Wednesday, February 21, 2018

MANICKA VACHAGAR 2

மணி வாசகர் பற்றிய சில வாசகங்கள் - 2
-J.K. SIVAN
பாண்டிய ராஜாவுக்கு பரம சந்தோஷம்.

''வாதவூரர் எந்த காரியத்தையும் புத்தி சாலித்தனமாக சிந்தித்து ஆராய்ந்து செய்பவர் . எனவே நமக்கு நல்ல குதிரைகள் சீக்கிரமே கிடைக்கும்'' என்றான் ராஜா.

கையில் பொற்காசு மூட்டைகளுடன், ஆள் படையுடன் புறப்பட்டார் வாதவூரர். குதிரையும் கிடைக்கவேண்டும், நல்ல குருவும் கண்ணில் படவேண்டுமே.

''சோம சுந்தரா, எல்லாம் உன் சித்தம். நாட்டைக்காக்க குதிரை. என் மனதை அடக்கி காக்க குரு. ரெண்டையும் தேட இது நல்ல சந்தர்ப்பம் என மகிழ்ந்தார். மதுரை சொக்கனின் விபூதியை அள்ளி நெற்றியில் பூசிக்கொண்டு கிளம்பினார் .

வாதவூரர் தனது வாழ்வில் நரை திரை மூப்பு எதையும் காணவில்லை. ஆதி சங்கரரைப் போல் 32 ஆண்டுகளே வாழ்ந்து ஆனி மகத்தில் சிதம்பரத்தில் சாயுச்சிய முக்கியடைந்தார் (சிவனடி சேர்ந்தார்).

ஆத்மநாதருக்கு தெரியாதா. ''இதோ வந்து விட்டான் வாதவூரன். வெகுநாளாக அவனை வரவழைக்க அவன் மனதில் வளர்த்த ஆத்ம தாகம் இங்கே இனி தீரப்போகிறது. எனக்கும் என் மனம்கவர்ந்த பக்தன் கிடைத்துவிட்டான்

''அதோ அந்த இடத்திலேயே தங்குவோம்'' என்று பெருந்துறையில் தங்கிவிட்டார் வாதவூரர். அவரை ஏதோ காந்தமாக இங்கே கவர்ந்தது.

''இங்கே சிவன் கோவில் ஏதாவது உள்ளதா? ஞானிகள் யாரேனும் உள்ளனரா?'' என்று யாரையோ கேட்க, சற்று தூரத்தில் ஒரு குருந்த மரத்தடியில் ஒரு முதியவர் இருக்கிறார் என்று பதில் வந்தது.

ஒரு வயோதிக பிராமணர் கையில் சிவ ஞான போதம் என்ற ஓலைச்சுவடியை வைத்துக்கொண்டு ஒரு குருந்த மரத்தடியில் உற்கார்ந்திருந்தார். அருகே பழைய ஒரு சிறிய சிவன் கோவில். அந்த சாதுவைச் சுற்றிலும் பல சிஷ்யர்கள்.

அந்த சிறு கோவிலில் நுழைந்தார் வாதவூரர். சிலையானார். ஆத்மநாதர் வாதவூரர் ஆத்மாவில் கலந்தார்.கண்களில் பிரவாகம். அந்த கோவிலை கால்கள் சுற்றின. ஹர ஹரா என்ற சப்தம் காதில் ரீங்காரமிட்டது. மனம் பாகாய் உருகியது. சற்று தள்ளி இருந்த ஒரு குருந்த மரத்தடியில் சிவந்த மெலிந்த வெண் தாடி சடை முடியோடு ஒளி வீசும் கண்கள் அழைத்தன. கன்றுக்குட்டி தாயிடம் சென்றது. நீண்ட நாள் தேடிய தாய் சேய்க்கு கிடைத்துவிட்டாளே. தடாலென்று அந்த பிராமணர் காலடியில் வீழ்ந்தார் வாதவூரர். இவரே என் குரு என அறிந்து மகிழ்ந்தார். வார்த்தைகள் வெளி வரவில்லை.

'சிக்கென'' அவர் கால்களை பிடித்துக்கொண்டு ''ப்ரபோ, என்னை அடிமையாக ஏற்றுக்கொண்டு அருள்வீராக'' என்று கெஞ்சினார்.

''நான் இதற்காகதானே வந்து காத்திருக்கிறேன்'' என்று ஆத்மநாதர் பிராமண வடிவில் மனதில் மகிழ்ந்தார் .வாதவூரர் பாதாதி கேசம் வரை ஏதோ தன்னுள் புகுந்தது உணர்ந்தார். சிவஞானம் அவரை ஆட்கொண்டது. எங்கோ மேகக்கூட்டத்தில் பார்க்கும் இடத்தில் எல்லாம் லிங்க கூட்டங்கள். அத்தனைக்கு அபிஷேகங்கள். பேரிகை, உடுக்கு, மத்தள முழக்கம். சிவகணங்கள் கண்ணுக்கெட்டியவரை பேரானந்தத்தில் ஆழ்த்துகிறார்கள். பக்தர்கள் வெண்ணிற பூச்சோடு...நினைவு அழிந்தது. மீண்டும் நினைவு பெற்றபோது தான் குருநாதர் திருவடிகளில் மயங்கி இருந்ததை உணர்கிறார்.

