Thursday, February 15, 2018

AINDHAM VEDHAM


ஐந்தாம் வேதம் J.K. SIVAN

7 ஏன் ஒரு புத்ரன் அவசியம் என்று ஒரு கதை.

எல்லா ரிஷிகளும் முனீஸ்வரர்களும் அமைதியாக ஆர்வமாக அடுத்து உக்ரஸ்ரவர் என்ன சொல்லப்போகிறார் என்று காத்திருக்கிறார்கள். அந்த ரிஷி மெதுவாக ஆரம்பிக்கிறார்.

''அஸ்திகரிஷியின் கதை நீளமானது சுருக்கமாக சொல்கிறேன். இது என் தந்தை லோமஹர்ஷனர் எனக்கு சொன்னது. அவர் வியாசரிடம் கேட்டது. அஸ்திகரின் தந்தை ஜரத்காரு ஒரு முனிவர். அக்னிஹோத்ரி. காற்றையே ஆகாரமாக கொண்டவர். தூக்கமற்றவர். அவர் பிரம்மச்சாரியாக இருந்தபோது ஒருமுறை உலகமுழுதும் பிரயாணம் செய்தார். வழியில் ஒரு பெரும் பள்ளம். அதில் சிலர் தலைகீழாக தொங்கிக்கொண்டிருந்தனர். கால்கள் மட்டும் மேலே தெரிந்தன. அந்த பாதாளத்தில் விழாத படி அவர்கள் கால்களை சில நாணல் புல் பிணைத்திருந்தது. அதையும் ஒரு எலி கொஞ்சம் கொஞ்சமாக கடித்துக் கொண்டிருந்தது. எப்போது வேண்டுமானாலும் அந்த நாணல் புற்கள் எலிகளால் கடிக்கப்பட்டு அறுந்து அவர்கள் தலை குப்புற பாதாளத்தில் விழ நேரிடலாம்.

ஒரு பக்கம் ஆச்சர்யம், இன்னொரு பக்கம் கவலை ஜரத்காரு ரிஷிக்கு. என்னசெய்வது, எப்படி உதவுவது இவர்களுக்கு என்று திகைத்தவாறு '' யார் நீங்கள், எதற்கு இவ்வாறு தொங்குகிறீர்கள்?'' - என்றார் ஜரத்காரு.

'' நாங்கள் யயவரர்கள். கடும் விரதம் அனுஷ்டிக்கும் ரிஷிகள். எங்களுக்கு சந்ததி இல்லை. சந்ததியில் ஒருவன் இருக்கிறான். இரக்கமற்ற பாபி. அவன் பெயர் ஜரத்காரு. அவன் க்ரஹஸ்தனாகி அவனுக்கு புத்திர சந்தானம் ஏற்பட்டால் ஒழிய எங்களுக்கு நற்கதி இல்லை. எங்கள் வம்சம் அழியும். ''புத்'' என்கிற இந்த நரகம் தான் கிட்டும். ''

''ஐயோ, ரிஷிகள், நான் தான் அந்த ஜரத்காரு. நான் எப்படி உங்களைக் காப்பாற்ற முடியும் உடனே சொல்லுங்கள்?''

''நீதானா ஜரத்காரு, அப்பனே, நீ உன் ஆஸ்ரமத்துக்கு ஓடு. உடனே ஒரு கல்யாணம் பண்ணிக்கொள். ஒரு புத்ரனைப் பெற்றெடு. எங்களைக் கரையேற்று ''

''இதோ உடனே செல்கிறேன். எனக்காக இல்லையென்றாலும் உங்களுக்காக உடனே ஒரு பெண்ணைத் தேடி மணக்கிறேன். நான் ஒரு சாதாரண ஏழை பிரம்மச்சாரி. எனக்கு யார் பெண் கொடுப்பார்கள். எப்படியானாலும் எவ்ளோ ஒருவளைக் கண்டு பிடித்து மணந்து ஒரு புத்ரனைப் பெறுவேன்'' .

ஒரு பெண்ணை மனைவியாகப் பெற தவம் செய்த ஜரத்காருவுக்கு வாசுகி என்கிற சர்ப்பராணி தனது சகோதரியை மணப்பெண்ணாக அளித்தது.

