உள்ளது நாற்பது - நங்கநல்லூர் J K SIVAN
பகவான் ரமண மஹரிஷி
25. மாப்பிள்ளை தோழன் கதை.
உருப்பற்றி யுண்டா முருப்பற்றி நிற்கு
முருப்பற்றி யுண்டுமிக முருவிட்
டுருப்பற்றுந் தேடினா லோட்டம் பிடிக்கு
முருவற்ற பேயக்ந்தை யோர்கருவாம் 25
முனியம்மாவுக்கு பேய் பிடித்து விட்டது. பிசாசு பிடித்துக் கொண்டது, முனீஸ்வரன் பிடித்துக் கொண்டான் என்று சொல்கிறோம். பேய் பிசாசுக்கு உருவம் கிடையாது. மற்ற ஒரு உருவத்தை ஆக்ர
மித்து அதைத் ''தானாக'' காட்டும். அது போல் தான் அகம்பாவம் எனும் ஆணவம், அது உடலையும் மனதையும் ஒன்று சேர பிடித்துக் கொள்கிறது. தேஹத்தை ''நான்'' என்று சொல்ல வைக்கிறது. புலன் அனுபவங்களை ருசித்து வலு பெறுகிறது. ஒரு தேஹத்திலிருந்து இன்னொரு தேஹத்திற்
கும் மாறுகிறது. அதை ஆராய்ந்து கவனித்தால் ஓடிவிடும். காணாமல் போகும். அதற்கு சுகமோ துக்கமோ இல்லாமல் இருக்க முடியாது. தேஹத்தையும் மனதையும் நன்றாக இணைத்து செயல்படுகிறது அஹம்பாவம் .
இந்த அகம்பாவம் தான் ஒருவனை நான் அப்பா, தாத்தா, அத்தை, குழந்தை, மாடு , வீடு கார், பணக்கார, ஏழை என்று எல்லாம் பாவனை செய்து கொண்டு நம்பவைக்கும் சிறந்த நடிகன். இன்ப துன்பங்களை எல்லாம் வரவழைத்துக் கொள்வது. நாடகம் இல்லாமல் இந்த அஹம்பாவ நடிகனால் வாழமுடியாது.
''டேய், நீ உண்மையில் யார் என்று அவனை விடாமல் கேள்விகளால் துளைத்துக் கொண்டே இருந்தால் தப்பி ஓடிவிடுவான். '
'நான்'' யார்என்ற கேள்வி தான் அவனுக்கு பிரம்மாஸ்திரம். உருவமே இல்லாத இவன், நொடிக்கொரு உருவம் மாற்றிக்கொள்பவன்.
ஒரு துஷ்டன், ஏமாற்று பேர்வழி, ஒரு கல்யாண வீட்டில் நுழைந்து தன்னை மாப்பிள்ளை தோழன் என்று சொல்லி நடித்தான். பெண் வீட்டாருக்கு அவன் தோரணையில் மரியாதை, பயம், அவன் கேட்பதையெல்லாம் அளித்தார்கள். ராஜோபசாரம், கௌரவித்தார்கள். பிள்ளை வீட்டுக்காரர்கள் இவன் பெண் வீட்டில் ஒரு முக்கியமான மனிதன் என்பதால் உபசரிக்கிறார்கள் என்று தாங்களும் அவனை தாங்கு தாங்கு என்று கௌரவித்தார்கள் . ரொம்ப அளவுக்கு மீறி இவன் அதிகாரம் சென்றதால் இரு பக்கத்தார்களும் அவன் யார் என்று விசாரித் தார்கள். இந்த விசாரம் துவங்கியதும் அவனுக்கு அது தெரிந்து போய் விட்டது. அடுத்த கணமே அந்த இடத்தை விட்டே ஒரே ஓட்டமாக தாவி ஓடி மறைந்து போனான். இது தான் அகம்பாவம் கதை.
கூட்டமாக கரு மேகங்கள் கூடி சூரியனை மறைப்பது போல் இந்த அகம்பாவம், மனதோடும், தேகத்தோடும் பலம் சேர்த்துக்கொண்டு ஆத்மாவுக்கு திரை போடும். ஆனால் விரிவால் மேகம் களைந்து நகர்ந்து மறைந்து விடுகிறது போல் அஹம்பாவம் நிலையற்றது.
No comments:
Post a Comment