#பேசும்தெய்வம் - நங்கநல்லூர் J K SIVAN -
82. ரெண்டு பாலகிருஷ்ண ஜோஷிகள்..
1932 டிசம்பரில் மஹா பெரியவா சென்னை சௌகார்பேட்டையில் இருக்கும் ஹிந்து தியோ லாஜிக்கல் உயர்நிலைப் பள்ளி என்ற ஒரு புகழ் வாய்ந்த பள்ளிக்கு விஜயம் செய்து அங்கு ஒரு உபதேசம் நிகழ்த்தினார். அதன் சாராம்சம்:
''குலபதி '' என்ற பட்டத்தால் கௌரவிக்கப் படுபவர்கள் சிறந்த கல்விமான்கள். சகலமும் கற்ற பண்டிதர்கள். சிலர் சதுர்தச வித்யைகளிலும் உள்ள ஸகல சாஸ்த்ரங்களையும் ஸாங்கோபாங்கமாக ஆராய்ந்து கற்றுக்கொடுப்பதற்காக பல ஆசிரியர்களைத் தம் கீழே வைத்துக்கொண்டும், ஸீனியர் ஸ்டூடன்ட்களைக் கொண்டு ஜூனியர் களுக்குக் கற்றுக் கொடுத்தும் ஏராளமான மாணவர்களுக்குக் கல்வி அளித்த குருமார்களாக காணப்படுகிறார்கள். இருந்திருக்கிறார்கள். “குலபதி” என்று மரியாதையோடு அழைக்கப் படுகிறவர்கள். அப்படி ரெண்டு பேர் நமக்கு உடனே ஞாபகத்துக்கு வருகிறார்கள். ஒருவர் பவான்'ஸ் ஜர்னல் என்ற அருமையான பத்ரிகையை நடத்திய ஆசிரியர் குலபதி K M முன்ஷி. மற்றொருவர் சென்னையில் புகழ் வாய்ந்த சென்னை தங்கசாலையில் இன்னும் உள்ள, ஒரு பழைய பள்ளிக்கூட மான ஹிந்து தியோலொஜிக்கல் உயர்நிலைப் பள்ளி என்று பெயர் பெற்ற கல்வி நிலைய தலைமை ஆசிரியர் குலபதி ஸ்ரீ பால கிருஷ்ண ஜோஷி. ஜோஷி மஹா பெரியவா பக்தர். மஹா பெரியவாளை பள்ளிக்கு அழைத்திருந்தார். அப்போது நிகழ்த்திய உரை இது.
''நான் சொன்ன ரெண்டு குலபதிகளும் குஜராத் காரர்கள்! இருவர் பேரும் ‘ஷி’யில் முடிகிறது! ஆனால் இவர்கள் நான் இப்போது சொன்ன ஒரிஜினல் அர்த்தப்படி ‘குலபதி’கள் இல்லை. காலப்போக்கில், கல்வி ப்ரசாரத்தில் மிகவும் சிறப்பாகத் தொண்டு செய்யும் ஒரு பெரியவரைக் ‘குலபதி’ என்று சொல்வதாக ஏற்பட்டதிலேயே இவர்களைக் குலபதி என்கிறோம். முன்ஷி அநேக வித்யா சாலைகளும், நம்முடைய கலாசார ப்ரசாரத்துக்காக வித்யாபவனமும் வைத்தவர். ஜோஷி அநேக வருஷங்கள் உசந்த முறையில் ரொம்பவும் நல்ல பெயருடன் தியாலஜிகல் ஹைஸ்கூலில் ஆசிரியராக இருந்தவர். அதனால் இவர்களைக் ‘குலபதி’ என்று சிறப்பித்துச் சொல்கிறோம்.
வஸிஷ்டர் மாதிரி மஹா பெரியவராக ஒரு குரு இருக்கிறபோது அவரிடம் நாலு வார்த்தையாவது நேரே கற்றுக்கொண்டு “வஸிஷ்ட சிஷ்யன்” என்று பெயர் வாங்க வேண்டுமென்று ஏராளமானவர் களுக்கு ஆசை இருக்கும் இல்லையா?
