Saturday, February 10, 2018

PEP TALK

வயோதிக வாலிபர்களே: J.K. SIVAN
நான் உழைப்பதால் வாழ்கிறேன்


சுப்பண்ணா ரிடையர் ஆகிவிட்டார்.
இனி பச்சை மசி கையெழுத்து யாரும் கேட்கப்போவதில்லை. கதவைத் திறந்து உள்ளே விடப்போவதோ, நாற்காலி மேஜையை துடைத்திவ் விடப்போவதில்லை. வாசலில் மணியடித்தால் உள்ளேவர எவனும் கிடையாது.
உட்கார் என்று சொல்லும் வரை எவரும் நிற்கவும் போவதில்லை.
நாளையிலிருந்து அவரும் பால் வாங்க, போஸ்ட்டாபீஸில் ஸ்டாம்ப் வாங்க க்யூவில் தான் நிற்கவேண்டும்.
பார்க்கில் பெஞ்சில் பக்கத்து ஆள் முகத்தைக்கூட பார்க்கமாட்டேன். அப்புறம் தானே குட் மார்னிங் குட் ஈவினிங் எல்லாம்.
எப்படி ஒரேநாளில் இந்த மாமெல்லாம். ரிட்டையர் ஆனதாலா? கிழமா?

சுப்பண்ணாவோ நாம் யாருமேயோ, திடீரென்று ஒரு நாள் சாயந்திரம் ஆபிஸ் விட்டவுடன் கிழமாய் ஆகவில்லை. ஒவ்வொருநாளும் தான் நாம் கிழடு தட்டிக்கொண்டு போகிறோம். பிறந்தது முதல் ''எல்லோரும் வந்து பார்த்து அழுவது வரை '' தினமும் தவறாது மரணத்தை நோக்கி தான் போய்க் கொண்டிருக்கிறோம். இதை எவரும் தவிர்க்கமுடியாது. உங்கள் பழைய போட்டோக்களை எடுத்துப் பாருங்கள், எங்கே அந்த அலை அலையாய் நெற்றியில் விழுந்த கேசம்? எப்போது அது நம்மை விட்டு போனது என்று கூட தெரியவில்லை, ஒவ்வொருநாளாக நழுவியிருக்கிறது. சூரிய வெளிச்சம் நெற்றிக்குமேல் பாதி உச்சி மண்டை வரை பிரதிபலித்து கண்ணைப் பறிக்கிறதே இப்போது.

ஏன் இந்த கோடுகள் என் முகத்தில்? காலேஜ் படிக்கையில், கல்யாணம் ஆகுமுன், நண்பர்களுடன் குற்றாலத்தில் குளிக்கும்போது இல்லையே. போட்டோ சொல்கிறதே ஆமாம் என்று , இப்போது மட்டும் கண்ணாடியில் ஏன் தெரிகிறது. ஒருவேளை நமது கண்ணாடி பெல்ஜியம் கண்ணாடி இல்லையோ?

வயிறு பானையாகி விட்டது. முதுகு ஈசி சேர் பாணியில் வளைந்து விட்டது. காலம் ஏன் இப்படியெல்லாம் பழி வாங்குகிறது?.
எனவே ரிடையர் ஆகுவது என்பது வெறும் கணக்கு. ஒரு கால கட்டத்திலிருந்து மற்றொரு குறிப்பிட்ட வருஷம் வரையிலான எவனுக்கோ உழைத்த கடமையோ கடனோ சம்பந்தப்பட்ட கால வரையறை. அதற்குள் அதிகாரம், பதவி, மேலே சொன்ன பச்சை மசி கையெழுத்து, டவாலி சேவகன், அதிகாரம், அகம்பாவம், தானாக கிடைக்காத மதிப்பு மரியாதை எல்லாமே. எல்லாம் நாடக மேடை வேஷம்.

ரிடையர் ஆகிவிட்டால் இத்தனை நாள் காரில் வந்து இறங்கிய ஆபிஸ் வாசலில் இருக்கும் ஜிம்மி கூட மதிக்காது.

ஆகவே நாம் கிழமாவது அன்றாடம் தான். என்றோ ரிடயர் ஆனபிறகு அல்ல. மனதில் தான் வயோதிகம், உடலில் அல்ல என்று ஏற்படுத்திக்கொண்டு உழைக்கவேண்டும். நான் என்னை கிழவனாக ஒருபோதும் நினைத்துப் பார்க்கவே இல்லை.

ரிடையர் ஆவது என்றால் பல காலம் ஒரு நிறுவனத்துக்கோ, ஒரு மனிதனுக்கோ வேலை செய்ததை ஒப்பந்தப்படி விட்டு விடுவது. இதற்கான கூலி சம்பளம் இதர கூடுதல் பயன்கள் இனி வராது.

