Sunday, October 3, 2021

HINDU RITUALS

 

ஹிந்துக்களின்  சடங்குகள் சில  --   நங்கநல்லூர்  J K  SIVAN 

எனது அன்பான இனிய  நண்பர் ஒருவருக்கு அண்மையில் அண்மையில்  பீமரத சாந்தி  விழா.  எவ்வளவு  அன்போடு அழைத்தார் என்றாலும்  இப்போதிருக்கும் சூழ்நிலையில்  83ல்  இருக்கும் எனக்கு சென்று வர இயலவில்லை.  ரெண்டு வருஷமாக  எங்கும்  நகராமல்  வீட்டிலேயே   அடைகாத்துக் கொண்டிருக்கிறேன். நல்லவேளை என் ஆப்த நண்பன், ஆத்ம ஸ்னேஹிதன்  கம்ப்யூட்டர் எனக்கு ஆறுதல் அளித்து  நிறைய படிக்கவும் எழுதவும் நேரம்  இருப்பதால்  பொழுது ஆனந்தமாக  போகிறது.  வெளியுலகம்  எழுத்திலும்  பேச்சிலும்,பாட்டிலும்  உறவாடுகிறது.  எல்லாமே  ஆறடி தள்ளி.   மாஸ்க்  தேவையில்லாத சுகம்.

என்னவோ  ''பீமரத சாந்தி''  யைப் பற்றி நாலு வார்த்தை சொல்ல தோன்றியது.  

முக்கியமாக  ஆங்கில  பிறந்த தேதிக்கும் இதற்கும் சம்பந்தமில்லை.  பிறந்த நாள் அன்று இருந்த நக்ஷத்ரம் , ஜென்ம நக்ஷத்ரம், மாசம்  தான் கணக்கு. அதிலிருந்து  69 வருஷம் கழிந்து 70வது  நக்ஷத்ர நாளில்  கொண்டாடுவது தான் பீமராத சாந்தி.   இது  நமது வாழ்வில்  ஷஷ்டியப்த பூர்த்தி எனும் 60 வருஷம் முடிந்த நாளுக்கும்  சதாபிஷேகம் எனும் 80வது வருஷம் முடிவதற்கும்   இடையே உள்ள முக்கிய மைல் கல். 

இது  ஒரு  முக்கிய வைதிக சடங்கு. ஹோமம் வளர்த்து  வேத மந்த்ரம் சரியாக சொல்லி  தேவதைகளுக்கு, த்ரிப்தியடைய  நன்றியோடு ப்ரீதி செய்யும் பூஜை.  வாழ்க்கையில்  தொடர்ந்து இடையூறுகள் நிகழாமல் பாதுக்காக்க , தேஹ ஆரோக்யம் பெற  இறைவனை வணங்கும் பூஜை. தம்பதிகளில் வயதில் 70 நெருங்கியவர்  கணவனாகத் தான் இருப்பார் என்றாலும் தம்பதிகள் இருவரும் இந்த சடங்கில் பூஜையில் கௌரவிக்கப்படுகிறார்கள்.  

குடும்பத்தார், நண்பர்கள், மற்ற உறவினர்கள் அநேகமாக கலந்துகொள்வார்கள்.  சிறியவர்களுக்கு  தம்பதிகள் ஆசி வழங்கி  மந்த்ர அக்ஷதை ப்ரோக்ஷிப் பார்கள்.  தங்களை விட பெரியவர்களிடம் சென்று  அக்ஷதை கொடுத்து  ஆசி பெறுவார்கள்.

69 முடிந்து 70வது ஆரம்பிக்கும் நாள் தான் முக்ய மாக இந்த பீமரத  சாந்தி கொண்டாடப் படுகிறது. இந்த பூஜை ஒரு பரிஹார  பூஜை.  உடல்நலமின்மை,  உடல் கோளாறுகள் நீங்க,  ஆயுள் அபிவிருத்திக்காக, நிம்மதியாக வாழ  விண்ணவர்களிடமும்  மண்ண வர்களில் வயதில்  பெரியவர்களிடமும்  வணங்கி ஆசி பெறுவது.