இவர்களுடைய ஆசையைப் பூர்த்தி பண்ண, இந்த ரெண்டு குலபதிகளும் அத்தனை வித்யார்த்தி களையும் குருகுலத்தில் சேர்த்துக் கொண்டு, நிறைய ஆசிரியர்களைத் தங்களுக்குக் கீழே அமர்த்திக் கொண்டு இவர்கள் மூலம் அவர்களுக்குப் பாடம் சொல்லித் தருவது, ஆரம்ப கட்டங்களில் ஏதோ ஒன்றிரண்டு விஷயங்கள் மட்டும் தாங்களே சொல்லிக் கொடுத்து, “அட்வான்ஸ்ட்” கட்டம் வரும்போது ஸவிஸ்தாரமாக க்ளாஸ் எடுப்பது என்று வைத்துக் கொண்டிருந்திருக்கிறார்கள்.
போன (பத்தொன்பதாம்) நூற்றாண்டில் மன்னார்குடி ராஜு சாஸ்த்ரிகள் (மன்னார்குடி பெரியவா என்று இவரைப் பற்றி எழுதி இருக்கிறேன்) என்று வித்யா பாரங்கதராக ஒருவர் இருந்தார். பாரங்கதர் என்றால் கரை கடந்தவர். ‘பாரம்’ (paaram) என்றால் அக்கரை. அவருடைய சிஷ்யர்கள் என்று ரொம்பப் பேர் அடுத்த தலைமுறையில் வந்தார்கள். அவ்வளவு பேரும் முழு வித்யாப்யாஸமும் அவரிடம் செய்தவர்களில்லை. கடைசி ஸ்டேஜில்தான் இவர்கள் நேரே அவரிடம் பாடம் கேட்டது. அதற்கு முன் அநேகமாக ஸீனியர் மாணவர்களிடம்தான் இவர்கள் படித்ததெல்லாம்.
“ரகுவம்ச”த்தில் (முதல் ஸர்க முடிவில்) வஸிஷ்டரைக் “குலபதி” என்று சொல்லியிருக்கிறது. “சாகுந்தல”த்தில் கண்வ மஹர்ஷியைக் குலபதி என்று சொல்லியிருக்கிறது. சிறிது காலம் கழித்து ஏராளமாக சாஸ்த்ரங்களும் காவ்யங்களும் உண்டாகிவிட்டபோது, பத்தாயிரம் மாணவர்களுக்கு இம்மாதிரி குருகுலம் நடத்துகிறவருக்குத்தான் “குலபதி” என்ற பெயர் கொடுக்கப்பட்டது. பத்தாயிரம் என்பது அதிசயோக்தியாய் (மிகைபடக் கூறலாய்) இருக்கலாம் என்கிறார்கள். எப்படியானாலும் நூற்றுக் கணக்கிலாவது மாணவர்கள் இவற்றில் இருந்திருக்கக்தான் வேண்டும். இதில் கவனிக்க வேண்டியது என்ன என்றால் இத்தனை மாணவர்கள் இருந்தபோதிலும் குருவானவர், அதாவது அந்தக் குலபதியானவர், ஃபீஸையோ FEES, தக்ஷிணையையோ நினைக் காமல், அவ்வளவு மாணவர்களுக்கும் ஆசிரியர்க ளுக்கும் தாமே சாப்பாடு போட்டு ரக்ஷிக்கும் நிஜ ஆசார்யராக இருந்திருக்கிறார்! ‘யோ அன்ன தானாதி போஷணாத் அத்யாபயதி‘ – ‘எவன் சாதம் போட்டுப் பாடம் சொல்லித் தருகிறானோ அவனே குலபதி’ என்று லக்ஷணம் சொல்லியிருக்கிறது. ‘நல்ல கார்யம் செய்கிறார். தன் ராஜ்யத்தில் நிறைய வித்வான்களை உருவாக்குகிறார்’ என்று ராஜா பாட்டுக்கு இவருக்கு ஸம்பாவனை பண்ணிக் கொண்டிருப்பான். இவரும் ஏராளமான சீடப் பிள்ளைகளைக் கல்விமான்களாக்குவார். “வ்ருத்யர்த்தம்” (பணத்துக்காக) என்ற வாடையே இராது.