இனி நாம் வேண்டுமானால் வேறு ஒருவருக்கு வேறு மாதிரி சேவை செய்ய முற்படலாம். அது நம் விருப்பம். சம்பளம் இதில் நாம் கேட்டுப் பெறுவதில்லை. அவர்கள் என்ன தருகிறார்களோ அது நமக்கு சரி என்றால் அவ்வளவு தான். அது காசாக இல்லாமல் அன்பும் மதிப்புமாக கூட இருக்கும். நான் இன்னும் படிக்கிறேன். எழுத துவங்கினேன். நேரம் போவதே தெரியவில்லை. முடிவில்லாத ஒரு இயக்கம்........இயங்குகிறேன். காசோ கூலியோ, பிரதிபலனோ எதிர்பார்ப்பு ஹுஹும். துளியும் இல்லை.

மஹா பெரியவா இப்படி ரிடையர் ஆனவர்களுக்கு ஒரு ஆலோசனை கூறிவேண்டுகோள் விடுத்திருக்கிறார் தெரியுமா.? கீழே படியுங்கள்:

' நீங்கள் ரிடையர் ஆயிட்ட தால், 'நாங்கள் 'ரிடையர்' ஆன கிழங்களாச்சே! தொழிலை விட்டு விட்டவர்களாச்சே! எங்களால் என்ன உதவி பண்ண முடியும்?'' என்கிறீர்களா? உங்களால் முடியாதா? உங்களால்தான் ஜாஸ்தி முடியும் என்று உங்களைத்தான் இத்தனை நாழி எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். நீங்கள் உங்களைப் பட்டுப் போன மரம் என்று நினைக்க வேண்டாம். மனஸ் வைத்தால் நீங்கள்தான் இந்த தேசத்தை தேவலோகமாக்கக் கூடிய கல்பக வ்ருக்ஷங்கள் என்று நான் நினைக்கிறேன். தெய்வ பலத்தை தனக்காக இல்லாமல், உலகத்துக்காகச் செய்தால் கிழத்தனத்தின் பலஹீனமும் ஓய்ச்சலும் இல்லாமல் யுவர்களைவிட உத்ஸாஹமாகப் பண்ணலாம். கிழவன் நானே சொல்கிறேன்.''

மற்றவர்கள் ஆஃபீஸ் காரியம் போக மிஞ்சிய கொஞ்சம் போதில்தான் பொதுத்தொண்டு பண்ண முடியுமென்றால் ரிடையரான நீங்களோ புல் டைமும் ஸோஷல் ஸர்வீஸ் பண்ணுகிற பாக்யம் பெற்றிருக்கிறீர்கள். ஆஃபீஸுக்குப் போய்வந்த காலத்தில் உங்களுக்குக் குடும்ப பொறுப்பும் அதிகம் இருந்தது. இப்போது அதுகளைக் கூடியவரையில் குறைத்துக் கொள்ள வேண்டும். அநேகமாக ரிடையர் ஆகிற வயஸில் ஒருத்தனுக்கு நேர் பொறுப்பு உள்ள பிள்ளைகளின் படிப்பு, பெண்ணின் விவாஹம் முதலான கார்யங்கள் முடிந்திருக்கும்.

அதற்கப்புறமும் பேரன் படிப்பு, பேத்தி கல்யாணம் என்றெல்லாம் இழுத்துப் போட்டுக் கொண்டேயிருந்தால் அதற்கு முடிவே இருக்காது. ரிடையரானவர்களும் குடும்ப விசாரம் என்று அழுது கொண்டிருந்தால், மற்றவர்களும் இதையே நினைத்துக் கொண்டு ப்ரலாபிக்க வேண்டியதுதான். ஓரளவு வயஸான பிற்பாடாவது விவேக வைராக்யாதிகளைப் பழக வேண்டாமா? கொஞ்சமாவது வானப்ரஸ் தாச்ரமிகளைப் போல, வீட்டுப் பொறுப்புக்களை அடுத்த தலைமுறைக்கு விட்டு விட்டுத் தங்கள் தங்கள் ஆத்மாவை கவனித்துக் கொள்ள வேண்டும். உத்யோக காலம் முடிந்த பின் சொந்த பிஸினஸ் பண்ணலாமா, ஃபாக்டரி வைக்கலாமா, ஃபார்ம் வைக்கலாமா, எக்ஸ்டென்ஷனுக்கு 'ட்ரை' பண்ணலாமா என்று தவித்துக் கொண்டிருக்காமல், தன்னைக் கடைத்தேற்றிக் கொள்வதற்கான வழிகளைத் தேட வேண்டும்.''

