காசும் கேசவனும் J K SIVAN
காசே தான் கடவுளடா.....என்பது மஹா வாக்யமாகி விட்டது.
''கட்டி அழும்போதும் தாண்டவக்கோனே, பணப்பொட்டி மேலே கண்வையடா தாண்டவக்கோனே'' என்று ஒரு பிரபல பாட்டு ஐம்பது வருஷம் முன்னே கேட்டிருக்கிறேன். இந்த தத்துவத்தை எழுதியவரின் அப்போதைய மன நிலை, பின்னால் பிரதிபலித்தது என்பது அப்புறம் புரிந்தது.
''பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும்'' என்பது உண்மையான பொன்மொழி.
''காசில்லாதவன் கடவுள் ஆனாலும் கதவை சாத்தடி'',என்று அந்தக் காலத்தி லேயே சாய் சுப்புலக்ஷ்மி சகோதரிகள் அபிநயம் பிடிக்க பி. ஏ. பெரியநாயகி அடாணாவில் பாடியது நினைவுக்கு வருகிறது.
''காசில்லாவிட்டால் அண்ணன் என்னடா தம்பி என்னடா?'' என்று ஒரு பாட்டு உண்டு.
ஒளவையார் கூட ஒரு பாட்டு பாடி இருப்பது தெரியுமா:
"கல்லானே ஆனாலும் கைப்பொருள் ஒன்று உண்டாயின்
எல்லாரும் சென்றங்கு எதிர் கொள்வர் - இல்லானை
இல்லாளும் வேண்டாள்; மற்று ஈன்றெடுத்த தாய் வேண்டாள்;
செல்லாது அவன்வாயிற் சொல்''
காசு இருந்தால் படிக்காதவன் கூட மேதாவி என்று உலகம் புகழும். எல்லோரும் அவனைச் சுற்றி வருவார்கள். போற்றுவார்கள். நன்றாக கல்வி கற்றவன், பண்டிதன், ஆனால் காசு இல்லாத பரம ஏழையாக இருந்தால் தெருவில் அடுத்த கவளம் சோற்றுக்கு அலையும் ஜிம்மி கூட திரும்பி பார்க்காது. இப்படிப்பட்ட படித்த பண்டிதனை மனைவியாக பெற்றவள் துளியும் அவனை லக்ஷியம் பண்ணமாட்டாள். மனைவியை விடுங்கள். அவனைப் பெற்ற தாய் கூட மதிக்கமாட்டாள். இந்தக் காலத்தில் தாய்கள் தான் பெற்ற பிள்ளைகளில் வசதியான பிள்ளையை தான் ஆதரிப்பாள் . மற்றவர்கள் அவளுடைய அன்பில் கொஞ்சம் தான் பங்கு பெறுவார்கள். இப்படிப்பட்ட ஞான பண்டிதரின் வார்த்தைகள், அபிப்ராயங்களை எல்லாம் எவரும் லக்ஷியம் பண்ண மாட்டார்கள் என்று அப்போதே கிழவிக்கு தெரிந்திருக்கிறது.
ஒரு தரம் நாரதன் பூமியெல்லாம் சுற்றிவந்து நாராயணன் முன் நின்றான்:
''நாரதா, வா, உன் வரவுக்காகத்தான் காத்திருந்தேன். பூலோகம் சென்று வந்தாயே, முக்கியமாக தமிழ்நாடு, அங்கே நிலவரம் என்ன?''
''என்ன நாரதா, பெருமூச்சு விடுகிறாய்? களைப்பாக இருக்கிறாயா, அப்படியென்றால் சென்று வா. நாளைக்கு பேசுவோம்?''
''களைப்பு இல்லை பிரபு, அங்கலாய்ப்பு''
''என்ன சொல்கிறாய்?''
'நீங்கள் சம்ஹாரம் பண்ணாத ஒரு ராக்ஷஸன் பூமியில் இருக்கிறான். அவனைக் காசு, பணம் என்கிறார்கள். அவன் கருப்பாக இருந்தால் அவனைக் கொள்வது எளிது, கொல்வது உங்களால் கூட முடியாமல் போகலாம் பிரபு''
''என்ன சொல்கிறாய். புரியவில்லையே. நாரதா, நீ சொல்வதைப் பாத்தால், நான் படைத்த மனிதன் என்னைக்காட்டிலும் சக்திவாய்ந்த ராக்ஷஸன் காசு பணம் என்பவனைப் படைத்த்துவிட்டான் என்கிறாயா?
''ஆமாம் சுவாமி, காசுக்காக, பல ஆலயங்களில் நீங்களே இல்லை பிரபு, உங்களை எடுத்துச் சென்று விற்று விடுகிறார்கள்''
''ஓ அப்படியா, அப்புறம் ?''
