Friday, February 2, 2018

NOSTALGIA

நான் படித்த சில புஸ்தகங்கள் J.K. SIVAN

ஏதோ ஷேக்ஸ்பியர்,ஷெல்லி , மில்டன் என்ற சில பிரபல பெயர்கள் வரும் என்று எதிர்பார்ப்பவர்கள் பேசாமல் டிவியில் ஏதேனும் சொத்தை ப்ரோக்ராம் பார்க்க எழுந்து போவது உத்தமம். என்னதான் சொல்கிறான் இவன் என்று பொறுமையாய் இருப்பவர்களுக்கு ஒரு கண்டிஷன். குறைந்தது 70 வயதாவது ஆகியிருந்தால் என் தமிழும் அதில் வரும் பெயர்களும் புரியலாம். மற்றவர்கள் புரியாமல் படிக்கும் எத்தனையோ விஷயங்களில் இதையும் ஒன்றாக கருதி வேர்க்கடலை கொறித்துக்கொண்டு மேலோட்டமாக மேயலாம்.

'அணில்' என்று ஒரு புத்தகம் ஒரு கையடக்க புத்தகமாக 16 பக்கங்களில் வாரம் ஒரு முறை வந்தபோது அதற்கு நல்ல டிமாண்ட் வாண்டுகளிடம் இருந்தது. சட்டார் கடையில் சுந்தரேசன் விடாமல் வாங்கி எனக்கு ரொம்ப கெஞ்சியபின் படிப்பதற்கு கொடுப்பான். விலை ஒரு அணா என்று ஞாபகம். பச்சையிலும் சிகப்பிலும் படங்களின் மேல் வர்ணம் தீட்டியிருந்தாலும் வர்ணங்கள் படத்தின் எல்லை தாண்டி எங்கேயோ இருக்கும்.

தாத்தா பாட்டி, குரங்கு கதைகள் விருப்பமாக படித்திருக்கிறேன். செல்வராஜ் தான் வாங்குவான். நான் ஓசியில் படிக்கும் வர்க்கம் அப்போது. சனிக்கிழமை தான் புத்தகம் சைக்கிளில் ஒரு முண்டாசு ஆசாமி கொண்டு வந்து கடையெல்லாம் போடுவான். சத்தார் கடையில் புளி டப்பா மேல் இந்த மாதிரி புத்தகங்களை வைத்திருப்பார். அந்தகால சினிமா பாட்டு புத்தகங்கள் ஜோசிய புத்தகங்கள், கைரேகை சாஸ்திரம் என்று மஞ்சள் கலர் அட்டை, பழைய கிண்டி குதிரைப்பந்தய புத்தகங்களை வாங்க வும் நிறைய வாசகர்கள் உண்டு.

சிலநாளில் 'டமாரம்' புத்தகம் வந்தது. வந்த வேகத்தில் மறைந்தது. அணில் அல்ப ஆயுசோடு தான் இருந்தது. 'கல்கண்டு' அதன் இடத்தைப் பிடித்துக்கொண்டது. தமிழ் வாணன் எழுதும் நடை எல்லோருக்கும் பிடித்தது. கேள்வி பதில் சுவாரஸ்யமாக இருக்கும். எந்த நோய்க்கும் மருந்து சொல்வார். ஆனால் அரைக்க, அம்மி வேண்டும். வடிகட்டி குடிக்க சொல்வார். எத்தனை பேர் செய்தார்கள்?. வியாதிகள் குணமாகியதா? என்ற விவரம் தெரியவில்லை. சங்கர்லால் இந்திரா கல்யாணத்தை வெகு சிறப்பாக அறிவித்து, கல்கண்டு பத்திரிகை கலர் கலராக தோரணமாக வந்தது ஞாபகம் இருக்கிறது. கத்திரிக்காய் குள்ளமாய் தொப்பை மேல் அரை நிஜாருடன், தலையில் கிரிக்கெட் தொப்பியுடன் நிற்பது. நெட்டையாக மாணிக்கம். கருப்புக்கண்ணாடியுடன் சங்கர்லால் மேஜைமேல் இரு கால்களையும் நீட்டியவாறு 60 டிக்ரீயில் நாற்காலியில் சாய்ந்திருந்த படம் நினைவில் இருக்கிறது. மாது டீ கொண்டு வந்து கொடுப்பதோடு சரி. சங்கர்லால் கதை விறுவிறுப்பாக வரும். துப்பாக்கி எடுத்துக் கொண்டு ஒருவன் சங்கர்லாலை சுட குறி வைத்திருப்பான். அப்போது.......... பாதியில் இப்படி கதையை நிறுத்தி நம்மை குடைந்து தூக்கமின்றி செய்துவிடுவார் தமிழ் வாணன். அது அவர் பாணி. இதற்கு அடிமைகள் என்னைப்போல் எத்தனையோ ஆயிரம் பேதை ரசிகர்கள். அடுத்தவாரம் சத்தார் கடைக்குப்போய் கல்கண்டு வந்து விட்டதா என்று அடிக்கடி பார்த்துவருவதற்குள் பொறுமை போய் விடும்.வந்திருந்தால் அடுத்த படையெடுப்பு செல்வராஜ் வீட்டுக்குத் தானே. செல்வராஜ் வீட்டு ஓனர் மீசைக்காரன் வீட்டிலிருந்தால் செல்வராஜை பார்க்க விடமாட்டான். கடவுளே அவன் இருக்கக்கூடாது என்று வேண்டியது நிறைய சந்தர்ப்பங்களில்.
சங்கர்லால் என்றால் தொப்பி, கருப்பு கண்ணாடி, வெள்ளை முழுக்கை சட்டையை நீண்ட வெள்ளை கால்சட்டைக்குள் செருகி ரப்பர் காலணியுடன், பாக்கெட்டில் கைகளுடனும், கலைந்த தலையுடனும் வரும் துப்பறியும் நிபுணர். இன்ஸ்பெக்டர் வஹாப் அங்கங்கு தலை காட்டுவார். தமிழ் வாணனை கருப்பு கண்ணாடி தொப்பியுடன் தான் போட்டோவில் பார்த்திருக்கிறேன். கல்கண்டு ரெண்டணா .அதாவது 12 பைசா.

