

பரம திருப்தியோடு கூரேசன் திரும்பினார். ராமானுஜருக்கு மேற்கண்ட சம்பாஷனை தெரியவந்தது. ஆனந்தத்தில் மேலே அணிந்திருந்த வஸ்திரத்தை தூக்கி போட்டு பிடித்து கூத்தாடினார்.

ஒரு சிஷ்யன் கேட்டான் ஆச்சர்யரே என்ன ஆயிற்று ? “

ஸ்ரேஷ்டர் கூரேசரால் எனக்கும் அல்லவா நாராயணனின் பாத கமலப்ராப்தி வரம் கிட்டியது. நானும் கூரேசனைச் ''சார்ந்த''வனல்லவா”. இதற்கு இன்னுமொரு முக்கிய காரணமும் உண்டு. திருக்கோஷ்டி நம்பி ''நான் உபதேசித்த ரகசிய மந்திரத்தை எல்லோருக்கும் பட்டவர்த்தனமாக அறிவித்தத்தில் நீ நரகத்துக்கு செல்வாய்'' என்ற சாபம் இருந்ததே. எப்படி வைகுண்டம் செல்லமுடியும். இப்போது கூரேசன் மூலம் அது நிவர்த்தி ஆகிவிட்டதல்லவா?

தொண்டு கிழவர் ராமானுஜர் கூரேசர் வீடு நோக்கி சென்றார்.

“கூரேசா”, நீர் என்ன கார்யம் செய்துவிட்டீர் குருவாகிய என்னை கேட்காமலேயே ??”
கூரேசருக்கு புரியவில்லை, பதில் சொல்லவில்லை விழியின்றி விழித்தார்.

“ஏன் பேசமுடியவில்லை உமால்? எதற்காக ரங்கனிடம் உடலிலிருந்து விடுபட கேட்டீர் . நான் குருவாக இருக்கும்போது எனக்கு முன்பு நீர் அங்கு ஏன் செல்லவேண்டும். சொல்லும் ஏன் அவ்வாறு கேட்டீர்?

“சுவாமி!! நாராயணன் திருவடியில் பரமபதம் பெற முறையாகவே வேண்டினேன்”

“புரியும்படியாக சொல்லும் . மழுப்பவேண்டாம் ”

“நீங்கள் சொல்வீர்களே ஒரு பாசுரம். அதில் வருமே "பரம பதம் சென்ற மூத்தவர்கள், இளையவர்கள் பரமபதம் அடைய வரும்போது வாசலில் நின்று வரவேற்பர் என்று " எனக்கு அதில் உடன்பாடில்லை. இளையவர்கள் முன்பாக சென்று மூத்தவர்கள் வரும்போது முறையாக மரியாதையுடன் அவர்களை வரவேற்க வேண்டும். ஆகவே நான் சிஷ்யன் என்ற இளையவன் எனவே உமக்கு முன்பாக செல்ல வரம் கேட்டேன்”. என்றார் கூரேசர். ஆடிப்போனார் ஆசார்யன்

" என்னருமை கூரேசா, வைகுண்டத்தில் வயது ஏது? இளையவர் யார்? முதியவர் யார்? பாபி யார் ? புண்யசாலி யார்? ஞானி யார்? அஞ்ஞானி யார்? தெரிந்தும் கூட, இங்கு செய்தது போல் அங்கும் எனக்கு சேவை செய்ய உன் மனம் விழைந்தது புரிகிறது. என் அருமை கூரேசரே !! உமக்கு ஈடு நீரே தான்”

ஆசார்யன் கண்களில் நீர்மல்க கூரேசனை தழுவிக்கொண்டார் .”நீரே என் ஆத்மா.உம்மை நான் எப்படி ப் பிரிய முடியும்? என்னை தனியனாக விட எண்ணமா? என்னையும் உம்மோடு கூட்டி செல்ல வேண்டியதுதானே ”

கூரேசன் சிலையாக நின்றார். இறைவன் முன்பு நின்றிருந்தபோதும் இந்த எண்ணம் தோன்றாமல் போனதே என சிந்தித்தார் .

”என்னை மன்னித்தது விடுங்கள் பிரபோ!!” என்று ராமனுஜரின் கால்களைப் பிடித்தார்.

“கூரேசா, உமக்கு வரமளித்த ரங்கநாதன் எனக்கும் வரமளிப்பான் என எனக்கு நம்பிக்கை உள்ளது. நேரே போகிறேன் எனக்கு முன் போகாமல் உம்மை தடுக்க வரம் தேடுகிறேன்- இல்லை. தவறு. தவறு, ரங்கனின் ஆக்னையை மாற்ற நான் யார்?. நாராயணன் சித்தம் அவ்வாறென்றால் அதற்கு உட்படுவதே என் கடமை””

ஒரு கணம் யோசித்த ஆசார்யன் தொடர்ந்தார்

”கூரேசா!! நீர் போய்விட்ட பிறகு நான் எப்படி இங்கு வாழ முடியும்? பரமபத நாராயணன் உம்மைக் கவர்ந்தான். நீவிர் அங்கே செல்லும் . நான் இங்கே ரங்கனாக உள்ள நாராயணன் நிழலில் இருக்கிறேன்.”

கால ஓட்டத்தில் துகள்கள் உருண்டன. கூரேசன் பரமபதம் அடைந்தார், ராமானுஜரை அனேக சீடர்கள் சென்றடைந்தனர். அவர்களில் ஒருவராவது கூரேசனாக முடியுமா?

When my good FB friend Sri V.S.Rangachar from Bangalore requested me for an article to publish in the souvenir released in connection with Mahasamprokshanam Kumbabishekam, in a village in Karnataka, I wrote the above article in English which was published and a copy sent to me. Sri VSR regularlly communicated in FB and Whatsapp and made a couple of visits to my home in Nanganallur from Bangalore whenever he visited Chennai. I am very sad and hearbroken to learn that he passed away on 5.2.18, the day Azhwan's Thirunakshathram was celebrated at Kooram. I pray Krishna to retain the departed soul at His lotus feet for ever.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...