ஆனாலும் மொத்தத்தில் பார்த்தால் பெரிய வித்யாசாலைகள் நடத்திய குலபதிகள் அபூர்வ மாகத்தான் இருந்தார்கள். தனியாக ஒரு ஆசார்யன் சிறிதாக குருகுலம் நடத்துவதே பொது விதியாக இருந்தது.
பாலகிருஷ்ண ஜோஷி கேடவால் என்ற குஜராத்தி வகுப்பை சேர்ந்தவர். 17ம் நூற்றாண்டின் முற் பகுதியிலிருந்து இந்த குடும்பத்திற்கு தமிழக தொடர்பு இருந்தது. ஜோஷியின் அப்பா தாத்தா ஹிந்து தியோலொஜிக்கல் பள்ளியோடு சம்பந்தப்பட்டவர்கள். இந்த பள்ளி 1889ல் சிவசங்கர பாண்டியா என்பவரால் நிறுவப்பட்டது. 19ம் வயதில் இந்த பள்ளியில் ஆசிரியராக பாலகிருஷ்ண ஜோஷி சேர்ந்தார். SSLC படிக்கும் சம வயதுள்ள, வயதில் கொஞ்சம் பெரிய மாணவர்களுக்கு ஆங்கிலம் , சரித்திரம், கற்பித்தவர். 55 வருஷங்கள் இந்த பள்ளியோடு அவருக்கு நெருங்கிய தொடர்பு.
'கல்வி என்பது தரத்தில் குறைந்து விட்டது என்று அறியும்போது மனதுக்கு வேதனையாக இருக்கிறது. ஏதோ சில விஷயங்களை அறிவது தான் கல்வி என்று ஆகிவிட்டது. கல்வி எனும் பொருளை விற்பனை செய்யும் கடைகளாக பள்ளிக்கூடங்கள் மாறிவிட்டன. கல்வி என்பது பட்டம் பதவி பெற என்று ஆகிவிட்டது. தேர்வுகளில் பாஸ்மார்க் எடுத்து தேறவேண்டும் என்பதே கல்வியின் நோக்கமாக போய்விட்டது. படிப்பவர்களும், பெற்றோர்களும் கல்வியை ஒரு சம்பாதிக்கும் உபகாரணமாக தான் பார்க்கிறார்கள். நல்ல வேலை கிடைத்து நிறைய சம்பாதிக்க படிக்கும் நிலை. கல்வி கற்பதற்காக ஏற்பட்டு விற்பதற்காக ஆகிவிட்டது.''
+++
இந்த சமயத்தில் இன்னொரு பாலகிருஷ்ண ஜோஷி பற்றி சொல்லவேண்டும். அவர் குலபதியின் நெருங்கிய உறவினர். அந்த குடும்பம் வைர வியாபாரம் செயதுவந்தது. அந்த பாலகிருஷ்ண ஜோஷி பெரியவளோடு மடத்தில் வளர்க்கப்பட்டவர். அவரைப்பற்றிய கட்டுரை கீழே தருகிறேன். அந்த பாலகிருஷ்ண ஜோஷி மஹா பெரியவாளோடு இருக்கும் படம் இணைத்திருக்கிறேன். மடத்தில் வளர்ந்த பாலகிருஷ்ண ஜோஷி பற்றிய கட்டுரை இதோ:
''சித்திரை மாதம் என்று சொல்லும்போதே உடல் வியர்க்கும். உஷ்ணம் தஹிக்குமே . தமிழ் புது வருஷம் அன்று. காலை வெயிலே சுரீர் என்று இருந்தாலும் அதைக் கொஞ்சமும் லக்ஷ்யம் பண்ணாமல் காஞ்சி மடத்தில் பெருங்கூட்டம். பெரியவா என்ற குளிர்ந்த மாமலையின் அருகே வெயில் தெரியவா போகிறது?. பாம்பு போல் நெளிந்து வளைந்து வரிசையாக பக்தர்களுக்கு நடுவே ஒரு பதினாறு வயது பையன். அவன் வரிசையில் நத்தையாக நகர்ந்து பெரியவா எதிரில் செல்லும் போது காலை பத்து மணியாகிவிட்டது. பசி. சாஷ்டாங்கமாக நமஸ்காரம் பண்ணினான் பையன்.
