மணி வாசகரைப் பற்றி சில வாசகங்கள் 3
J.K. SIVAN
பாண்டிய ராஜாவால் தான் அதிகம் நம்பிய வாதவூரர் இப்படி செய்வாரென்று நம்பமுடியவில்லை. கோபமும் வந்தது. ஏமாற்றமும் அதில் கலந்திருந்தது. குதிரை வாங்க பொற்காசுகள் கொடுத்தால் எங்கோ கோவில் காட்டுகிறாரா? இது ராஜதுரோகம். தண்டனை வழங்கவேண்டும்.
அங்கே திருப்பெருந்துறையில் எந்த சிந்தனையும் மனதில் இன்றி மாணிக்கவாசகர் ஆத்மநாதனோடு லயித்து ஆனந்தத்தில் இருந்தார். பொற்காசு கொண்டுவந்தது, குதிரை வாங்க கிளம்பியது, முப்பது நாளில் குதிரை வரும் என்று சொல்லியது எதுவுமே ஞாபகத்தில் இல்லை.
ராஜா ஓலை அனுப்பினான். ஒரு கொடிய நாகத்திடம் இருக்கும் பயம் ராஜாவிடமும் இருக்கவேண்டும். உடனே திரும்பி வந்து ராஜாவை சந்திக்க கட்டளை.
ஓலை கொண்டுவந்து தந்தவன் அவரது எளிமை, பக்தி, புனிதத்தன்மையை கண்டு வியந்தான். ஐயோ இவருக்கா ராஜா தண்டனை கொடுக்கப்போகிறார்.
மாணிக்கவாசகர் ஓலையை படித்தார். ஆத்மநாதா, இந்தா எனக்கு ராஜாவிடம் கிடைத்த பரிசு. என்னை உன்னிடம் ஒப்புவிதித்து விட்டேன். நீ என்னை எப்படி வேண்டுமானாலும் ஆட்டி வை. நான் உன் அடிமை. குதிரைக்கும் வழி சொல்லு?
அன்று கனவில் முதிய பிராமணர் மீண்டும் வந்தார். ''அன்பா, அஞ்சாதே. நானே உனக்காக சிறந்த குதிரைகளை மதுரைக்கு ஒட்டிச் சென்று ராஜாவிடம் ஒப்படைக்கிறேன். நீ தைரியமாக அரசனைக் காண செல்லலாம். ஆவணி மூலம் அன்று குதிரைகள் வந்து சேரும் என்று சொல். இந்தா''.
தூக்கத்திலிருந்து விழித்த மணி வாசகர் தனது கையில் ஒரு பளபளக்கும் விலை உயர்ந்த வைரக்கல். ஆம் அதைத்தான் அந்த முதிய பிராமணர் (ஆத்மநாதர்) தூக்கத்தில் இந்தா என்று கையில் அளித்தது. எனவே கனவு இல்லை இது. நிஜமே தான்.
பொழுது விடிந்தது. அரை மனசோடு ''ஆத்மநாதா, உன் கட்டளைப்படி இதோ மதுரைக்கு திரும்புகிறேன். நான் எவ்வளவு சீக்கிரம் உன்னிடம் வரமுடியும் என்பதை நீயே தீர்மானி'' பழையபடி மந்திரி உடையோடு பெருந்துறையை விட்டு வாதவூரராக கிளம்பிவிட்டார் மணிவாசகர்.
ராஜாவை வணங்கி அவன் கையில் பரிசாக ஆத்மநாதர் அளித்த வைரக்கல்லை கொடுத்தார்.
அரசே உங்கள் கட்டளைப்படி தேவையான குதிரைகளை வாங்கியாகிவிட்டது. ஒரு நல்ல நாள் பார்த்து. ஆவணிமாதம் மூலம் நக்ஷத்ரம் நாள் உசிதமானது. அன்றே குதிரைகள் இங்கே வந்து சேரும்.
''வாதஊரரே , என்னை மன்னியுங்கள். ஏதோ கோபத்தில் ஓலை அனுப்பிவிட்டேன்.'' என்றான் பாண்டியன்.
நிறைய குதிரைகள் தங்க பெரிய குதிரை லாயம் தாராளமாக கட்டி குதிரைகள் வரக் காத்திருந்தார்கள்.
மணிவாசகர் மன நிலை மாறுபட்டுள்ளதை கண்ட உறவினர் குடும்பத்தார், எங்களை விட்டு சென்றுவிடாதீர்கள் என்று கெஞ்சினார். அவர் மனம் திருப்பெருந்துறையில் இருக்க உடல் மட்டும் மதுரையில்.
''என் சொந்த பந்தங்களே, என்று என் மனத்தை சிவன் ஆட்கொண்டுவிட்டானோ அக்கணம் முதல் நான் அவன் அடிமை. எனக்கென்ற தனிப்பட்ட எந்த செயலும் சொல்லும் இல்லை. இமைப் பொழுதும் என் னெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க என்று போற்றி அவனுக்கே நான் ஆளாவேன். என் ஒரே சொந்தம் பந்தம் பெருந்துறை ஈசன். சகல பாபங்களையும் நீக்கி சதானந்தம் அருள்பவன். ல் துன்பங்களில் வலியது பிறப்பும் இறப்பும். இறைவனோடு ஒன்றாகாத எதுவுமே துன்பமும் துயரமும் தான். உலகத்தை பற்றிய எண்ணமே எனக்கில்லை. மகிழ்வோடு உள்ளேன். என் உள்ளங்கையே நான் உண்பதற்காக உயிர்வாழ உதவும் ஒரே பாத்திரம். எங்கோ எப்போதோ யாரோ அளிக்கும் ஒரு கை அன்னம் என் பசிப்பிணி தீர்க்கட்டும். வானமே கூரை, பூமியே பாய் என்று இருக்க எனக்கு வீடோ வாசலோ அரண்மனையோ எதற்கு? நான் பூசும் விபூதியே என் ஆபரணம். நான் அணியும் ருத்ரக்ஷமே எனக்கு ரக்ஷை. நான் அவனை சார்ந்தவன். எவரிடமும் பயமற்றவன்.''
மேற்படி எண்ணங்களோடு ஆவணி மூலத்துக்கு அவரும் காத்திருந்தார். குதிரைகள் வந்து சேருமா?
இதற்கிடையே ராஜாவின் ஒற்றர்கள் திருப்பெருந்துறை சென்று விசாரித்து வாதவூரர் அத்தனை பொற்காசுகளை சிவன் கோவில் கட்டுவதில் செலவழித்து தெரிந்தது.
''ஓஹோ வாதவூரர் பொய் சொல்லி நடிக்கிறாரோ? என்ன ஆணவம், தைர்யம் அவருக்கு என்னிடமே இப்படி நடந்து கொள்ள?'' அரசன் பொறுமினான்
''திருப்பெருந்துறை சென்று அங்கும் அருகே ஊர்களிலும் வாதவூரர் குதிரை வாங்கினாரா என்று கண்டுபிடியுங்கள். ''
''அரசே எங்கு விசாரித்தபோதும் குதிரை எதுவும் வாங்கப்படவில்லை என்றே திட்டவட்டமாக தெரிகிறது.''
இன்னும் ரெண்டே நாளில் ஆவணி மூலம்...
அவனை சிறையில் இட்டு சிற்றவதை செயது பொற்காசுகளை மீட்க வழி தேடுங்கள்'' கட்டளை பிறந்தது.
No comments:
Post a Comment