ஆனந்த விகடன் வியாழக்கிழமை வரும். சூளைமேட்டில் எங்கள் தெரு கடைசியில் எப்போதும் மூடியிருக்கும் ஒரு பஜனை கோவில். அதை அடுத்து புதர்கள் மண்டிய காலி மனைகள். பனந்தோப்பு. அடுத்தது விறகு தொட்டி அதிபர் சத்தார் வீட்டு வாசலில் உள்ள சிறிய பலசரக்கு கடைக்கு வரும். அங்கு புத்தங்கள் இல்லை என்றால் சூளைமேடு தெருவைக் கடந்து ஆர்க்காட் ரோடு போனால் கிடைக்கும். வாங்குபவர்கள் அங்கு தான் போவார்கள். நான் செல்வராஜ் வீடு தானே போவேன். ஐந்து நாடுகளில் அறுபது நாள் என்று தேவன் தென் கிழக்கு ஆசிய விஜயம் பற்றி எழுதியதை படிப்பேன். படங்கள் போட்டிருப்பார். அப்போது தான் வெளிநாட்டு படங்களை முதன் முதலில் பார்த்தேன். லக்ஷ்மி 'நாயக்கர் மக்கள்', 'பண்ணையார் வீடு' எல்லாம் எழுதுவதை என் தாயார் விரும்பி படிப்பாள் . கல்கியும் விகடனுமே நாலணா தான். கல்கி அட்டையில் வந்தியத்தேவனோ பெரிய பழுவேட்டரையரோ நந்தினியோ கட்டாயம் இருப்பதை தான் எல்லோரும் விரும்புவார்கள்.

கல்கியில் வந்தியத்தேவன் அருள்மொழி, பெரிய பழுவேட்டரையர் ஆழ்வார்க்கடியான் நந்தினி படங்களை மணியம் போடுவார். பிரமாதமாக நேரில் பேசுவது போல் இருக்கும். எப்படிதான் மணியம் கற்பனையில் இவர்கள் பிறந்தார்களோ என்பது உணமையிலேயே ஒரு அதிசயம்.

இவர்களுக்கு சற்றும் சளைத்தவர்கள் அல்ல கோபுலுவின் 'சாம்பு, நாயர், சந்துரு, சுதர்சனம், வேதாந்தம், மைதிலி'' ஆகியோர். தேவனின் அமர காவியங்களில் வரும் கதா பாத்ரங்கள் இவர்கள். கோபுலுவின் மைதிலி இன்னும் நாணத்துடன் 9 கஜத்தில் கோணல் சிரிப்புடன் நெஞ்சில் குடி கொண்டுள்ளாள்.

நாடோடி என்ற வெங்கடராமன், ஒரு பக்கத்தில் அல்லது ஒரு கட்டுரையிலோ அசத்திவிடுவார். அவர் ஹாஸ்யம் கற்பனை தனி ரகம். சசி என்பவர் ஒரு பக்கத்தில் ஒரு கட்டுரை எழுதுவார். ரகசியம் கடைசி பாராவில் அல்லது வாக்யத்தில் தான் வரும்.

