''வீட்டுக்கு போகலாம் வா அம்மா''
நங்கநல்லூர் J K SIVAN
''அது என்ன புராண பெயர் அஸ்வத்தாமன் என்று, உங்களுக்கு? '' கல்யாணம் ஆனவுடன் மனைவி ஹேமா கேட்ட முதல் கேள்வி. ''இனிமே உங்க பேர் அஸ்வின்'' ஆளையே உச்சந்தலை முதல் உள்ளம் வரை மாற்றிவிட்டாள் .
''அஸ்வினி நக்ஷத்ரமாம் எனக்கு, சிரஞ்சீவியா இருக்க நக்ஷத்ரத்திலே பாதி இருக்கிற பேரா அம்மா தேடி இருக்கா, அஸ்வத்தாமன் கிடைச்சான். இதோ இருக்கான் ''
அம்மா ராஜேஸ்வரி மீது கொள்ளை கொள்ளையா அஸ்வாவுக்கு ஆசை, பாசம்.எல்லாம் 13.8.2000 காலை முஹூர்த்தம் வரையில். அப்புறம் கொஞ்சம் கொஞ்ச மாக நெருங்கி இருந்த அம்மா தூரமாக நகர்ந்து இப்போது நூறு கி.மீ.தள்ளியொரு முதியோர் இல்லத்தில்.
''என்னை ஏண்டா இங்கே சேர்க்கறே. நான் பாட்டுக்கு சிவனேன்னு ஆத்திலேயே ஒரு மூலையில் கிருஷ்ணா ராமான்னு கிடப்பேனே ''
''அம்மா நீ நன்னா புரிஞ்சுக்கணும். உனக்கு வயசாயிடுத்து, சரியா காது கேக்கலே, கண்ணு தெரியலே, எங்காவது இந்த சலவைக்கல் தரையிலே வழுக்கி விழுந்துட்டா அவ்வளவு தான். அப்புறம் ஹேமாக்கு கொஞ்சம் கூட நேரமே இல்லை. எனக்கு காப்பி போட்டுக் கொடுக்கக்கூட நேரமில்லாமா நான் தானே எனக்கும் உனக்கும் காப்பி போடறேன். அப்புறம், அடிக்கடி என்னை ஆபிஸ்லே வெளியூர் அனுப்பிடறா. எப்போ போவேன் வருவேன்னு எனக்கே தெரியாது. ஒரு நல்ல இடமா பாத்துண்டு இருந்தேன். டாக்டர், சாப்பாடு, சங்கீதம், லெக்ச்சர், ஈவினிங் வாக், ஆரோக்யமான அறை அடிக்கடி வந்து பார்த்து வேண்டும்கிறதை கவனிக்க ஆளு டக் குனு கூப்பிட் டகுரலுக்கு வந்து நிப்பான். நீ படுத்துண்டே கட்டிலில் இருக்கிற பெல் பட்டனை அமுக்க வேண்டியது தான்.
ஆசை வார்த்தைகள் எவ்வளவு காட்டி பேசினாலும் பிள்ளையை பிரிந்து போக தாய் தவித்தாள். போனாள். ஆயிற்று வருஷம் நாலு . நடு நடுவே காரை எடுத்துக் கொண்டு அவன் மட்டும் சென்று தாயை பார்த்து சில நிமிஷங்கள் விசாரித்துவிட்டு வருவான். தாயின் முகத்தில் அப்போது தோன்றும் சந்தோஷம் சோகக்கோடுகளில் அப்புறம் மறைந்து விடும். சுவற்றைப் பார்த்துக் கொண்டே படுத்துக்கொண்டு பழசை அசை போடுவாள்.
அஸ்வா சொன்னது பொய் என்று அவனுக்கே தெரியும். ஹேமாவுக்கு வீட்டில் கிழவி இருப்பது கண்ணில் முள் குத்தியது. அது தான் கதை. அதை மறைத்து அஸ்வா அம்மாவிடம் சொன்ன தெல்லாம் டிஸ்டெம்பர் பூச்சு.
