''அருமையான குரு அபிமான சிஷ்யன்'' -1. J.K. SIVAN
இன்று காஞ்சிபுரத்திற்கு அருகில் இருக்கும் கூரம் எனும் அமைதியான எழில் பொங்கும் சிற்றூரில் கூரத்தாழ்வான் திருநக்ஷத்ர வைபவம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
கூரத்தாழ்வான் யார், அவருக்கும் ஸ்ரீ ராமானுஜருக்கும் உண்டான சம்பந்தம் என்ன என்று தெரியாதவர்களுக்கு ஒரு சிறந்த குருவுக்கும் அவருடைய உயிருக்கும் மேலான சிஷ்யனுக்குமான சம்பந்தம் தெரியாது என்று வேண்டுமானால் சொல்லலாம்.
நான் எழுதிய ராமானுஜர் வரலாற்றில் ஒரு அத்யாயம் இந்த அதிசய குருவுக்கும் அவருடைய அற்புத சிஷ்யனுக்கும் தனியே அளித்ததை உங்களுக்கு இங்கு மீண்டும் தருகிறேன்:
.
++++++
.
++++++
''பல நாட்களாக என் உள் மனதில் பொங்கி யெழுந்த ஆவல் இன்று நிறைவேறியுள்ளது. ராமானுஜ - கூரத்தாழ்வான் என்ற இருவரின் குரு - சிஷ்ய பாவம் என்னை மிகவும் கவர்ந்த ஒரு விஷயம். இது சம்பந்தமாக நான் தேடி எடுத்த சில சம்பவங்களை என் சிற்றறிவுக்கு எட்டிய வரை எனக்கு தெரிந்த தமிழில் எழுதியுள்ளேன். (கொஞ்சம் பெரிய செய்தி மடல்) . எனவே ரெண்டு மூன்று பாகங்களாக தர உத்தேசம்.
கூரேசனை (கூரம் என்கிற ஊர்காரர்-- பின்னர் கூரத்தாழ்வான்) பற்றி எவ்வளவோ பேர் எத்தனையோ சொன்னாலும் எழுதினாலும் பாடினாலும் அலுக்காத காரணம் அவருடைய குரு பக்தி. ரொம்ப வசதியான குடும்பம். நிலம் நீச்சு என்று ஏராளமான சொத்து. அந்த ஊருக்கே அதிபதி எனலாம். அவருக்கு அருமையான ஒரு மனைவி (ஆண்டாளம்மா) அமைந்தது தான் விசேஷம். தம்பதியர் இருவருமே தான தர்மத்தில் ஒருவரை யொருவர் மிஞ்சினர். கஞ்சி வரதனிடம் அளவற்ற பக்தி. கூரத்திற்கு வெகு அருகாமையில் தானே இருக்கிறது வரதராஜனின் காஞ்சிபுரம்.
காஞ்சிபுரத்திற்கு அடிக்கடி போன போதெல்லாம் அங்கு புதிதாக விசிஷ்டாத்வைத பிரசாரம் பண்ணிக்கொண்டிருந்த ராமனுஜரிடம் அமோக பக்தி கூரேசருக்கு. காந்தம் போல் கவரப்பட்டார். அவரது எண்ணற்ற சீடர்களில் தானும் ஒருவராக இணைந்துகொண்டார். ராமானுஜரிடம் வேத சாஸ்த்ரங்களை கற்று மீமாம்ச சூத்ரங்களையும் தெரிந்துகொண்டார். இருவருக்குள்ளும் பிரிக்க முடியாத நேசம், நட்பு , பாசம், சகலமும் உண்டானது. கூரத்தை விட்டு காஞ்சியே வாசமானார் கூரேசர்.
ஸ்ரீரங்கத்தில் வைஷ்ணவர்களை ஆதரிக்க, ஊக்குவிக்க, ராமானுஜர் போக நேரிட்டது. அங்கு அப்போது சைவ சோழ ராஜாவின் அதிகாரம், கெடுபிடி, கொஞ்சம் அதிகம். சூரியனை தாமரை பிரிந்தது. கூரேசன் கூரத்திலேயே ஐக்கியம். ஆனால் காஞ்சி வரதனும் பெருந்தேவி தாயாரும் வேறு திட்டம் வைத்திருந்தார்களே!
கூரத்தில் நாள் தோறும் கூரேசர் ஆண்டாள் ஜோடியின் தான தர்மங்கள் இரவு வரையும் தொடரும். வழக்கம்போல ஒருநாள் இரவு அன்னதானம் முடிந்து அவர்களின் மாளிகை கதவு தாழ் போடப்பட்டது. கோட்டைக் கதவு போல அது சாத்தப்பட்ட சப்தம் நிசப்தமான இரவில் காஞ்சியிலும் கேட்டது. வரதராஜ பெருமாளை பெருந்தேவி தாயார் கேட்டாள்
" நாதா! இது என்ன சப்தம்?. எங்கிருந்து வருகிறது இது ?
