Sunday, October 3, 2021

 

சிந்து கவி பாடுவோம்:   S   நங்கநல்லூர்  J  K  SIVAN --


நமது  ஹிந்து  தெய்வங்களை நினைத்தாலே மனம் இனிக்கிறது. எவ்வளவு நேர்த்தியாக  பக்தர்கள்  ராஜாக்களானாலும்   சிற்பி, ஸ்தபதிகளானாலும், பிரபுக்களானாலும் பொது ஜனங்களாலானலும், கவிஞர்களானாலும்,புலவர்களானாலும் ஆஹா,  அவர்களது உருவங்களை, புராணங்களை, சரித்திரங்களை, க்ஷேத்ரங்களை, உருவாக்கி  ஞானப்பழத்தை பிழிந்து ரசம் அன்பினோடு கலந்து கொடுத்திருக்கிறார்கள்.
அப்படி ஒரு ராஜா  அண்ணாமலை ரெட்டியார்.  அண்ணாமலை செட்டியார் என்று படித்தால் அதுவும் சரியே.  ரெண்டு ராஜாக்களும் தர்மிஷ்டர்கள்.   கவி ராஜா  அண்ணாமலை ரெட்டியார் பழைய நூற்றாண்டை சேர்ந்தவர்  (1865 - 1891. அப்பா  சென்னம ரெட்டியார். அம்மா  ஓவு  அம்மாள்.  பேர் எல்லாம் அப்படித்தான் இருக்கும்.   சின்ன  வயதில்  26 வயதிலேயே  காலமானாலும்  அமரராக என்றும் காவடிச்சிந்தின்  ஜீவனாக இருக்கிறார்.  ரெட்டியார் போட்டோ கிடைக்கவில்லை.  படம் போட்டிருக்கிறார்கள்.  அந்தக்  காலத்து  தமிழ் சினிமா  ஹீரோக்கள்  M K  ராதா,  KR  ராமசாமி போன்றவர்கள்  தலைப்பாகை வைத்து   நறுக்கு மீசையோடு  இளிப்பார்களே அப்படி   போட்டிருக்கிறார்கள்.  கழுத்திலே ஸ்டைலாக ஒரு துண்டு. நெற்றியில்  பொட்டு . கொஞ்சம்   பாரதியார் மாதிரி யாருடைய கற்பனையோ, அல்லது இப்படி தான்  ரெட்டியார் இருந்தாரோ? 

ரெட்டியார்  காவடிச் சிந்தின் தந்தை என அழைக்கப்படுபவர். நினைத்த மாத்திரத்தில்   எதைப் பற்றி பாடச்சொன்னாலும் பாடுபவர்.  தமிழில் மிகச் சிக்கலான பாடல்களைக் கூட எளிதாக  நாம் தையா தக்கா என்று கால்  கை  தூக்கி ஆட்டிக்கொண்டே கேட்க வைத்தவர். 

 முருகன் மலை  மேல் வாசம் செய்பவன்.  மலையேறுவது கஷ்டம். களைப்பு தரும். அதுவும்  முருகனுக்காக உபவாசம் இருந்து, பால், புஷ்பம், தேன், தயிர், பன்னீர்  என்று பல பொருள்களை நிரப்பிய குடங்களை மூங்கில் கம்பின் ரெண்டு முனைகளிலும் கட்டி  காவடியாக தோளில்  சுமந்து போவது சிரமம்.  அலுப்பு களைப்பு  தெரியாமல் இருக்க  உற்சாகமாக காவடி எடுப்பவர்கள் பாடும்  பாடல்களைத்  தந்தவர்  அண்ணாமலை ரெட்டியார்.  பெங்களூர்  ரமணி அம்மாள் சப்பணம்  கட்டிக் கொண்டு அமர்ந்து ரெண்டு கைகளிலும் சிப்ளாவோடு  கணீர் குரலில்  ஜங் ஜங் என்று நாம் ஆடையும்படியாக  ''பால் காவடி, பன்னீர்க் காவடி, புஷ்பக் காவடியாம், சந்தனக் காவடி, சக்கரக் காவடி,சேவல் காவடியாம்''  என்று பாடுவாரே  கேட்டிருக்கிறீர்களா. இல்லையென்றால் உடனே  யூட்யூபில் போய் கேளுங்கள். எல்லா வசதியும் இருக்கிறது இப்போது.  இந்த ராகத்தை  காவடிச் சிந்து என்று சொல்வார்கள்.  

 சிந்து எனும்  டைப் பாடல்கள்   ஐந்து  யாப்பு  விஷயங்கள் கொண்டவை.  அவை பல்லவி, அநுபல்லவி, மூன்று கண்ணிகள் அடங்கிய சரணம் ஆகும். காவடிச் சிந்து பல்லவியும் அநுபல்லவியும் இன்றிச் சரணங்களுக்குரிய கண்ணிகளை மாத்திரம்  கொண்டது.பாடுவதற்கு எளிதான மெட்டு. 

