Saturday, October 2, 2021

PESUM DEIVAM

 பேசும் தெய்வம்-  நங்கநல்லூர்  J K  SIVAN 


சிற்பியும் துறவியும் 

கையில் உளி எடுத்தவர்கள் எல்லாம் ஸ்தபதிகள் என்று சொல்வது பூணல் போட்டவர்கள் எல்லாம் பிராமணர்கள் என்று சொல்வது போல.  அற்புதமான ஸ்தபதிகள் அன்றைய  ராஜாக்களால் கண்ணின் மணி போல் பாதுகாக்கப்பட்டார்கள்.

 நான் சிறுவயதில்  ராஜராஜ சோழன் பற்றி ஒரு விஷயம் படித்தது இன்னும் நினைவில் இருக்கிறது.  ஒரு ஸ்தபதி  பெரிய கோவிலில் சிற்பவேலை செய்து கொண்டிருக்கும்போது அவனுக்கு அருகிலே இருந்து அவ்வப்போது வெற்றிலை பாக்கு புகையிலை மடித்துக் கொடுக்கும் அடைப்பக்கார பையன் எங்கோ  வேலையாக சென்றுவிட்டான். வழக்கம் போல  சிற்பி  இடது கையை நீட்டினான்.  அப்படி நீட்டும்போதெல்லாம் தயாராக  வெற்றிலை மடித்துவைத்துக்கொண்டிருக்கும் பையன் கையில் வைப்பான். சிற்பி அதை  வாயில் அடக்கி மென்றுகொண்டே வேலை செய்வான். அற்புத சிலைகள் சிற்பங்கள் உருவாகும்.  ராஜ ராஜன்  மேற்பார்வை  இடவந்தவன் இதை கவனித்து ஓடிச்சென்று வெற்றிலை மடித்து சிற்பியின் கையில் வைத்தான்.  வெற்றிலை வழக்கம் போல் இல்லையே என்று கோபத்தில் கையில்  இருந்த உளியால் நாக் ணக்   என்று ஒரு அடி  வைத்த சிற்பி  அது டங் என்று ராஜாவின் கிரீதத்தில் பட்டு ஒலி எழுப்ப திரும்பி பார்த்த  சிற்பி திடுக்கிட்டான்.  மஹாராஜா அல்லவோ வெற்றிலை மடித்துக் கொடுத்திருக்கிறார்.  மன்னிப்பு கேட்டான்.  ராஜாவோ கோபிக்கவே இல்லை.    இது ராஜாவின் மதிப்பை, நல்ல குணத்தை காட்ட சொல்லவில்லை.  கை தேர்ந்த சிற்பியின்திறமை மதிக்கப்பட்டது. அவனுக்கு சகல வசதிகளும் செய்து தரப்பட்டது.  

நரசிம்ம பல்லவன், மஹேந்திர பல்லவன் குடும்பம் எப்படி ஆயன சிற்பிக்கு உயர்ந்த பீடம் அளித்து போற்றி பாதுகாத்தார்கள், மகேந்திர பல்லவனே  ஒரு சிறந்த சிற்பி என்று நிறைய படித்திருக்கிறோம். கல்கி  பார்த்திபன் கனவு, சிவகாமியின் செல்வன் கதைகளில் எழுதி இருக்கிறார்.