''குருநாதா, பரம்பொருளே, என்னை ஆட்கொண்ட தெய்வமே, என் நெஞ்சம் உருக்கி என்னை சிவமாக்கிய செல்வமே, எல்லாம் உன் உடைமையே, எல்லாம் உன் அடிமையே, எல்லாம் உன்னுடைய செயலே என்று தனது ஆபரணங்கள் செல்வங்கள் அனைத்தையும் அந்த பிராமண குரு பாதத்தில் சமர்ப்பித்தார். துறந்தவர் துறவியானார். த்யானத்தில் ஆழ்ந்தார். மனம் லேசானது. கண்களில் பரவசம். மணிப்ரவாளமாக சிவ ஸ்துதி பெருக்கெடுத்தது பாடினார். அருமை தீந்தமிழில் சிவனை துதித்து பாடல்கள் மணி மணியாக வெளிவந்து அவற்றை மாலையாக சிவனுக்கு சூட்டினார்.

''அப்பனே, வாதவூரா, நீ மணி வாசகனடா. இங்கேயே இரு '' என்று ஆத்மநாதர் அன்போடு அழைத்தார். நமக்கு மணிவாசகர் கிடைத்தார். கண் மூடி குருவை கீழே விழுந்து வணங்கிய மணிவாசகர் கண் திறந்து எழுந்தபோது ப்ராமணரைக் காணவில்லை. கதறினார். பக்தி பரவசமாக தன்னை மறந்த நிலையில் தேடல் தொடர்ந்தது.

ராஜாவின் ஆட்கள் மெதுவாக அவர் குதிரை தேடி வந்ததை நினைவூட்ட ''நீங்கள் திரும்பி செல்லுங்கள், குதிரைகள் சீக்கிரம் ஒரு மாத காலத்தில் வந்து சேரும்'' என்று ஏதோ ஒரு இயந்திரம் கூறுவதைப் போல் பதிலளித்தார் மணிவாசகர். அந்த சிறு பழைய கோவிலில் ஆத்மநாதரை வணங்கிய மணிவாசகர் தான் கொண்டுவந்த பொற்காசுகளை செல்வங்களை செலவழித்து ஒரு கோவில் நிர்மாணித்தார். திருப்பெருந்துறையில் சிவன் கோவில் உருவானது.

அந்த ஊர் சிவனைப் பற்றி சொல்கிறேன்:
++
திருப்பெருந்துறை என்கிற ஆவுடையார்கோயில் புதுக்கோட்டை மாவட்ட த்தில் உள்ளது. 1100 வருஷம் பழைய கோவில். நமக்கு திருவாசகம் தந்த க்ஷேத்ரம். ''கடல் கிழக்கு, தெற்கு கரைபெரு வெள்ளாறு, குடதிசையில் கோட்டைக் கரையாம் - வடதிசையில் ஏனாட்டுப் பண்ணை இருபத்து நாற்காதம் சோனாட்டிற் கெல்லையெனச் சொல்'' என்றும் ''வெள்ளாறது வடக்காம், மேற்குப் பெருவெளியாய், தெள்ளார் புனற்கன்னி தெற்காகும் - உள்ளார ஆண்ட கடல் கிழக்காம் ஐப்பத் தறுகாதம் பாண்டிநாட் டெல்லைப் பதி'' என்று சோழ பாண்டியநாட்டு எல்லை பற்றி கம்பர் பாடியிருக்கிறார்.

தமிழக எல்லா கோவில்களிலும் உருவம் உண்டு. திருப்பெருந்துறை சிவன், ஆத்மநாதர். ஆத்மநாதர் கோவிலில் கொடி மரம் இல்லை பலி பீடம் இல்லை நந்தி இல்லை கர்பகிரஹத்தில் லிங்கம் இல்லை. லிங்கமற்ற ஆவுடையார் மட்டும் தான். ஏதோ பூதங்கள் வந்து பெரிய பெரிய பாறைகளைக் கொண்டு வந்து தூண்கள், சிலைகள் வடித்தும் கொடுங்கைக் கூரைகள் இணைத்தும் மதில் சுவர்கள் கோபுரங்கள் எழுப்பியதாக ஒரு தகவல். சிறந்த சிற்ப பொக்கிஷம்.

இந்த ஆலய மண்டபத்தில் 10-15 வளையங்கள் கொண்ட ஒரே கல்லிலான கல் சங்கிலி அற்புதமாக செதுக்கப்பட்டு உயரத்தில் தூங்குவதால் நம் கைகள் படாமல் காப்பாற்றப்பட்டிருக்கிறது.
++


வாதவூரர் திருப்பெருந்துறை அடைந்தது முற்றிலும் மாறிவிட்டதை அறிந்த பாண்டியன் சினம் கொண்டான். எதற்கும் ஒருமாத காலம் பொறுப்போம் என காத்திருந்தான். ஒரு மாதமும் முடிந்தது.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...