இதை நமக்கு கண்டுபிடித்து கொடுத்த ரெட்டியார்  கழுகுமலைக்கருகில் உள்ள சென்னிகுளம் எனும்  ஊர்க்காரர்.  திருநெல்வேலி சென்றிருந்தபோது சங்கரநயினார் கோவில் ஊர் சென்றபோது சென்னிகுளம் அருகில் இருப்பது தெரியவில்லை.  மிஸ் பண்ணிவிட்டேன்.  ரெட்டியார் கழுகு
மலை கந்தன் பக்தர்.   அவரது காவடிச் சிந்துகளில் கழுகு மலையின் இயற்கை வளத்தை,  கந்தனின் அழகை  அற்புதமாக காணலாம், நுகரலாம் முகரலாம்.

நான் என் சின்ன வயதில்  முதலில் கேட்டு ரசித்த ரெட்டியாரின் காவடி சிந்து இன்னும் காதில் ஒலிக்கிறது. என் தந்தையார்  ஜே.கே. ஐயர் சந்தோஷமான நேரங்களில் ஜம்மென்று உரக்க பாடும் பாடல் இது:

புள்ளிக் கலாபமயில் பாகன்; - சத்தி
          புதல்வ னானகன யோகன்; - மலை
     போலத் தான்திரண்ட கோலப் பன்னிரண்டு
          வாகன்; நல்வி வேகன்.
வள்ளிக் கிசைந்தமுரு கேசன்; - அண்ணா-
          மலைக்கவி ராசன் மகிழ் நேசன்-என்றும்
     வாழுங் கழுகுமலை வாவிவளம் சொல்வேன்
          மாதே! கேள் இப் போதே.

தெள்ளுதமி ழுக்குதவு சீலன், - துதி
செப்பணாம லைக்கும் அனு கூலன் - வளர்
செழிய புகழ்விளைத்த கழுகு மலைவளத்தை
தேனே! சொல்லு வேனே.

வெள்ளிமலை யொத்தபல மேடை, - முடி
மீதினிலே கட்டுகொடி யாடை, - அந்த
வெய்யவன் நடத்திவரு துய்யஇர தப்பரியும்
விலகும் படி இலகும்.

அந்த காலத்தில் கவிஞர்களை, புலவர்களை ராஜாக்கள், சிற்றரசர்கள், பிரபுக்கள் ஆதரித்தனர். ரெட்டியாரை ஆதரித்தவர்   ஊற்றுமலை ஜமீன்தார் இருதயாலய மருதப்ப தேவர். 

ரெட்டியாரை மாதிரியே  ஊத்துக்காடு வேங்கட சுப்பையர் கிருஷ்ணன் மேல்  காவடி சிந்தை  பாடி இருக்கிறார். ஒரு SAMPLE  சாம்பிள் தருகிறேன்: 
 
''கண்ணன் வருகின்ற நேரம் - கரையோரம்
ன்றல் கண்டுகொழித்தது பாரும் - அந்தக்
கானத்திடை மோனக்குயில் ஓசைக்கு இணையாதென
தரமான குழலிசை கேளும் - போன
ஆவி எல்லாம் கூட மீளும்!
(கண்ணன்)
சல்ல சலனமிட்டு ஓடும், நதி பாடும் - தென்றல்
தங்கித் தங்கிச் சுழன்று ஆடும் - நல்ல
துதிபாடிடும் அடியாரவர் மனமானது இதுபோலென
துள்ளித் துள்ளிக் குதித்தாடும் - புகழ்
சொல்லிச் சொல்லி இசைபாடும்!
(கண்ணன்)
கண்ணன் நகைபோலே முல்லை, இல்லையில்லை - என்று
கண்டதும் வண்டொன்றும் வர்லை
இது கனவோ அல்ல நனவோ எனக் கருதாதிரு மனமே - ஒரு
காலமும் பொய் ஒன்றும் சொல்லேன் - எங்கள்
கண்ணன் அன்றி வேறு இல்லேன்!
(கண்ணன்)
தாழைமடல் நீர்த்து நோக்கும், முல்லை பார்க்கும் - என்ன
செளக்கியமோ என்று கேட்கும் - அட
மொழி பேசிட இதுவோ பொழுதெனவோ - மாதவனின்
முத்து முடி தனில் சேர்வோம் - அங்கே
மெத்த மெத்தப் பேசி நேர்வோம்!

டைம் கிடைக்கும்போது சில  ரெட்டியாரின்  காவடி சிந்து பாடல்களை படிப்போம். 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...