மஹா பெரியவாளுக்கு அப்படி சிற்பி ஸ்தபதி நன்றாக  தெரியும்.  கணபதி ஸ்தபதி 1927ல் பிள்ளையார் பட்டியில் பிறந்தவர். சிற்பி குடும்பம். அப்பா வைத்யநாத ஸ்தபதி பிரபலமானவர். காரைக்குடி  அழகப்ப செட்டியார் கல்லூரியில் படித்த கணித இயலில் பட்டம்  பெற்றவர். பழனி முருகன் கோவில் ஸ்தபதி.  தந்தை மறைவுக்குபிறகு  மாமல்லபுரத்தில் தமிழக அரசாங்க சிற்ப கல்லூரியில்  முதல்வரானவர். சென்னை சர்வகலாசாலையில்  சிற்பக்கலை நுணுக்கங்களை போதித்தவர், வாஸ்து வேத டிரஸ்ட் ஒன்றை நிறுவி ஆராய்ச்சிகள் நடத்தியவர்.  சென்னையில் வள்ளுவர் கோட்டம்,  கண்ணகி சிலை,   குமரிமுனையில்  133 அடி  உயர  உலகிலேயே பெரிய திருவள்ளுவர்,  விவேகானந்தா நினைவுச்சின்னம் எல்லாம் உருவாக்கியவர். டில்லியில்  மலை மந்திர் முருகன் ஆலயம்.  அமெரிக்காவில் சிகாகோவில்  ராமர், துர்க்கா கோவில்கள் காட்டியவர்.  ஹவாய் தீவுகளில் சன்மார்க்க இறைவன் கோவில் உருவாக்கி யவர். இன்னும் எத்தனையோ கோவில்கள்.   லிஸ்ட் ரொம்ப பெரிசு. பாரத அரசு கௌரவித்த பத்ம பூஷண்.  ஹாலந்து நாட்டு மகரிஷி மஹேஷ் யோகி கலாசாலையில்  டாக்டர் பட்டம் பெற்றவர்.


கணபதி ஸ்தபதி கைவண்ணத்தை  மற்றும்  உலகில் லண்டன்,  அமெரிக்கா, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா, ஃபிஜி, ஸ்ரீலங்கா என்று எங்கெல்லாம் உலகில் இந்துக்கள் இருக்கிறார்களோ  ஆலயங்களாக பார்க்க முடிகிறது.  அமெரிக்காவில் வாஷிங்டனில் சிவ-விஷ்ணு, ஐயப்பன், வெங்கடேஸ்வரா ஆலயங்கள், இல்லினாய்ஸ் ஸ்ரீ ராமர் கோவில், சிகாகோ கணேச சிவ துர்கை ஆலயம் என்று இவர் நிர்மாணித்த கோவில்களில்  வணங்கும் ஹிந்துக்கள்  அவருக்கு நன்றி செலுத்த கடமைப்பட்டவர்கள்.  நமக்கும் பெருமை.

கணபதி ஸ்தபதி  40  புத்தகங்களுக்கு மேல்  எழுதி இருக்கிறார். ‘Building Architecture of Sthapatya Veda‘, ‘Quintessence Of Sthapatya Veda‘, ‘Who Created God‘ போன்றவை சில.  பெறாத விருதே இல்லை.

மஹா பெரியவா பக்தர்  இந்த கணபதி ஸ்தபதி. அவர் சொல்வதை கேட்போம்:

''பல ஆண்டுகளுக்கு முன்னரே வேத, ஆகம, வாஸ்து, வித்வ சதஸ்ஸை அவர் காஞ்சிபுரத்தில் நடத்தியிருக்கிறார். நான் சிற்பக் கலைக் கல்லூரி முதல்வராக இருந்த போது அதில் கலந்து கொண்டிருக்கிறேன். அவர் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் தயங்காமல் விளக்கமான பதில் சொன்னதால் என்மீது மிகுந்த மதிப்பு வைத்திருந்தார். கிட்டத்தட்ட 20 ஆண்டுக்கும் மேல் அவருடன் தொடர்பு இருந்தது. காஞ்சிப் பெரியவர் வெறும் சன்யாசி மட்டுமல்ல. அவர் திரிகால ஞானி. பல்வேறு சாஸ்திரங்கள் தெரிந்தவர். மிகப் பெரிய ஆத்ம ஞானி. அவர் ஒரு மகா வித்வான். ஆர்க்கியாலஜிஸ்ட். அவரைப் போன்றவர்களின் அருளாசி கிடைத்தது எனது பாக்யம்தான். சுவாமிகளின் அருளாசியோடு அமைக்கப்பட்டது புதுதில்லியில் உள்ள சுவாமிநாத சுவாமி ஆலயம்.
“அமோகமாக இருப்பாய்” என்று ஆசிர்வதித்தார் காஞ்சி மகாபெரியவர்.

