''தெலுங்கு தேட்டா'' -- தேனான வேமனா - J.K. SIVAN
1950 ல் யாரோ ஒரு வெள்ளையர் எழுதிய ஒரு புத்தகம் என் வழியில் வந்தது. அதைப் படிக்க ஆரம்பித்தேன்.
நமது நாட்டில் ரிஷிகள் எண்ணற்றவர், தவம் செய் முனிவர்கள் பலர், வேத சாஸ்திர விற்பன்னர்கள் அனேகர். கற்றுணர்ந்த பண்டிதர்கள் கணக்கற்ற
வர்கள். இதில் சேராத இயற்கையிலேயே ஞானிகளாக உலா வந்தவர்களோ சிலர் தான்.
விரல் விட்டு எண்ணக்கூடியவர்கள். அவருள் பலரை நாம் முழுதும் அறிந்து கொள்வதற்குள் அவர்கள் மறைந்து விட்டனர்.
அவர்களுக்கிடையே நாம் காணும் ஒரே ஒற்றுமை, அவர்கள் முறைப்படி கல்லாதவர்களோ அல்லது அன்றாட பேச்சு வழக்கிலேயே மிக உன்னத தத்துவங்களை உணர்த்தியவர்களோ, பலன் எதுவும் எதிர்பாராமல் விளம்பரம் தேடாமல், அமைதியாக நம்மில் ஒருவராக வாழ்ந்த வழி காட்டிகளோ வாழ்ந்தவர்கள் என்பது ஒன்றே தான்.
அவர்கள் அனைவருமே, பல வேறு மொழிகளில் தமது ஞானத்தை, பொன்மொழிகளை, தத்துவத்தை, சிந்தனை முத்துக்களை நமக்கு ஊட்டியவர்கள்.
சந்தர்ப்பம், சூழ்நிலை, தகுதி இல்லாத இடத்தில் மகான்களைப் பற்றி பேசாதே. இத்தகைய இடத்தில் அறிமுகப்படுத்தாததால் மகான்களின் பெருமை குன்றாது. நாலே பேர் கூடினாலும் சத்சங்கம் தான் அங்கே பேசலாமே. ஒரு பெரிய மலையைக்கூட ஒரு சிறு மொபைல் டெலிபோன் கேமரா படம் பிடிக்கிறதே. வேமனாவுக்கு மொபைல் தெரியாது. ஒரு தெலுங்கு பாடலில் சிறு கண்ணாடித்துண்டு என்றாலும் அதில் பெரிய மலையின் பிம்பம் தெரியுமே என்கிறார். இப்படிப் பட்ட ஞானிகளின் வாக்குகள், வாசகங்கள் நம் வாழ்வின் இருளைப் போக்கும் தீபங்கள். இதை ஜப்பானிய மொழியிலோ,
இத்தாலி பாஷையிலோ, தமிழிலோ அறிந்தாலும் உண்மை ஒன்றுதானே.
இத்தாலி பாஷையிலோ, தமிழிலோ அறிந்தாலும் உண்மை ஒன்றுதானே.
அவர்களில் ஒருவரை பற்றித் தான் அந்த புத்தகத்தில் அறிந்தேன் அதை உங்களிடம் பகிர்ந்து கொள்ள ஆவல் அதிகரித்ததால் இந்த செய்தி உங்களை வந்தடைகிறது. அவர் தான் பக்த வேமனா.
கிட்டத்தட்ட 700 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு ஆந்திரா என்ற பிரிவினை மனதில் தோன்றுமுன்பு வாழ்ந்த ரெட்டியார் வம்சத்தில் உதித்த பக்த வேமனா ஏறக்குறைய ஏழாயிரம் பாடல்களுக்கு மேல் புனைந்தவர் என்பது ஆச்சர்யத்தை தருகிறது. இன்னும் இது போல் எண்ணற்ற தெய்வங்கள் எங்கிருந்தெல்லாமோ எந்தெந்த மொழிகளிலோ நமக்கு தந்ததை எல்லாம் நாம் இழந்து நிற்கிறோம்.
வேமனா வார்த்தைகள் எல்லாமே எளிய அன்றாட, கொச்சையான, புரியும்படியான தெலுங்கில், வழக்கில் உள்ளது. லட்சோப லக்ஷம் தெலுங்கர்கள், படித்தவர், படிக்காதவர் அனைவரின் அன்றாட வாழ்க்கையில் பழமொழியாக, வார்த்தைகளாக, சொல்லாக மிளிர்பவை வேமனாவின் சொல்லோவியங்கள்.