'எழுந்திரு'' . எழுந்தான். இரு கையும் சிரத்தின் மேல். கண்களில் தாரை தாரையாக கண்ணீர்.
''கிட்டே வா'' - பெரியவா கையால் ஜாடை காட்ட அருகே கை கட்டி நின்றான்.
''உன் பேர் என்ன. எங்கிருந்து வரே ?''
''என் பேர் பாலகிருஷ்ண ஜோஷி. குஜராத்தி பிராமணா. மெட்ராஸ்லே தான் இருக்கோம்.'' வாயை கையால் பொத்தி பதில்.
''எந்த இடத்திலே இருக்கே ?''
''ஹனுமந்தராயன் கோயில் கிட்டே சுவாமி''
''என்ன படிச்சிருக்கே?''
''எட்டாவது பெரியவா''
''ஓஹோ. இன்னிக்கு புது வருஷம் எங்கிறதாலே காஞ்சிபுர கோவில் தரிசனம் எல்லாம் பண்ண வந்தியோ?''
"இல்லை. பெரியவா தரிசனத்துக்காக''
''அபச்சாரம், அபச்சாரம். அப்படியெல்லாம் சொல்லப்படாது. எங்கேயாவது போனா, முதல்லே சிவன், விஷ்ணு கோவில் தான் போகணும். நான் அப்பிடித்தான் எங்கே போனாலும் பண்றேன். அப்புறம் தான் என் வேலை. புரியறதா? '' சிரித்துக்கொண்டே பேசும் தெய்வம் சொல்லியது.
''புரியறது பெரியவா''
"சரி. பிரசாதம் வாங்கிண்டு கோவில்களுக்கு போ. அப்புறம் மெட்ராஸுக்கு பஸ் ஏறணும். என்ன?'' அழுத்தமாக சொன்னார் மகா பெரியவர்.
''பெரியவா சொன்ன மாதிரியே எல்லா கோவிலும் போய்ட்டு மடத்துக்கு வந்து பெரியவா அனுக்கிரஹம் வாங்கிக்கிறேன்'' தைரியமாக சொன்னான் பாலகிருஷ்ண ஜோஷி.
''ஓஹோ கோவில்கள் தரிசனத்துக்கு அப்புறம் மடத்தில் சாப்பாடா? அப்பறம் பஸ். சரி சரி. பிரசாதம் தரேன் ''
'பாலகிருஷ்ண ஜோஷி ஏதோ சொல்ல தயங்கினான். கண்களில் நீர்.
''என்ன விஷயம் சொல்லு''
''இங்கேயே கொஞ்சகாலம் தங்க........''
''இங்கன்னா என்ன அர்த்தம். புரியலே''
''பெரியவாளோடு மடத்தில்'' பவ்யமாக சொன்னான்.
''என்ன இந்த மடத்திலேயா? இது சன்யாசிகளுக்குடா, உன்னை மாதிரி சின்னப் பசங்களுக்கு இங்கே என்ன வேலை. போய் ஸ்வாமிதர்சனம் எல்லாம் முடிச்சுண்டு ஊர் போய்ச் சேரு''
ஜோஷி நகரவில்லை. மீண்டும் நமஸ்கரித்தான்.
''பெரியவா அப்படி சொல்லக்கூடாது. என்னுடைய ஆசை இந்த மடத்தில் உங்களுக்கு சேவகம் பண்ணிண்டு இருக்கணும்னு தான்''
பெரியவா அவனைப் புரிந்து கொண்டார். அவனது தீர்மானம், பவ்யம் அவருக்கு பிடித்தது.
