ஐந்தாம் வேதம் 5 J.K.SIVAN
உக்ரஸ்ரவர் சொன்ன கதைகள்
பாரதம் ராமாயணம் பாகவதம் படிப்பவர்கள், கேட்பவர்களுக்கு ஒரு வார்த்தை . இதில் வரும் பெயர்கள் சமஸ்க்ரிதத்தில் இருக்கிறதா? ஊர்கள் புதிதாக இருக்கறதா? இந்த கதைகளில் வரும் மக்களின் நம்பிக்கை எதிர்பார்ப்பு சந்தர்ப்பங்கள் எல்லாமே வேடிக்கையாக இருக்கிறதா? ஆம். அதெல்லாம் அப்படித்தான் இருக்கும். அது நாம் வாழும் கி.பி. நூற்றாண்டுகள் காலம் இல்லையே. நான் சொல்லும் கதையின் காலம் வேதகாலம். கடவுளும் மனிதனும் சேர்ந்து வாழ்ந்த காலம். அன்று நடந்தவை இப்போது நினைத்துப் பார்க்கமுடியாதவை. எனினும் இது புருடா இல்லை. காலம் காலமாக போற்றப்பட்டு வழிபட்டு கர்ண பரம்பரையாக பல வம்சங்கள் தாண்டி ஸ்லோக ரூபத்தில் மனத்தில் இருத்தி காக்கப்பட்டு இப்போது கருப்பு வெளுப்பில் புத்தகமாகவோ கம்ப்யூட்டரில் pdf ஆகவோ உள்ள ஆதார பூர்வமானவை. இதை மனதில் வைத்துக்கொண்டு இனி படிப்போம்.
லோமஹர்ஷனர் என்ற ரிஷிக்கு ஒரு பிள்ளை. உக்ரஸ்ரவன். ஸௌடி என்று கூப்பிடும் பெயர். ஸௌடி வேத விற்பன்னர். நைமிசாரண்யம் வருகிறார். அங்கே பல ரிஷிகள் வெகு காலமாகத் தவம் செய்பவர்கள். அவர்களை அணுகி, அவர்களுடன் பேசுகிறார்.
' ஸௌடி மகரிஷி, தாங்கள் எங்கெல்லாம் சென்றிருந்தீர்கள். உங்கள் அனுபவம் எங்களுக்குச் சொல்லவேண்டும்.'' என்றனர் ரிஷிகள்.
" நீங்கள் எல்லோரும் அறிவீர்களே, வேத வியாசர் எழுதிய மகா பாரதம் பற்றி. அதை வைசம்பாயனர் ஜனமேஜயனுக்கு அவன் நாக யாகம் பண்ணும் சமயத்தில் கூறியதைத்தொடர்ந்து அந்த ராஜா, பல க்ஷேத்ரங்கள் யாத்ரை சென்றான். நானும் சென்றேன். ஸமந்த பஞ்சகம் (ஐந்து ரத்த ஆறுகள்) என்றும் குருக்ஷேத்ரம் என்று பெயர்பெற்ற பாரத யுத்த பூமியைக்கண்டேன். பிறகு பிரம்ம ஸ்வரூபமான உங்கள் ஞாபகம் வந்தது. நேரே இங்கே வந்தேன். புராணங்களிலும் வேத நூல்களிலும் கண்ட விஷயங்களை உங்களிடம் பரிமாறிக் கொள்வேன். ஒவ்வொரு விஷயத்திலும் அனேக அர்த்தங்கள், ரகசிய உட்பொருள் உண்டு. அதை க்ரஹித்துக் கொள்ளவேண்டும் என்பதற்காகத்தான் மஹா புருஷர்கள் இவற்றை எழுதியிருக்கிறார்கள். சொல்லியிருக் கிறார்கள், வேத வியாசர் சாமான்யர் அல்லர்.
இந்த பிரபஞ்சம் காரிருளில் சூழ்ந்திருந்தபோது ஒரு ஒளி தோன்றியது. உயிர் தோன்றியது. யுகங்கள் உண்டாயிற்று. பிரம்மம் உருப்பெற்றது. பிரம்மன் தோன்றி அவரைத் தொடர்ந்து 21 ப்ரஜாபதிகள், (மனு, வசிஷ்டர் போன்றவர்கள்). ப்ரசேதர்கள் 10 பேர், தக்ஷன் போன்றவர்கள், பிறகு ரிஷிகள் அச்வினிகள், விஸ்வ தேவர்கள், வசுக்கள், யக்ஷர்கள், 33 கோடி தேவர்கள், ராக்ஷசர்கள், பூமி, ஆகாசம், கடல், காற்று, சூரிய சந்திரர்கள்.... மனித வர்க்கம்..... எல்லாமே ஒன்றன் பின் ஒன்றாக உண்டானது.
