அதனால் தான் பொம்மைக் கொலு வைக்கும் பழக்கம் வந்தது. அன்னை பராசக்தி திரிமூர்த்திகள் தந்த ஆயுதங்களை பத்துக் கரங்களில் தாங்கி, போர்க் கோலம் பூண்டு சும்ப, நிசும்பர்களையும், அவர்களது படைத்தளபதிகளான மது, கைடபன், ரக்தபீஜனையும் அழித்து தர்மத்தை நிலைநாட்டினாள். ஒன்பது நாள் யுத்தம். அவள் வெற்றி பெற்ற தினமே விஜயதசமி. அம்பாள் யுத்தம் செய்த அந்த ஒன்பது நாட்களை நவராத்திரியாகக் கொண்டாடு கிறோம். அந்நாட்களில் . மாலை நேரம் சூரிய அஸ்தமனம் ஆன பிறகு போர் புரிய மாட்டார்கள். படைகள் தங்கள் கூடாரங்களில் ஓய்வெடுத்துக் கொள்ளும். அப்போது அன்னையின் படைக்கு ஊக்கம் கொடுக்கவும், மறுநாளைய போரில் உற்சாகமாகப் போரிடவும் வேண்டி அன்னையைக் குறித்த ஆடல், பாடல் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். இப்படி ஒன்பது இரவுகள் நடந்தது. அதனாலேயே நாம் நவராத்திரியாகக் கொண்டாடுகிறோம். நவராத்திரியில் அம்பிகையை வெவ்வேறு வடிவங்களில் அலங்கரித்து வழிபடுகிறோம்..
அம்பிகையை.துர்காவாக, முதல் மூன்று நாள், லக்ஷ்மியாக அடுத்த மூன்று நாள், கடைசி மூன்று நாட்கள் ஸரஸ்வதியாகவும், இப்படி முப்பெரும் சக்தியாக வழி படுகிறோம். போன வருஷத்திலிருந்தே நவராத்ரி வந்ததும் தெரியவில்லை ஆயுத பூஜை போனதும் தெரியவில்லை. எல்லாம் கொரோனா சக்தி.
பத்தாம் நாள் அசுரர்களை அழித்து அம்பிகை பெற்ற வெற்றியைக் குறிப்பது தான் விஜயதசமி. அன்று அன்னை வெற்றித் திருமகளாக அலங்கரிக் கப்பட்டு ஆராதிக்கப்படுகிறாள். எடுத்த காரியம் யாவினும் வெற்றி இன்று.
இப்படி அம்பாளை வழிபடுவதால் நவநிதிகளும் பெற்று, நீடுழி வாழ அருள் புரிவாள்.. வருஷத்தில் ரெண்டு முறை நவராத்திரி என தேவி புராணம் சொல்கிறது. சித்திரையில் வரும் நவராத்திரி வசந்த நவராத்திரி. இப்போது புரட்டாசியில் வரும் நவராத்திரி சாரதா நவராத்திரி. இந்த ரெண்டுமே எமனுடைய கோரைப் பற்கள. கோடை, குளிர் என பருவகாலம் மாறும் போது நோய்நொடிகள் பரவும். இந்த ஆபத்திலிருந்து மக்களைக் காக்கும்படி தேவியைப் பூஜிக்க பழைய காலத்தில் இந்த ஏற்பாடு. புரட்டாசி சாரத நவராத்திரி தான் பிரபலம். நவராத்திரி பூஜையை தெய்வங்களும், தேவர்களும்கூட செய்து பலன் பெற்றுள்ளனர். நாரதர் அறிவுரைப்படி ராமர் கடைப்பிடித்து ராவணனை அழித்து சீதையை மீட்டு வந்தார். கண்ணபிரான், சியாமந்தக மணி காரணமாக அடைந்த அபவாதம் இப்பூஜை செய்ததால் நீங்கியது. பஞ்சபாண்டவர்கள் பாரதப் போரில் வென்றதும் இந்த பூஜை செய்ததால்தான். தீய சக்தி மேலோங்கும்போது காத்திட வேண்டினால் அம்பாள் சண்டிகையாக ஒன்பது கோடி வடிவங்கள் எடுத்து தீமையை அழித்து நன்மை செய்வாள் என தேவி மகாத்மியம் கூறுகிறது.
நவராத்திரியில் 9 நாட்களும் பூஜை விரதம் அனுஷ்டிக்க இயலாதவர்கள் அஷ்டமி நாளில் மட்டுமாவது விரதம் இருந்து பூஜை செய்யலாம். விஜயதசமி தினத்தில் அம்பிகை அசுரர்களை அழித்து வெற்றிவாகை சூடினாள். ஆணவம் சக்தியாலும், வறுமை செல்வத்தினாலும், அறியாமை ஞானத்தினாலும் வெற்றி கொள்ளப் பட்ட தினம் என்பதால் வீரம், செல்வம், கல்விக்கு உரிய தேவியரான துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி என முப்பெரும் தேவியர்க்கும் உரியதாக இதை சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். அன்றைய தினம் புதிதாக காரியங்கள் துவங்கி எளிதாக நன்மை பெறுவார்கள். அன்று அபிராமி அந்தாதியினைப் படிப்பது மிகச் சிறந்த பலன் தரும்.
