Sunday, February 18, 2018

மாணிக்க வாசகரைப் பற்றி சில வாசகங்கள்
J.K. SIVAN

நமது இந்து சனாதன தர்ம வளர்ச்சிக்கு பெரிதும் பாடு பட்டு உதவியவர்களில் அறுபத்து மூன்று நாயன்மார்களும் உண்டு.

இவர்களைத் தவிர சைவ சமய குரவர்கள் நால்வரில் ஒருவரான
மாணிக்க வாசகரைப் பற்றி தெரியாதவர்களுக்கு திருவாசகம் பற்றி தெரியாது என்று ஸ்டாம்ப் பேப்பரில் எழுதி கையெழுத்து போட்டுக் கொடுக்கலாம்.

இவர் பிறந்தது ஊர் திருவாதவூர். வாதவூரான் என்று பெயர். பாண்டிய நாட்டில் வாழ்ந்த ஒரு பிராமண தம்பதியருக்கு மகனாக பிறந்தவர். இளமையிலேயே பக்தி, ஞானம் பெற்றவர். சிவபக்தி, நல்ல தோற்றம், கல்வி, கேள்வி, சாஸ்திர ஞானம் கொண்ட இவரைபற்றி அறிந்த பாண்டிய ராஜா அரிமர்த்தன பாண்டியன் தனது அரண்மனையில் அவரை தலைமை மந்திரியாக ஏற்றுக்கொண்டான். கௌரவம் ஆடம்பரம், அந்தஸ்து, பதவி இதெல்லாம் வாதவூரர் சித்தத்தில் இடம் பெறவில்லை. எல்லாமே ஒரு வேஷம், கஷ்டமாகவே இருந்ததே தவிர மன நிம்மதி தரவில்லை. சிவ ஸ்மரணம் ஒன்றே மனதை ஈர்த்தது.

நிறைய கல்விமான்கள் பக்திமான்களை வரவழைத்தார். வேதங்கள் தர்க்க சாஸ்திரங்கள் அலசப்பட்டன. ஒரு தக்க குரு அமையாவிடில் ஆன்மீக முன்னேற்றம் ஏற்படாது என உணர்ந்தார். எங்கே என் குரு என்று உள்ளமும் கண்களும் ஊர் முழுதும் தேடின. கால்களும் எங்கெங்கோ அலைந்தன.

ஒரு நாள் உத்யோக நிமித்தமாக முதன் மந்திரி வாதவூரர் மற்ற அரசவை பரிவாரங்களோடு அரசவையில் பாண்டிய மன்னனோடு வீற்றிருக்க, குதிரைப்படை தலைவன் பாண்டிய ராஜாவை கண்டு விஷயம் ஏதோ சொல்ல அரசவைக்குள் நுழைந்தான். பேச அனுமதி கேட்டான்.

''அஸ்வப்படை நாயகா, என்ன சொல்ல விரும்புகிறாய் சொல்'' என்றான் பாண்டியன்.
'அரசே, நமது சேனையில் குதிரைப்படை பிரிவில், இப்போதுள்ள குதிரைகள் வயது முதிர்ச்சி அடைந்துவிட்டன, சில இறந்தும் சில நோயில் வாடியும் அவதிப்படுகின்றன. நமது படை பலமிக்க தாக இருக்க வேண்டுமா னால் வலிவு மிக்க இளம் குதிரைகள் நிறைய தேவை.''

''நல்லது நாம் குதிரைகள் வாங்க ஏற்பாடு செய்வோம்.

''வாதவூரரே, நீரே இதற்கு தக்கவர். உமக்கு எங்கே நல்ல குதிரைகள் எப்படிப்பட்டவை எவ்வளவு பெற வேண்டும் என்று தீர்க்கமாக முடிவு செய்யும் தன்மை உண்டு. எனவே இந்த பொறுப்பைத தங்களிடம் விடுகிறேன்'' என்றான் பாண்டியன்.

வாதவூராருக்கு உள்ளூர புரிபடாமல் ஒரு சந்தோஷம். தான் தேடிக்கொண்டிருந்த குருவை கண்டு பிடித்து சரணடையப்போகிறோம் என்ற எண்ணம் தானாகவே மனதில் தோன்றியது. ஆகவே ''அப்படியே செயகிறேன் மன்னா'' என்கிறார்.



தொடரும்

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...