''என் பெயர் இல்லாத பெண்ணை நான் மணக்க மாட்டேனே. உன் சகோதரி பெயர் என்ன சொல்'' என்றார் ஜரத்காரு.

' கவலையே வேண்டாம் உனக்கு. எல்லாமே தெய்வ சங்கல்பம். அவள் பெயரும் ஜரத்காரு தான். உனக்கென வளர்ந்தவள். '' என்றது வாசுகி. ஜனமேஜயனின் யாகத்தீயில் சகல சர்ப்பங்களும் அழியாமல் காக்க வாசுகி எடுத்த முடிவு இது.

இந்த ஆண் பெண் ஜரத்காருக்களுக்குப் பிறந்தவர் தான் அஸ்திக ரிஷி. ஜனமேஜயனின் யாகத்தில் மாளாமல் நாகங்களை காத்தருளியவர்.

மஹா பாரத கதைகளை சுருக்கமாக, ஆனால் ஒன்று விடாமல் சொல்லும்போது இப்படி தான் கொஞ்சம் தலை சுற்றும். கொஞ்சம் கூட நம்பும்படியாக இல்லையே என்று யோசிக்கவே வேண்டாம். ஞாபகம் இருக்கட்டும் நீங்கள் இப்போது ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருக்கிறீர்கள். அப்படித்தான் அவர்கள் காலத்தில் நடந்தது.

கொஞ்சம் ஒய்வு பெற்றுக்கொண்டு ஒரு முழு டம்ளர் நீர் மோர் குடித்துவிட்டு மற்ற கதைகளுக்குள் செல்வோமா?

நாம் அடிக்கடி உபயோகிக்கும் ஒரு வாக்கியம் நினைவிருக்கிறதா?

''எதையாவது சொல்வதானால் சுருக்கமாகச் சொல். மஹாபாரதமாக நீட்டிக்கொண்டு போகாதே!''.
ஆமாம்., பாரதம் நீண்ட தொடர் கதை தான். ஆங்கிலத்தில் ஒரு புத்தகம் படித்திருக்கிறேன். NEVER ENDING STORY என்று. நிறைய விறுவிறுப்பான கதைகள் ஒன்றன் பின் ஒன்றாக வரும். அது எத்தனையோ வருஷங்களுக்கு முன்னால் சிறு பையனாக இருந்தபோது. இந்த உக்ரஸ்ரவர் தான் முதன் முதலில் முடிவில்லாக் கதை சொல்லிய ரிஷியோ என்று இப்போது எனக்கு நினைக்கத் தோன்றுகிறது.

நைமிசாரண்ய ரிஷிகளுக்கு உக்ரஸ்ரவர் அஸ்திகர் பற்றிய விவரங்களைக் கூறினார் அல்லவா?. அஸ்திகரால் நாகங்கள் உயிர் தப்பின. ஜரத்காருவின் கடமையும் இனிது முடிந்தது. அவரது முன்னோர்கள் பித்ருலோகம் சென்றனர். வாழ்த்தினர்'' என்று ''டப் '' பென்று அஸ்தீகர் கதையை முடித்த உக்கிரஸ்வரர்
''முனிவர்களே, மேலும் ஏதாவது உங்களுக்கு கேட்கவேண்டுமா ? என்று வினவ

'' ஆமாம் மகரிஷி, தங்களது இனிய வாக்கினால் எங்கள் மனம் இனிக்கிறது. எங்களுக்கு மேலும் அஸ்திகர் பற்றி கேட்க ஆவல் அதிகரித்து விட்டது'' என்றார் சௌனகர் .

''ஆஹா, என் தந்தை எனக்கு எடுத்துச் சொன்னதை அப்படியே உங்களுக்கும் சொல்கிறேன்.''
தொடரும்

MY MAHABHARATHAM BOOK IN TWO VOLUMES '' AINDHAM VEDHAM'' OF ABOUT 1000 PAGES IN ART PAPER WITH MULTI COLOR PICTURES IS AVAILABLE FOR A MINIMUM DONATION OF RS. 1000. THIS IS NOT FOR SALE, BUT TO MEET THE PRINTING EXPS ONLY. INTERESTED MAY CONTACT ME. J.K.SIVAN 9840279080 OVER PHONE OR WHATSAPP MSG. RECEIPT WILL BE ISSUED FOR DONATION

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...