லிங்காஷ்டகம் 2 J.K. SIVAN
சின்ன சின்னதாக ஒரு எட்டு குட்டி ஸ்லோகங்கள். அவற்றுள் அடக்கம் இந்த பிரபஞ்சமே என்கிற மாதிரி எளிதில் புரிகிற வார்த்தைகள். இதைப் படித்துப் புரிந்து கொள்ள, ஸம்ஸ்க்ரிதம் தெரிய வேண்டாம். அன்றாட வாழ்க்கையில் காதில் விழும் சில வடமொழிச் சொற்கள் தெரிந்தால், புரிந்தால் அதுவே போதும்.
குளிர்ந்த பனிமலை. எங்கும் நிசப்தம், காற்றின் அசைவைத் தவிர. குளிரையும் பனியில் நனைந்து உடலைத் துளைக்கும் காற்றையும் லட்சியம் செய்யாத பொன்னிற மேனி. மலையின் மேல் ஒரு சிலையாக அமர்ந்து மனமே பிரபஞ்சமாக பிரபஞ்சமே நெஞ்சாக வியாபித்த ஒருநிலைப்பட்ட தியானம். முகத்தில் சாந்தம். அக்னிஸ்வரூபம் ஒரு தனி மலை மேல் உட்கார்ந்திருந்தால், அதையே தெற்கே அண்ணாமலை தீபம் என்று வணங்குகிறோமோ?
செஞ்சடையான ஜடாமுடியே கிரீடம். அதன் மேல் ஒரு ஓரத்தில் பிறைச்சந்திரன். மறுபுறம் அதற்கேற்றாற்போல் வெள்ளியை உருக்கி வார்த்தது போல் ஒரு பய பக்தியோடு சிரசிலிருந்து பதவிசாக வழியும் கங்கையாகிய புண்ணிய நதி. கழுத்தை அணைத்தாற்போல இது வரை யாரும் அணியாத அசையும் ஒரு ஆபரணம். நாகாபரணம். அதை ஒட்டி ஜடாமுடியில் பிணைத்த அதே போன்ற ருத்ராக்ஷ மணி மாலை. விரித்த விரிகமல நயனமாட என்று அற்புத பாடலை முசிறி பாடி கேட்டது இன்னும் காதில் ரீங்காரிகிறது. கோயம்பத்தூரில் ஆதியோகியின் மஹா உருவம் பார்த்தபோது இந்த பாடலை என்னையறியாமல் வாய் முணுமுணுத்தது .
ஆகாசத்திலிருந்து பூமியை இணைப்பது போன்ற பால் வெண்ணீறு பூசிய பரந்த நெற்றி கொண்ட இந்த திரு உருவத்தின் இடையில் புலித்தோல். நெற்றி நடுவில் மூடிய முக்கண். திறந்தால் பணிமலையே கூட அக்னிப்பிழம்பால் அழிந்துவிடும் அல்லவா? ஒரு கையில் சக்திவாய்ந்த ஒரு திரிசூலம். பனிச்சிகரத்துக்கு அழகூட்டும் அமர்ந்த திருக்கோலத்தில் ஒரு கால் மடித்து ஒரு கால் கீழே. இன்னும் வர்ணித்துக்கொண்டே போகலாமே உன் திருவுருவை.
ஹே, மகாதேவா, உன் பெயரே விளக்குகிறதே, நீ தேவர்களுக்கெல்லாம் தலைவன், முதல்வன். எப்படிப் பெரியவர்களுக்குள்ளேயே ஒருவரை நாமெல்லாம் மகா பெரியவா என்று போற்றி வணங்குகிறோமோ அதே போல் தேவர்களுக்குள்ளேயே மிகப் பெரிய மகத்தான பூஜிக்கத்தகுந்த தேவனே, நீ மகா தேவன் என்பதால் தான் தேவர்களும் முனீச்வரர்களும் உன்னை வணங்குகிறார்கள். நீ யார்? தவத்தில் முதிர்ந்த சிவந்த சிவன். உனது தவத்தைக் கலைக்க முனைந்த அந்த மன்மதனை நீ ஒன்றும் செய்யவில்லை. உன்னைக் காமத்தால் வெற்றி கொள்ளவந்த மன்மதன் மேல் தவம் கலைந்த உன் நெற்றிக் கண் பார்வை சற்றே பட்ட கணத்திலேயே அவன் எரிந்து போனான்.
