பேசும் தெய்வம் - நங்கநல்லூர் J K SIVAN --
89 சில ஸ்வாரஸ்யமான சம்பவங்கள்
1933ல் கும்பகோணத்தில் மஹாமஹம் நடந்தபோது மஹா பெரியவா ஸ்னானத்துக்கு சென்றார் என்று பார்த்தோம். அந்த வருஷம் உலகம் அமைதியாக யுத்தம் எதுவும் இன்றி ஆனந்தமாக இருந்தது. பஞ்சம், வறட்சி, வெள்ளம் புயல் என்று ஒரு உத்பாதமும் நிகழவில்லை. மொத்தத்தில் ஒரு சுபிக்ஷமான வருஷம் என்று சொல்லலாம்.
மஹா மஹம் போன்ற லக்ஷக்கணக்கான பக்தர்கள் கூடும் கும்பகோணத்துக்கு நாட்டின் பல பகுதிகளிலிருந்து பக்தர்கள் வந்த வணயம் இருந்தார்கள். வெள்ளைக்கார அரசாங்கம் ரயில் போக்குவரத்துக்கு நல்ல ஏற்பாடு செய்திருந்தது. தென்னிந்திய ரயில்வே நிர்வாகம் விசேஷமாக மஹாமஹ வைபவத்துக்காக சில புது ரயில்களை வேறு அளித்திருந்தது. போலீஸ் ஒழுங்கு, பாதுகாப்பு, பந்தோபஸ்துக்கென்று கூடுதலாக காவல் படையினர் பொதுமக்கள் சேவைக்கென நியமிக்கப்பட்டார்கள். ஜன நெரிசல், போக்குவரத்துக்கு எவ்வளவு ஆள் இருந்தாலும் எப்போதுமே போதாது. சும்மா சொல்லக்கூடாது. வெள்ளைக்காரன் காலத்திலே கடமை உணர்ச்சி பணியாளர் களிடம் இருந்தது. அப்பவே ஆறு ஏழு லக்ஷம் ஜனங்கள் கும்பகோணத்தில், அதுவும் மஹாமஹ குளத்தில் ஸ்னானம் செய்ய என்றால் எந்த அளவுக்கு போலீஸ் கூட்டத்தை ஜாக்கிரதையாக கண்ட்ரோல் பண்ணி எந்த அசம்பாவிதமும் நடைபெறாமல் சமாளித்திருக்கிறார்கள். அநேகர் தங்கள் ஊரிலிருந்து மாட்டுவண்டிகளில், குதிரை வண்டிகளில், கால்நடையாக என்று கூட்டம் கூட்டமாக வந்திருந்ததால் எங்கு பார்த்தாலும் எண்ணற்ற மனித தலை வெள்ளம்.
ஆங்காங்கே சிலர் தனிநபர்களாகவும், நிறுவனங்களாகவும் அன்னதானம் செய்தவர்கள். இவற்றில் மிகப் பெரிய அளவில் பிரபலமாக அன்னதானம் கும்பகோணம் சங்கர மடத்தில் நடந்தது. அதை சிறப்பாக திறம்பட நடத்தியவர் தான் தேப்பெருமா நல்லூர் சிவன். இவரைப்பற்றி எவ்வளவு வேண்டுமானாலும் சொல்ல முடியும்.
ஒரு சின்ன சரித்திர பின்னோட்டம். 62வது பீடாதிபதி, ஸ்ரீ சந்த்ரசேகரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் காலத்தில் காஞ்சிபுரத்திலிருந்து மடம் கும்பகோணத்திற்கு இடம் மாறியது. காரணம். காஞ்சிபுரம், வேலூர் ஆகிய இடங்கள் கர்நாடக யுத்தத்தில் ஆங்கிலேயருக்கும், மைசூர் சுல்தான்களுக்கும் இடையே கடுமையாக நடந்த போர் காலத்தில் முஸ்லிம்களால் தாக்குதல்களுக்கு இறையாயின. பல ஹிந்து கோயில்கள் சிதைக்கப்பட்டு, விக் ரஹங்கள் உடைக்கப்பட்டன.
முன்னெச்சரிக்கையாக காஞ்சி மடாதிபதி முக்கிய காஞ்சி ஆலய விக்ரஹங்களுடன் தஞ்சாவூருக்கு சென்றார். தஞ்சாவூர் மராத்தியர்களால் ஆளப்பட்டு வந்தது. ராஜா பிரதாப சிம்மனின் மந்திரி டபீர் பந்த், காவேரி நதிக்கரையோரத்தில் பீடாதிபதிகளுக்காக ஒரு சின்ன ஆஸ்ரமம் அமைத்து தந்தார். காஞ்சி மடாதிபதிகள் அங்கே கும்பகோணம் காஞ்சி மடத்தை ஸ்தாபித்தார். ஒரு தென்னந்தோப்பாக இருந்த அந்த இடம் அக்ராஹாரமாக மாறியது. அந்த பக்தர் டபீர் பந்த் நினைவாக இன்னும் கும்பகோணத்தில் டபீர் தெரு இருக்கிறது.
