Friday, August 7, 2020

LIFE LESSON

 


                          மைனரின்  மாட்டு வண்டி. J K  SIVAN  

ஆட்டுவித்தால் யாரொருவர்  ஆடாதாரே கண்ணா, என்ற பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும். கோணா மாணாவென்று ஏதோ ராகத்தில் பாடுவேன்  என்றாலும் அதன் உள்ளர்த்தம்  அவ்வளவு இனிமை.  

 நாமெல்லாம் கருவி, சாவிகொடுத்தால்  ட்ரம் அடிக்கும்  குரங்குகள்.  சாவி கொடுத்தவுடன்,   நாம் தலை சாய்த்து, உடலை ஆட்டி, கை  அசைத்து ட்ரம் அடிக்கும் நேரம் தான் நமது வாழ்க்கை.  சாவி கொடுத்த சக்தி  நின்றுவிட்டால் குரங்கு ட்ரம் அடிக்காது. நம்  வாழ்வும் அதுபோல்  ஒரு குறிப்பிட்ட நேரம் வந்து  அவன் கொடுத்த சாவி நேரம் முடிந்ததும்  நாலு பேர் வருவார்கள் தூக்கிக்கொண்டு போக.   

''அவனன்றி ஓர் அணுவும் அசையாது ''  புரிகிறதா. திருவிளையாடல் படத்தில்  சிவாஜி கணேசன்  பெரிய  திரை முழுதும்  தனது இரு பெரிய கண்களை சுழற்றி     ''நான் அசைந்தால் அசையும்  அகிலமெல்லாமே'' 
  என்று  TMS   குரலில்  பாடுவாரே ,   அந்த அசைவு தான் நம் உலக வாழ்க்கை. 

இறைவன் நம்மை வழி நடத்திச் செல்கிறான் என்பதற்கு  ஒரு அருமையான  உதாரணம் கண்ணில் பட்டது. அதை சொல்கிறேன்.

அதோ ஒரு மாட்டு வண்டி போகிறதே. அழகான  பெரிய குண்டு   மயிலைக் காளை மாடு ஒன்று  அதை  சுமந்து இழுத்துக்கொண்டு போகிறதே ஜம்மென்று  அந்த பெட்டி  வண்டி  அது   மைனர்  பிரயாணம் செய்யும் வண்டி.  எங்கே போனாலும் அதில் தான் போவார்.  ஜல்ஜல் என்று சலங்கை கட்டிய  மாட்டு  வண்டியில்
மைனர்  மயூரநாதன் வருவது வெகு தூரத்திலிருந்தே காதில் விழும் சப்தம்  சொல்லிவிடும். 
 இந்த அசைவை கொஞ்சம் பார்ப்போம். 

பெட்டி  வண்டிக்கு உயிர் இல்லை. மாடு இழுக்காத நேரத்தில் மரத்தடியில்  சாய்ந்து கிடைக்கும். 

மயிலைக் காளைக்கு  உயிர், அறிவு   இரண்டும் உண்டு. அது கொம்பை அசைப்பது,  புஸ்  என்று மூச்சு விடுவது, உடலை சிலிர்த்துக்கொள்வது.  சொறிவதற்கு  கழுத்தை தூக்கி காட்டுவது எல்லாம் உயிர் இருப்பதை சொல்கிறது.

மைனர் மயூர நாதன் ?
 உயிரில்லாத   பெட்டி வண்டியை  உயிரும் அறிவும் உள்ள  மயிலை காளையுடன்  இணைத்ததும்  அசைவு ஏற்படுகிறது. இப்படி   அறிவுள்ள மாட்டுடன்  அறிவில்லாத  ஜடமான  பெட்டி வண்டியை ப்  பூட்டினால்  மட்டும் போதுமா ?

எந்த   ஊருக்கு   செல்லவேண்டும்,  எவ்வளவு தூரம்  செல்ல வேண்டும்? எந்த பாதையை  தேர்ந்தெடுக்க வேண்டும்,  எப்போது புறப்படவேண்டும்?  எப்போது சேரமுடியும்?   எப்படி போகவேண்டும்,  வேகமாகவா,  நிதானமாகவா?  என்பதை தீர்மானித்து, தானே  மைனர்  வண்டியை செலுத்துகிறார். தான் மட்டுமா  இன்னும் நாலு பேரா,  அவ்வளவு  பாரம்  குட்டி மயிலைக் காளை  தாங்கி இழுக்குமா?  இதெல்லாம் வேறு கணக்கு இருக்கிறதே.  இது அத்தனையும்  மைனர் மூளைக்குள் வேலை செய்தால்  தானே  ஜல் ஜல்  சவாரி. 

யோசித்து பாருங்கள்   ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு போவது  மயிலைக் காளை தான்.  வெறுமே  வண்டியை  சுமந்து  இழுத்துக் கொண்டு ஓடுவது  தவிர அதால் எதுவும் செய்ய முடியாது. மைனரோ  வண்டியோ ஓடவில்லை. 

அதேபோல் பெட்டிவண்டி   தானாக ஓடாது.  ஏதோ ஒன்று அதை இழுத்துக்கொண்டு ஓடவேண்டும்.  அது ஸ்ட்ராங்காக இருந்தால்  ஒரு ஆளோ  நாலு ஆளோ  வெயிட்  தாங்கமுடியும். அவ்வளவு தான் அதன் வேலை.  இதிலிருந்து   என்ன தெரிகிறது.   மாடு  வண்டி  ரெண்டாலும் பயனில்லை, மைனர் தான்  ஆட்டி வைக்கிறார். அசைய வைக்கிறார் என்று புரிந்தால் வாழ்க்கை தத்துவம் அறிந்த மாதிரி. 

ஒவ்வொரு  ஜீவனிலும்  ஆத்மா தான்  மயிலைக் காளை, உயிர் என்றால் எளிதில் புரியும்.    
பெட்டி  வண்டிதான்  உடல்.   
இறைவன் தான் ஸார் , அந்த  கிருஷ்ணன் தான்  ஸார் , பிருந்தாவனம்  மைனர். அவன் தான் நமக்கு எந்த உடல்,  அதில் எத்தனை நாள்,   எங்கெல்லாம் அசைவு, என்று ஆட்டி வைப்பவன்.  முதல் வரியில் சொன்ன ஆட்டுவித்தால்....... தான்  நமது சுக துக்க இன்ப துன்ப உலக வாழ்க்கை.   

மைனர் ஓட்டும்  மாட்டுவண்டியை ஞாபகம் வைத்துக்கொண்டால்  நமது வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும்  உபயோகமாக செலவழிக்கலாம். 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...