தென்னாட்டு சிற்பங்கள் என்று ஒரு தமிழ் கட்டுரை விடாமல் வந்தது. தெ .போ . மீனாக்ஷி சுந்தரனார் என்று ஒருவர் எழுதுவார். சாரி. ஒப்புக்கொள்கிறேன். இன்றுவரை அன்றுமுதல் அதை படித்ததில்லை. படம் பார்த்துவிட்டு பக்கம் புரட்டியிருக்கிறேன். சில்பி யின் ஆலய, விக்ரஹ படங்களில், விளக்கு எரியும் ஜோதியில், உடைத்த தேங்காயின் உள் வெண்மையில், சிலைகளின் தத்ரூபங்களில் என்னை இழந்திருக்கிறேன். இன்றும் அவற்றை பார்க்க நேரும்போது நானே சிலையாகிறேன். கோயில்களை மலை உச்சியிலிருந்து பார்ப்பதுபோல் தூரமாக காட்டுவார். அசத்திவிடுவார்.

இதற்கும் முந்தைய விகடன்களில் கல்கி 'கர்நாடகம் 'என்ற பெயரில் எழுதுவது, ஆடல் பாடல் பகுதி, சாமாவின் படங்கள், சாமா சாஸ்த்ரி பாகவதர் சிரீஸ், கோபுலு, ராஜுவின் படங்கள் என்றும் நினைவில் அழியாதவை. விசிறிக்காம்பால் பேரனை அடித்து விளக்கெண்ணெய் குடிக்க வைப்பது மறக்க முடியாத நினைவு. எங்கள் வீட்டில் சில சனிக்கிழமை எங்களை எல்லாம் விளக்கெண்ணெய் குடிக்க வைப்பாள் எங்கள் அம்மா. அன்று முழுதும் அடிக்கடி அரை நிக்கரை கழற்றி தோட்டத்துக்கு ஓட வேண்டி வரும்.

அவ்வப்போது தெருவில் ஒத்தை மாட்டு வண்டியில், ''ஆரியமாலா'' '' திருநீலகண்டர்'' போஸ்டர்கள் ரெண்டு பக்கமும் ஒரு ஒற்றை மாட்டு வண்டியின் இரு பக்கங்களில் கூம்பாக மாட்டிக்கொண்டு, உள்ளே ஒரு கிளாரினெட் ஆசாமி வாசித்துக்கொண்டு, ஒருவன் பிட் நோட்டிஸ் கொடுத்துக்கொண்டு வருவான். வண்டியின் பின்னால் கூடவே ஓடிப்போய் நிறைய கலர் நோட்டிஸ் வாங்கியிருக்கிறேன். பச்சை, மஞ்சள், ஆரஞ் கலரில் கதை சுருக்கம் போட்டு, மற்றவை வெள்ளித்திரையில் காண்க என்று ஆசையைக் கிளப்பி விட்டிருப்பார்கள். வெள்ளித்திரை ஒரு குடிசை கூடாரத்தில். படபடவென்று ஜெனெரேட்டர் சத்தம் போடும். ரீல் ரீளாக ப்ரொஜெக்டரில் மாட்டி படம் காட்டுவார்கள். நடுநடுவே பிலிம் அறுந்துவிடும். ஒட்டி மீண்டும் காட்டுவார்கள். திரையில் 1,2,3, என்று நம்பர்கள் விழும். கைகளை நீட்டி அதன் பிம்பம் வருவதை நிறைய பேர் ரசிப்போம்.

தினமணி கதிர் என்ற ஒரு வாரப்பதிப்பு அதில் டப்பாச்சி என்று மரப்பாச்சி போன்ற பொம்மை கதை வரும். துமிலன் என்று ஒருவர் எழுதுவதை என் தாய் விரும்பி படிப்பாள்.

தினத்தந்தி என்ற பத்திரிகை அப்போது நிறைய பேர் வாங்குவார்கள். அதில் ஏதோ ஒரு கார்ட்டூன் தினமும் வரும். அதை அக்கு வேறு ஆணிவேராக அலசுவார்கள். மேலும் கீழும் திருப்பி என்னவோ தேடுவார்கள். இதற்காகவே அதை வாங்குவார்கள். என்ன என்று பிறகு தெரிய வந்தது. காட்டன் என்ற சூதாட்டத்துக்கு எந்த எண் அதிர்ஷ்ட நம்பர் என்று அந்த கார்ட்டூனில் வருமாம்.அதை தான் தேடிக்கொண்டிருப்பார்கள். இப்போது சிரிப்பு வருகிறது. முட்டாள்கள் எப்போதுமே உண்டு. நாகரிக வளர்ச்சிக்கும் முட்டாள்கள் அதிகரிப்புக்கும் கொஞ்சமும் சம்பந்தமில்லை போலிருக்கிறது.





No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...