Saturday, October 16, 2021

PESUM DHEIVAM




 பேசும் தெய்வம் -  நங்கநல்லூர்  J  K  SIVAN  --


87.  மஹாபெரியவாளின் மஹாமஹ ஸ்னானம் 

1933ம் வருஷம் பெப்ரவரி மாதம்  சென்னையிலிருந்து   மஹா பெரியவா  கும்பகோணம் மஹா மஹ வைபவத்துக்காக  கும்பகோணம் புறப்பட்டார்.  கும்பகோணமும் மஹாமஹமும்  பிரிக்க முடியவை.  ஆகவே  மஹா மஹத்தைப் பற்றி கொஞ்சம் சொன்னால்  தான் கும்பகோண  மஹாதமியம்  தெரியவரும்.  நான் எழுதுபவை  விஷயம் தெரிந்தவர்களுக்கு அல்ல.   விஷயஞானம் உள்ளவர்கள் என் எழுத்துக்கள் மூலம் அறியவேண்டிய அவசியம் இருக்காது.  இது என்னைப்போன்ற அதிக விஷயங்கள் தெரியாதவர்களுக்கு.  நானும் தெரிந்துகொண்டு அவர்களுக்கும்  முயன்ற  வரை எளிமையாக  சுருக்கமாக சொல்ல செய்யும்   முயற்சி.

கும்பகோணம்  என்றாலே  கோவில்கள்  தான்  நினைவுக்கு வரும். அவ்வளவு சிறப்பு வாய்ந்த புண்ய ஸ்தலம். எத்தனை எத்தனை  சிவன் கோவில்கள், பெருமாள் கோவில்கள். அம்பாள் சந்நிதிகள். கும்பகோணம் என்று பெயர் வந்ததே ஒரு விசித்திர சம்பவத்தால் தானே.  கடைசி மஹா பிரளயம்  கலியுகம்  துவங்கும் முன்பு.  ப்ரம்மா  சிவனிடம்  சென்றார்:

 '' பரமேஸ்வரா, மஹா பிரளயம் ஆரம்பிக்கும் முன்  அடுத்த   ஜீவ சிருஷ்டிக்கு உங்கள்   உத்தரவு என்னவென்று கட்டளையிட வேண்டும்''  என்கிறார்.  

'  மஹா ப்ரளயத்துக்கு முன்பே ,  பூமியில் இருந்து நிறைய  மண் எடுத்து வைத்துக் கொள் . அம்ருதத்தோடு மண்ணைப்  பிசைந்து மண் குடம் தயார்  செய்.   சகல ஜீவராசிகளின் விதைகள், பிந்துக்களையும் , உயிர் சத்துக்களையும்  அதில் நிரப்பு. அம்ருதத்தை அவற்றின் மேல்  தெளி. 
 மாவிலைகளால் அலங்கரித்து  தேங்காயை வைத்து  அழுத்தி மூடி பூர்ண கும்பத்துக்கு   உபவீதம் (பூணல்) அணிவித்து,  தர்ப்பாசனம் , வஸ்திராலங்காரம் செய்து பூஜித்து  மேரு சிகரத்தின் தெற்கு பாகத்தில் வை''
ப்ரம்மா அவ்வாறே செய்ய, மஹா பிரளயம் துவங்கியது.  எங்கும் இருள் சூழ்ந்தது. விடாது மழை பெய்து வெள்ளமயம்.  சூரைக் காற்று  வேறு சேர்ந்து கொண்டது.  நம் அனுபவத்தில் கண்ட
 சுனாமியை விட பல மடங்குகள் அதிக சக்தி வாய்ந்தது.   சர்வமும் அழிந்தது.  பிரளயம் முடிந்தது.  சூர்யன் மெதுவாக  உதித்தான். மழை,  காற்று ரெண்டுமே நின்றது.   மேருமலையின் தெற்கிலிருந்து  ப்ரம்மா வைத்த கும்பம்  நீரில் மிதந்தது. தெற்கு நோக்கி  நகர்ந்தது.ப்ரம்மா அதை தொடப் போகும் போது,  அதி  உஷ்ண அனல் காற்று  அதிலிருந்து வீசியது.  பிரம்மாவால் அதன் அருகில் நெருங்க முடியவில்லை. பரமேஸ்வரன்  இதைப்  பார்த்துக் கொண்டிருந்தார்.  தனது  பாணத்தினால்  அந்த கும்பத்தை இரண்டாக பிளந்தார்.  