ஸ்வயோபகாரமில்லாமல் பரோபகாரமில்லை (charity begins at home ) என்றனே! அதனால், இதற்கு முன்னால் தெரிந்து கொண்டு, அவற்றின்படி இதுவரை பண்ணாத அநுஷ்டானங்களை இப்போதாவது பண்ண ஆரம்பிக்க வேண்டும்.

இதெல்லாம் பண்ணினாலும் உச்சிப் பொழுதுக்கு அப்புறம் நிறைய அவகாசம் இருக்கும். அதில் பரோபகாரங்கள் பண்ண வேண்டும். இருக்கிற ஓய்வை நன்றாகப் பிரயோஜனப்படுத்திக்கொண்டு ஸத் விஷயங்களைத் தாங்கள் படித்தும் கேட்டும் தெரிந்து கொள்வதோடு மற்றவர்களுக்கும் அவற்றை எடுத்துச் சொல்வது பெரிய உபகாரம்.

(நான் சில காரியங்கள் செய்து கொண்டு வருகிறேன். சொல்லட்டுமா? போஸ்ட் ஆபீஸ், பாங்குகளில் உதவி தேடி பரிதாபமாக பார்த்துக்கொண்டிருக்கிறவர்களை அணுகி லெட்டர் , படிவங்களை பூர்த்தி செய்து தருவது, பேனா இரவல் கொடுத்து ஞாபக\மாக கேட்டு வாங்கிக்கொள்வது, வழியில் யாராவது வயோதிகர்கள் கண்டால் போகும் இடம் வரை அவர்களை எனது ஊர்தியில் ஏற்றிச் செல்வது, பள்ளிக்கூடங்களுக்கு சென்று குழந்தைகளுக்கு கதை சொல்வது, போட்டி நடத்துவது, பரிசு அளிப்பது, உங்களுக்கு கதை எழுதுவது, கோவிலுக்கு நிறைய பேரை முடிந்தபோது அழைத்து செல்வது, எனக்கு தெரிந்ததை மற்றவர்களுக்கு சொல்லித் தருவது. இதைத்தவிர வீட்டில் ஏதோ முடிந்தவரை எல்லா வேலைகளையும் செய்வது ---- இது பரோபகாரமா இல்லையா? தெரியாது ---ஆனால் இது தான் முடிகிறது. எனவே இதைத் தான் செய்து கொண்டு வருகிறேன்!! -- சிவன்)
அது தவிர நீங்கள் எந்தத் தொழில் செய்தீர்களோ, அதை நாலு ஏழை இளைஞருக்கு ஃப்ரீயாகச் சொல்லிக் கொடுத்து அநத் உத்யோகத்துக்கான பரீக்ஷைகளுக்கு அவர்கள் போகிறதற்கு உதவி செய்யுங்கள். கொஞ்சம் வசதியாகப் பென்ஷன் வாங்குகிறவர்களாயிருந்தால், இப்படி வித்யாதானம் செய்வது மாத்திரமில்லாமல் அவர்களில் ஓரிரண்டு பேருக்காவது அன்னதானமும் சேர்த்துப் பண்ணுங்கள். சொந்தக் குடும்பத்துக்கு சொத்துச் சேர்த்து வைத்தால் மட்டும் போதாது. வெளி மநுஷ்யாள் இரண்டு பேர் வயிறும் குளிரப் பண்ணுங்கள். இப்படி ஆதரவில்லாதவர்களுக்கு ஸமூஹத்திலேயே திருட்டு, புரட்டு எவ்வளவோ குறையும். இல்லாமையால்தான் (வசதியிருக்கிறவர்களுக்கு மனமில்லாமையாலுந்தான்!) அநேகர் ஏமாற்றுக்காரர்களாகவும் திருடர்களாகவும் ஆகிறார்கள்.

இதம் சரீரம் பரோபகாரம் என்பார்களே இந்த சரீரம் மற்றவர்களுக்கு உயிர் உள்ளவரை உபயோகப் படவேண்டும், உயிர் போனபின் இந்த சரீரம் பஞ்ச பூதங்களோடு கலந்து நம்மைக் கேட்காமலேயே எங்கோ எதற்கோ உபயோகமாகிவிடும். ''

மனதை இளமையோடு வைத்துக்கொண்டால் உடலுக்கு சிட்டுக்குருவி லேகியம் தேடிப் போகவேண்டாம்.டாக்டர் பேரோ, அவர் விலாசமோ மறந்துவிடும்.



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...