பேசும் தெய்வம் - நங்கநல்லூர் J K SIVAN -
90. புலன்களின் சேஷ்டைகள்...
மஹா பெரியவா 1933ல் ஜனவரி 15 அன்று பொங்கல் சமயத்தில் ஒரு அருமையான உபதேசம் செய்ததை ''இந்திரிய நிக்ரஹம்'' என்ற தலைப்பில் படித்து குறிப்பெடுத்தேன். அதன் சாராம்சம் இது.
சந்திரனும், நக்ஷத்ரங்களும் , சூரியனைப் போலவே எப்போதும் வானில் உள்ளவை தான். சூரியன் இருக்கும்போது அவை தெரிவதில்லை, சூரியன் மறைந்ததும் அவை பிரகாசிக்கிறது. இரவும் பகலும் இவ்வாறு வெளிச்சமும் இருட்டும் மாறி மாறி தருகிறது. ஒன்றிருந்தால் இன்னொன்று இல்லை. அப்படித்தான் வேதாந்தத்திலும். சிவஸ்வரூபம் விளங்கினால் உலகம் மறைந்துவிடும். உலகமே நினைவில் இருந்தால் ஈஸ்வரனை காணமுடியாது. கீதையில் கிருஷ்ணன் சொன்னது இதைத்தான்: (2-69)
या निशा सर्वभूतानां तस्यां जागर्ति संयमी |
यस्यां जाग्रति भूतानि सा निशा पश्यतो मुने: || 69||
yā niśhā sarva-bhūtānāṁ tasyāṁ jāgarti sanyamī
yasyāṁ jāgrati bhūtāni sā niśhā paśhyato muneḥ
யா னிஶா ஸர்வபூதானாம் தஸ்யாம் ஜாகர்தி ஸம்யமீ |
யஸ்யாம் ஜாக்ரதி பூதானி ஸா னிஶா பஶ்யதோ முனேஃ || 69 ||
நிஸா என்றால் ராத்திரி. ஜாக்ரதி என்றால் விழித்துக் கொண்டிருப்பது. பூதங்கள் என்றால் உயிர்கள். பிசாசு அல்ல. சம்யமி என்றால் நன்றாக அடக்கிக் கொண்டிருப்பவன். நம்மை எல்லாம் எல்லை மீறாமல், அளவு தாண்டாமல் அடக்கிக் கொண்டிருப்பவன் என்பதால் கால தேவனுக்கு யமன் என்று பெயர். நாம் கோபத்தை, ஆசையை, தீய குணங்களை அடக்க வேண்டும். கோபத்தை அடக்குவது சுலபமில்லை.
ஒருத்தன் ரொம்ப நல்ல குணங்கள் உள்ளவன் ஆனால் முன்கோபி. பச்சைமிளகாய். அவன் நண்பர்கள் ரெண்டுபேர் அவன் உள்ளே இருப்பது தெரியாமல் அவன் வீட்டு திண்ணையில் உட்கார்ந்து அவனைப் பற்றியே பேசினார்கள்.
''என்ன நல்ல குணம் இருந்தாலும் அவன் கிட்டே கோபம் இருக்கே, அது ஒண்ணே அவன் நல்ல குணத்தையெல்லாம் சாப்பிட்டுவிடுகிறதே'' என்றான். இது உள்ளே இருந்தவனுக்கு கேட்டு அவன் விடுவிடுவென்று வெளியே வந்தான். கத்தினான்.
''யாரடா சொன்னது எனக்கு கோபம் உண்டுன்னு ''
பேசினவன் அடுத்த நிமிஷமே பதிலளித்தான்.
''வேறே யாருமே சொல்லவேண்டாம், நீயே இப்போ வந்து கத்துகிறாயே அதுவே போதாதா'' .
என் தாயார் விடிகாலையில் நாலு மணிக்கு எழுந்து வாசல் பெருக்கி நீர் தெளித்து கோலம் போடும்போது ஏதாவது பாடிக்கொண்டே இருப்பாள், அதில் நளசரித்ரம் சில பாடல்கள் குழந்தை கள் காதில் விழும். அப்புறம் பெரியவனாகி படித்து, யார் மூலமாவது மேலும் தெரிந்து கொள்வது தான் வழக்கம். நாடகத்தில் நடிப்பவர்கள் தங்களது நடிப்பு திறமையை காட்டுவதில் தான் அக்கறை கொள்கிறார்கள். பாத்திரங்களின் விசேஷத்தை எடுத்துச் சொன்னால் தான் கேட்பவர் மனதில் புராண விஷயங்கள் தங்கும். பிரவசனம் செய்பவர்களும் சுய புராணம் தம்பட்டம் அடிக்காமல் விஷய ஞானத்தை கேட்போர் மனதில் பதிய வைக்கவேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக பழைய வழக்கங்கள் மறைந்து போய் விட்டது. பக்தி குறைய ஆரம்பித்து விட்டது. அது மீண்டும் துளிர்த்து விருக்ஷமாக வளரவேண்டும்.