சிறு வயதில் காஞ்சிப் பெரியவரை நான் சந்தித்தது மறக்க முடியாத அனுபவம்.
1957ல் எனது தந்தையார் சிற்பக் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றி வந்தார். அப்போது திடீரென்று வாத நோய் அவருக்கு ஏற்பட்டது. இதை நான் எனது வளர்ப்புத் தந்தை கம்பனடிப்பொடி சா. கணேசன் அவர்களிடம் கூறியபோது அவர் காஞ்சி மகா பெரியவரைப் போய்ப் பார்க்கச் சொன்னார்.
அப்போது சுவாமிகள் இளையாற்றங்குடியில் தங்கியிருந்தார். அது ஒரு குக்கிராமம். நான் போகும்போதே மணி இரவு ஒன்பதாகி இருந்தது. சுவாமிகள் தங்கியிருக்கும் இடத்திற்குச் சென்று, மேனேஜர் மூலம் தகவல் தெரிவித்தேன். உடனடியாக என்னை அழைத்து வரச் சொன்னார்கள். சுவாமிகளைச் சுற்றி நிறைய பக்தர்கள் கூட்டம் இருந்தது. அனைவரையும் விலக்கி என்னை அழைத்தார்கள். சுவாமிகளிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, என் தந்தையின் நிலையைப் பற்றிச் சொன்னேன். அவருக்கு குணமாகுமா, ஆகாதா, பலப்பல கோயில்களைக் கட்டிய இவருக்கு ஏன் இந்த நிலை ஏற்பட்டது என்றெல்லாம் சுவாமிகளிடம் கேட்டேன்.
சுவாமிகளோ அதற்கு பதில் ஏதும் கூறாமல், என்னைப் பற்றி, என் கல்வி பற்றி, நான் பார்க்கும் வேலை பற்றியே விசாரித்துக் கொண்டிருந்தார். எனக்கு மிகவும் கவலையாகி விட்டது. தந்தையைப் பற்றி இவர் எதுவுமே கூறவில்லையே அவருக்கு ஏதேனும் ஆகிவிடுமோ, உயிர் பிழைக்க மாட்டாரோ என்றெல்லாம் கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன். ஆனால் சுவாமிகளோ திடீரென்று ‘வா என்னுடன்’ என்று கூறி விட்டு நடக்கத் தொடங்கினார்.
வெகு தூரம் நடந்து மூத்த சுவாமிகளின் அதிஷ்டானம் அருகே சென்றவர், ‘இங்கேயே இரு’ என்று கூறிவிட்டு உள்ளே சென்று விட்டார். நான் வெகு நேரம் காத்துக் கொண்டிருந்தேன். மணி 12ஐக் கடந்து விட்டது. கூட்டம் கலைந்து சென்று விட்டது. நான் மட்டும் தனியே, வெளியில் காத்துக் கொண்டிருந்தேன். வெகு நேரம் சென்றிருக்கும், ‘எங்கே அந்தப் பையன்?’ என்று கேட்டுக் கொண்டே அதிஷ்டானத்தில் இருந்து வெளியில் வந்தார் சுவாமிகள். ‘இங்கே இருக்கிறேன் சுவாமி’ என்றேன் நான். சுவாமிகள் உள்ளே செல்லும் போது பாரம்பரிய தண்டத்தோடு மட்டுமே சென்றார். வரும்போது அவர் கையில் இரண்டு தேங்காய் மூடிகள் இருந்தன. வியப்புடன் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். பிரகாரத்தின் ஒரு மூலையில் நின்று, தண்டத்தைப் பிடித்துக் கொண்ட சுவாமிகள், என் தந்தையின் நிலையைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தார்.
நான் சொல்லச் சொல்லக் கேட்டுக் கொண்டவர், ‘உன் அப்பாவுக்கு வந்திருப்பது பிராரப்த கர்மாவால். நீ மிகவும் அமோகமாக இருப்பாய்’ என்று சொல்லி ஆசிர்வதித்தார். இரு தேங்காய் மூடிகளையும் என்னிடம் கொடுத்து, ‘இந்த வழியாகப் போ. போகும் போது ஆஃபிஸில் போய் மேனேஜரைப் பார்த்து விட்டுப் போ’ என்றார்.

