Wednesday, February 28, 2018

MANIKKA VACHAGAR

மணி வாசகரைப் பற்றி சில வாசகங்கள்  5  J.K. SIVAN 
                         
             பிட்டளித்த வந்தியும்  பெருவெள்ளமும்

மாணிக்க வாசகரை சுடுமணலில் நிறுத்தி வைத்து காவல் காத்த அரசனின் சேவகர்கள் ஒரே ஓட்டமாக ஓடிவிட்டார்கள் ஆளுயரத்திற்கு ஓ வென்று பேரிரைச்சலுடன் தூரத்தில் வைகையில்  வெள்ளம் வந்துகொண்டிருந்ததே.  வாதவூரரும்  ''பெருந்துறை ஈஸா இதுவும் உன் விளையாட்டா?'' என அதிசயித்து மதுரை சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் அவனைத் தேடிச் சென்றார். மக்கள் பீதி அடைந்தார்கள். எங்கும் கலவரம். அவசரமாக  மூட்டை முடிச்சோடு மக்கள் வெளியேறினார்கள்.

பாண்டியன் பதற்றம் அடைந்தான். எதற்கு எப்படி அகாலத்தில் மழை காலம் இல்லாதபோது, திடீரென்று வைகையில் வெள்ளம்? இதுவும் வாதவூரரின் மாயாஜாலமா மந்திரமா?  எது வானாலும் நிமிஷத்துக்கு நிமிஷம் அதிகமாகும்  வெள்ளம் சேதம் விளைவிக்காமல் அதை எப்படி கரை புரளாமல் தடுப்பது.   அனைவருக்கும் அவசர கட்டளை. ஆற்று வெள்ளம்  கரைபுரளாமல் உடனே வீட்டுக்கு ஒருஆள் வந்து கரையை மண் கொட்டி  பலப்படுத்தவேண்டும்.

அதேபோல் அனைவரும் வந்துவிட்டார்கள்.  வைகையில் நீர் வெள்ளம்.  கரைகளில் ஜன வெள்ளம். வைகைக்கரை உடையாமல் மண் கொட்டி பலப்படுத்துகிறார்கள். அரசன் சுற்றி சுற்றி வந்து மேற்பார்வை பார்க்கிறான்.

வந்தி எனும் ஒரு பிட்டு சுட்டு விற்கும் குழவி யாருமற்ற அனாதை.  மதுரை சொக்கனிடம் பக்தி. தினமும் முதல் பிட்டு சுட்டு அதை அவனுக்கு மனதார நைவேத்தியம் செய்பவள். அன்றும் அதுபோல் முதல் பிட்டு சூடாக எடுத்துக்கொண்டு ''சொக்கா, இது என்ன கூத்து. வைகை பெருக்கெடுத்துவிட்டதாம். ராஜா வீட்டுக்கு ஒரு ஆள் கண்டிப்பாக வரவேண்டும் என்கிறான். தள்ளாத கிழவி நான் சென்று உதவ வேண்டுமே. என் பிழைப்பில் விழுந்த மண்ணை தான் வைகையில் கொண்டு கொட்ட வேண்டும்.  பிள்ளையா குட்டியா யார் இருக்கா எனக்கு? ''
என்ன செய்வது என்று கலங்கி வழக்கமாக பிட்டு சுடும் மரத்தடிக்கு வந்து அமர்ந்தாள். எதிரே  அடுப்பில்  பிட்டு  சூடாக ஆவியில் வேகும்போது   மனம் ஆள் தேடியது.

''ஆத்தா'' --    எதிரே ஒரு இளைஞன் கூப்பிட்டவாறு நின்றான்.
''யாருப்பா நீ  ?
''ஊரிலே  எல்லோரும் வைகைக்கரையிலே இருக்காங்க. நீ மட்டும் இங்கே இருக்கிறே?'''
'' நானே அடுப்பை அணைச்சுட்டு வைகைக்கரை  போவணும் . ராஜா வூட்டுக்கு  ஒரு ஆள் வரணும்னு கட்டளை தண்டோரா போட்டுட்டாங்களே. ''
''எதுக்கு நீ போறே, உனக்கு பதிலா உன் வீட்டு ஆளா  நான் போறேன்''  என்ன கொடுப்பே?''
 ''என்கிட்டே காசு பணம் இல்லியேடா பையா. உனக்கு நான் என்னத்தை கொடுக்கிறது?''
''சரி ஒண்ணு செய்.  நீ சுட்ட பிட்டு கொஞ்சம் பொட்டலம் கட்டிக்  கொடு. அது போதும். நான் உனக்கோசரம் போய் மண்ணு கொட்டறேன்''.