புராணங்களை கட்டுக்கதையாக எடை போடக்கூடாது. புராணங்கள் கட்டுக்கதையாக இருந்தால் தான் என்ன? அதில் நல்ல விஷயங்களை சொல்லியிருக்கே. கடைக்காரர் கருப்பாக, குட்டையாக நெட்டையாக இருந்தால் தான் சாமான்கள் கிடைக்கிறதே. ஸ்ராத்தம் பண்ணும் வாத்தியாருக்கு பூகோளம், ஆங்கிலம், சயின்ஸ் தெரியாவிட்டால் என்ன?. மந்திரம் சொல்கிறாரா, சம்ப்ரதாயம் தெரிகிறதா இல்லையா அது போதுமே. புராணங்கள் நடந்ததா?, எப்போது? காலம் நேரம் சரியா?, எந்த ஊரில்? இதெல்லாம் முக்கியம் இல்லை. கந்தசாமி கோவில் தரிசனத்துக்கு போகிறோம் ஸ்வாமியை பார்க்கிறோம், கோவில் எப்போது, எந்த ராஜாவால் எப்படி கட்டப்பட்டது என்பது தெரியா விட்டால் என்ன?
என் அம்மா ஏன் விடிகாலையில் நளன் சரித்திரம் பாடினாள்? விடிகாலையில் நினைக்கப்பட வேண்டியவன் நளன் என்று சாஸ்திரம். ''புண்ய ஸ்லோகோ நளோ ராஜா ''. நளன் பேரை நினைத் தாலே, சொன்னாலே, புண்யம்.
கோபத்தை அடக்குவது பற்றி ஆரம்பத்தில் சொன்னேன். நமது சத்ருக்களில் முதல் ஆசாமி காமம் எனும் ஆசை. அதால் தான் கோபம் வருகிறது. இந்திராதி தேவர்கள் நாலு பேர் தமயந்தி ஸ்வரத்துக்கு வந்தார்கள். அவர்களை மணக்க நளனையே தூதுவனாக அனுப்பினார்கள்.
''தமயந்தி, என்னைவிட தேவர்கள் உயர்ந்தவர்கள் அவர்களில் ஒருவரை உன் கணவனாக ஏற்றுக்கொள்'' என்று நளனே தமயந்திக்கு உபதேசிக்கிறான். ஆனால் அவள் நளனை மட்டுமே விரும்பினாள் .
தேவர்கள் நாலு பேரும் நளன் போலவே வேஷமணிந்து அச்சாக அவனைப்போலவே அமர்ந்திருந்தார்கள். ஸ்வாமி கிருபையால் தமயந்தி உண்மையான நளனை கண்டுபிடித்து மாலையிடுகிறாள். அவளைச் சோதிக்க வந்த தேவர்களும் அவள் உத்தம குணத்தை பாராட்டி ஆசிர்வதித்து விட்டு செல்கிறார்கள். கலிபுருஷன் இந்த ஸ்வயம்வரத்தில் தமயந்தியை மணக்க பங்கேற்க வந்தவன் லேட். அவனை வழியில் கண்டு தேவர்கள் தமயந்தி ஏற்கனவே நளனை மணந்ததை சொல்கிறார்கள். கலி கோபமடைகிறான். நளன் செய்த சிறு தவறினால், அவனைப் பிடித்துக் கொள்கிறான். கலியின் தளபதிகள் ஆறுபேர். காமம், க்ரோதம், மதம், மோகம், லோபம், மாற்சர்யம் என்று. அவர்கள் ஒவ்வொருவரும் தங்களது சக்தியை கலியிடம் சொல்வதை நளோபாக்யானம் ஆசிரியர் விவரமாக எழுதுகிறார். காமம் நரகத்தை அடையச் செல்வதில் முதல்வன். க்ரோதம் தான் ஒரு துர்கம் , (கோட்டை ) ஜனங்களை சிறைப்பிடிப்பவன் என்கிறது. துர் என்றால் கஷ்டப்படுதல், கம் என்றால் உள்ளே நுழைதல் கோட்டைக்குள் நுழைவது எளிதல்ல. நுழைந்தால் வெளியே வருவதும் கஷ்டம். இதற்குள் காமத்தின் ஆசுகம் (அம்பு) செல்லாது என்கிறான் க்ரோதம்.(கோபம்). ஆசு என்றால் சீக்ரம் என்று அர்த்தம்.
சிவனுக்கு ஆசுதோஷ் என்று ஒரு பெயர். எளிதில் சந்தோஷம் அடைபவர் என்று. அர்த்தம். குரோதம் பெருமையடித்துக் கொள்கிறான். ''காமனுடைய அம்பு நுழையமுடியாத கோட்டையை (துர்வாசருடைய ஹ்ருதயத்தை ) நான் பிடித்து வைத்திருக்கிறவன்'' என்கிறான் க்ரோதம்.. துர்வாசர் கோபக்கார முனிவர்.
