இதுவரை ஆதி சங்கரரின் லிங்காஷ்டக ஸ்லோகங்களில் ஏழு அனுபவித்து மகிழ்ந்தோம். அடுத்த எட்டாவது ஸ்லோகத்தோடு இந்த தொடர் நிறைவுபெறும்.
''த்ரிநேத்ரனான சதாசிவா, உனக்கு அபிஷேகப்ரியன் என்று பெயர் உண்டே. தாரா பாத்ரத்தில் சதா சர்வ காலமும் ஏற்கனவே கங்கையைத் தலையில் சூடிய பெருமானே, உனக்கு அபிஷேகம் நடைபெறுவதை எத்தனை கோவில்களில் கண்டு களித்திருக்கிறேன். உன் மனம் குளிர்ந்து நீ அருள இப்படி ஒரு வழியா? உனக்கு எதில் அபிஷேகம் செய்கிறார்கள் என்று அறிவேனே!
தயிர், பால், தேன் , இளநீர், விபூதி, சந்தனம், பஞ்சாம்ருதம் (பால், சர்க்கரை, நெய், தேன், தயிர்) இத்தோடு நிறைய பழங்களும் சேர்ப்பதும் உண்டே.
வில்வ தளத்தில் மகிழும் விஸ்வநாதா, உலகில் பிறந்து பிறந்து துன்பத்தில் வாடும் எம்மை கருணையோடு காத்து ''பிறவா வரம் தாரும் பெம்மானே'' என்று பாடியதும் உண்டல்லவா?.
நீ எளிதில் திருப்தி அடைபவன் ஆயிற்றே. எளிய மலர்களே கூட உனக்கு போதுமே, தும்பை, அரளி, நாகலிங்கம், -- மற்றவர்கள் தலையில் சூடாத பூக்கள் உன்னை அலங்கரிக்கின்ரனவே.
உனக்கு பிடித்த எட்டு மலர்கள் எது என்று எங்கோ படித்தது நினைவுக்கு வருகிறது. சொல்கிறேன்
1. அஹிம்சை என்கிற புஷ்பம் பக்தர்களிடம் கண்டால் அதுவே உனக்கு பிடித்த முதல் மலர்
2. ஐம்புலன் அடக்கம் என்கிற புஷ்பம் இருந்தால் அது தான் ரெண்டாவதாக பிடித்த மலர்
3. சகல ஜீவராசிகளிடமும் காருண்யம் என்கிற புஷ்பம் என்பது உனக்குப் பிடித்த மூன்றாவது மலர் .
4. மன்னித்தல் என்கிற புஷ்பம் உனக்குப் பிடித்த விசேஷ நான்காவது மலர் .
5. .பொறுமை, அமைதி, சாந்தம் இது பக்தர்களிடம் இருந்தால் அந்த புஷ்பம் நீ அவர்களிடமிருந்து பெரும் ஐந்தாவது மலர் .
6. ஜப தபம் என்கிற புஷ்பம் அது உனக்கு பக்தர்கள் அளிக்கும் ஆறாவது மலர்.
7. தியானம் என்கிற அருமையான புஷ்பம் தான் உன்ன்னைகவரும் ஏழாவது மலர்.
8.சத்யம், என்கிற விசேஷ புஷ்பமே நீ விரும்பும் எட்டாவது மலர்.
இவற்றை பக்தர்கள் கொண்டிருந்தால் அந்த மலர்களாலேயே நீ அர்ச்சிக்கப்பட விரும்புவன் நீலகண்டா. யாரும் விரும்பாத அஞ்சும் விஷ நாகமே நீ மனம் விரும்பி அணியும் மாலை அல்லவா?. நாகேஸ்வரா. காடுடைய சுடலைப் பொடி பூசி உனது திவ்ய சரீரம் சொல்லாமல் சொல்லுகிறதே வாழ்வு அநித்தியம் என்று. பரம சிவா உன்னை வணங்குகிறேன்.
அஷ்டதளோபரிவேஷ்டித லிங்கம்
ஸர்வஸமுத்பவ காரண லிங்கம் |
அஷ்டதரித்ர வினாஶன லிங்கம்
தத்-ப்ரணமாமி ஸதாஶிவ லிங்கம் || 7 ||
தென்னாடுடைய சிவனே என்னாட்டவர்க்கும் இறைவனே. நீ எளியோர்க்கெளியவன். புராதனமானவன். அனாதிகாலத்தவன். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்துக்கும் முந்தைய பழமனாதி. பராத்பரா, பரமேஸ்வரா. ''தந்தை தாய் இருந்தால் உலகில் உனக்கு இந்த அல்லல் வருமோ ஐயா'' என்று அருமையான பாட்டு நீ ஆதி அந்தமில்லாதவன் என உணர்த்துவதை எத்தனை முறை கேட்டிருக்கிறேன். மகிழ்ந்திருக்கிறேன். பாடியுமிருக்கிறேன். எல்லோரும் அமிர்தம் தேடி அலையும்போது நீ தானாகவே வந்து ஹால ஹால விஷத்தை அமுதாக உண்டவனாயிற்றே.
சுருட்டப்பள்ளியில் பள்ளிகொண்ட ஈஸ்வரா, உன்னை அங்கு காணும்போதெல்லாம் என் மனம் எத்தனை வேதனைப்படும் தெரியுமா? முகத்தில் கவலையோடு பார்வதி, தேவர்கள், முனிவர்கள் நந்தி அனைவரும் உன்னை, உன் வேதனையை, உணரும் உணர்ச்சியை முகத்தில் தேக்கி காட்டி எவ்வளவு அற்புதமாக, அதிசயமாக, அந்த சிற்பி கல்லில் வடித்திருக்கிறான். பிரதோஷ மகிமை அல்லவா அந்த க்ஷேத்ரத்துக்கு. (பார்க்காதவர்கள் இப்போதே உலகிலேயே பெரிய, படுத்துக்கொண்டி ருக்கும் கோலத்தில் பள்ளிகொண்ட ஈஸ்வரனாக அந்த சிவனைச்சென்று தரிசியுங்கள். தமிழ்நாடு ஊத்துக்கோட்டையிலிருந்து கூப்பிடு தூரம் ஆந்திரா எல்லையில் உள்ளது சுருட்ட பள்ளி. சென்னையிலிருந்து மூன்று மணி நேரத்தில் பள்ளிகொண்ட ஈஸ்வரனை தரிசிக்கலாமே .
No comments:
Post a Comment