Friday, October 8, 2021

SRI LALITHA SAHASRANAMAM


  ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம்-  நங்கநல்லூர் J K  SIVAN 

                         
 1.   ''அம்பாளை அறிவோம்''                          

இந்த வருஷம் நவராத்ரி அன்று ஒரு  எண்ணம் மனதில் தோன்றியது. ஏற்கனவே  ஆரம்பித்து  எனோ மேற்கொண்டு தொடராத  அம்பாளின்  ஆயிரம் நாமங்களை பற்றி எழுதி நண்பர்களிடையே  பரிமாறலாம் என்று  தோன்றியது.

ஆஹா!  என்ன  அற்புதமான  சம்பவம் இது.  காணக்கிடைக்குமா  இந்த  திவ்ய தரிசனம். ஈரேழு  உலகும் பார்த்து மகிழ  ஆனந்தமடைய, கொண்டாட,   திரள்கிறது. ஸ்ரீ  பார்வதிக்கும் பரமேவரனுக்கும்  கல்யாணம்.

மஹாவிஷ்ணு, ப்ரம்மா, இந்திராதி  தேவர்கள், ரிஷிகள், முனிவர்கள், சிவகணங்கள், சித்தர்கள் அனைவருமே  அங்கே தான் காணப்பட்டார்கள்.   எல்லா உலகத்தவரும்  கைலாசம் சென்றுவிட்டால் என்ன ஆகும் ?  வடப்பக்கம்  தாழ்ந்து தெற்குப்  பக்கம் உயர்ந்து விட்டது.

சிவன் அப்போது தான்  நிலைமையை உணர்ந்து,  உலகை சமன் செய்ய  அகஸ்திய ரிஷியை சரியானவராக தேர்ந்தெடுத்து,  தெற்கே அனுப்புகிறார்.  பூமி சமநிலை பெற்றது. அதெப்படி  ஒரு குள்ள முனிவர்  அகஸ்தியர் தெற்கே போனவுடன் பூமி  சமமாகும் ?  இதற்கு என்ன அர்த்தம்?  வடக்கே குழுமியிருந்த அனைவருமே  அகஸ்தியர் ஒருவருக்கு சமமானவர்கள் என்று தானே அர்த்தம்.  எப்படி அந்த உயரிய அந்தஸ்து அவருக்கு கிடைத்தது?  ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் உபதேசம் பெற்றவர்  அகஸ்தியர். அது தான் காரணம்.

அம்பிகையை ஸ்தோத்ரம் செயகிறோமே அதில் முதல் இடம் பெற்றது லலிதா  ஸஹஸ்ரநாமம்.
 இதை உபதேசித்தவர்-ஹயக்ரீவர். உபதேசம் பெற்றவர்- அகஸ்திய முனிவர். ரெண்டுபேருமே  ஞானத்தில் ஒருவருக்கு ஒருவர் குறைந்தவர்கள் இல்லை.

ப்ரம்மாவிடமிருந்து ஹிரண்யாக்ஷன்  வேதங்களை கவர்ந்து கொண்டு  பாதாளம் வரை சென்று ஒளிந்து கொண்டபோது அவனை தேடிச் சென்று  கொன்று  மஹாவிஷ்ணு   குதிரை முகம் கொண்ட  ஹயவதனராக, ஹயக்ரீவராக,வேதங்களை ஜாக்கிரதையாக மீட்டு,  பிரம்மனிடம் ஒப்படைத்தார்.  அவர்  உபதேசம் செய்தது தான் ஸ்ரீ  லலிதா ஸஹஸ்ரநாமம்.

பதினெட்டு புராணங்களில் ஒன்று பிரம்மாண்ட புராணம்.  அதில் '' லலிதோபாக்யானம் '' என்ற பகுதி  ஸ்ரீ லலிதா தேவியின் திரு அவதாரம் பற்றியும் அவள் சரித்திரமும்  சொல்கிறது.   அதில் வருவது   பரமேஸ்வரி,  பராசக்தி,யுடைய ஆயிரம் திரு நாமங்களைக் கூறும் லலிதா ஸஹஸ்ரநாம  ஸ்தோத்திரம்.  183  ஸ்லோகங்களில்  ஹயக்ரீவர்  அகஸ்தியருக்கு  இந்த  ஆயிரம் நாமங்களை உபதேசிக்கிறார்.

