பகவான் ரமண மஹரிஷி
19. விதியாவது மதியாவது! .
ரமணர் உபதேசங்களை எழுதுவது முடியாத காரியம் என்று ஏன் நினைக்கிறோம் என்றால், எதையுமே முதலில் நன்றாக புரிந்து கொண்டால் தானே எழுதவோ சொல்லவோ முடியும். அவர் சொன்னதையே அப்படியே திரும்பிச் சொல்கிறவர்கள் எழுத்தோ, சொல்லோ பலனளிக்காதே . பேசாமல் புரியாமல் புத்தகத்தை மூடிவிடுகிறோம். கேட்பதை, படிப்பதை எல்லாம் நிறுத்தி விடுகிறோம். புத்தி வேறு எதிலோ பட்டி மன்றத்துக்கு போய்விடுகிறது. அங்கு அக்கப்போர், ஊர் வம்பு இனிக்கிறதே.
விதிமதி மூல விவேக மிலார்க்கே
விதிமதி வெல்லும் விவாதம் – விதிமதிகட்
கோர்முதலாந் தன்னை யுணர்ந்தா ரவைதணந்தார்
சார்வரோ பின்னுமவை சாற்றுவாய் – சார்பவை 19
விதிமதி மூல விவேக மிலார்க்கே
விதிமதி வெல்லும் விவாதம் – விதிமதிகட்
கோர்முதலாந் தன்னை யுணர்ந்தா ரவைதணந்தார்
சார்வரோ பின்னுமவை சாற்றுவாய் – சார்பவை 19
விதியை மதி வெல்லும் என்கிறோம். இல்லை மதியை விதி தான் வெல்கிறது என்று எதிர்த்து சொல்கிறோம்? ரெண்டுக்கும் என்ன அர்த்தம்? எது வெல்கிறதோ இல்லையோ, ரெண்டுக்குமே மூலம் ஆத்மா. அதன் ஸ்வரூபத்தை அறியாமல் ரெண்டு நிழல்களின் யுத்தம் எதற்கு? என்ன பயன்? ஆத்ம ஞானம் அடைந்தவனுக்கு ஆத்ம ஸ்வரூபத்தை உணர்ந்தவனுக்கு விதியோ மதியோ ரெண்டுமே கிடையாது. அது எந்த விளைவையும் அவனிடம் ஏற்படுத்தாது. விதி மதி ரெண்டுமே வெறும் பிரமை. இல்லாதது இருப்பது போல் தோன்றி துன்புறுத்துகிறது.
ஒரு பக்தர் ரமணரை தரிசிக்க வந்தார் ஆஸ்ரமத்தை சுற்றிப்பார்த்தவர் ''என்ன இது? ஏதோ ஒரு சத்திரம் போல் இருக்கிறதே. எந்த ஒரு அனுஷ்டானமும் இல்லையே? இது அவர் மனதை உறுத்தியதால் பகவானைப் பார்த்தபோது ஒரு கேள்வி கேட்டார்
''சுவாமி உங்கள் சம்ப்ரதாயம் என்ன?"
பகவான் பதில் பேசவில்லை. சகஜமான மௌனம். சரி காது கேட்கவில்லை போலிருக்கிறது என்று சற்று உறக்கவே அதே கேள்வியை மறுபடியும் கேட்டார். அருகிலிருந்த இன்னொரு பக்தர்
''ஒரு சம்பிரதாயமும் இல்லாததே இங்கே சம்ப்ரதாயம். அது சரி உங்கள் சம்ப்ரதாயம் என்ன என்று சொல்லுங்கள் ?''
''விடிகாலை சூர்ய உதயத்துக்கு முன்னாலேயே குளிப்பது பிறகு நாள் முழுக்க ஜபம், தர்மம், சேவை, நித்ய கர்மாநுஷ்டானங்கள், இதெல்லாம் செய்து விட்டு சாயந்திரம் விளக்கேற்றி பூஜை, ஜபம் பண்ணிவிட்டு எங்கள் செய்கையின் பயனை குருவுக்கு அர்பணித்துவிடுவோம்'. இப்படி கர்ம பல தியாகம் தான் எங்கள் சம்ப்ரதாயம்' என்றார் அவர்.