காலையில் தினசரி காலண்டர் ஷீட் கிழித்தான். உலக அம்மாக்கள் தினம். அதோடு அம்மாவின் பிறந்தநாள் வேறு. முன்பெல்லாம் அம்மா பிறந்தநாளுக்கு காலம்பற எழுந்துவிடுவாள் அருகே கோவிலுக்கு செல்வாள், அர்ச்சனை, தேங்கா மூடி பழத்தோடு வருவாள். அவனை எழுப்பி விபூதி இட்டு விடுவாள். ஒரு பாயசம் வடை யோடு சாப்பாடு இருக்கும். பள்ளிக்கூடத்தில் எல்லோருக்கும் கேசரி கொடுக்க சொல்லி ஒரு டப்பா நிறைய தருவாள். வீட்டுப் பிள்ளையாருக்கு வெல்லக் கொழுக்கட்டை நைவேத்யம் பண்ணி முதலில் அவனுக்கு தருவாள். பல வருஷங்கள் இப்படியே போய்விட்டது. இன்று அம்மா பிறந்தநாளுக்கு அவனால் அம்மாவை காரில் போய் பார்க்க முடியும். ஆனால் ஹேமாவுக்கு அவளது மாதர் சங்க நிகழ்ச் சிக்கு காலையிலேயே அவளோடு போக வேண்டுமே .அதல்லவோ முக்கியம்.சரி அம்மாவுக்கு ஒரு பூச்செண்டு அனுப்புவோம். பூச்செண்டு கடைக்கு சென்றான். வாசலில் ஒரு சிறு பெண் அழுது கொண்டு நின்றாள். லக்ஷியம் பண்ணாமல் நேராக உள்ளே சென்று அம்மாவின் முதியோர் இல்லம் அட்ரஸ் கொடுத்து உடனே 200 ரூபாய்க்கு ஒரு பூச்செண்டு வாழ்த்து அட்டையோடு அனுப்ப பணம் கட்டினான். சாயந்திரம் மூன்று-நாலு மணிக்குள் சென்றுவிடுமாம். வெளியே வந்தான். வாசலில் அந்த ஏழு எட்டு வயது பெண் குழந்தை இன்னும் அழுது கொண்டே நின்றது.'
'ஏம்மா குழந்தே அழறே, உடம்பு சரியில் லையா?''''
அம்மாவுக்கு ரோஜாப்பூ வாங்கணும். கையிலே காசில்லே''''அடேடே அவ்வளவு தானே, வா நான் உனக்கு வாங்கித்தரேன்''
அந்த குழந்தை முகத்தில் மலர்ச்சி. பூவோடு வாசலில் நின்றாள்'
'எங்கே போகணும்னு சொல்லு நான் போறவழியிலே கார்லே கொண்டுவிடறேன்''
சந்தோஷமாக தலையாட்டிய குழந்தை வழி சொன்னாள். எங்கெங்கோ வளைந்து நெளிந்து சென்ற பாதைகள் கடைசியிலொரு குறுகலான சந்தில் ஒரு மூலையில் இருந்த மயான பூமியை காட்டி நிறுத்தத் சொன்னாள் .அஸ்வா பார்த்துக்கொண்டே .உள்ளே ஓடினாள். ஓஹோ அவள் தாய் இங்கே தான் வேலை செய் கிறாளோ? என்று காரை விட்டு இறஙுகி உள்ளே சென்று கவனித்தான். பெண் உள்ளே ஓடி ஒரு பக்கமாக புதிதாக மண்ணால் மூடப்பட்ட ஒரு மேட்டின் முன் நின்று. விழுந்து அதைக் கட்டிக் கொண்டு படுத்தது. அழுதது. அம்மாவுக்கு தான் வாங்கி வந்த பூவை வைத்தது. கண்ணை துடைத்துக் கொண்டு நின்றது. அஸ்வா அந்த ஏழைக்குழந்தையின் செய்கையால் உறைந்து போனான்.
அவன் தலையில் மடேர் மடேர் என்று யார் சம்மட்டி யால் இப்படி அடிக்கிறார்கள்?
.நேராக காரைத் திருப்பிக்கொண்டு பூக்கடைக்கு சென்றான். தான் கொடுத்த ஆர்டர் படி பூங்கொத்தை வாங்கிக்கொண்டான்.
''டெலிவரி வேண்டாம். நானே டெலிவர் பண்ணி விடுகிறேன்''
மூன்று மணிநேரத்திற்கு பின் ஒரு அமைதியான முதியோர் இல்ல வாசலில் அவன் கார் நின்றது. உள்ளே அம்மாவை கட்டிக்கொண்டு ஆயிரம் முத்தங்கள் கொடுத்தவன் அவள் சாமான்களை எல்லாம் வாரி எடுத்துக் கொண்டு அம்மாவோடு வீடுதிரும்பினான்.
.
No comments:
Post a Comment