இல்வாழ்வில் இன்பம். - நங்கநல்லூர் J K SIVAN
ஒரு கணவன் மனைவி கதை சொல்கிறேன். அருமையான கதை என்று நானே ஆரம்பத்திலேயே சொல்லிவிடுகிறேன்.
கல்யாணம் என்பது அப்பா அம்மா பார்த்து வைத்து நடப்பதும் உண்டு, அம்மா அப்பாவுக்கு அந்த வேலையை, தொந்தரவை கொடுக்காமல் பிள்ளையோ பெண்ணோ தானாகவே ஏற்பாடு செய்து கல்யாணம் பண்ணிக் கொள்வதும் நடக்கும் விஷயம் தான். இதில் சிலவற்றுக்கு பெற்றோர் சம்மதம் இருந்து ஜாம் ஜாம் என்று கல்யாணம் சாப்பாடு விருந்தோடு நடப்பதும் உண்டு. அனாவசிய கூட்டம் சேர்க்கவேண்டாம் என்று ரிஜிஸ்டர் ஆபிஸ் கல்யாணமும், கல்யாணம் தான்.
எது எப்படியோ இதில் முக்கியமான விஷயம் கணவனும் மனைவியும் சந்தோஷமாக இருக்கிறார்களா என்பதே. அப்பா அம்மா பார்த்து பண்ணி வைக்கும் கல்யாணங்களில் காதல் என்பது அநேகமாக கிடையாது. அங்கே காதில் விழும் வார்த்தை ''பிடிச்சிருக்கா?'' '' உம் ''. அதால் பூனையும் நாயும் நேசமாக இருக்கிறதா என்று அனுபவ பூர்வமாக அனைவரும் அறிவோம்.
நம் கதையில் ரெண்டு இளசுகள் ஒன்றை ஒன்று காதலித்தது. பெண் அபூர்வ அழகி. இன்னொரு வளை அவள் போல் பார்ப்பது அரிது. அவனும் ஆணழகன். கேட்கவேண்டுமா? ஒன்றுக்கு இன்னொன்று ரொம்ப பிடித்துவிட்டது. ரொம்ப நாள் காதல் தொடர்ந்தது. கடைசியில் ஒருநாள் நாம் கல்யாணம் பண்ணிக் கொள்வோம் என்று முடிவெடுத்து அப்பா அம்மாவுக்கு தெரிந்தோ தெரியாமலோ கல்யாணம் நடந்து விட்டது. அப்புறமும் அவர்கள் காதல் தொடர்ந்தது என்பது தான் முக்கியம். ராஜு--ரமா காதல் மணவாழ்க்கை இவ்வாறு நாளொரு சந்தோஷமும் பொழுதொரு ஆனந்தமுமாக வளர்ந்து கொண்டே வந்தது.
ஒரு வருஷம் நெருங்கும் சமயம். ஒருநாள் ரமாவுக்கு ஏதோ பூச்சி கடி மாதிரி உடம்பு அரித்தது. ஓரிரு வாரங்கள் கழித்தும் குணமாகவில்லை. சருமம் வெடிக்க ஆரம்பித்தது. உடம்பில் சீழும் ரத்தமும் தோன்றியது. டாக்டரிடம் சென்றார்கள். பல டெஸ்ட்கள் எடுத்தார் இது ஒருவித புற்றுநோய் மாதிரி. ஆயிரத்தில் ஒருவருக்கு வரலாம் என்று சில டாக்டர்கள் பரிசோதனை செய்து சொல்லி விட்டார்கள். எவ்வளவோ டாக்டர்கள், மருந்துகள். ஒன்றும் பயனளிக்கவில்லை. முகத்திலும் பரவ ஆரம்பித்தது. உடல் கொஞ்சம் கொஞ்சமாக அழகை இழக்க ஆரம்பித்தது. முகம் தான் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதி. ரமாவுக்கு உடல் உபாதையை விட உள்ள உபாதை அதிகமாகிவிட்டது நான் அழகற்றவள் என்பதால் ராஜு என்னை இனிமேல் காதலிக்க மாட்டானோ? வெறுத்து விடுவானோ? இந்த கவலை அவளை மேலும் சிரமப்படுத்தி முகம் விகாரமாக ஆரம்பித்தது.
ஓரிரு நாட்களில் அவசர வேலை விஷயமாக ராஜு டெல்லி சென்றான். அங்கே ஆறு நாட்கள் இருந்தவன். ஏழாவது நாள் காலை அவனுக்கு ரோடு ஆக்சிடென்ட் ஆகி ஆஸ்பத்திரியில் சேர்த்துவிட்டார்கள். கால் எலும்புகள் முறிந்துவிட்டது. முகத்தில் அடி , ஒரு மாதம் கழித்து மெதுவாக வீடு திரும்பினான்.
கண் பார்வை போய்விட்டது என்று கருப்பு கண்ணாடியோடு குச்சி தட்டிக்கொண்டு வந்தவன் அதைக் கழட்டுவதில்லை. அவன் மேல் முன்பிலும் அதிக பாசமாக நேசமாக ரமா அவனுடைய புறக்கண்ணாகி விட்டாள் .. எங்கும் அவனை அழைத்துச் செல்வாள் . சிரமம் இல்லாமல் பார்த்துக்க கொள்வாள். சிச்ருஷைகள் செய்வாள். அவள் உடல் நலம் மோசமாகிக் கொண்டே வந்தது. உலகிலேயே மிகவும் க்ரூபி யார் என்றால் ரமா எனும்படி அருவருப்பான முகத்தோடு காணப்பட்டால். பாவம் கணவனுக்கு அவள் அழகிழந்தது தெரியாதே. அவன் எப்போதும் போல் அவளிடம் அன்பாக பாசமாக முன்னிலும் அதிக நேசமாக இணை பிரியாமல் இருந்தான்.