இந்த காம க்ரோதங்களுக்கு இடம் கொடுக்காமல் அடக்கி வைப்பவன் தான் மேலே சொன்ன சம்யமி. நமக்கு இருட்டு. சம்யமிக்கு வெளிச்சம். பிரகாசம். இப்போது மேலே சொன்ன கீதை சுலோகத்துக்கு மறுபடியும் வருவோம்.
''யஸ்யாம் ஜாக்ரதி பூதானி ஸா னிஶா பஶ்யதோ முனேஃ'' எல்லோருக்கும் இருட்டு என்றால் ஞானிக்கு பிரகாசம். உலகம் மற்றவர்களுக்கு தெரிந்தால் ஞானிக்கு அது கண்ணில் படாது. புஸ்தகத்தை சூரிய ஒளியில் படித்தால் கண் கூசும். நிழலில் இருட்டில் படித்தால் படிக்கமுடியும்.
திருமூலர் என்கிற ரிஷி, அற்புதமானவர். ஆயிரம் வருஷங்களுக்கு மேல் வாழ்ந்தவர். மிகச்சிறந்த வேதாந்தத்தை எளிமையாக தமிழில் சொன்னவர். அவர் பாடல் ஒவ்வொன்றும் மந்திரம். அதனால் தான் 3000 செய்யுளும் திருமந்திரம். அதில் ஒரு பாடல்
மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தில் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தன பார்முதல் பூதம்
பரத்தில் மறைந்தன பார்முதல் பூதமே .
ஒரு சிறந்த தச்சன் கோயிலுக்கு ஒரு யானை செய்து தந்தான். அதைப்பார்க்க ஒருவன் குழந்தை யோடு போனான். குழந்தை பார்த்துவிட்டு அலறியது. ''கிட்டே போனால் கடிக்கும், அடிக்கும்'' என்றது. அப்பா காரனுக்கு அது மரம் என்று தெரியும். ஒருவருக்கு யானையாகவும் இன்னொரு கண்ணுக்கு மரமாகவும் தெரிகிறதே. இது மரமா, யானையா? ஒரே பொருள் வெவ்வேறாக தெரிகிறது. பாட்டின் கடைசி ரெண்டு அடிகள் உபமேயம். இதைப்போல் தான் இன்னொரு விஷயம் என்று சொல்கிறார் திருமூலர். பார் என்றால் மண். பூமி, ப்ரித்வி. பஞ்ச பூதங்களிலொன்று. ஐம்பூதங்கள் ஒளி, காற்று, நீர், வெளி, பார். சிதம்பரத்துக்கு சித் பரவெளி என்று பெயர்.
பரமாத்மா ஸ்வரூபம் எங்கும் எதிலும் இருக்கிறது, எல்லாவற்றிலும் மறைந்திருக்கிறது. அதை எது மறைத்திருக்கிறது,? இந்த பஞ்ச பூதங்கள் தானே. ஆகவே ஞானிகள் பரமாத்வாக பார்க்கும்போது அவர்கள் கண்ணுக்கு பஞ்ச பூதங்கள் தெரியவில்லை, வெறும் பஞ்ச பூதங்களாக பார்க்கும்போது பரமாத்மா மறைந்து போகிறார். வேதத்தின் உட்பொருளான பரமாத்மாவை ஆதி சங்கரர் உணர்ந்தவர். முதல் பாஷ்யகாரர். பத்து முக்கிய உபநிஷத்துகளில் முதலாவதான ஈசாவாஸ்ய உபநிஷத்தில் ஆச்சார்யர் ''பரமாத்மாவால், ஈசனால், உலகை மறைக்க வேண்டும்'' என்கிறார். பரத்தை பரமனால் மறைப்பது. பரமனை பரம் ஐந்தும் மறைப்பதால் நான் பரமனை மறக்கிறோம்.
ஆனை மறைந்தால் மரம் தெரியும் என்பது போல் பஞ்ச பூதங்களை மறந்தால் பரமேஸ்வரன் தெரிவான். ஈசன் தான் சர்வ பூதங்களும் என்பதை தான் ''ஈசா ன: ஸர்வ பூதானாம்''
இந்த கதைகளால் நமக்கு என்ன பிரயோஜனம்? பரவெளி எப்படி போனால் என்ன, நமக்கு வேண்டுவது சாப்பாடு.பணம். இந்த வம்பெல்லாம் எதற்கு ? என்று இருப்பவர்களுக்கு பரமேஸ்வரன் உணர்வு என்றுமே கிடையாது. பணமிருக்கிறவன் தர்மம் செய்யவேண்டும், ஏழைக்கு துக்கம் நிவர்த்தியடையவேண்டும். அதற்கு இந்த மருந்து சிவாத்வைதம், சிவமயம், அவசியம். அதை மறந்து விட்டால் எல்லாம் இருட்டில் மறைய வேண்டும். சூரியன் போனாலும் அதன் ஒளி போகக்கூடாதே.
No comments:
Post a Comment