சுற்றி சுற்றி வந்து மேற்பார்வை பார்த்த  பாண்டியன் ஒரு இளைஞன்  வேலை செய்யாமல் அமர்ந்துகொண்டு  பிட்டு தின்பாதை பார்த்தான்.  அரசனைப் பார்த்த அவன் ஏதோ கொஞ்சம் மண்ணை கொண்டு கொட்ட கிளம்புவதை  கவனித்ததும் கடும் கோபம் கொண்டான். அவன் நின்ற இடம் ஆறு எந்த நேரமும் கரையை உடைந்துவிடும் போல் இருக்கவே 
 ''என்னடா நீ வேலை செய்யாமல் நிற்கிறாய் என்று கையில் வைத்திருந்த பிரம்பினால் ''பளீர்'' என்று அந்த இளைஞன் முதுகில் சாத்தினான்.
 ''ஆ ''.    அந்த இளைஞன் தனது பங்குக்கு  போட்ட கூடை மண்ணால் வைகை பெருக்கு  முற்றிலும் நின்றது. 
 அதே நேரம் அனைவரும் முதுகில் பாண்டியனின் பிரம்படி கொடுத்த ''சுளீர்''வலியில்  துடித்தனர். சகல ஜீவராசிகளும் வலியில் கத்தும் சப்தம் ஏகோபித்து கேட்டது. பாண்டியனும் கூட கத்தினான்.  சொக்கனின் முன்னே நின்று பிரார்த்தித்த மாணிக்கவாசகர் முதுகிலும் அடி.!  ''சர்வேசா சம்போ மஹாதேவா'' என்று உரக்க கூவினார்.

சிவபக்தனான  பாண்டியனுக்கு முதுகில் அடிபோலவே  மனத்திலும் ''சொரேர்''  என்று உண்மை புரிந்தது.  வாதவூரர்க்கு தான் இட்ட தண்டனையே வைகை வெள்ளத்துக்கு காரணம். அந்த மாயக்கார இளைஞனும் ஒருவேளை மதுரை சுந்தரேஸ்வரரோ?

அவன் காதில் ஒரு  குரல் தெளிவாக அசரீரியாய் கேட்டது.
'பாண்டியா, நீ கொடுத்த பொற்காசுகள்  பெருந்துறையில்  எமது பக்தர்கள் வழிபடும் ஆலயத்திற்காக செலவழிந்து உனக்கு ஒரு பெரும்பெயர் புகழ்  ஈட்டித்தந்த வாதவூரரை  போற்றுவதற்கு பதிலாக குற்றம் சாட்டி வதைத்தாய். உனக்கு புரியவைக்கவே  தான் குதிரைகள் நரிகளாயின. வைகை வெள்ளமும் அப்படியே.  நீ இன்னுமா அறியவில்லை என் பக்தன் வாதவூரனை? உன் ஆணையை மதித்து  என் பக்தை வந்திக்காக  நானே மண் சுமக்க வந்தேன்.

பாண்டியன் வந்தியின் குடிசைக்கு ஓடினான். ஒரு விண்ணுலக விமானம் அவளை கைலாயம் அழைத்து சென்றதை அறிந்தான். மணிவாசகரைத்  தேடி  சொக்கனின் ஆலயத்துக்கு ஓடினான். கண்களில் நீர். கூப்பிய கரங்கள்.. சொக்கா  சொக்கா  சொக்கா என்று இடைவிடாத அலறல் பாண்டியனின்  வாயிலிருந்து விடாமல் ஒலித்தது.
வாதவூரர் காலில் விழுந்து ''என்னை மன்னியுங்கள் ப்ரபோ. மீண்டும் அரசவையில் பொறுப்பேற்று என்னை வழி நடத்துங்கள்'' என்று கெஞ்சினான்''
''அரசே எல்லாம் சிவமயம். அவன் ஆணை என்னை அழைக்கிறது நான் பெருந்துறை செல்கிறேன். 
பெருந்துறையில்  மீண்டும்  முன்பு அவர் சந்தித்த அதே  ''ஆத்மநாத முதியவர்''  வாதவூரரை  புன்னைகையோடு வரவேற்றார்.

தொடரும்

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...