Sunday, October 3, 2021

ULLADHU NARPADHU


 உள்ளது நாற்பது -  நங்கநல்லூர்  J K  SIVAN -                                                 பகவான் ஸ்ரீ ரமண மஹரிஷி


18.  ஸர்வம்  ப்ரம்ம மயம் ஜகத் .

 ''உலகுண்மை யாகு முணர்வில்லார்க் குள்ளார்க்
குலகளவா முண்மை யுணரார்க் – குலகினுக்
காதார மாயுருவற் றாருமுணர்ந் தாருண்மை
யீதாகும் பேதமிவர்க் கெண்ணுக – பேத'' 18

ஒரு விஷயம்  நன்றாக புரிகிறது.  ஆத்ம  ஞானம் இல்லாத  அஞ்ஞானிக்கும்  உலகம், தேகம் மனம் எல்லாமே மாயை என்று அறிந்த  ஞானிக்கும் இந்த உலகம் இருப்பது தெரிகிறது. 
ஒருவன் உலகம் மட்டுமே  உண்மை,  சாஸ்வதம் என்று  நம்புகிறான். மற்றவன் இது நிழல், நிஜமல்ல என்றும்  அழியாதது  ஸத்யம் , ஆத்மா தான்  என்று அறிந்தவன். அது தான் ரெண்டு பேருக்கும் உள்ள வித்யாசம்.   திருமூலர்  ஒரு  மந்திரத்தில் எவ்வளவு அழகாக இதை குறிப்பிடுகிறார் பாருங்கள்.

''தானே திசையொடு தேவருமாய் நிற்கும்
தானே உடல் உயிர் தத்துவமாய் நிற்கும்
தானே கடல் மலை ஆதியுமாய் நிற்கும்
தானே உலகில் தலைவனும் ஆமே.''

ஆஹா,   இந்த  பகவான் இருக்கிறானே அவன் தான்  எல்லா பக்கத்திலும்  திசையாக தெரிகிறான். அவனே வானில்,  விண்ணில் உள்ள தேவர்களாக நடமாடுகிறான். அவனே  இந்த உடம்பு, அவனே அதன் உள்ளே  காரணமாக ஜொலிக்கும்  ஆத்ம தத்துவமாக காண்கிறான்.  இது உள்ளே  நடப்பது. வெளியே எங்கும் காணும் ஐம்பூதங்கள் வடிவில் மலைகள், கடல், தாவர,  ஜங்கம  வஸ்துக்களாகவும் தெரிகிறான்.  உள்ளே பிரகாசிக்கும் அந்த ஆத்மா உலகுக்கும் நாயகனாக, தலைவனாகவும்
மிளிர்கிறான்.

உலகில் உள்ள  ஜீவன்கள் அனைத்தும்  அதது செய்யும் கர்மாக்களை ஒட்டி பிறவி எடுக்கிறது. துன்பத்துக்கும் இன்பத்துக்கும்  அதுவே காரணமாகிறது.  ஆகவே  வெளி விஷயங்களில் மனம் செல்லாமல் உள்  நோக்கி  பிரயா ணம்செயது நற்கதியை அடைய வழி இருக்கிறது.  ஆத்ம தியானம் அதற்காகத்தான் அவசியம். 

உலகத்தை  மட்டுமே  காண்கிறவனுக்கு ஆத்மா கண்ணில் படாது. ஆத்மாவை அறிந்தவனுக்கு உலகத்தையே காணோம்.  மரத்தில் செய்த தத்ரூபமான  பெரிய  யானை குழந்தையின் கண்ணுக்கு  யானையாக   மட்டும் தெரிந்து மரம் தெரியவில்லை.  குழந்தை அரண்டுபோய்  அழுதது. குழந்தையின் தாய்,

 ''அழாதே,பயப்படாதே, இது யானை இல்லை, மரம்''   என்று சொல்கிறாள். அவள் கண்ணுக்கு  தேக்கு  மரம் தான் தெரிந்தது, அதில் செய்யப்பட  யானை மறைந்து போய்விட்டது.  அது போல் தான்  உலகை சத்யம் என எண்ணுபவன், உடம்பை ஆத்மா என்று நம்புகிறவனுக்கு உண்மையான  ஆத்ம ஸத்யம்  புலப்படாது. ஆத்ம  ஸாக்ஷா காரம் சித்தியானவனுக்கு உலகம் இல்லை. உடம்பு இல்லை. இருப்பதாக தெரிந்தால் அது மாயை. கானல்நீர். 

நன்றாக கவனத்தில் வையுங்கள். இதெல்லாம்  மனதாலோ, வாக்கினாலோ ,கண்ணாலோ, காதாலோ, ஸ்பரிசத்தாலோ, அறியப்படுகிறதோ  அதெல்லாம் நிச்சயம் அழியக்கூடியது. ஸாஸ்வதம்  இல்லை.

ரமணர்  அழகாக சொல்வார்:  ''இந்த உலகம் யாரிடமாவது நான் இருக்கிறேன்,உள்ளேன் என்று சொல்கிறதா? மனிதன் அல்லவோ அது இருப்பதாக  நினைக்கிறான். நாம ரூப பேதங்கள் அவனை திசை திருப்புகிறது. சித்தத்தை உள்ளடக்கி, அந்தர்முகமாக  தேடினால் ஆத்மாவை உணரமுடியும். அங்கே உள்ளது தான் எங்கேயும் வெளியில் என்ற  ஸர்வம்  ப்ரம்ம மயம் புரியும்.  வேதங்கள், உபநிஷத்துகள்  இதைத் தான் வளைத்து வளைத்து சொல்கிறது. பாதிக்கு மேல் நமக்கு புரியவில்லை.

தொடரும் 


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...