"தெரியவில்லையே. கேட்டு சொல்கிறேன்”. நடித்தான் வரதராஜன்.
வரதராஜ பெருமாள் ஆலயத்தின் பிரதான பட்டாசாரியாரான திருக்கச்சி நம்பிகளை அழைத்து வரதன் கேட்டார்.
"பெருமாளே, நானும் கேட்டேன். அது கூரத்தில் அன்றாடம் அன்னதானம் முடிந்து இரவில் கூரேசர் வீட்டு வாசல் கதவு மூடப்பட்டு தாழ்ப்பாள் போடும் சப்தம்".
கபட நாடக சூத்ரதாரி ஆயிற்றே பெருமாள்!. தெரியாதது போல் "அடே அப்படியா, கூரேசனும் அவர் மனைவி ஆண்டாளும் அவ்வளவு தர்மிஷ்டர்களா? எனக்கு அவர்களை பார்க்க வேண்டும் அழைத்து வா "
திருக்கச்சி நம்பிக்கு வரதராஜ பெருமாள் கட்டளை இட்டார். அம்பு போல் விரைந்து ஓடி பட்டர் கூரேசரிடம் பெருமாளின் விருப்பத்தை தெரிவிக்க கூரேசர் வெகுண்டார்.
"என்ன அக்ரமம் செய்துவிட்டேன். பாவி, நான்? அன்னதானம் செய்வதை ஊருக்கெல்லாம் பிரபல்யம் செய்வதுபோல் கதவு தாழ்ப்பாள் சத்தம் போட்டு தம்பட்டம் அடித்துவிட்டேனே. பெருமாளுக்கும் தாயாருக்கும் சத்தத்தால் அமைதி இழக்க செய்து மகா பாவத்தை தேடிக்கொண்டு விட்டேனே?!!”.
ஆடிப்போய் விட்டார் கூரேசர். ''இனி நான் செய்யவேண்டியது ஒன்று தான். என் சொத்து சுதந்திரம் பூரா அப்படியே எல்லாவற்றையும் துறந்து ஸ்ரீரங்கத்துக்கு நடந்து என் குரு நாதர் ராமானுஜரை சரண் அடைவது ஒன்றே'' என்று முடிவெடுத்தார் கூரேசன்.
‘’அடியே ஆண்டாளு, கட்டின துணியோட உடனே கிளம்பு. ஸ்ரீரங்கம் போவோம்” .
அவ்வாறே இருவரும் ஸ்ரீரங்கம் நோக்கி நடந்தனர். ஆயிரம் வருஷங்களுக்கு முன்பு ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடம் செல்ல இப்போது மாதிரி ரோடுகளோ, வண்டிகளோ கிடையாது. குறுக்கு வழியே சில இடம் காட்டு பாதைகளை கடந்து தான் செல்லவேண்டும். அங்கே பாதசாரிகளை கள்வர்கள் எதிர் கொண்டு அவர்கள் பொருள்களைப் பறிப்பது வழக்கமான செயல்.
ஆகவே கள்வர் பயம் ஆண்டாளை கலக்கியதை கூரேசன் கவனித்தார்.
"என்ன பயம், ஆண்டாள் உனக்கு, நம்மிடம் என்ன இருக்கிறது. உன்னிடம் திருட்டு கொடுக்க எதாவது பொருள் உள்ளதா, சொல்?
கூரேசரிடம் உண்மையை உடைத்தாள் ஆண்டாள் அம்மாள்.
''வழியில் உங்களுக்கு எதாவது தாக சாந்திக்காவது உதவுமே என்று நினைத்து இந்த சிறிய தங்க பாத்திரத்தை கொண்டு வந்தேன்''
புடவை முடிச்சிலிருந்து அந்த சிறிய பாத்திரத்தை நீட்டினாள் ஆண்டாள் அம்மாள்.
“பேதைப் பெண்ணே!! , எல்லாவற்றையும் துறந்து என்று நான் உன்னிடம் சொன்னபோது அதில் இந்த பாத்திரமும் சேர்ந்தது தான்” .
அந்த தங்க பாத்திரத்தை வாங்கி வீசி எறிந்தார் கூரேசர்.
"அப்பாடா!! இனி உனக்கு பயம் தேவை இல்லையே, எது காரணமோ அதை வீசி எறிந்தாயிற்றே.”
ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீ ராமானுஜருக்கு நீண்ட நாள் பிரிந்திருந்த குழந்தைகளைப் பார்த்த மகிழ்ச்சி. விரைவில் ஸ்ரீ ராமானுஜரின் பிரதம சிஷ்யனானார் கூரேசர். ஆச்சர்யனின் வலது கரமாகவும், கண்ணாகவும், செவியாகவும் ஏன், மனசாட்சியாகவுமே சேவை சாதித்தார். சுருக்கமாக சொன்னால், கூரேசர் ஸ்ரீ ராமானுஜரின் நிழலானார்!.
ஸ்ரீ ராமானுஜரின் விசிஷ்டாத்வைதம் சூடு பிடிக்க ஆரம்பித்தது. அனேக வைஷ்ணவர்கள் பின் பற்றினர். அடியார் கூட்டம் பலத்தது, தத்துவம் கொள்கை, சீர் பட வேண்டுமெனில் முறை ஒன்று தேவை அல்லவா?. எனவே ஸ்ரீ ராமானுஜர் "ஸ்ரீ ராமானுஜ தர்சனம்" எழுத ஆரம்பித்தார். 4 முக்ய சீடர்கள் (கூரேசர், தாசரதி, தேவராட், எம்பார்) உதவினர்.
இரவும் பகலும் வேத சாஸ்த்ரங்கள், சூத்ரங்கள் திருவாய் மொழி போன்று எல்லாவற்றையும் அலசினர். விசிஷ்டாத்வைத சித்தாந்தம் படிப்படியாக உரு பெற்றது. ஸ்ரீ ராமானுஜர் வியாசரின் பிரம்ம சூத்ரத்துக்கும் பாஷ்யம் எழுத தொடங்கினார்.
" கூரேசா, நீ தான், நான் சொல்லச் சொல்ல என்னோட பாஷ்யத்தை நீ எழுதணும். நான் எதாவது தடம் மாறி சொன்னா எழுதறதை நிறுத்தணும். உடனே நான் புரிஞ்சிப்பேன். செய்வியா?'' என்கிறார் ராமானுஜர்.
''அப்படியே பிரபு''.
இப்படி தான் ஸ்ரீ ராமானுஜரின் ஸ்ரீ பாஷ்யம் தோன்றியது. ஒருநாள் ஸ்ரீ ராமானுஜர் ஜீவாத்மா பற்றிய விளக்கம் சொல்லிக்கொண்டு வந்தபோது கூரேசர் எழுதுவதை நிறுத்தினார். குருவை நோக்கினார் . பல நாட்கள் இரவுகள் சிந்தித்த எண்ண ஓட்டம் தடை பட்டதில் ஆச்சர்யனுக்கு கோவம் வந்தது. வயதாகி விட்டதல்லவா? எழுதுவது நின்றால் சிந்தனை தொடரில் பிசகு என்றல்லவா அர்த்தம்? வெடித்து விட்டார் ஆச்சர்யன்.
"கூரேசா, என்னைக்காட்டிலும் நீ வியாசரின் சூத்ரத்துக்கு பாஷ்யம் சரியாக எழுதுவதாக நினைத்தால் நீயே எழுது. போ”” என்று கூரேசரை விரட்டினார். மற்ற சீடர்கள், "ஏன் கூரேசா இவ்வாறு செய்தாய்?" என வினவினர் என்ன விபரீதம் இது என நடுங்கினர். ”நண்பர்களே கவலை வேண்டாம். நான் ஆச்சர்யனின் அடிமை. அவர் என்னை என்ன வேண்டுமானாலும் சொல்லலாம், செய்யலாம்."
இதற்கிடையில் கூரேசர் எழுதியிருந்ததை படித்த ஸ்ரீ ராமானுஜர் தான் சொல்லிக்கொண்டுவந்த வாசகத்தில் ஓரிடத்தில் முரண்பாடு இருந்ததையும் கூரேசர் அதை சுட்டிக்காட்டியது சரி என்பதையும் உணர்ந்தார். ஜீவாத்மா தனித்வம் கொண்டதாக இருந்தாலும் இறைவனிடம் சேஷத்வம் கொண்டது என்று தான் கூரேசன் திருத்திய படி இருக்கவேண்டும் என தனது தவறை அறிந்தார்.
"அடேடே , வெளிச்சத்தை பற்றி சொல்லும்போது அதற்கு காரணமான சூரியனை மறந்து போனேனே" என்று வருந்தினார். மஹா புருஷரல்லவா?.
”என் மகனே, கூரேசா நீ சுட்டிக்காட்டியது சரி தான். ஜீவாத்மா ஸ்வரூபத்தை நீ விளக்கியவாறே எழுது. மேலே தொடர்வோம்"
தொடரும்.....
No comments:
Post a Comment