''எனக்கு பணிவிடை பண்ண ஏற்கனவே நிறையபேர் இருக்கா. இன்னொருத்தன் நீ எதுக்கு? பேசாம மெட்ராஸ் போ''
ஜோஷி நகர்ந்தான். மடத்தை விட்டு போகவில்லை. சாப்பிட்டான். பெரியவா சிரம பரிகாரம் பண்ணும் அறைக்கு வாசலில் ஒரு மூலையில் அமர்ந்தான்.
சாயந்திரம் பெரியவா ஸ்னானம் முடித்து வெளியே வந்தார். ஜோஷியை பார்த்தார் ஒன்றும் பேசவில்லை. கைகட்டி நின்ற ஜோஷியை கடந்து சென்றார். நான்கு நாட்கள் வைராக்கியமாக ஜோஷி அவர் பார்வையில் பட்டுக்கொண்டு நின்றான்.
ஐந்தாம் நாள் அதிகாலை மஹாஸ்வாமி காமாக்ஷியம்மன் கோயில் புஷ்கரணியில் உஷஸ் கால ஸ்நானம் செய்ய கிளம்பியவர் குளத்திலிருந்து கரை ஏறும்போது ஜோஷி நின்றதைப் பார்த்தார்..
''என்னடா, நீ இன்னும் மெட்ராஸ் போகலையா?''
''இல்லை பெரியவா. என் சங்கல்பம் முடியற வரை திரும்பலை ''
''அப்படி என்னடா சங்கல்பம்?'' -- தெரியாதது போல் கேட்டார் மகா பெரியவா.
''பெரியவா திருப்பாதங்களுக்கு பணிவிடை சிலகாலம் செய்யணும் '' தயங்கியவாறு சொன்னான் ஜோஷி.
''சாத்தியமில்லாத சங்கல்பத்தாலே என்ன பிரயோஜனம்?'' பெரியவா போய் விட்டார். காமாக்ஷி தர்சனம் செய்து விட்டு ஜோஷியும் மடத்துக்கு திரும்பி வழக்கம்போல் பெரியவா அறைக்கு வெளியே தரையில் அமர்ந்தான். பெரியவா வெளியே பக்தர்களுக்கு தரிசனம் தர வந்தபோது அவன் மீது பார்வை பட்டது. அவன் வைராக்கியம் தெய்வத்துக்குப் பிடித்தது.''இங்கே வா. உன்னோட அப்பா ஏதாவது ஆபிஸ்லே வேலையா இருக்காரா. வியாபாரமா?''
''வைர வியாபாரம், பெரியவா''
''ஓஹோ. உன் குணத்தை பார்த்தா நீயும் பெரிய வைர வியாபாரி ஆயிடுவே போல இருக்கு. அப்போ நாணயமானவன்னு பேர் எடுக்கணும் சரியா. இப்போ மடத்துலே சில பசங்க இருக்கா அவாளோடு சேர்ந்துண்டு எனக்கு நீயும் ஏதாவது பணிவிடை செய் போ ''
ஜோஷிக்கு பரம சந்தோஷம். அவன் எண்ணம் கை கூடிவிட்டதே. நாலைந்து பையன்கள் இருந்தார்கள். அவர்களோடு சேர்ந்துகொண்டான். ரெண்டு நாள் பெரியவாளுடன் தரிசனத்தில் இருந்தான். சொன்ன வேலையை செய்தான். அந்த ரெண்டு நாளும் அந்த பையன்களோடு படுக்கை. அதுவும் பெரியவா எங்கே தங்கினாளோ அந்த அறையில் ஒரு மூலையில். இதை ஒரு வரப் பிரசாதமாக கருதினான் ஜோஷி.
மூன்றாம் நாள் இரவு படுக்கும் முன்பு ''ஜோஷி '' பெரியவா கூப்பிட்டார்கள். நமஸ்காரம் பண்ணி விட்டு கைகட்டி வாய் பொத்தி நின்றான் அவர் ஏதிரே.
