''மயில்குயில் செங்கா லன்னம்
வண்டு கண் ணாடி பன்றி
அயிலெயிற் றரவு திங்கள்
ஆதவ னாழி கொக்கோடு
உயர்விண் கமலம் பன்மூன்
றுறுகுண முடையோர் தம்மை
யியலுறு புவியோர் போற்று
மீசனென் றெண்ண லாமே.''
ஜம்புவும் தம்புவும் நண்பர்கள். பேசிக்கொண்டே ஆற்றோரம் நடக்கிறார்கள். எதிரே ஒரு பெண்மணி வந்தாள். அவர்களைப் பார்த்து புன்னகைத்து வணக்கம் என்று சொல்லி கை கூப்பி ஜாடை காட்டி விட்டு அசைந்து சென்றாள்.
''ஜம்பு, பார்த்தாயா, அன்னம் போன்ற சிவந்த கால்கள், மயில் போல் நடை, என்னைப்பார்த்து குயில் போன்ற குரலில் வணக்கம் சொல்கிறாள்''
தம்பு, உனக்கு கண்ணில் கோளாறு என்று இப்போது தான் தெரிகிறது. அவள் என்னையல்லவோ வணங்கி புன்னகைத்து சென்றாள்''
''அன்பர்களே, இருவருமே ஒன்று தெரிந்துகொள்ளுங்கள்: சாத்திரங்கள் என்ன சொல்கிறது தெரியுமா?, மயில், குயில், அன்னம், வண்டு, கண்ணாடி, பன்றி, கூரான விஷப்பற்களைக் கொண்ட பாம்பு, சூரியன்,சந்திரன், சமுத்திரம், கொக்கு, ஆகாசம், தாமரை, இந்த பதின்மூன்றும் தெய்வீக தன்மை வாய்ந்த மங்கள வஸ்துக்கள். ஒவ்வொரு கணத்திலும் இவற்றின் குணத்தை பிரதிபலிக்கிறவர்கள் தெய்வமாக கருதப்படுவார்கள் என்று சொல்லி சமாதானப்படுத்துகிறார்.
''அரும்பு கோணிடில் அதுமணம் குன்றிடா
கரும்பு கோணிடில் கட்டியும் பாகுமாம்
இரும்பு கோணிடில் யானையை அடக்கலாம்
நரம்பு கோணிடில் நாமதற் கென்செய்வாம்.''
நிறைய மல்லிகை பூத்துக் குலுங்கும் நந்தவனம். மல்லிகைச் செடிகளில் ஏராளமாக அரும்புகள். அவை அரும்புகள் என்பதால் மல்லிகையின் சுகந்த நறுமணம் அவற்றுக்கு இல்லாமல் போய்விடுமா? கரும்பு தோட்டத்தில் பார்க்கிறோம். ஏராளமாக கரும்புகள் குச்சி குச்சியாக உயர்ந்து நிற்கின்றன. சில கரும்புகள் நேராக வளராமல் வளைந்து இருக்கிறதே, அதனால் அந்த கோணல் கரும்புகள் சுவை இல்லாமல் போகுமா, வெல்லக்கட்டி அதிலிருந்து வராதா? இரும்புக் கம்பிகளை பார்க்கிறோம், நீளமாக கட்டு கட்டாக இருப்பதன் நடுவில் சில கோணலாக இருக்கிறது. அதனால் பயனில்லையா? அங்குசம் வளைந்து இருப்பதால் தானே யானையை அடக்க முடிகிறது? இதெல்லாம் சரி அதற்காக நரம்புகள் நமது உடலில் அது எப்படி இருக்கவேண்டுமோ அப்படி விண் என்று இல்லாமல் தளர்ந்து போனால் நாம் தளர்ந்த நரம்புகள் கொண்ட வீணை எப்படி மீட்ட உபயோகம் இல்லையோ அப்படி மூலையில் விழுந்து கிடைக்கவேண்டியது தான். உடலை, நரம்புகளை எலும்புகளை நன்றாக வளர்ச்சி பெற்று இயங்க நாம் பயிற்சி கொடுக்கவேண்டும். இந்த விவேக சிந்தாமணி இயற்றியவர் விவரமானவர் என்று தெரிகிறது.
''முடவனை மூர்க்கன் கொன்றால் மூர்க்கனை முனிதான் கொல்லும்
மடவனை வலியான் கொன்றால் மறலிதா னவனைக் கொல்லும்
தடவரை முலைமாதேயித் தரணியி லுள்ளோர்க் கெல்லாம்
மடவனை யடித்த கோலும் வலியனை யடிக்கும் கண்டாய்.''
No comments:
Post a Comment