எத்தனையோ வம்சங்கள் தோன்றின. அதில் ஒன்று குரு வம்சம்.
வேதவியாசர் தனது மனதில் தோன்றிய இந்த மாபெரும் காப்பியத்தின் ஆதி காவ்ய விஷயங்கள் அனைத்தையும் சிஷ்ய கோடிகளுக்கு எப்படி போதிக்கலாம் என்று நைமிசாரண்ய ரிஷிகளை அடைந்தபோது ஹிரண்ய கர்பன் அங்கு அமர்ந்திருப்பதை கண்டார். மனம் மகிழ்ந்தார். ஒரு ஆசனம் விரைவாக போடப்பட்டு வியாசர் அமர்ந்தார்''
''பிரம்மதேவா'' என்று இருகரம் கூப்பி வணங்கிவிட்டு எல்லா ரிஷிகளையும் பார்த்து வியாசர் மொழிவார்:
''என் மனதில் ஒரு காவியம் தோன்றி அதை ஸ்லோகங்களாக பல பகுதிகளாக, அத்யாயங்களாக வரிசை பிரித்து வைத்திருக்கிறேன். அது மகா பாரதம் ஆகும். இது முற்றிலும் இதுவரை நான் இயற்றிய காப்பியங்கள், புராணங்கள், உபநிஷத்கள், ராமாயணம் எல்லாம் விட அதி ஸ்ரேஷ்டமானது.''
''தெரியும் வியாசரே, உங்கள் மனதில் ஓடும் எண்ணங்கள் கல்ப காலத்தில் கூட எழுத்தில் வடிக்க முடியாதவை. கடலென ஓடுபவை. கணேசனைக் கூப்பிடுகிறேன். அவர் தான் உங்கள் மனதில் உள்ளதை எழுத்தில் வடிக்க முடிந்தவர். வியாசர் கடல் மடையென ஸ்லோகங்களை கொட்ட, விக்னேஸ்வரர்அவற்றை ஓலைச்சுவடிகளில் படைத்தார். பாரதம் கிடைத்தது.
''வேத வியாசர் மனதில் உருவாகிய இந்த பாரதம் 8800 ஸ்லோகங்களை நான் அறிவேன். சுகரும் அவ்வாறே அறிவார் '' என்றார் உக்ரஸ்ரவர். நான் சொல்லபோகும் இந்த வியாசரின் பாரதம் எவ்வாறு கதிரவன் ஒளியில் காரிருள் நீங்குமோ அதுபோல் உலகில் அஞ்ஞானத்தில் இருந்து மக்களை ஞான மார்கத்துக்கு இட்டுச் செல்லக்கூடியது. முழுநிலவின் பால் ஒளியில் எப்படி அல்லி மொட்டுக்கள் அவிழுமோ அது போல் மகாபாரதத்தின் ஸ்லோகங்கள் கேட்போரின் ஞானம் மலரச் செய்யும்.
இந்த மகாபாரதத்தை ஒரு பெரிய விருக்ஷமாக மனதில் உருவகப்படுத்துவோம். அந்த விருக்ஷம் யுதிஷ்ட்ரன், அர்ஜுனன் மரத்தின் இடைத் தண்டு. பீமன் அதன் கிளைகள், நகுல சகாதேவர்கள் கனியும் மலரும். முக்யமான வேர் கிருஷ்ணன்!.
வியாசர் கிட்டத்தட்ட பல்லாயிரக்கணக்கான ஸ்லோகங்களில் பாரதம் சொல்கிறார். ஒரு 150 ஸ்லோகங்களில் பிறகு அதன் அத்தியாயங்கள் உள்ளடக்கம் பற்றி சொல்கிறார். முதலில் இதை தனது மகன் சுகாசார்யருக்கு போதிக்கிறார். பிறகு 600,000 ஸ்லோகம் உருவாகி அதில் தேவலோகம், பித்ரு லோகம், கந்தர்வ லோகம், மீதி பூலோகம் பகுதிகளில் பரவுகிறது.
...தொடரும்
MY MAHABHARATHAM BOOK IN TWO VOLUMES '' AINDHAM VEDHAM'' OF ABOUT 1000 PAGES IN ART PAPER WITH MULTI COLOR PICTURES ARE AVAILABLE FOR A MINIMUM DONATION OF RS. 1000. THIS IS NOT FOR SALE, BUT TO MEET THE PRINTING EXPS ONLY. INTERESTED MAY CONTACT ME. J.K.SIVAN 9840279080 OVER PHONE OR WHATSAPP MSG.RECEIPTS WILL BE ISSUED FOR DONATIONS
No comments:
Post a Comment