அதுவோ பயங்கரமான இருள் பிரதேசம். சுவாமிகள் சொன்ன வழியில் எப்படிச் செல்வது என்று புரியாமல் திகைத்துப்போய் நின்று கொண்டிருந்த போது, ஒரு சிறுவன், சுமார் எட்டு வயதிருக்கும். குடுமி வைத்துக் கொண்டு முன்னால் வந்தான். முகத்தில் தெய்வீகக் களை. ‘ஸ்தபதி, இந்த வழியாக என் பின்னாலேயே வாருங்கள்!’ என்று சொல்லி நடக்கத் தொடங்கினான். எனக்கு மிகவும் ஆச்சரியம். யார் இவன், எங்கிருந்து வந்தான் என்று. ஏதாவது பேய், பிசாசாக இருக்குமோ என்று சற்று பயமாகக் கூட இருந்தது. மயானக் கரை வேறு அருகில் இருந்தது. ஆனாலும் அவன் பின்னாலேயே நடக்கத் தொடங்கினேன். அவன் உருவத்தைப் பார்க்கும்போது கோபுலு வரைந்த ஆதி சங்கரர் ஓவியம் நினைவுக்கு வந்தது. அந்த உருவமே நேரில் வந்திருப்பது போலத் தோன்றியது. சில நிமிடங்களில் மேனேஜர் இருப்பிடத்தை அடைந்ததும், அவரிடம் அந்தச் சிறுவன் ஏதோ கூறிவிட்டு இருட்டில் சென்று மறைந்து விட்டான்.

பின்னர் மேனேஜர் என்னிடம் ஒரு ரசீதில் கையொப்பமிட்டு ஐம்பது ரூபாயைப்பெற்றுக் கொள்ளும்படிச் சொன்னார். நான் மறுத்தேன். ‘இது சுவாமிகளின் உத்தரவு. அவசியம் வாங்கிக் கொள்ள வேண்டும்’ என்றார். நானும் மறுக்க மனமின்றி அதை வாங்கிக் கொண்டேன். அதன்பின் என்னை உள்ளே சென்று உணவருந்திவிட்டுச் செல்லுமாறு கூறினார். அப்போதோ நேரம் இரவு 1 மணிக்கு மேல் இருக்கும். நானும் நல்ல பசியில் இருந்தேன். உள்ளே சென்றால் சாதம், சாம்பார், ரசம் என எல்லாம் சுடச்சுட இருந்தது. சாப்பிட்டுவிட்டு, அகால வேளை என்பதால் அங்கேயே இரவு தங்கி விட்டுப் புறப்பட்டேன்.

என்னை அறிந்தவர்கள், தெரிந்தவர்கள் அனைவருமே  ‘எங்களுக்கெல்லாம் கிடைக்காத பாக்கியம் உனக்குக் கிடைத்திருக்கிறது. நாங்கள் எல்லாம் சங்கரரைப் பற்றிப் படித்துத் தான் இருக்கிறோம். ஆனால் உனக்கு அவரைப் பார்க்கும் பாக்யமே கிடைத்திருக்கிறது’ என்று கூறி சிலாகித்தார்கள் .

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...