இந்த ஹோம  பூஜையால் சகல பாபங்களும் விலக பகவான் அருள் பெற்று  நிம்மதியான நோயற்ற வாழ்வை எதிர்நோக்குகிறோம். இது தான் மனுஷ  யத்தனத்தால் முடிந்தது. ஷஷ்டி அப்த பூர்த்தி யிலிருந்து   பீமரத சாந்தி,  சதாபிஷேகம், கனகாபிஷேகம் எல்லாம்  பெற்ற குழந்தைகள் பெற்றோர்க்கு ஆசையாக சநதோஷமாக  நடத்தி வைக்கும்  விழாக்கள் என்பது நமது ஹிந்து சமூகத்திற்கு ஒரு தனிப் பெருமை.

பீமரத  சாந்தி ஹோம பூஜையில் பிரதானமாக  வழிபடுவது  ஆயுள் தேவதை, ஸாத்  குண்ய தேவதா , சப்த சிரஞ்சீவிகள் ஹனுமான், விபீஷணன், மஹாபலி சக்கரவர்த்தி, மார்க்கண்டேயன், வேதவியாசர், பரசுராமர், அஸ்வத்தாமன் ஆகியோரை  வணங்கி ஆசிபெறுவது.  குடும்ப லோக க்ஷேமத்துக்கு வேண்டுவது.   சஷ்டியப்த பூர்த்தி  சதாபிஷேகங்கள்  60, 80 வருஷங்கள் கழிந்த  பிறகு கொண்டாடுபவை. பீமரத சாந்தி   69 முடிந்தவுடன் நிகழ்த்தும் ஹோம பூஜை.

ஹிந்துக்களின்  வாழ்க்கையில்  பிறந்தது முதல்

ஒருவருஷம் கழித்து கொண்டாடுவது  அப்த பூர்த்தி.

55வது வருஷ  ஆரம்பத்தில்   பீம சாந்தி 

60வது வயசு ஆரம்பத்தில்  உக்ர ரத சாந்தி

60 வயது முடிந்து 61 ஆரம்பத்தில்  ஷஷ்டி அப்த பூர்த்தி 

69 முடிந்து 70 ஆரம்பத்தில் பீம ரத சாந்தி.

72 ஆரம்பத்தில்  ஏக சாந்தி

77 வருஷம் 7 மாசம், 7 நாள் முடிந்ததும்  விஜயரத  சாந்தி. 

80 முடிந்து 8 மாதங்கள் ஆனதும்  :  சதாபிஷேகம்.

100 வருஷம் முடிந்தபின்  பூர்ணாபிஷேகம் எனும்  கனகாபிஷேகம். 

இதில்   முக்கியமாக  முதல் அப்த பூர்த்தி, ஷஷ்டி அப்தபூர்த்தி, பீமரத சாந்தி, சதாபிஷேகம் தான் கொண்டாடுகிறார்கள். நமக்கு அழைப்பு வருகிறது.

இந்த ஹோம பூஜைகளில்   நவகிரஹ ஹோமம், கணபதி ஹோமம், ஆயுஷுஹோமம், தவிர முக்கியமா

க  ஏகாதச ருத்ர ஜபம் அவசியம் பண்ணுவது வழக்கம்.  பணம் செலவழித்து ஊர் கூட்டி கோலாகலமாக பண்ணினாலும்  வீட்டோடு  பண்ணினாலும் ஹோம பூஜை, மந்த்ரங்கள், ஜபம் இருந்தே ஆகவேண்டும்.

பீமரதம் என்று ஏன் பெயர் என்பதற்கு ஒரு காரணம்,  வாழ்க்கை ஒரு ஓடம், வண்டி, வாழ்க்கை சகட வாழ்க்கை என்றார் எல்லாம் சொல்கிறோம். ஆகவே   நமது உலகவாழ்வுக்கு இந்த உடல் ஒரு ரதம். அது பீமனின் ரதம் போல் பலமுள்ளதாக  வரும் நோய் நொடிகளை, எதிர்த்து தாங்கக்கூடியதாக முன்னோக்கி  எஞ்சிய  வாழ்க்கையை நிம்மதியாக நடத்த ஓடவேண்டும் என்று வேண்டிக்கொள்ளும் சடங்கு. பீமா என்றால்  வாழ்க்கை எனும் பொருளில்  LIC க்கு கூட  பீமா என்ற வார்த்தை நிறைய பிடிப்ப தால்  பல  பாலிஸிகளை இந்த பெயரோடு  கொடுக்கிறார்கள். 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...