பேசும் தெய்வம் J K SIVAN
ஒரு தடவை காஞ்சி காமகோடி சங்கர மட 58வது பீடாதிபதி ஆத்ம போதேந்த்ரர் எனும் விஸ்வாதிகேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் பக்தி மார்க்கத்தைப் பரப்பும் பொருட்டு காசி யாத்திரை புறப்பட்டார். அவரால் அடுத்த பீடாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் தான் பகவன் நாம போதேந்திராள்.
குருவின் உபதேசத்தின் படி ஸ்ரீ பகவந்நாம போதேந்திரர் பல கிராமங்களுக்குச் சென்றார் . ஆங்காங்கே பகவந்நாம மகிமை பற்றியும், அதுவே தலை சிறந்த மோக்ஷ சாதனம் என்பதையும் மக்களிடம் புரிய வைத்தார். அப்போது அருகே உள்ள திருவிச நல்லூரில் ஸ்ரீதர ஐயாவாள் சந்திப்பு நேர்ந்தது. சிறந்த சிவ பக்தரான ஐயாவாள் பற்றி ஏற்கனவே எழுதி இருக்கிறேன். அவர் போதேந்த்ராளை விட மூத்தவர். இருவரும் சேர்ந்து பல இடங்களில் பகவந்நாம பிரசாரம் செய்தவர்கள். போதேந்த்ரர் ஒரு சமயம் நீடாமங்கலத்தில் பெரம்பூர் எனும் கிராமத்தில் தங்கி இருந்தபோது ஒரு சம்பவம் நடந்தது.
குருவின் உபதேசத்தின் படி ஸ்ரீ பகவந்நாம போதேந்திரர் பல கிராமங்களுக்குச் சென்றார் . ஆங்காங்கே பகவந்நாம மகிமை பற்றியும், அதுவே தலை சிறந்த மோக்ஷ சாதனம் என்பதையும் மக்களிடம் புரிய வைத்தார். அப்போது அருகே உள்ள திருவிச நல்லூரில் ஸ்ரீதர ஐயாவாள் சந்திப்பு நேர்ந்தது. சிறந்த சிவ பக்தரான ஐயாவாள் பற்றி ஏற்கனவே எழுதி இருக்கிறேன். அவர் போதேந்த்ராளை விட மூத்தவர். இருவரும் சேர்ந்து பல இடங்களில் பகவந்நாம பிரசாரம் செய்தவர்கள். போதேந்த்ரர் ஒரு சமயம் நீடாமங்கலத்தில் பெரம்பூர் எனும் கிராமத்தில் தங்கி இருந்தபோது ஒரு சம்பவம் நடந்தது.
ஒரு நாள் அங்கே அவரை தரிசிக்க ஒரு இளம் தம்பதி வந்தனர். ''சுவாமி, எங்கள் கிரஹத்தில் நாளை பிக்ஷை ஏற்க வரவேண்டும் '
''நாளை வருகிறேன்''
மறுநாள் போதேந்திரர் அவர்களது வீட்டிற்குச் சென்றார். வேதகோஷ மந்திரம், பூர்ண கும்பத்தோடு வரவேற்று உபசரித்து அமரவைத்து எதிரே வாழை இலை போட்டார்கள். அவர் கண்கள் எதிரே இருந்த அறையில் அமர்ந்திருந்த ஒரு சிறுவனின் கண்களோடு இணைந்தது. அவரையே கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்த சிறுவனை ''வா என் பக்கம்'' என்று அழைத்தார். மெதுவாக வந்தான்.
''வாடா குழந்தை என்னோடு சாப்பிடு''
அவன் பதிலே பேசாமல் அசையாமல் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
''சுவாமி எங்க பையனுக்கு வாய் பேசாது, காது கேட்காது''
ஸ்வாமிகளின் கண்களில் நீர் வழிந்தது.
''ஸ்ரீ ராமா, எல்லோரையும் ஒரு தரமாவது வாழ்வில் ''ராம ராம'' என்ற தாரக மந்த்ரத்தைக் கேட்கவேண்டும், உச்சரிக்க வேண்டும் என்று போகுமிடமெல்லாம் சொல்லி வருகிறேன். இந்த குழந்தைக்கு உன் நாமத் தைக் கேட்கவும் முடியாது, சொல்லவும் முடியாமல் போய்விட்டதே''
வருத்தத்தோடு போதேந்திராள் சென்றார்.
அவர் சென்றபிறகு அந்த பையனை அவனது பெற்றோர் ஸ்வாமிகள் சாப்பிட்ட இலையில் சாப்பிட வைத்தார் கள். சாப்பிட்டான்.
என்ன ஆச்சர்யம், சாப்பிட்டு முடித்த பையன், தானாகவே பகவான் நாமாக்களைச் சொல்ல ஆரம்பித்தான் பாடவும் தொடங்கினான். என்னே ஸ்வாமிகளின் அருள் சக்தி என்று பெற்றோர் வியந்தனர். ஊரில் மற்றோரும் இதைக் கண்டும் , கேட்டும் அதிசயித்தனர்.