''உங்களைப் பார்க்க எத்தனையோ விதி முறைகள், சீக்கிரம் தரிசிக்க காசு வசூல். காசில்லாதவர்கள் கால் கடுக்க நாளெல்லாம் நிற்கவேண்டும்''.
''ம்ம்''
''இதைவிட மோசமான ஒரு நிலை. சிலர் காவி உடை அணிந்து நீங்கள் தான் அவர்களாம் ''
''புரியும்படியாக சொல் நாரதா''
''நீங்கள் எடுத்த அவதாரங்களைத் தொடர்ந்து நீங்கள் தான் அவர்களாக அவதரித்ததாக சொல்கிறார்கள்.
''எதற்காக அப்படி?''
''அவர்கள் சொல்வதை ஜனங்கள் நம்பவேண்டாமா. அதற்காக உங்கள் வேஷம். கேட்ட காசு கொடுக்க வேண்டாமா ?''
''ஓஹோ''
''உங்களுக்காக எத்தனையோ காலங்களாக பல அரசர்கள், பிரபுக்கள், மக்கள் எல்லாம் கொடுத்த பொருள்கள், நிலங்கள், மானியங்கள், எல்லாம் காணாமல் போய்விட்டன, போகின்றன, போகப்போகின்றன''
''என்ன இது முக்காலமுமாக சொல்கிறாய், நீ திரிகால ஞானி என்பதாலா?''
''இல்லை பல காலங்களாக தொடர்ந்து நடந்து வருவதை, தடுக்காமல் தொடர்வதை இப்படி சொல்கிறேன்''
உங்களை தங்கத்தை விட விலை உயர்ந்த மரகதத்தால் செயது வைத்திருந்ததை எல்லாம் டுப்ளிகேட்டில் செய்து வைத்து விட்டு சிலர் செல்வந்தர்களாகிவிட்டார்கள். வேலியே பயிரை மேய்கிறது கலியுகத்தில் பாரத தேசத்தில் சுவாமி ''
''சரி நாரதா மேற்கொண்டு எதையும் சொல்லாதே. எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது.
நான் ஒரு லெட்டர் என்னைபற்றி எழுதவேண்டும் போல் இருக்கிறது. சொல்கிறேன் எழுதிக்கொள். பூலோகத்தில் இதை பரப்பு.அடுத்த கட்டத்தை பற்றி அப்புறம் யோசிப்போம்:
நாராயணன் ஸ்ரீ கிருஷ்ணனாக நாரதரிடம் சொன்ன கடித விபரம்:
''என்னருமை பாரத தேசக் குழந்தைகளே,
நான் யார் என்று உங்களில் பலர் ஆச்சர்யப்படுகிறீர்களா? எங்கே வசிக்கிறேன், எப்படி வருவேன் நீங்கள் கேட்பதற்கு குரல் கொடுப்பேனா என்று யோசனையா?. சில விஷயங்களை உங்களிடம் சொல்லவேண்டும்.
நான் கிருஷ்ணன், கேட்டதைக் கொடுப்பவன். எனக்கு உருவம் என்று ஒன்றில்லை, எந்த உருவமும் எனதே. நீங்கள் நினைத்த உரு என்று வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் தான் எனக்கு என்னென்னவோ உடை, நிறம், உருவம் கொடுக்கிறீர்களே. உங்கள் நம்பிக்கையைக் கெடுப்பானேன். நான் காண முடியாதவன். ஆரம்பம் முடிவில்லாதவன். அருவம்.
என்னை நினைத்து தொழுதால் போதும். என்னிடம் எதையாவது பெறுவதற்காக தொழவேண்டாம். உங்கள் ஒவ்வொருவருக்கும் என்ன தேவை எப்போது, எவ்வளவு, எப்படி என எனக்கே தெரியும். அது பிரதிபலன் இன்றி உங்கள் தூய அன்பினால் என்னிடம் இருந்து நீங்கள் பெறுவது. பாரபக்ஷமின்றி. கிருஷ்ணா என்ற ப்ரேமையில் என்னை நினைத்தாலே போதும். உங்கள் நினைவில் நான் இருந்தால் மற்றதை நான் பார்த்துக் கொள்ளமாட்டேனா?உங்கள் ஒவ்வொருவருக்கும் மனது என்று ஒன்றை எதற்காக கொடுத்திருக்கிறேன்? கடுகளவு என் மீது பக்தி இருந்தால் மலையளவு நீங்கள் சாதிக்கமுடியும். கீதை என்று எளிதாக அர்ஜுனன் வாயிலாக உங்களுக்கு எதற்கு கொடுத்தேன்? புரிந்து கொள்ளவேண்டாமா? என் நினைவு இருந்தால் உங்கள் எண்ணம், செயல், உணர்வு எல்லாமே பிரகாசிக்கும். நிறைய பேர் அப்படி வாழ்ந்து காட்டி இருக்கிறார்களே. நான் வியாபாரி அல்ல. நான் உங்களுக்கு செய்வதற்கு விளம்பரம் கிடையாது. உங்களுக்கே கூட தெரியாது. நான் அளிப்பது நீங்கள் கேட்டல்ல, உங்களுக்கு எப்போது எங்கே எப்படி எது எவ்வளவு தேவை என்று நானே அறிந்து நீங்கள் கேட்காமலேயே அளிப்பேன்.