''இதோபார் ஜோஷி, நீ என்ன பண்றே, நாள் முழுக்க அந்த பையன்களோடேவே நீயும் எனக்கு சிச்ருஷை பண்ணு. ஆனா ராத்திரியிலே இங்கே தூங்கக்கூடாது. ''
அதிர்ந்து போன ஜோஷி ''பெரியவா எனக்கு இப்படி ஒரு தண்டனை தரக்கூடாது. மத்த பசங்களோடே நானும் இங்கே இருக்கேனே''
''இதோ பாரடா, ஒரு காரணமா தான் சொல்றேன். சொல்றதைக் கேளு''
''சரி பெரியவா சொல்றபடி நடக்கிறேன்''
''அப்படி சொல்லு'' .
சிரித்துக்கொண்டே பெரியவா சொன்னார்: ''நேரா சமையல் கட்டுக்குள் போனாக்க அங்கே கோட்டை அடுப்புக்கு பக்கத்திலே ஒரு பென்ச் இருக்கு. அதிலே படுத்துண்டுட்டு விடிகாலம்பற எழுந்து உன் கடமையெல்லாம் முடிஞ்சு, குளிச்சு, அப்புறம் என் கிட்டே வா. என்ன புரியறதா?''
மற்ற பையன்கள் ஓரமாக நின்று வேடிக்கை பார்க்க ஜோஷி கண்ணைத் துடைத்துக் கொண்டே பெரியவா சொன்னபடி ஜோஷி செய்தான். போகும் வழியில் ஒரு பையனிடம் கேட்டான் :
''ஏண்டா பெரியவா உங்க யார் கிட்டேயாவது இப்படி சமையல்கட்டு அடுப்பு கிட்ட பெஞ்சுலே போய் படுன்னு சொல்லியிருக்காளா?''
''இல்லேயே அப்படி யார் கிட்டேயும் சொல்லலியே'' என்றான் அவன்.
வருத்தத்தோடு சென்றான் ஜோஷி. இரவு பத்து மணி. ஒன்றும் ஆகாரம் சாப்பிடவில்லை.அடுப்பருகே பெஞ்சில் படுத்தான். மனது வாடியது. சாப்பிடவில்லை. துக்கம் தொண்டையை அடைக்க இரவெல்லாம் தூங்கவில்லை. பொழுது விடிந்தது. மடத்தில் அன்றாட நியதிகள் துவங்கியது. வேத பாராயணம் பஜனை ஒலித்தது.விடுவிடுவென்று எழுந்து, காலைக் கடன்கள் முடிந்து குளித்து காமாட்சி அம்மன் சந்நிதி சென்றான். மடம் செல்ல மனம் இடம் கொடுக்க வில்லை.
நடுப்பகல் சமயம் மடத்துக்கு வந்தான். சாப்பிட்டான். காமாட்சி கோவில் சென்றுவிட்டான். இரவு அடுப்படி படுக்கை. ரெண்டு நாள் இப்படி மஹா பெரியவாளை பார்க்கவில்லை.
மூன்றாம் நாள் காலை. பெரியவா மற்ற பையன்களை கேட்டார்.
''எங்கேடா அந்த பயல் ஜோஷி. ரெண்டு நாளா கண்ல படலையே . எங்கே போனான். என்கிட்டே சொல்லாம மெட்ராஸ் போயிட்டானோ?''
''இல்லை பெரியவா. இங்கே தான் மடத்தில் இருக்கான்''
''ரெண்டு நாளா காணோமே''
''தெரியலே பெரியவா''
இன்னொருத்தனையும் கேட்க அவனுக்கும் காரணம் தெரியவில்லை.
' சரி பார்த்தா அவனை இங்கே அழைச்சுண்டு வா'
கை கட்டி வாய் புதைத்து தலை குனிந்து அவர் எதிரில் ஜோஷி நின்றான்.
''என்னடா குழந்தே, உடம்பு சரியில்லையா. ரெண்டு நாளா உன்னை இங்கே காணோமே''
பதில் இல்லை.