கும்பத்தின்  கழுத்து, மாவிலைகள்,  தேங்காய், தர்ப்பை, பூணல் விழுந்த இடங்கள்  க்ஷேத்ரங்க ளாயின.    தேங்காய் கும்பத்திலிருந்து  விழுந்த  இடம்  தான்  மஹாமஹ   குளத்தின் தெற்கே   நாம் வழிபடும் அபி முகேஸ்வரர் ஆலயம்.  யக்னோபவீதம் விழுந்த இடம் தான்  மஹாமஹ  குளத்தின்   வடக்கு பக்கம்  உள்ள  கௌதமேஸ்வரர் ஆலயம்’ .  மாவிலைகள்  கும்பகோணத்திலிருந்து  ஐந்து மைல் தாண்டி  திருப்புறம்பியம் என்னும் ஊரில்  விழுந்தது. அந்த கும்பத்தின் வாய்  பாகம்  பத்து மைல்  தள்ளி தென் கிழக்கில் விழுந்த இடம்  தான்  குடவாசல்.  பரமேஸ்வரன் நின்று கொண்டு  கும்பத்தின் மேல்  பாணம்  செலுத்திய இடம் தான் கும்பகோணத்துக்கு தெற்கே உள்ள பாணாதுறை.  கும்பத்தின் பெரும்பாகம் விழுந்த இடம் தான் இன்றைய கும்பகோணம். கும்பத்திலிருந்து  ரெண்டு துளி அம்ருதம் விழுந்த இடம்   ரெண்டு குடங்களாகி  விட்டது.   ஒன்று  மஹாமஹ  குளம்.  இன்னொன்று கும்பகோணத்தில்  இருக்கும் பொற்றாமரைக் குளம் என்கிறார்கள்.

 பரமேஸ்வரன்  குடம் விழுந்த  இடமான கும்ப கோணத்துக்கு  வந்து அங்கே ஒரு சிவலிங்கத்தை   அம்ருதத்தோடு  சேர்த்து மண்ணால் பிடித்து ஸ்தாபித்தார்.   தானே  அந்த சிவலிங்கத்தில் ஜோதி ஸ்வரூபமாகவும்  கலந்தார்.   அவர் தான்  நாம் இன்றும்  நாம்  வழிபடும்  ஆதி கும்பேஸ்வரர். நம்மை வாழவைக்கும்  சர்வ சக்தி.   கும்பகோணத்தின் மையமாக விளங்கும்  ப்ரம்ம சக்தி ஸ்வரூபம். 