பகவான் ரமணர் இதைக் கேட்டுக்கொண்டிருந்தவர் புன் முறுவலுடன் குறுக்கிட்டார்.
''ஓஹோ, கர்மம் பண்ணி, அதன் பலனை சமர்ப்பணம் பண்ணுகிறீர்களோ, அசலை உங்களிடம் வைத்துக் கொண்டு வட்டியை செலுத்துகிறீர்கள். நீங்கள் பிரயத்தனம் செய்து, குருவுக்கு சமர்ப்பணமா? பேஷ்'' என்றார் .
அருகே இருந்த ரமண பக்தர் முருகனார் உடனே ''அடேடே , உங்கள் குரு பரவாயில்லையே... இங்கே பாருங்கள் எங்கள் குரு ரமணரை. முதல், அசலையே விழுங்கிவிட்டார். அப்புறம் ஏது அதன் மூலம் வட்டி?'' -- என்றார்.
என்ன அர்த்தம்? அஹங்காரத்தை நாசம் செய்யாமல் பிடித்துக் கொண்டு, நான் தான் கர்த்தா என்ற அபிமானத் தோடு கர்மம் பண்ணிய பலனை அர்ப்பணம் செய்வதை பகவான் ''அசலை, முதலை'', வைத்துக்கொண்டு ''வட்டியை'' சமர்ப்பணம் செய்வது என்றார் . நான் என்ற அகந்தை அழிந்து போனால் யார் கர்மம் பண்ண இருக்கிறார்கள்? அதைத் தான் முருகனார் எங்கள் குரு முதலை, அசலையே விழுங்கியவர் என்றார்.
இன்னொரு சம்பவம். ஒரு பக்தர் அழுதுகொண்டே தனது துரதிர்ஷ்டத்தால் பட்ட துன்பங்களை சொன்னார். அத்தனையும் பேசாமல் மஹரிஷி கேட்டுக்கொண்டிருந்தார். சில நிமிஷ மௌனத்திற்கு பிறகு மஹரிஷி கேட்டார்.
''இவ்வளவு துன்பம் கஷ்டம் எனக்கு நடந்தது என்கிறீர்களே, யாருக்கு? நான் எனக்கு என்ற வார்த்தைகள் நிறைய சொன்னீர்களே. யார் அது? ஆழ்ந்த உறக்கத்தில் உங்களுக்கு தோன்றாத இந்த ''நான்'' எங்கிருந்து அப்புறம் வந்தது?
''மனதிலிருந்து''
''மனமும் உறக்கத்தில் இல்லையே''. விழிப்பிலும் கனவிலும் மட்டுமே தோன்றும் இந்த நான் அஹங்காரம். ஸத்யம் அல்லவே. ஸத்யத்தின் பின்னால் மறைந்து கொண்டு உங்களை கஷ்டப்படுத்தி, துன்பப்படுத்தி வருகிறமாயை. ஸத்யத்தில் இந்த அவஸ்தை இல்லையே. அதை எந்த விதியும் பாதிக்காது.
''குடும்பம், தனி நபர் சம்பந்தமான துக்கங்களுக்கும் இந்த ஞானோபதேசத்தால் பலன் உண்டா சுவாமி''
'' அதெல்லாம் ப்ராரப்தத்தால் வருவது என்று கருதி அதை அனுபவிக்கும் ஜீவ அகந்தை இருக்கும் வரை உண்டு. ஆத்ம ஞானம் ஒன்றே தீர்வு. குடும்பம் தனிநபர் என்ற பாகுபாடு, வேறுபாடு எல்லாம் பிரமை. இந்த தேஹம் ப்ராரப்தத்தின் விளையாட்டு பொம்மை. அப்போது சுதந்திரம் எங்கே கிடைக்கும்? தேகமும் அது சம்பந்தப்பட்ட எதுவும் நான் இல்லை என்ற திடமான சித்தம் இருந்தால் சுக துக்கங்கள் நெருங்காது. நான் யார் என்ற விசாரத்தில் துக்கம் கஷ்டம் எல்லாம் அடிபட்டுபோகும். ஆத்ம ஸ்வரூபம் உணர்ந்தவனுக்கு பரிபூர்ண சாந்தி ஒன்றே பலன்.
No comments:
Post a Comment