இன்னல்களை நீக்கி, தேவியின் இன்னருளைப் பெற்றுத் தரும் வழிபாட்டு நியதிகளை நவராத்ரி சொல்லித் தருகிறது. இந்த ஒன்போது நாளும், ஒவ்வொரு வடிவில் அம்பாளை தியானித்து, பூஜித்து வழிபட வேண்டும்.
''நவராத்ரி வ்ரதப் பூமௌ குருதேயோ நரோத்தம தஸ்ய புண்ய பலம் வக்தும் ஸக்தா ஸா பரமேஸ்வரீ.'' இந்த ஸ்தோத்ரம் நவராத்ரி விரத பூஜாபலன் பற்றி சொல்கிறது.
மார்க்கண்டேய புராணத்தில் ஒரு ராஜா, சுரதா என்பவன்.தனது குரு சுமதாவிடம் ''குருநாதா, என் எதிரிகளை எப்படி ஜெயிக்கலாம்? என்று ராஜா சுரதா தனது குரு சுமதாவைக் கேட்கிறான் .
''அதோ அங்கே பார், அங்கு தெரியும் பரிசுத்தமான ஆற்று மணலில் ஒரு காளி பொம்மை செய்து பூஜை பண்ணு போ '' என்கிறார் சுமதா.
அதனால் மண் பொம்மைக்கு மவுஸு அதிகம். இப்போதெல்லாம் பேப்பர் மெஷ், பிளாஸ்டிக், பிளாஸ்டர் ஆப் பாரிஸ் என்று என்னென்னவோ வகையில் பொம்மைகள் வந்துவிட்டன. ''மண் பொம்மை யால் என்னைப் பூஜி.உனக்கு சகல சுகங்களையும், சௌபாக்கியங்களையும் அளிக்கிறேன் '' என்கிறாள் அம்பிகை. இதனால் தான் நவராத்திரியில் கொலு வைத்து அம்மனை பூஜிக்கிறோம்.
கொலு என்றால் அழகு என அர்த்தம். அந்த கால ராஜாக்கள் கொலு வீற்றிருந்தார்கள் என்றால் பொம்மை மாதிரி சும்மா உட்கார்ந்து இருப்பது என்று கூட சிலர் அர்த்தம் எடுத்துக் கொள்ளலாம். மழை பெய்கிறதா என்று கூட மந்திரி தான் மேலே பார்த்துவிட்டு சொல்வான். .
கொலு வைப்பதற்கு முன்பு வீட்டை சுத்தம் செய்து, ஐந்து அல்லது ஏழு அல்லது ஒன்பது படிகளுடன் கொலு வைக்கப்படும். கடவுள் பொம்மைகள் ஜாஸ்தி.
புரட்டாசி வருவதற்கு முன்பே வீட்டில் கொலு பத்தி பேச்சு அடிபடும். அப்பா பரண் மேல் ஏறி பெட்டிகளை இறங்குவார். எல்லாம் பழங்கால பொம்மைகள். வர்ணம் போனவை . அதெல்லாம் எடுத்து துடைத்து வைக்க வேண்டிய வேலை. ட்ரங்க் பேட்டிகள், மர பெஞ்ச், மேஜை, ஜன்னல் மேடை, ஸ்டூல், இரவல் வாங்கிய செங்கல்கள், பலகைகள், அரிசி ட்ரம். இதெல்லாம் ஒன்று சேர்ந்து கொலுப்படி தயாராகும். அப்பாவின் அத்தனை வேஷ்டிகளும் அதன் மேல் போர்த்தி அங்கங்கே பின் குத்தி ஒட்டு மொத்தமாக உறை போட்டிருக்கும். 5. 7, 9, என்று ஒற்றைப்படை படிகள். எங்கள் வீட்டில் எப்போதும் 9. கொலுப்படி கட்டும் திறமை அப்போது எல்லா அப்பாக்களுக்கும் இருந்தது.