அகஸ்திய மகரிஷி தனது மனைவி லோபாமுத்ரை யோடு  இணைந்து  பூஜித்து  வணங்கியது பரமேஸ்வரியை.
 அகஸ்தியர்  சிறந்த  சக்தி உபாசகர். அகஸ்தியருக்கு அதனால் தான்  அவ்வளவு சக்தி. லலிதாவுக்கு  ஒரு பெயர் என்ன தெரியுமா?  ''லோபாமுத்ரார்ச்சிதா'' – லோபாமுத்ரையால் அர்ச்சிக்கப் பட்டவள்.  லலிதாவின் சக்தியால் வாசினி முதலான வாக்தேவதைகளே பிரத்யக்ஷமாகி இந்த தெய்வீக ஸ்தோத்திரத்தைச் செய்ததாக புராணம் சொல்கிறது.

ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமத்திற்கு  பிரதானமாக  உரை எழுதியது பாஸ்கர ராயர்  (“சௌபாக்ய பாஸ்கரம்”)  பாஸ்கர ராயர் (1690 – 1785)  சிறந்த  தேவி உபாசகர், தத்துவ ஞானி. இவர் மகாராஷ்டிரத்தில் பிறந்தாலும்  சின்னவயசிலேயே  தஞ்சாவூர் வந்து   வாழ்ந்த ஊர்  தான்  அவர் பெயர் கொண்ட  பாஸ்கரராஜபுரம் இன்னும் இருக்கிறது.  சக்தி உபாசகர்கள் அவசியம் விஜயம் செய்யும் ஸ்தலம். 

லலிதா ஸஹஸ்ரநாமம்   சிறந்த கவிநயம், சொல்லழகு ஓசை கொண்டது.  ஸமஸ்க்ரிதம் தெரியாவிட்டாலும் கேட்க செவிக்கின்பம் .  எப்படி விஷ்ணு ஸஹஸ்ரநாமம் MSS  பாடுவதை கேட்கும்போது சிலையாக கண்ணை மூடிக் கொண்டு அர்த்தம் தெரியாதவர்களும் ரசிக்கிறார்களோ அப்படி.      சாக்தம் எனும் சக்தி தத்வம் போதிப்பது.    ப்ரம்ம வித்யா,   ஸ்ரீ வித்யா  என்று கூறப்படும்  மகோன்னதமான ஸ்தோத்ர மந்த்ரம். அம்பாளின்  1008 நாமங்கள்  எப்படி அமைந்திருக்கிறது என்றால், அவளின் அவதாரம்,   தலை முதல் கால் வரை வர்ணனை (கேசாதி பாதம்)   அம்பாள் பண்டாசுரனை  சம்ஹாரம் செய்தது,  அவளது சூக்ஷ்ம ஸ்வபம்,  குண்டலினீ ரூபம், பக்தர்களுக்கு அனுக்ரஹம் செய்வது,   நிர்க்குண உபாசனை. பஞ்ச ப்ரம்மங்கள் ஸ்வரூபம் பற்றி எல்லாம் வரும்.  
 கீதையில் வருவது போல் இதிலும்  க்ஷேத்ர-க்ஷேத்ரக்ஞ ரூபம், சக்தி பீடங்கள் பற்றி,  சக்தி அங்கம் கொண்ட தேவதைகள்,  யோகினி த்யானம், விபூதி விஸ்தாரமும், மார்க்க பேதங்களின் சமரசமும்,  சிவசக்தி ஐக்கியம் என்று நிறைய  விஷயங்கள் எல்லாம் வரப்போகிறது.  கொஞ்சமும் கவலை வேண்டாம். எல்லாமே  தெள்ளென தெளிவாக புரியும்படி இருக்கும்.  ஏதோ எங்கேயோ படித்துவிட்டு அப்படியே  காபி பண்ணி வாந்தி  எடுக்கும் விஷயம் எனக்கு தெரியாது.

ஸ்ரீ லலிதா  யார்?  எவ்வளவோ  லக்ஷம் பெண்கள் இந்த பெயரை தாங்கிக்கொண்டு உலகத்தில் உதவினார்கள், உலவுகிறார்கள், உலாவுவார்களே, அவர்கள் அத்தனைபேருக்கும் நமஸ்காரம்.  இது சாதாரண பெயர் அல்ல. ஸ்ரீ லலிதா  தேவர்கள்  ப்ரார்த்திக்க அக்னிகுண்டத்தில்  தோன்றியவள்.   எப்படி இருப்பாள்?  நான்கு கைகளில் பாசம், அங்குசம், கரும்புவில், மலர்க்கணைகள்.   ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் இனி  வாசிக்கும்போது  எல்லா விவரங்களும் வரப்போகிறது.   நாம் அனைவருமே சேர்ந்து அறிவோம்.  எனக்கும்  முழுக்க தெரியாதே.  அவளை முழுமையாக  புரிந்து கொள்ள, தெரிந்து கொள்ள யாராலும்  முடியாதே. 

 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...