அழகற்ற ரமா அவனை முன்னிலும் அதிகமாக காதலித்தாள் . அவனை கண்ணுக்கு கண்ணாக நேசித்து இரவும் பகலும் வனுக்கு அருகில் இருந்து உதவினாள் . ஒரு மாதம் ஆயிற்று. நோய் முற்றி ரமா ஒருநாள் இறந்தாள் . ராஜு மனம் கலங்கினான். ஈமக்கடன்கள், சடங்குகள் முடிந்தன.
ரமா இல்லாத இந்த வீடு இனி வேண்டாம் என்று முடிவெடுத்து பம்பாய்க்கு செல்லப்போவதாக எல்லோரிடமும் சொன்னான். வீடு சாமான்கள் எல்லாவற்றையும் ஒருவாறு பங்கீடு பண்ணி விற்றாகிவிட்டது. குழந்தைகள் இல்லை. எனவே தனிக்கட்டை இங்கிருந்தால் என்ன?
நண்பன் ரவி ராஜுவின் கையைப் பிடித்துக்கொண்டு அழுதான்.
''ராஜு, நீ எப்படிடா தனியாக இனி இருப்பாய். இரவும் பகலும் உன்னை உயிர்போல் பாதுகாத்த ரமா இல்லாமல் இனி எப்படி யார் உதவியும் இல்லாமல் உன்னால் எங்கும் செல்லமுடியும். அவள் தானே எங்கும் உன்னை அழைத்துக்கொண்டு போவாள்.
''இல்லை நானாகவே என்னை கவனித்துக் கொள்வேன். எனக்கு பார்வை இருக்கிறது. எவர் உதவியும் வேண்டாம்''
''என்ன சொல்கிறாய் ராஜு, கண் பார்வை சுத்தமாக இழந்தவன் எப்படி பார்வை திரும்பப் பெற்றாய்? ஆச்சர்யமாக இருக்கிறதே.''
''கண் பார்வை போனால் தானே மீண்டும் பெறுவதற்கு.''?
''என்ன சொல்கிறாய் , உளறுகிறாயா?''
''ரவி உனக்கு மட்டும் சொல்கிறேன். நான் டில்லியில் ரோடு விபத்தில் கால் எலும்புகள் முறிந்ததைத் தவிர கண் பார்வை இழக்கவில்லை. அது நான் ஆஸ்பத்திரியை விட்டு வெளியே வந்ததும் எடுத்த முடிவு. நாளுக்கு நாள் ரமா அவளுடைய நோய்க்கு ஆளாகி அழகற்றவளாக ஆகிக்கொண்டே வந்தாள் . அதை நான் பார்க்க நேரிட்டால் மனம் வாடுவாள். உடல் நோயை விட உள்ள நோய் அவளை சீக்கிரமே கொன்றிருக்கும். நான் குருடன் போல் நடித்தால் அவள் குரூபி என்று அறிய முடியாதே . பழைய அன்புடனேயே என்றும் அவளோடு ஆசையாக கடைசிவரை என்னால் பழக முடிந்தது. அவளுக்கும் அதில் ஆனந்தம் கிடைத்தது. கடைசி வரை அவளை இவ்வாறு நேசித்தது உண்மை. நடிப்பு அல்ல. என் கண் பார்வை இல்லை என்று அறிவித்தது தான் நடிப்பு.
ரமா ஒரு அருமையான மனைவி. அன்புக்கு அளவே இல்லாதவள். அவள் மனம் வாடக்கூடாது என்பதே என் நோக்கம். எங்கள் மணவாழ்வு, என் பார்வை இழந்தாலோ, அவள் அழகிழந்த தாலோ துளியும் பாதிக்கப்படவில்லை. அவள் என் குறையை லக்ஷியம் பண்ணாமல் இருந்தது போல் நான் அவள் குறையை லட்சியமே பண்ணவில்லை. அவளை கடைசிவரை நான் சந்தோஷமாகவே வைத்துக்கொள்ள விரும்பினேன். அது வெற்றிகரமாக முடிந்தது. பகவானுக்கு நன்றி.
நண்பர்களே, வாழ்வில் கணவன் மனைவி இருவரும் ஒருவர் குறையை மற்றவர் லக்ஷியம் பண்ணாமல் அன்போடும் பாசத்தோடும் பழகினால் அது தான் ஆனந்த மணவாழ்வு. சின்ன சின்ன விஷயங்கள் மலை போல் உருவெடுக்க இடம் கொடுக்கக் கூடாது. அதற்காக நாம் குருடாகவோ, செவிடாகவோ, ஊமையாகவோ இருப்பதால் எந்த தப்புமில்லை. அது ஆனந்தத்தையே தரும். முன் கை நீண்டால், தானே முழங்கை நீளும் அல்லவா? விட்டுக்கொடுப்பது அரிய கலை.
No comments:
Post a Comment