விவேக சிந்தாமணி J K SIVAN
இது தான் நிஜம்
இன்று சற்று விவேக சிந்தாமணி படிக்க நேரம் கிடைத்தது. வழக்கம்போல் இந்த பேர் தெரியா, அட்ரஸ் இல்லாத அருமைத் தமிழ்ப்புலவனை வணங்கி அவன் எழுத்தாற்றலை மூன்று பாடல்களில் ரசிப்போம்.
''திருப்பதி மிதியாப் பாதம் சிவனடி வணங்காச் சென்னி
இரப்பவர்க் கீயாக் கைகள் இனியசொல் கேளாக் காது
புரப்பவர் விழிகள் கண்ணீர் பொழிதரப் போகாத் தேகம்
இருப்பினும் பயன்தான் என்னே எரிப்பினு மில்லை தானே''
''ஆஹா, உலகில் எங்குமில்லாத அதிசயமாக இந்த பாரத தேசத்தில் எத்தனை அருமையான புகழ் பெற்ற எண்ணற் ற ஆலயங்கள், க்ஷேத்ரங் கள் இருக்கிறது. நடந்து போய் அவற்றை வணங்காத, அடையாத ,கால்கள் இருந்தும் பயனற்றவை. தலையே நீ வணங்காய் என்று பாடுவார்கள் அப்படி நமது எண் சாண் உடம்புக்கு பிரதானமான சிரம் இருந்தும் சிவனை வணங்கா விட்டால் அதனால் ஒரு பயனும் நமக்கு இல்லை. ''ஐயா, அம்மா, பசி காதை அடைக்குது '' என்று கெஞ்சும் உயிருக் கும் ''ஒண்ணும் இல்லை. போ போ'' என்று ஒரு கவளம் பழைய சோறு கூட கொடுக் காத கைகள் வீணானவை. நல்ல விஷயங்களை கேட்காத காது செவிட்டு டமாரம். பிற உயிர்க ளின் துன்பம் கண்டு தனது துன்ப மாக இரக்கப் படாத , கண்ணீர் வடிக்காத கண்கள் பார்வை இழந்த குருட்டு கண்கள். இப்படிப் பட்ட தலை, கை , கால், கண், காது, உடைய தேகம் இருந்தும் அதால் எந்த பயனும் இல்லை, அதை எரித்தாலும் எரி பொருள்
நஷ்டத்தை தவிர வேறு எந்த பயனும் இல்லை
.
''குரைகடல் வறுமையும் குறத்தி உண்மையும்
நரையற மருந்தையுண் டிளமை நண்ணலும்
விரைசெறி குழலிவேசி ஒருவனை யெண்ணலும்
அரையரின் அன்பறா வாக்கமு மரியதே.''
''ஓ'' வென்று சப்தித்து அலைபாயும் கடல் வற்றிவிட்டது என்பதும், ''ஸோஸியம் பாக்கலையோ ஸோஸியம்'' என்று வாசலில் கத்திக்கொண்டு நடக்கும் குறத்தி சொல்லும் ஜோசியம் உண்மையில் நடந்தது என்பதும் '' ஸார் இந்த ஒரு பாட்டில் எண்ணெயை தலையில் விடிகாலையில் பரபர வென்று தேய்த்துக் கொள்ளுங்கள் , உடனே முடி கறுப்பாகும், இளைஞனாகி விடுவீர்கள் என்று சொல்லி வாங்கி நரை தீர்ந்து போய் இளமை ஆகியது என்பதும், காசுக்கு ஒருவனை மயக்கும் விலைமாது, உண்மையாகவே ஒருவனை அவனை நேசிப்பதும், ராஜா யாராவது ஒருவன் மேல் மட்டும் அன்பு குறையாமல் நடந்து கொள்வதும் உலகில் நடக்காத காரியங்கள் என்று அடித்து சொல்கிறார் பேர் தெரியாத புலவர். ,
''பொருட்பாலை விரும்புவார் காம்பபா
விடைமூழ்கிப் புறள்வர் கீர்த்தி யருட்பாலர்
மறப்பாலைக் கனவிலுமே விரும்பார்க
ளறிவொன் றில்லார்
குருப்பலர்க் கடவுளர்பால் வேதியர்பால்
புரவலர்பால் கொடுக்கக் கோரார்
செருப்பாலே யடிப்பவர்க்கு விருப்பாலே கோடி
செம்பொன் சேவித் தீவார். (7அ)
இது கொஞ்சம் வினோதமான பாடல். பொருள் மீது ஆசை கொண்டு தனது வாழ்நாள் பூரா அதைத்தேடி அலைந்து சாவார்கள் உண்டு. காமத்தில் இச்சை கொண்டு மாதர் பின்னே சென்று சொத்து உடல் எல்லாவற்றையும் இழப்பவர்கள் உண்டு. தர்மம் தானம் கோயில் குளத்துக்கு ஒரு சல்லிக் காசும் கொடுக்க மனம் வராது. வேதம் ஓதுபவர், ஏழைகள் உதவிக்கு பணம் கொடுக்க மனம் வராது, ஆனால் தன்னை செருப்பால் அடிக்கும் அளவுக்கு பயமுறுத்தும் கொடியவர்கள் தயவைப் பெற, அவர்களிட மிருந்து தம்மைக் காப்பாற்றிக் கொள்ள எவ்வளவு செம்பொன் வேண்டுமா னாலும் கொடுக்கத் தயாராக இருப்பார்கள், அவர்களிடம் அத்தனை பயம்... என்ன உலகம் இது ?
இன்றைய நிலையில் செருப்பால் அடிப்பவர் கள் யார், என்று யோசித்தால் நாம் தேடிப் பிடித்து நம்மை ஆள்வதற்கு தேர்ந்தெடுத் தவர்களா என்று புரியவில்லை. அதிகாரம் யாரிடம் இருக்கிறது, பலம் யாரிடம், வாக்களித் தவனா, வாக்கைப் பெற்றவனா??? செருப்பால் அடிப்பது இப்போது எதற்கெடுத்தாலும் காசு பிடுங்காமல் ஒரு வேலையம் எங்கும் நடக்கா மல் செய்வது என்பதோ என்று இந்த சர்ச்சை யை கிளப்பிவிடுகிறார் பேர் தெரியாத புலவர்.
No comments:
Post a Comment