ஞானஸ்தர்களும் பண்டிதர்களும் கூட கையாள விரும்புவது இவையே. இந்த சிறு சிறு நல்வழிப் பாடல்கள் மக்களைத் திருத்தி இறைவன் பால் வழிகாட்டுபவனவாக இன்றும் நடைமுறையில் உள்ளதே இவற்றின் சிறப்பு .
கொண்டவீடு என்ற கிராமத்தில் ஜனனம். ரெட்டியார்கள் ஆண்ட காலம். அந்த ராஜவம்சத்தைச் சேர்ந்தவரா யிருந்தாலும் வேமனா ஒரு எளிய ஞானி. மறைந்தது கத்தரப்பள்ளி என்கிற ஊரில். அங்கு வேமனாவின் சமாதி இன்னும் உள்ளது. ஒரு தரம் அந்த சமாதிமேல் மின்னலோடு இடி தாக்கி சமாதியைப் பிளந்தது. அதிலிருந்து வேமனா ஒரு பன்னிரெண்டு வயதுள்ள பாலகனாக தாக்கிய இடி மின்னலைக் கையில் பிடித்துக் கொண்டு வெளிவந்து மீண்டும் அதனுள்ளேயே சென்றார் என்று ஒரு செய்தி (நம்புவதா? வேண்டாமா? என்பது உங்கள் சித்தம்) . ஆனால் பலர் நம்புவதை நாமும் நம்புவதால் தவறு ஒன்றுமில்லையே. மகான்களுக்கு எதுவும் சாத்தியம்.
வேமனாவின் பாடல்களில் தர்ம ஞாயம், நேர்மை, வாழ்க்கை நிலையில்லாமை, பண்பாடு, இடைவிடாத பக்தி, உலக இயல், மக்களின் எதிர்பார்ப்பு, சகலமும் அடங்கும்
தூங்குபவனை சாட்டையடி கொடுத்து எழுப்பி திசை திருப்புகிற தன்மை கொண்டவை அவரது சக்தி வாய்ந்த ரெட்டை அடி கவிதைகள்!!
ஒரு சில ரெட்டை அடி தெலுங்கு கவிதைகளின் அர்த்தத்தை தமிழில் சொல்கிறேன்
"உன்னுள்ளே இதயத்தில் உயிரோட்டமுடன் இருப்பவனை எங்கோ சென்று கல்லில் தேடாதே. அவன் உன்னில் இல்லாமல் கல்லிலா இருக்க விரும்புவான்"
" உள்ளத்தில் மண்டிக்கிடக்கும் வண்டி வண்டியான அழுக்கை நீக்காமல் உ டலை வருத்தி, வாட்டி, யோகியாக முயற்சிப்பது , பாம்பை அடிக்கிறேன் என்று அது இருந்த புற்று மண்ணை அடிப்பது போல"
"இறைவா, உன்னைப் பார்க்கையில் நான் இல்லை. என்னையே நினைத்துக் கொண்டு உன்னைப் பார்க்கும்போது நீ காணோம். எப்படி ஆற்றில் ஒருகால் சேற்றில் ஒருகாலாக உன்னையும் என்னையும் நான் ஒரு சேற நான் காண இயலும்?"
தர்மிஷ்டன் யார் என்று சொல்லும்போது :
"எவன் கஷ்டப்பட்டு தானியமெல்லாம் பொருக்கி, சேர்த்து, களைந்து, இடித்து, பொடித்து, சமைத்து , பசியோடு வாடுபவனுக்கு உணவாக போடுகிறானோ அவனைச் சிவன் என்றால் தப்பா"?
உப்பும் கர்பூரமும் பார்ப்பதற்குத்தான் வெள்ளை. அதனதன் குணத்திலும் ருசியிலும் வடதுருவம் தென் துருவம் இல்லையோ? மக்களில் அவ்வாறே ஞானிகளும் சூன்யங்களும் வெளியே பார்க்க ஒன்றாக இருப்பர்"
அருமையான தெலுங்கில் சரளமாக இவற்றை அனுபவிக்க நமக்கு தெலுங்கு தெரியாதே! பரவாயில்லை. தெலுங்கை ருசிக்க முடியவில்லையானாலும் அர்த்தத்தை ரசிக்கலாமே என்ற எண்ணத்தோடு சிலவற்றை எனக்குத் தெரிந்த எளிய முறையில் எழுத இருக்கிறேன்.( மேலே கண்டவை போன்று)
No comments:
Post a Comment