1820ல் அப்போதைய தஞ்சாவூரை ஆண்ட சரபோஜி மஹாராஜா அந்த சின்ன மடத்தில் ஒரு கற்பகிரஹத்தைக் கட்டி பீடாதிபதிகள் பூஜை செய்வதற்கு வசதியாக்கினார்.. இது சம்பந்தமான கல்வெட்டு ஆஸ்ரம வெளிப்பக்க இடது சுவற்றில் பதிக்கப்பட்டு இருக்கிறது.
பழைய கட்டிடம் சிதிலமடைந்த நிலையில் மஹா பெரியவா பொறுப்பேற்றதும் திருவானைக் காவல் ஆஸ்ரமம் 1923ல் புதுப்பிக்கப்பட்டது. இதற்கு பொறுப்பேற்று நிறைவேற்றியவர் அப்போதைய மடத்து மானேஜர், வக்கீல் ஸ்ரீ K குப்புஸ்வாமி ஐயர், தேப்பெருமாநல்லூர் சிவன் ஆகியோர். நிதி உதவி செய்தவர்களில் முக்கியமானவர்கள் பெயர்களை குறிப்பிட்டாக வேண்டும். புதுக்கோட்டைக்காரர் திவான் பகதூர் D.N. முத்தையா செட்டியார் அப்போதே கொடுத்த பெரிய தொகை Rs.25,000/- . காஞ்சிமடம் தனது வருமானத்தில் கொடுத்த தொகை Rs.75,000/-. இவ்வாறு கும்பகோணம் மடம் உருவாகியது.
இந்த புனருத்தாரணம் 1933ல் மஹா பெரியவா தலைமையில் நிறைவேறியது. இதில் பங்கேற்று மேற்பார்வை பார்த்தவர் தேப்பெருமாநல்லூர் சிவன். ஆறுவருஷங்கள் கழித்து மேலும் கட்டிடம் அபிவ்ருத்தியாயிற்று. பெரிய சமையல்கூடம், ஸ்வாமிகளுக்கு தனியறை , கோசாலை ஆகியவை கூடுதலாக விஸ்தரிக்கப்பட்டது. இந்த நிர்மாண வேலைகள் நடைபெற உதவியவர்களில் முக்கியமான சில பெயர்கள் கும்பகோணம் டாக்டர் R. மகாலிங்கத்தின் தந்தையார், தாசில்தாராக இருந்த ஸ்ரீ ராமமூர்த்தி ஐயர் , டபீர் தெருவில் வாழ்ந்த கலெக்டர் ஸ்ரீ A . கிருஷ்ண ஸ்வாமி ஐயர் குமாரர் ஸ்ரீ கோபால ஐயர் . இவர்களைத் தவிர நன்கொடை கொடுத்தோர் பல பக்தர்கள். அவர்களில் சிலர் தான் ராமநாதபுரம் ராஜா, கொல்லங்கோடு ராணி ராஜா கோவிந்த தீக்ஷிதர் வேத பாடசாலையின் நிறுவனத்தார் போன்றவர்கள். .
ஏற்கனவே குறிப்பிட்டிருந்தபடி, தஞ்சாவூரை நாயக்க மன்னர்கள் ஆண்ட காலத்தில் அவர்களுக்கு பிரதம மந்திரியாக இருந்தவர் கோவிந்த தீக்ஷிதர். மகாமக குள படித்துறைகள், மற்ற எத்தனையோ ஆலயங்கள் நிர்மாணித்தவர். அவர் நிறுவியது தான் கும்பகோணத்தில் உள்ள கோவிந்த தீக்ஷிதர்வேத பாடசாலை. இந்த பாடசாலைக்கு பெரிதும் ஆதரவு தந்து உதவியவர்கள் நாயக்க மன்னர்களுக்கு பின்னர் தஞ்சாவூரை ஆண்ட மராத்திய மன்னர்கள். தேவஸ்தானம் கமிட்டி ஒன்று இதை நிர்வகித்து வந்தது.
1933ல் மஹா பெரியவா கும்பகோணத்தில் இருந்தபோது கமிட்டி தலைவர் ஸ்ரீ K.R.M. சிங்காரம் செட்டியார். அவர் பொறுப்பில் பாடசாலை புதிதாக உருப்பெற்றது. தேவஸ்தான அழைப்பை ஏற்று மஹா பெரியவா கும்பகோணத்தில் இந்த கட்டிடத்தை 1933ல் திறந்து வைத்தார். மஹா பெரியவாளை வரவேற்று உபசரித்து பேசியவர் முனிசிபாலிட்டி தலைவர் ஸ்ரீ முத்துக்குமார செட்டியார்.
No comments:
Post a Comment