ஒரு பத்து நீதி பத்துமா? - J.K. SIVAN
நிறைய பேர் எனக்கு செய்திகள் வாரி கொட்டுகிறார்கள். இதையும் எழுதுங்களேன் என்ற அன்புக்கட்டளை. எனக்கு எழுத ஆசை தான். எதைவேண்டுமானாலும் எழுதமுடியும் என்பதால் எழுதுவது நியாயமா?. ரொம்பவே நன்றாக மனதுக்குப் பிடித்த விஷயங்களை மட்டும்சுருக்கமாக சொல்ல மனம் விழைகிறது சில சுவாரஸ்யமான விஷயங்களை என் வழியில் சுருக்கி தமிழில் நான் புரிந்துகொண்ட வகையில் தரட்டுமா? ரொம்ப இல்லை. ஒரு பத்து விஷயம் மட்டும்..
நமது வாழ்வில் சில நீதிகளை அடிக்கடி ஞாபகப்படுத்துவது சிலருக்காவது உபயோகமாக இருக்காதா? ''போறுமா இன்னும் கொஞ்சம் பரிமாறட்டுமா?
1. பலத்த மழை எதை நினைவூட்டுகிறது? நமது வாழ்வில் சந்திக்க நேரும் எதிர்ப்புகளை..வானம் பொத்துக்கொண்டு கொட்டும் மழையே நீ வேண்டாம். கடவுளே இதைத் தவிர் என்று கேட்காமல், ''கிருஷ்ணா, ஒரு ஸ்ட்ராங்கான குடையைக் கொடேன், இந்த மழையைச் சமாளிக்க''என்று கேட்கும்போது தான் உன் நெஞ்சின் உரம் விளங்கும்.
2. காலம் எப்போதும் மாறி மாறிக்கொண்டே தான் வரும். நீர் நிறைந்திருந்தபோது மீன் தண்ணீரில் தத்தளித்த எறும்புகளையும் பூச்சிகளையும் உண்டதே. நீர் வற்றி மீன் இறந்து விட்டபோது அதே எறும்புகளும் பூச்சிகளும் தானே மீனை உண்டன. கடவுள் எப்போதும் சந்தர்ப்பங்களை ஆள் பார்த்துதான் தருகிறான். இது தான்யா யானைக்கு ஒருகாலம் பூனைக்கு ஒருகாலம் எனும் வாழ்க்கை நியதி .!
3. எவனுமே உலகில் தனித்து வாழமுடியாதே. கூட்டாளிகளை, நண்பர்களை தேடுகிறோம். இதில் ஒரு சிக்கல் நமக்குப் புரியாதது என்னவென்றால். நல்லவர்கள் என்று நாம் நினைப்பவர்கள் உண்மையிலேயே நல்லவர்களா? அல்லவா? இது எதில் தெரியும் என்றால் நம்முடைய கஷ்ட காலத்தில் அவர்களது நட்புறவின் தன்மையைப் பொறுத்து. இந்த நட்புறவு எப்படி ஆரம்பித்தோம் என்பதில் அல்ல எப்படி தொடர்ந்போது வளர்கிறது கடைசிவரையில்,என்பதில் தான் இருக்கிறது.
4. உனது வாழ்வில் நீ அடிக்கடி பார்த்திருப்பாயே. எத்தனை பேர் இடர்களை உண்டாக்கி இருக்கிறார்கள், இன்னும் தொடர்கிறார்கள். உன்பாதையில் உன் கால் குத்துவதற்காக அவர்கள் மெனக்கெட்டு தூவிய கற்களை என்ன பண்ணப்போகிறாய்? ரெண்டு விதமாக அதை உபயோகிக்கலாமே. ஒன்று உனக்கும் அவர்களுக்கும் குறுக்கே ஒரு சுவர் கட்டலாம். அல்லது அவர்களோடு இணைய பாலம்? எது சிறந்தது என்பது உனக்கே இப்போது விளங்குமே!