கொலு வைக்க அதிக சிரத்தை ,பக்தி இருந்தது. மிக்சி, கிரைண்டர் இல்லாத காலத்தில் தினமும் வீட்டில் வித வித பக்ஷணங்கள் தயாராகும். அண்டை அசல் வீடுகள், உறவினர்கள் கட்டாயம் வருவார்கள். சுண்டல் பரிமாற்றம் ஜரூராக நடக்கும். பெரிய மாமிகள், பாட்டிகள் கூடி நிறைய பேசி, தினமும் மஞ்சள் குங்குமம் கொடுப்பதும் பெறுகின்றதும் வழக்கம். சுண்டல்களை சிறுவர்கள் நாங்கள் கவனித்துக் கொள்வோம். யார் வீட்டில் என்ன பக்ஷணம் என்று செய்தி கிடைத்துவிடும். சுற்றிக்கொண்டே இருப்போம்.
முதல் படியில் கலசம் பின் ஆண்,பெண் மரப்பாச்சிக்களுடன் ஆரம்பித்து மனித குல வளர்ச்சியோடு படிகள் மேலே மேலே சென்று உச்சிப்படியில் தெய்வங்கள் முக்கியமாக முத்தேவிகள், ப்ரம்மா விஷ்ணு மஹேஸ்வரன் பொம்மைகள் வைப்பது சம்ப்ரதாயம். .
சில வீடுகளில் இருப்பதை எல்லாம் அடுக்கி வைத்தனர். வண்ணான் இடுப்பில் வேஷ்டி, முதுகில் மூட்டை, தலைப்பாகையோடு, அருகே வண்ணாத்தி இடுப்பில் குழந்தையோடு, ஒரு கையில் கஞ்சி கலயம்.
செட்டியார் செட்டியாரம்மா எதிரே பாத்திரங்களில் அரிசி பருப்பு வகைகள். போஸ்ட் பாக்ஸ். கையில் ஒரு கஞ்சிரா மாதிரி ஒரு வாத்யத்தோடு டான்ஸ் பண்ணும் வெள்ளைக்கார வடக்கத்தி கிராப் தலை பெண்கள். நாய் குட்டி பக்கத்தில் நாரதர். சல்யூட் அடிக்கும் நேதாஜி. அவர் பக்கத்தில் அனந்த சயனர் ஆதிசேஷனோடு. யானை பொம்மைகள்! சில பொம்மைகள் ஜோடியாக அந்த பக்கம் ஒன்று இந்தப்பக்கம் ஒன்று என்று வைத்திருப்போம். பார்ஸிக்காரி, மான், தொப்பி போட்ட பையன், கருப்பு வெளுப்புநாய்கள் இதுபோல் பல ஜோடி இருந்தது. காந்திஜி, நேருஜி பொம்மை நிறைய வீட்டில் இருந்தது
தசாவதாரம் செட். எம தர்மன் தர்பார், சிவபெருமான் கைலாச மலை பூத கணங்கள் செட். கல்யாண ஜான் வாஸா ஊர்வலம் செட் பொம்மைகள் ரொம்ப பிரபலம். எங்கே அதெல்லாம் இப்போது ?
பார்க் என்று தரையில் கொசகொச வென்று நிறைய மண் கொட்டி பாத்தி கட்டி. திட்டு திட்டாக செடிகள் புல் நட்டு நடுநடுவே சின்ன சின்ன பிளாஸ்டிக் மண் பொம்மைகளை நிரப்பினர். இதில் குழந்தைகள் பங்கு ரொம்பவே அதிகம். ரெண்டு பக்கமும் குத்து விளக்கேற்றி கோலங்கள் போட்டு தட்டில் வெற்றிலை பாக்கு பழங்கள். நிறைய பேர் வீட்டில் தினமும் தேவி பாகவதம் படிப்பார்கள். அபிராமி அந்தாதி ஒப்பிப்பார்கள். நிறைய கேட்டிருக்கிறேன். காது ரொம்பி இருக்கிறது.
எங்கள் வீட்டுக்கு எதிர் வீடு பெரியது. வாசலில் பூவரச மரம் வீட்டின் மேல் சாய்ந்து கொண்டு நிற்கும். திண்ணை ரேழி தாண்டி போனால் மித்தம். அதற்கு வலது பக்கம் பெரிய ஹால் மாதிரி ஓபனாக இருக்கும். சூரிய வெளிச்சம் உண்டு. எதிரும் புதிரும் ரெண்டு இருட்டு அறைகள். கதவு நாதாங்கியிலிருந்து சங்கிலி கதவு மேல் வாசல்கால் நிலையில் ஹூக் ஒன்றில் மாட்டியிருக்கும். வீட்டுக்காரர் குப்பு மாமா போஸ்ட் மாஸ்டர். நிறைய சின்ன பல்புகள் மேல் கலர் காகிதம் சுற்றி பளிச் பளிச் என்று ஒளி விட செய்வார். எலக்ட்ரிக் விஷயங்கள் கொஞ்சம் அத்துபடி போஸ்மாஸ்டருக்கு. இன்னும் எத்தனை கலைந்த கரைந்த கொலு ஞாபகங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வருகிறது.
No comments:
Post a Comment