ப்ரம்மா பத்து நாட்களுக்கு  பரமேஸ்வரன் உருவாக்கிய  ஸ்வயம்பு சிவலிங்கத்திற்கு  பூஜை செய்தார்.  மஹாமஹ தீர்த்தத்தால்  அவப்ருத ஸ்னானம் செய்வித்தார். அவர்  அப்படி  ஸ்னானம் செய்வித்தநாள்  தான் மஹாமஹ பூர்ணிமை .  இன்னொரு விஷயம்,  சிம்ம ராசியில் குரு இருக்கும் போது,  அதற்கு நேர் ஏழாம் க்ரஹத்தில்  சம சப்தம ஸ்தானமான கும்ப ராசியில் சூர்யன்,  மகத்தில் சந்திரனும்,  சேர்ந்த  பௌர்ணமி நாள் தான்  மஹாமஹம்.   இப்படி  ஒரு  ஜோடனை, சந்திப்பு, அமைப்பு  பன்னிரண்டு வருஷங்களுக்கு ஒரு தடவை தான் வரும்.  ஆகவே தான் பன்னிரண்டு வருஷங்களுக்கு ஒரு முறை கும்பகோணத்தில் மாசி மாதம் மஹா நக்ஷத்ரத்தன்று   மஹா மஹ  வைபவம் நடைபெறுகிறது.  ஒன்பது புண்யநதிகள்  மகாமக குளத்தில் கலப்பதாக ஐதீகம்.  புண்யநதிகளின் பாபத்தை தீர்ப்பது மஹாமஹ குள  தீர்த்தம். இதெல்லாம் கணக்கில் கொண்டு  நடைபெறுவது பிரம்மோத்சவம்.   வடக்கே  நடக்கும் கும்ப மேளா மாதிரி லக்ஷோப லக்ஷம் பக்தர்கள்  குழுமி கூடும்  இடம்  தான் இது. உலகின் பல பாகங்களிலிருந்தும்  பக்தர்கள் வருவார்கள்.  எல்லோரும் ஸ்னானம் செய்ய தக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

மஹாமஹ  குளத்தில் அடியிலிருந்து  ப்ரம்ம தீர்த்தத்தோடு  மற்றும் எட்டு தீர்த்தங்கள் சுரக்கி றது. அவை அஷ்ட திக் பாலகர்கள் என்பதாக  நம்பிக்கை. மஹா மஹ  குளத்தின் நான்கு பக்கங்களிலும்   ஒன்பது தீர்த்தங்கள் கலப்பதாக  ஐதீகம் என்று சொன்னேனே  அந்த ஒன்பது புண்ய  நதிகள் பெயர்கள்  சொல்லாமலிருக்கலாமா?    அவை தான், கங்கை,  யமுனை, கோதாவரி, நர்மதா, ஸரஸ்வதி ,  வாயுவேரி, குமாரி, ப்யோஷ்ணி, சரயு,   அறுபத்து ஆறு கோடி  தீர்த்தங்கள் குளத்தின் மத்தியில்  ஊற்றுக்களாக  கிணறுகளிலிருந்து வெளிவருகிறது என்பார்கள். 

ஒருமுறை  கங்காதேவி தாங்கமுடியாத சோகத்தோடு கைலாசத்தில் பரமேஸ்வரனை தரிசிக்க சென் றாள்.  அவளோடு சேர்ந்து மற்ற புண்யநதிகளும் ஒரு கோஷ்டியாக  வந்துள்ளன. கங்கை தான் லீடர். 

''என்ன கங்காதேவி இவ்வளவு பேருடன் இங்கே வந்திருக்கிறாய், ஏன் எல்லோருமே  சோகமாக இருக்கிறீர்கள்?''

''பிரபு  எப்படிச்  சொல்வோம்.  எங்களிடம் ஸ்னானம் செய்ய அனுதினமும் பூமியில்  எண்ணற்ற  பாபிகள் வந்து  அவர்களுடைய   பாபத்தை எல்லாம் எங்களிடம் தள்ளிவிட்டு  புனிதமடைந்து திரும்புகிறார்கள்.  நாங்கள் இந்த பாபத்தை எங்கு சென்று அழிப்பது? நீங்கள்  தான் எங்களுக்கு ஒரு  வழிகாட்ட வேண்டும்''

''கங்கா தேவி, நீங்கள் அனைவரும்  தெற்கே கும்பகோணம் செல்லுங்கள்,  அது சிவ- விஷ்ணு க்ஷேத்ரம்,  மஹா பூர்ணிமா தினத்தன்று மாசி  மாதம் நீங்கள் அங்கே சென்று ஒரு முறை மஹாமஹ  குளத்தில்  ஸ்னானம் செய்தாலே போதும். சகல பாபங்களும் நீங்கிவிடும். ''

''ஸ்வாமி, உங்கள்   ஆசிக்கு  நன்றி.  ஆனால் ஒரு சின்ன விஷயம்.  எங்களுக்கு  கும்பகோணம் போக வழி தெரியாதே?