மனம் திறந்த சுயநலமற்ற பிரார்த்தனை, த்யானம், வேறு . என்னிடம் எதையோ வேண்டுதல் வேறு. நான் உங்களில் ஒரு சாக்ஷியாகத் தான் உள்ளேயே இருக்கிறேன். நீங்கள் செய்வது சொல்வது உணர்வது எல்லாம் பொறுமையாக கவனித்துக் கொண்டிருக்கிறேன். தக்க நேரத்தில் உதவ.
நீங்கள் விரும்புவதை சப்ளை செய்யும் வியாபாரி அல்ல. உங்களை என்போலவே படைத்தேன். மற்றதெல்லாம் நீங்கள் செய்வது. செய்தது, செய்யப்போவது. உங்களை சுதந்திரமாக விளையாடவிட்டு தாய் போல் தூர நின்று கண்காணித்துக்கொண்டிருக்கிறேன். நீங்கள் செய்வதற்கு எதற்குமே நீங்கள் தான் பொறுப்பாளி. நீங்கள் பலனை அநுபவித்து தான் ஆகவேண்டும். நல்வழியில் வாழ உங்களுக்கு மனம் இதயம், புத்தி எல்லாம் கொடுத்திருக்கிறேனே . உங்கள் எண்ணம், காரியம் உங்களுக்கு பயத்தை கிளப்பி விடுகிறது. தெரிந்தே சிலவற்றை செய்கிறீர்கள். அதன் விபரீத விளைவில் என்னை நினைப்பதால் என்ன பயன்?
உங்களில் பலர் எனோ தவற்றிலும், பயத்திலும் வாழ்ந்து முடித்து மீண்டும் தொடர்கிறீர்கள்.
''நான் இருக்கிறேனா என்று சந்தேகம். நான் இல்லையாம். பார பக்ஷம் பார்ப்பவனாம். என் மீது கோபம் வேறு... எனக்கு உங்களை நினைத்தால் பரிதாபமாகத்தான் இருக்கிறது. என்னைப்பற்றி நிறைய எழுதுகிறீர்கள், கதைகள், பாட்டுகள், நாடகம், இல்லாததும் பொல்லாததும் வேறு. கற்பனைக் களஞ்சியம். என்னை உருவமாக்கி, அறையில் வைத்து, எதற்கு பூட்டி, காவல், சாவி ?? என்னைக்காண எதற்கு கால் கடுக்க நிற்கவேண்டும். என் பேரை சொல்லி காசு எதற்கு? சில ''முக்கிய'' புள்ளிகளுக்கு (அப்படி என்னை விட என்ன முக்கியமோ ?) அவர்கள் நேராக காசு கொடுக்காமல், கால் கடுக்க நிற்காமல் என் எதிரே வரலாமாம்! நல்ல வேடிக்கை விளையாட்டு விளையாடுகிறீர்கள்.
நான் எல்லோருக்கும் பொதுவானவன். என் குழந்தைகளில் எது ஒஸ்தி, எது மட்டம்? என்னைத் திருடாதீர்கள், விற்காதீர்கள், வாங்காதீர்கள், நான் அல்ல அது.
நான் எங்கும் இருப்பவன், உங்கள் உள்ளேயும் கூட. என்னைக் காசாக்குவது உங்கள் சௌகர்யத்துக்கு நீங்கள் செய்வது. சிரிப்பு தான் வருகுதய்யா. நான் உங்களில் ஒரு சிலராக அவதரித்தவனாமே! எனக்கே தெரியாமல் என் சக்தி அவர்களின் உள்ளதாமே .
ஓ! மாந்தர்களே நான் அல்ல நீங்கள் தான் ''அலகிலா விளையாட்டுடையார்கள்', வாழ நான் எத்தனையோ உத்தமமான வழிகளை கற்பித்திருக்கிறேனே. இப்படி ஒரு குறுக்கு வழியை நீங்களே ஏன் உண்டாக்கி அதை ஆதரிக்கிறீர்கள். விநாச காலே விபரீத புத்தி! என் சக்தி என் எல்லையற்ற அன்பு ஒன்றே.
No comments:
Post a Comment