5. அப்பப்பா. பேருக்குதான் நாம் இந்த உலகில் வாழ்கிறோம். வாழ்வா இது? எத்தனை கஷ்டங்களை, சுமைகளை, போட்டிகளை,பொறாமைகளை, அக்னிப்பரிக்ஷைகளை பொழுதுவிடிந்தால் சந்திக்க வேண்டியிருக்கிறது. இவைகளை சமாளிக்க நாம் ஒன்றுக்கு மேற்பட்ட எத்தனையோ எண்ணிலடங்கா விடைகளையும் வைத்திருக்கிறோம். எந்த விடையாயிருந்தாலும் ஒரு விடை தான் சரியானது. ''வாழ்க்கை என்றால் இப்படித்தான் இருக்கும். இது உனக்கு மட்டுமா. எல்லோருக்கும் தான் என்பதை முதலில் புரிந்துகொள்'' என்கிற விடைதான் சரியானது. மனம் அப்போது சமாதானம் கொள்ளும். வாழ்க்கையும் சீராக அதன் வழியே செல்லும்.
6. வாழ்க்கையை சிலர் சூதாட்டம் என்று சொல்வதை கேட்டிருக்கிறேன் . சீட்டாட்டமாம் சீட்டாட்டம். சில சமயம் நல்ல சீட்டு நம் கையில் வந்தால் ஜெயிக்கிறோம், பலமுறை மட்டமான சீட்டு கையை நிரப்பினால் தோற்கிறோம். ஜோக்கர் நிறைய இருந்தாலே தப்பு. இல்லை ரொம்பவே தப்பு. நல்ல சீட்டுக்காக காத்திருக்காதே. கையில் இருக்கிற சீட்டை எப்படி சாதகமாக உபயோகிக்கலாம் என்று முதலில் கற்றுக்கொள்..
7. சின்ன சின்ன விஷயங்களால் கூட நாம் கவிழ்கிறோம். அமிழ்ந்து போகிறோம். உலகே இடிந்து தலை மேல் விழுந்துவிட்டதாக தோன்றுகிறது. விரக்திமனப்பான்மை கொள்கிறோம். ''இனி அவ்வளவுதான். இதுவே முடிவு'' என்று கலங்குகிறோம். தலைக்கு மேலேயோ,நெஞ்சுக்குள்ளேயோ நம்முள் கிருஷ்ணன் இருந்து ''அடே, கலங்காதே. எதிரே தோன்றியது முடிவான விளைவு அல்ல, தொடரும் வளைவு. இன்னும் நிறைய பாதை நன்றாகவேநீண்டு இருப்பதைப் பார்'' என்று தைரியமூட்டுவதை அறிவோம். அவனை நம்புவோமே. .
8. யாரோ சொன்னாரே என்று உன்னை உற்சாகப்படுத்துக்கொள்ள கண்ணாடி முன் நின்று ''அடே நான் எவ்வளவு அழகன், சாமர்த்தியக்காரன்,கெட்டிக்காரன் என்று மார் தட்டாதே. துக்கத்திலிருந்து மீள்வதற்கு, ஆதரவுக்குச் சொன்னது இது. எல்லாவற்றிற்குமே பொருந்தாதே. பொய்சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காது. நரகத்தில் இடம் ரிசெர்வ் செய்யும்.
9.இறைவனுக்கும் நமக்கு என்ன தான் வித்தியாசம்? அவன் கொடுப்பான், மன்னிப்பான். நாம் பெறுவோம், உடனே மறப்போம்.
10. நிறைய ஒன்பது நீதிகளை வழங்கியாச்சு. இது பத்தாவது. ரொம்ப சென்னால் தாங்காது. பைத்தியம் பிடித்துவிடும் எனவே பைத்தியத்தைப்பற்றியே இதில் சொல்கிறேன்.
உலகில் ரெண்டு பேர் தான் ஆனந்தமாக இருப்பவர்கள். விவரமில்லாதவனும் விளையாட்டு குழந்தையும். தான். நாம் (முதல் வகை!!) இல்லாததைத் தேடி தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள வெறி பிடித்து விவரமின்றி அலைகிறோம். குழந்தைகள் கை கால் இல்லாத பொம்மைகளைக்கூட கீழே வைக்காமல் மார்போடு அணைத்துக்கொண்டு அவற்றோடு சந்தோஷமாக விளையாடுவதை பார்க்கிறோம். இருப்பதைக்கொண்டு மகிழ்கிறார்கள். நாம் குழந்தைகளாகவே இருக்கலாமா? ஆஹா, நிச்சயமாக. அப்படி இருந்தால் நிம்மதியாக இருப்போமே.
No comments:
Post a Comment