லிங்காஷ்டகம் 5 J.K. SIVAN
மஹேஸ்வரா, இதை உன்னை நினைத்து எழுத உட்கார்ந்தபோது எண்ணற்ற எண்ண அலைகள் மனதில் ஓடின. ஆதி அந்தமில்லாத அநாதி நாதா. மங்கள தாயகா. எவ்வளவுக் கெவ்வளவு நீ எளிமையானவனோ அவ்வளவுக் கவ்வளவு சக்திமான் என்பதும் தெரிகிறது. சாந்தமான நீ மோன நிலையில் காணப்பட்டாலும் கண் பார்வை ஒன்றிலேயே காலாக்னியாக ஊழித்தீயாக அழிக்கும் தன்மையன்.
கும்கும சந்தனங்களால் உன்னை அலங்கரித்து கண் குளிர தரிசிக்கிறோம். தாமரை மலர்களை மொட்டுகளோடு ஸஹஸ்ர தாமரை மாலையாக சாற்றி வணங்குகிறோம். முன் பிறவிகளின் பாப வினைகளின் தாபம் தீர்க்கும், ஒரே அடைக்கலமான, கருணை பொழியும் வள்ளலே உனக்கு நமஸ்காரம். சதாசிவா, மகாதேவா உன்னை எப்படியெல்லாம் ஆயிரமாயிரம் நாமங்களால் போற்றினாலும் இன்னும் தொடர்ந்து நினைக்கவே தோன்றுகிறதே. நீ இருக்கும் கைலாசமலையும் ஒரு பனி லிங்கமாக காண்கிறதே. நேரில் கைலாச யாத்ரை போக முடியவில்லை. உன்னை மனத்தில் இருத்தி, படத்தில் பார்க்கத்தான் என் போன்றோருக்கு இயன்றது.
எல்லையில்லா இந்த நீல துல்லிய வானத்துக்கு அடியில், வெண்ணிற மேகங்கள் உனது சிவ கணங்களாக உலவிக்கொண்டிருக்க, அமைதியும்,நிம்மதியும் சூழ்ந்த இந்த பனிமலையில் காட்சி தரும் எம்பெருமானே. மகாதேவா உனக்கு நமஸ்காரம்.
பசுபதி நாதா, நீ உறையும் பனிமலையே உன்னை நாங்கள் வணங்கும் சிவலிங்கமாக காட்சியளிக்கும் அதிசயம் தான் என்ன. உனது எண்ணற்ற திருவிலையாடல்களில் இதுவும் ஒன்றோ?
பவளம்போல் மேனியில் பால் வெண்ணீர் அணிந்த பரமனே. சூரியனையும் எரிக்கும் தகிக்கும் நெற்றிக்கண்ணின் மேல் சிரசில் குளிர்ந்த சந்திரனை அணிந்த சந்திரசேகரா,
அக்னியில் ஸ்புடம் போட்டது போல் மின்னும் பொன்னார் மேனியனே, தாமிர வண்ணனே, எவராலும் வெல்ல முடியாத திரி சூல பாணி. புலித்தோல் அணிந்த பரி சுத்தனே,
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்துக்கும் முன் தோன்றிய முழு முதற் கடவுளே, காலனுக்குக் காலனே,
நெஞ்சில் பயம் நீக்கி உரம் வைக்கும் உமாபதி.
என்ன சொல்லி முடிப்பேன். அடுத்த ஸ்லோகத்தில் சந்திக்கும் ஒரு அதிசயம் சொல்லுகிறேன். சிவன் உறையும் பனி மலையும் மேலே இருந்து பார்த்த போது ஓம் என்று வடமொழியில் எழுதியது போல் பனியில் உறைந்து காண்பதை நேரிலோ படத்திலோ கூட பார்த்தவர்களுக்கு இனி அடுத்த பிறவியேது.
குங்கும சந்தன லேபித லிங்கம்
பங்கஜ ஹார ஸுஶோபித லிங்கம் |
ஸஞ்சித பாப வினாஶன லிங்கம்
தத்-ப்ரணமாமி ஸதாஶிவ லிங்கம் || (5)
कुङ्कुमचन्दनलेपितलिङ्गम् पङ्कजहारसुशोभितलिङ्गम् ।
सञ्चितपापविनाशनलिङ्गम् तत् प्रणमामि सदाशिवलिङ्गम् ॥५॥
Kungkuma-Candana-Lepita-Linggam Pangkaja-Haara-Su-Shobhita-Linggam |
San.cita-Paapa-Vinaashana-Linggam Tat Prannamaami Sadaashiva-Linggam ||5||
குழந்தைகளே, (பெரியவர்கள் இதைப் படித்து உங்கள் குழந்தைகளுக்கு கட்டாயம் சொல்லுங்கள்)
கீழே கொடுத்திருப்பது என் வாக்கியங்கள் அல்ல. மகா பெரியவா குழந்தைகளுக்கு (வளர்ந்த குழந்தைகள் நமக்கும் கூடத்தான்) அழகாகச்சொன்ன முத்துக்கள்:
'' மனத்தில் அன்பும் சந்தோஷமும் இருக்கிற போது தான் புத்தி தெளிவாக இருக்கிறது. புத்தி வெளிவாக இருக்கிறபோது படித்தால் பாடம் நன்றாக ஏறுகிறது. கோபம், ஆத்திரம், அழுகை, பொறாமை எல்லாம் உண்டாகிறபோது புத்தி குழம்பிப்போகிறது. அப்போது படிப்பும் ஏறமாட்டேன் என்கிறது.
தினமும் கொஞ்ச நாழி ஸ்வாமியை பார்வதி - பரமசிவனாகவோ, மகாலக்ஷ்மி- மஹாவிஷ்ணுவாகவோ நினைத்து கொண்டு விட்டீர்களானால் மனம் நல்லதாக ஆகும். புத்தியும் தெளிவாக ஆகும். அதனால் படிப்பும் நன்றாக வரும். நன்றாக பாஸ் பண்ணிடலாம்.
ரொம்ப புத்திசாலியாக இருந்து நிறைய மார்க் வாங்கி பாஸ் பண்ணினால் கூட நல்லவன் என்ற பெயரெடுக்காவிட்டால் பிரயோஜனம் இல்லை.
நல்ல பெயர் இல்லாவிட்டால் பிற்காலத்தில் வாழ்க்கையில் முன்னேறவே முடியாது.நல்லவனாக இருந்து விட்டால் அது நமக்கும் சந்தோஷம். மற்றவர்களுக்கும் சந்தோஷம். பெரியவனான பின் வாழ்க்கையில் முன்னுக்கு வருவதற்கும் அது தான் உதவும்.
No comments:
Post a Comment