Wednesday, February 21, 2018

FATHER AND SON

பாடமும் நம்பிக்கையும். J.K. SIVAN

தண்டு முசுடு. சிரிப்பே தெரியாது. யாரிடமும் சள் புள் என்று விழுபவன். அப்பா அம்மாவில் அப்பா தான் பாவம் எதற்குமே, எதையும் செய்யாத போதே திட்டு வாங்கி பழக்கப்பட்டவர். வாயே திறக்காத சாது.

ஒரு நாள் அவனுக்கு தாங்கமுடியாத வயிற்றுவலி. டில்லியில் உத்யோகம். டாக்டரிடம் போனான். அவனை பல மெஷின்கள் படுக்க வைத்து நிற்கவைத்து போட்டோ பிடித்து அவற்றை பார்த்த டாக்டர் '' உனக்கு ஒரு சிறு புண் வயிற்றில் இருக்கிறது அதை ஆபரேஷன் பண்ணி சரியாக்க முடியும்'' என்று அவனைப்பார்த்தபோதே அவனுக்கு புரிந்து விட்டது.

''எவ்வளவு நேரம் ஆகும்?

''ரொம்ப இல்லை. அரைமணி நேரம் தியேட்டரில் இருக்கணும். லோக்கல் அனெஸ்தீஸியா கொடுத்து சரி செய்த்துவிடுவேன்.'' மீண்டும் அவனை அதே பார்வை.

''எவ்வளவு பணம் ஆகும்?'

'' இருபது ஆயிரம் ரூபாய்'' எப்போது சௌகரியம் என்று ரெண்டு நாள் முன்னாடி பணம் கட்டிட்டு சொல்''

''சரி. ''

''உனக்கு கிட்னி யார் தானம் கொடுத்தது. நன்றாக வேலை செயகிறது.''

''கிட்னியா, எனக்கா தானமா?''

'ஏன் உனக்கு தெரியாதா?'' உன் ஸ்கேன் பழைய ரிப்போர்ட் சொல்லுதே''

குப்புராவ் குடும்ப டாக்டர். 65 வயது. முன் மண்டை வழுக்கைக்கு நடுவே சிறு புல் மேடு. அதை வளர்த்து வளைத்து முன்பக்கம் நெற்றி வரை சாய்த்திருந்தார்.

தண்டு வீடு வந்தான். அம்மாவை கேட்டான். ''ஆமாண்டா எப்பவோ. அப்பாவை கேளு''

''தோட்டத்தில் கத்திரி வெண்டை மிளகாய் துளசி செடிக்கு தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்த வெங்கிட்டு ''அப்பா''
என்ற குரல் கேட்டு எதற்கு இன்று திட்டோ? என்று உள்ளே வந்தார்.

''எனக்கு எப்பவாவது கிட்னி ரீபிளேஸ்மென்ட் நடந்ததா?

''.........''
''என்ன சும்மா இருக்கீங்க. சொல்லுங்க. எப்போது, ஏன்? ''

''உனக்கு அஞ்சு வயசிலே கிட்னி ப்ராப்ளம் என்று டாக்டருங்க சொல்லி அப்போ மாத்தினது''

''யார் கிட்னி கொடுத்தது?''

''........................''

''சொல்லுங்க ஏன் சும்மா இருக்கீங்க''

''என் கிட்னிலே ஒன்னு எடுத்தாங்க''
தண்டு கண்களில் வெள்ளம். அப்படியே அவர் காலில் விழுந்தான். அவனுக்கு அது இதுவரை தெரியாது. தெரிந்து கொள்ள சந்தர்ப்பம் இல்லை என்று எடுத்துக் கொள்ளலாம்.

அவன் இப்போது பழைய தண்டு இல்லை. ஆபரேஷன் வயிற்றுவலி நீக்கியது. அவன் குணமும் மாறிவிட்டது.

ஒருமாதம் கழித்து 70 வயது அப்பாவை ஒரு சாயங்காலம் ஒரு பெரிய ஹோட்டலுக்கு அழைத்து சென்றான். அவர் ரொம்ப பூஞ்சை. வெட்கம். உடலில் நடுக்கம். அவ்வளவு பெரிய ஓட்டலில் சாப்பிட்டது இல்லை. பெரியமனிதர்கள் எங்கு பார்த்தாலும். மேஜையில் சாப்பிடும்போது சாம்பார் காய் எல்லாம் சட்டையில் வேஷ்டியில் சொட்டி கறை. எதையோ தரையில் வேறு கொட்டிவிட்டார். தண்டு மெதுவாக எழுந்து தரையில் அவர் கொட்டியதை எல்லாம் பொறுமையாக எடுத்து ஓரமாக டேபிள் மூலையில் ஒரு டிஷ்யூ பேப்பரில் மூட்டை கட்டி வைத்தான். அவர் கோணா மாணா என்று சாப்பிடுவதை மற்றவர்கள் அருவறுப்போடு பார்த்தார்கள்.சாப்பிட்டு முடித்தாய் விட்டது. மெதுவாக அவரை கைத்தாங்கலாக தண்டு கைகழுவ அழைத்து சென்றான். தண்ணீரால் அவர் சட்டை வேஷ்டியில் இருந்த கறைகளை நீக்கினான். கொஞ்சமும் முகம் சுளிக்கவில்லை. கன்னத்தில் வாய் ஓரத்தில் கைகளில் இருந்த உணவு பதார்த்த மீதிகளை துடைத்துவிட்டான். அன்பாக சிரித்தான்.

பாக்கெட்டிலிருந்து சீப்பை எடுத்து அவர் தலையை சரியாக சீவி விட்டான். கண்ணாடியை எடுத்து துடைத்து மாட்டிவிட்டான். இதெல்லாம் அந்த ஓட்டலில் அத்தனை கண்களும் பார்த்துக்கொண்டிருந்தன. அமைதியாக வெளியே அழைத்துக்கொண்டு பணம் கட்டும் இடம் சென்றான்.

சாப்பிட்டுக்கொண்டிருந்தவர்களில் ஒருவர் எழுந்து தண்டு அருகில் வந்தார்.

''சார் உங்கப்பாவா?''

''ஆமாம் ''

''சார் நீங்க எதையோ ஒன்றை விட்டுவிட்டு போறீங்கன்னு தெரியுதா?''

''இல்லையே எதையும் விடவில்லையே.''

''ஒவ்வொரு பிள்ளையும் பெற்றோரிடம் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்ற பாடத்தையும், ஒவ்வொரு அப்பா அம்மாவுக்கும் நம்பிக்கையையும் விட்டு விட்டு போறீங்க சார் ''



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...