அசுரனாக இருந்தாலும் உன் மீது அளவில்லா பக்தி கொண்டவன் ராவணன். பத்து தலை இருந்தாலும் அவனுக்கு அது அத்தனையிலும் அகம்பாவம் ''தலைக்கேறி'' விட்டதால் உன்னையே அசைக்கப்பார்த்தான். பலசாலி யாயிற்றே. உன்னிடமே வரம் பெற்றவன் அல்லவா? கயிலாயத்தையே கையால் தூக்க முயற்ச்சித்த அவன் கர்வம், அவன் தற்பெருமை அனைத்தும் கால் கட்டைவிரலில் ஒரு ''அழுத்து அழுத்தியே, போக்கினவனாயிற்றே நீ.
மஹா தேவா. சதாசிவா, உன்னை நெஞ்சிலிருத்தி நாவினிக்க மனம் மணக்கப் போற்றுகிறேன். உன்னை ஒன்றும் கேட்க மாட்டேன். எனக்கு என்ன வேண்டும் என்று என்னைக்காட்டிலும் நீயல்லவோ நன்றாக உணர்ந்தவன்.
देवमुनिप्रवरार्चितलिङ्गं
कामदहं करुणाकरलिङ्गम् ।
रावणदर्पविनाशनलिङ्गं
तत् प्रणमामि सदाशिवलिङ्गम् ॥२॥
Deva-Muni-Pravara-Aarcita-Linggam Kaama-Dahan Karunnaa-Kara-Linggam |
Raavanna-Darpa-Vinaashana-Linggam Tat Prannamaami Sadaashiva-Linggam ||2||
தேவமுனி ப்ரவரார்சித லிங்கம்
காமதஹன கருணாகர லிங்கம் |
ராவண தர்ப வினாஶன லிங்கம்
தத்-ப்ரணமாமி ஸதாஶிவ லிங்கம் || 2 ||
தேவ முனிப் ப்ரவரார்சித லிங்கம் - தேவர்களிலும் ரிஷிகளிலும் சிறந்தவர்களாக இருப்பவர்களால் அர்ச்சிக்கப்பட்ட லிங்கம்
காம தஹன கருணாகர லிங்கம் - மறைந்திருந்து மலர்க்கணைகளை விட்ட காமனை எரித்து பின்னர் அவனை மீண்டும் உயிர்ப்பித்த கருணையுடன் கூடிய லிங்கம்
ராவண தர்ப வினாஸன லிங்கம் - இராவணனின் கர்வத்தை கால் கட்டை விரலால் நசுக்கி அழித்த லிங்கம்
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம் - அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்.
மதுரையில் மீனாட்சியம்மன் கோவில் கிழக்கு வாசலில் எதிரே ஒரு அழகிய மண்டபம் உள்ளது. அதில் சிற்பத்தை தேடுவோர்கள் அங்கிருக்கும் தகரம், இரும்பு, பிளாஸ்டிக், தட்டுமுட்டு சாமான்களை மெதுவாக
கண்களால் நகற்றி நாயக்கர் மன்னர்கள் நமக்கு சொத்தாக விட்டுப்போன அருமையான கற் தூண் சிற்பங்களை பார்க்க முயற்சிக்கலாம். முயற்சி வீண் போகாது. எனக்கு போகவில்லை. ஒரு ராவணன் கிடைத்தான். கயிலாயத்தை மூச்சுபிடித்து அவன் தூக்க முயற்சிப்பதை சிற்பம் தத்ரூபமாக கல்லில் வடிக்கப் பட் டிருக்கிறது. அங்கிருக்கும் வியாபாரிகளை அகற்றி மண்டபத்தின் அழகை, அதின் சிற்பங்களை அனுபவிக்க அரசாங்கம் ஏற்பாடு செய்தல் நல்லது. தோசைக்கல், அப்பளக்குழவி பிளாஸ்டிக் டப்பா வாங்க யாரும் இந்த திருமலை நாயக்கர் கட்டிய மண்டபம் வரபோவதில்லை. அதன் அழகைக் காணத்தானே செலவு செயது நீண்ட பிரயாணம் வருகிறார்கள். இன்னொரு தீ விபத்து வேண்டாமே.
No comments:
Post a Comment