மஹான்கள் தங்கள் சக்தியை சுயநலத்துக்காக, பெருமைக்காக, புகழுக்காக பிரயோகிப்பதில்லை. அவர்களால் முடியாதது எதுவும் இல்லை.
பதினாறாம் நூற்றாண்டில் வேலூர் ஆற்காட் பகுதிகளில் கொடிய பிளேக் எனும் நோய் பரவியது. கொரோனா போல் அதற்கு மருந்து இல்லாமல் மக்கள் மடிந்த காலம். நவாபுக்கும் மற்றவர்களுக்கும் நோய் தொற்றியது. சிலர் ஸ்வாமிகளை அணுகி அவர் உதவி நாடினார்கள்.
ஸ்வாமிகள் அடியார்கள் பக்தர்கள் அனைவரையும் அவரோடு சேர்ந்து அகண்ட நாம பஜனை செய்யச்சொன்னார். ஆச்சர்யமாக பிளேக் நோயின் சக்தி குறைந்து அது மறைந்தது. நோயில் பீடிக்கப்பட்ட நவாபும் அவனைச் சேர்ந்த மற்றவர்களும் உயிர் பிழைத்தனர். நவாப் ஸ்வாமிகளின் பக்தன் ஆனான்.
ஸ்வாமிகள் திருக் கோகர்ணம் சென்றபோது நடந்த இன்னொரு நிகழ்ச்சியோடு இதை நிறைவு செய்கிறேன்.
தயங்கி தயங்கி ஒரு இளம்பெண் அங்கே வந்தாள் . ஊரில் அவளை எல்லோரும் விலை மாது என்று அவமதித்தனர். அவளுக்கோ ஸ்வாமிகளிடம் பக்தி. அங்கிருந்தோர் அவளை விரட்ட முயன்றது பலிக்கவில்லை. எப்படியோ ஸ்வாமிகளை நெருங்கி விட்டாள் . வணங்கி கை கூப்பினாள் . கண்களில் நீர் முட்டியது .
''சுவாமி எனக்கு ராம நாம உபதேசம் செய்யுங்கள்'' என்று தைரியமாக கேட்டுவிட்டாள். அதற்குள் சிலர் ஸ்வாமிகளிடம் அவளைப்பற்றிய அவதூறு சொன்னார்கள்.
ஸ்வாமிகள் அவள் கோரிக்கையைக் கேட்டு மகிழ்ந்தார். அவள் பிழைப்பைப் பற்றியோ, சமூக எதிர்ப்பையோ அவதூறைப் பற்றியோ, லக்ஷியம் செய்யவில்லை.
''அம்மா இங்கே வா, இந்த மந்திரத்தை விடாமல் சொல்லு என்று அவளுக்கு ஸ்ரீ ராம் ஜெயராம் ஜெய ஜெய ராம் '' என்ற மந்திரத்தை உபதேசம் செய்தார். இதை சொல்லி வந்தால் உனக்கு மாற்றம் ஏற்பட்டு, நல்ல பலன் அளிக்கும்''என்கிறார்.
மறுபடியும் சில காலம் கழித்து ஸ்வாமிகள் திருக் கோகர்ணம் செல்ல நேரிட்டது. ஸ்வாமிகளிடம் உபதேசம் பெற்றது முதல் அந்த விலைமாது முற்றிலும் மாறிவிட்டாள் . இரவும் பகலும் விடாமல் ராமநாம ஜபம் செய்து வந்தாள் . ஸ்வாமிகள் ஊருக்கு வந்திருக்கிறார் என்று அறிந்து ஓடிவந்தாள். ஸ்வாமிகளை வணங்கி தண்டனிட்டாள் . பிறகு அவரது திருவடிகளிலிருந்து அவல் எழுந்திருக்க வில்லை. அனாயாசமாக கபாலம் வெடித்து மோக்ஷம் அடைந்தாள். ஊர்மக்கள் ஸ்வாமிகள் ஆசியோடு அவளது அந்திம ஸம்ஸ்காரங்களை சிறப்பாக செய்து போற்றினார்கள் என்று சேதி.
ஸ்ரீபோதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள், ஆற்றங்கரை மணலுக்குள் ஐக்கியமான தினம் கி.பி. 1692-ஆம் வருடம் (பிரஜோத்பத்தி வருடம்) புரட்டாசி மாதம் பூர்ணிமை திதியில் நடந்தது. இப்போதும், ஸ்வாமிகளின் அதிஷ்டானத்தில் பௌர்ணமியில் ஆரம்பித்து, மஹாளய அமாவாசை வரை 15 நாட்கள் ஆராதனை உற்ஸவம் பாகவதர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. வீரசோழன் எனும் காவிரியின் உபநதியின் கரையில், மிக அமைதியாகத் திகழ்கிறது அதிஷ்டானம். கும்பகோணத்தில் இருந்து 12km. கும்பகோணம் - திருவிடை மருதூர் அடுத்து கோவிந்தபுரம்.
No comments:
Post a Comment