''அது ஒரு  பிரச்னையே  அல்ல. அப்போது நானும்  உங்களுடன் வருவேன். என்னைப்  பின் தொடருங்கள் என்று  ரிஷப வாகனத்தில் பார்வதி யோடு பரமேஸ்வரன் கும்பகோணத்துக்கு  மஹாமஹம்  அன்று  ப்ரசன்னமாகிறார்.  கும்பகோணத்தில் குளத்தின் வடக்குப் பக்கம்,  அமர்ந்து  விடுகிறார்.  அந்த நேரம்  கங்கை மற்ற புனித நதிகள், தேவாதி தேவர்கள் அனைவரும்   மஹாமஹ  குள  ஸ்னானம் செய்யச் செல்கிறார்கள். அந்த இடம் தான்  குளத்தின் வடக்கு பக்க ஆலயமான  மேலே சொன்ன  கௌதமேஸ்வரர்  ஆலயம்.  அதில் சிவனைத் தவிர  ஒன்பது புண்யநதிகளின் சிலைகள் உள்ளன.

நான் சொன்னது இட்டுக்கட்டியோ, கட்டுக்கதையோ அல்ல.  பவிஷ்யோத்ர புராணம் சொல்லும் விஷயம்.

நாயக்க  ராஜாக்கள்  தஞ்சாவூரை ஆண்டபோது  அவர்களது பிரதம மந்திரி கோவிந்த தீக்ஷிதர்  நாயக்க மஹாராஜாக்கள்  சார்பாக  கட்டிக் கொடுத்தவை தான்  மஹாமஹ குளத்தின் படித் 
துறைகள்,   பதினாறு மண்டபங்கள்,  ஆங்காங்கே  பிரதிஷ்டை  செய்யப்பட்டுள்ள  சிவலிங்கங்கள்.  கோவிந்த தீக்ஷிதர் தஞ்சாவூரை ஆண்ட  முதல் மூன்று  நாயக்க மன்னர்களின்   பிரதம மந்திரியாக இருந்தவர். 

மஹா மஹ குளத்தின் வடக்கே, ப்ரம்ம தீர்த்த  மண்டபத்தில்  ஆதி கும்பேஸ்வரர்  மஹாமஹத்தன்று  மட்டுமல்ல  ஒவ்வொரு மாசி மஹத்தன்றும்  தரிசனம் தருவார். 

மஹா பெரியவா 1933ம் வருஷம்   மஹாமஹம்  ஆங்கிரஸ  வருஷம் , மாசி  25ம் நாள்,  (மார்ச்  8ம் தேதி),  நடைபெற்றது. அதற்கு   ரெண்டு நாள் முன்பு  திருவிடைமருதூர் சென்று தரிசனம் செய்து விட்டு கும்பகோணம் வந்துவிட்டார். 

மெட்ராஸ்  லா  ஜர்னல் பப்பிளிகேஷன்ஸ்  என்ற சட்ட குறிப்புகள் பிரசுரிக்கும் நிறுவன அதிபர்  ஸ்ரீ R  நாராயணஸ்வாமி ஐயர் அவர்கள் இல்லத்தில்  மகா பெரியவா தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்திருந்தார்கள். அவரோடு  சிஷ்யகோடிகள் பலரும் எப்போதும் செல்வார்களே. அனைவருக்கும் தக்க வசதிகள் செய்யப்பட்டிருந்தது.   மஹாபெரியவா  ஆயிரக்கணக்கான பக்தர்களுடன் சேர்ந்து  ஆதிகும்பேஸ்வரரை  தரிசித்தவாறு  மஹா மஹ ஸ்னானம் பண்ணினார்.  பிறகு திருவிடை மருதூர் திரும்பினார்.  1919லேயே  காசி விஸ்வநாத  தரிசனம் செய்ய ஒரு சங்கல்பம் இருந்தது. அதை நிறைவேற்றாமல் சங்கரமடம் செல்வதில்லை என்று ஒரு தீர்மானம். 
தொடரும் 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...