''என்னடா சும்மா இருக்கே. என்ன துக்கம். ஒருவேளை என்மேலே கோவமோ?''
''அப்படியெல்லாம் சொல்லாதேங்கோ பெரியவா'' . மனசு உடைஞ்சுபோய் வருத்தம் வாய் குழற மெதுவாக சொன்னான்.
''அப்படி என்னடா வருத்தம். நான் தெரிஞ்சுக்க கூடாதா?'' -- எல்லோரும் ஆச்சர்யத்தோடு நடப்பதை மௌனமாக பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
கீழே தடாலென்று விழுந்து வணங்கிய ஜோஷி
''ஒண்ணுமில்ல பெரியவா. முதல் ரெண்டு நாள் மட்டும் மத்த பேரோடு உங்க அறையிலே படுக்க விட்டேள். அப்புறம் அடுப்படியில் எங்கேயோ போய் படுன்னு சொல்லிட்டேள். அவாள் எல்லாம் ப்ராமண தமிழ்க்காரா நான் குஜராத்தி பிராமணன்ங்கிறதாலேயோ'' ன்னு மனசிலே உறுத்தித்து.'' அழுது கொண்டே பதிலளித்தான் ஜோஷி.
ஒரு நிமிஷ அமைதியில் அவனை பார்த்தார் பெரியவா. மற்றவர்களை அனுப்பிவிட்டு அவனிடம்
''ஏண்டா பாலக்ரிஷ்ணா , நான் உன்னை அடுப்படிலே படுக்கச் சொன்னதுக்கு இப்படி ஒரு அர்த்தமா? நான் அந்த எண்ணத்திலே சொல்லலை. நீ சின்னப் பயல். தப்பா புரிஞ்சுண்டுட்டே. உக்காரு இங்கே''
தரையில் கைகட்டிக்கொண்டு உட்கார்ந்தான் .
''இங்கே பாரு'' மஹா பெரியவா தொடை வரை தனது காவி வஸ்திரத்தை உயர்த்தி காட்டினார். சிவப்பு சிவப்பாக நிறைய கொசுக்கடி அடையாளங்கள் அந்த தெய்வத்தின் ரோஜா நிற கால்களில்.
''இங்கே ராத்திரி எவ்வளவு கொசுக்கடி பார்த்தியா. நான் சந்நியாசி. பொறுத்துப்பேன். நீ குழந்தே. ரெண்டு நாளா நீ கொசுக்கடியிலே துடிக்கிறதை பார்த்துட்டு தான் ரோஜா நிறத்தில் இருக்கிற சின்ன குழந்தை கொசு வராத ஒரே இடம் சூடான அடுப்படி. அங்கே போய் படு ராத்திரிலே ன்னு சொன்னேன்.நீ என்னமோ பத்தி தப்பா கணக்கு போட்டுட்டே''. மஹா பெரியவா சிரித்தார். ஜோஷி அடக்கமுடியாத அழுகையால் ஓவென்று கதறினான்.
''பெரியவா, என்னை மன்னிச்சேன்னு சொல்லுங்கோ. உங்க கருணையை புரிஞ்சிக்காத முட்டாள் ஏதோ உளறிட்டேன்''
பெரியவாளின் அபய ஹஸ்தம் உயர்ந்தது.
''நீ பெரிய வைர வியாபாரியாயிடுவே. நாணயமா, ஞாய விலைக்கு வியாபாரம் பண்ணு''. பெரியவா ஆசி கிடைத்தது ஜோஷிக்கு.
சில வருஷங்கள் ஓடியது. பாலகிருஷ்ண ஜோஷி பெரிய தர்ம கைங்கர்யம் செய்யும் பிரபல வைர வியாபாரி பெரியவா பக்தர் என்று எல்லோரும் போற்றினர். பெரியவா சமாதி அடையும் வரை மடத்துக்கு வந்து தரிசனம் செய்தவர் சில வருஷங்களில் பெரியவா திருவடிகளை சேர்ந்தார்.
No comments:
Post a Comment