''காலா வாடா, நீ ஒரு சிறு புல்லென மதித்து காலால் மிதிக்கிறேன்'' -- J.K.SIVAN
என்னைப்போல் எண்ணற்ற பாரதி ரசிகர்களுக்கு ஒரு சிறந்த இணையற்ற பரிசு கிடைத்துள்ளது. அளித்தவர் ஸ்ரீ ரா. அ .பத்மநாபன். இவரைப்பற்றி எழுதியிருக்கிறேன். பாரதியோடு நெருங்கி பழகியவர். அவரது படைப்புகளை ஒன்றுவிடாமல் தேடிப்பிடித்து அளித்தவர். அவர் ஒரு சிறு நூல் ''பாரதி புதையல் ''என்று ஒரு மலிவுப்பதிவாக அமுத நிலையம் என்ற பதிப்பக வெளியீடாக (முப்பது பைசா விலை!) 1958 நவம்பரில் வெளிவந்தது. அதன் ஒரு பழைய நகல் என்னிடம் வந்தது என்று சொன்னேன் அல்லவா. அதில் இருந்து அந்த ஆசிரியருக்கும் பதிப்பகத்தாருக்கும் நெஞ்சார நன்றியோடு சில விஷயங்கள் அதிலிருந்து சொல்கிறேன்.
இதுவரை நாம் அறிந்த ஒரு மிகப் புகழ் வாய்ந்த பாரதியாரின் பாடல் முழுமையாக வெளிவரவில்லை. பாரதியாரின் ''காலனுக்கு உரைத்தல் ''என்ற கவிதை முதலில் 1919ம் ஆண்டு சுதேச மித்ரன் டிசம்பர் வருஷ அனுபந்தமாக வெளிவந்தது.
பாரதியாரின் முழுப்பாடல் இது தான்: இந்த பாடலை பற்றி முதலடி கேட்டதுண்டு. பாரதியின் தைரியத்தை, மரணத்தைக் கண்டு அஞ்சாத மனோபலத்தை வியந்ததுண்டு. முழுசாக அந்த பாடல் இதோ:
''
ராகம்: சக்ரவாகம் தாளம்: ஆதி
பல்லவி:
காலா உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன் - என்றன்
காலருகே வாடா, சற்றே உன்னை மிதிக்கிறேன்!
சரணங்கள்
வேலா யுத விருதினை மனதிற் பதிக்கிறேன் - நல்ல
வேதாந்த முரைத்த ஞானியர் தம்மை எண்ணி துதிக்கிறேன் -- ஆதி
மூலா என்று கதறிய யானையைக் காக்கவே -நின்றன்
முதலைக்கு நேர்ந்ததை மறந்தாயோ கெட்ட மூடனே - அட (காலா )
ஆலால முண்ட வனடி சரணென்ற மார்க்கண்டன் - தன
தாவி கவரப்போய் நீ பட்ட பாட்டினை அறிகுவேன் - இங்கு
நாலாயிரம் காதம் விட்டார்கள்! உன்னை விதிக்கிறேன்! - ஹரி
நாராயணனாக நின் முன்னே உதிக்கிறேன் ! - அட (காலா )
பல்லவிக்கு ஸ்வர மாதிரி:
ஸரிகா ரிஸ ஸாஸஸ நீநிநி கமப மகா ரீஸா - பப
ஸாநித பாபா - மாகா காமப - கமபம கா - ரீஸா
சரணங்களும் ஏறக்குறைய இந்த மாதிரிதான்.
ஒரு சிறுவிண்ணப்பம். யாராவது இதை சக்ரவாக ராகத்தில் பாரதியார் விரும்பியபடி பாடுவீர்களா. பாட விரும்புபவர்களை ஆதரிக்க ஸ்ரீ க்ரிஷ்ணார்ப்பணம் சேவா சபா காத்திருக்கிறது. என்னாலான ஒரு சிறு பரிசாக சில புத்தகங்களை வழங்குகிறேன்.- ஜே . கே சிவன்
No comments:
Post a Comment