பூணல் ஆராய்ச்சி... J K SIVAN
இன்றோ வேறு என்றோ பூணல் போட்டுக்கொள்பவர்களுக்கு இது தெரிந்தால் சௌகர்யம். தெரியா விட்டால் இதோ தெரிந்து கொள்ள ஒரு சந்தர்ப்பம்.
பிராமணர்களுக்கு மட்டும் தான் பூணல் என்று கிடையாது. ஹிந்துக்களின் மற்ற சில வகுப்பாருக்கும் இந்த வழக்கம் உண்டு. சிறுவர்கள் வேதபாடம் கற்க அன்று முதல் தான் ஆரம்பிப்பார்கள்.
கல்யாணத்துக்கு முன்னால் தான் உபநயனம். அதை பூணல் கல்யாணம் என்பார்கள். சமஸ்க்ரிதத்தில் யக்னோபவீதம். முப்புரி என்பது தமிழில் பூணலுக்கு பெயர். அது மூன்று இழை நூலை குறிக்கிறது. ஒவ்வொரு இழையும் மூன்று சபதங்களை ஞாபகப்படுத்த. ஒன்று ஞானத்தை மதிக்க, ரெண்டாவது பெற்றோரை மதிக்க, மூன்றாவது அவனது சமூகத்தை மதிக்க.
அந்தக்காலத்தில் 7 வயசில் பூணல் போடுவார்கள். வாழ்வின் ஒரு சகாப்தத்திலிருந்து இன்னொன்றுக்கு அவன் அது முதல் செல்கிறான். குழந்தைப் பருவம் இனி இல்லை. இனி அவன் பிரம்மச்சாரி, ஆச்சாரம், ப்ரம்மம் ஆகியவற்றை நாடி செல்பவன். இது எது வரை? அவனுக்கு கல்யாணம் ஆகும் வரையில் .
வடக்கே பூணல் போடுவதற்கு முதல் நாள் விநாயகருக்கு என்று தனியாக பூஜை, வழிபாடு நடக்கும். ஒரே தட்டில், இலையில் அம்மா பிள்ளை இருவரும் உண்பார்கள். வேத மந்த்ரங் களோடு அவனுக்கு உபநயனம் நடக்கும். அக்னியை வலம் வந்து அவன் ஆசார்யன், குரு, சொல்லிக் கொடுக்கும் மந்திரங்களை சொல்வான். வாழ்க்கை முழுதும் அவன் அப்போது எடுத்துக் கொள்ளும் சத்ய ப்ரமாணம் தொடரவேண்டும். மந்த்ரங்களோடு அவன் உதட்டில் ஒரு துளி தீர்த்தம் அருந்தும் ''ஆசமனம்'' என்பது அது தான். வாயிலிருந்து வரும் பேச்சு சுத்தமாக இருக்கவேண்டும். பேச்சாக வரும் எண்ணம் சுத்தமாக இருக்கவேண்டும். பேச்சு செயல்படுத்தப் பட வேண்டும்
உபநயனத்தில் அரசமர குச்சிகளை அக்னியில் வைப்பது ஸமிதாதானம் . அம்மாவிடம் பிக்ஷை எடுப்பது ஒரு சடங்கு . தாய் தான் ஒருவனின் உயிர் காக்கும் உத்தமி. அவளிடம் இருந்து தான் பிறந்து அவள் ஊட்டி அவன் வளர்கிறான். ஆகவே அவளிடம் முதலில் '' பவதி பிக்ஷாம் தேஹி'' என பிரம்மச்சாரி பிக்ஷை எடுக்கிறான். பிறகு மற்றவர்களிடம் பிக்ஷை பெறுகிறான். . உலகமே அன்னமளிக்கும் அன்னதாதா, அண்ணா பூரணி மயம் என்று கருதுகிறான். தான் வாங்கி கொண்டு வந்த பிக்ஷையை தனது குருவிடம் சமர்ப்பிக்கிறான். இது அவனது குரு பக்தியை நிரூபிக்க.
நமது ஊரில் உபநயனம் ஒரு விரதம் என்கிற சடங்கு. இது பிள்ளை வீட்டில் நடப்பது. கல்யாணத்துக்கு முன்னால் உண்டு. பிரம்மச்சர்யம் முடிந்துவிட்டது. மற்றொரு புதிய சகாப்தம் அவன் வாழ்வில் இனி துவங்கும். கல்யாணம் ஆனதும் இனி அவன் கிரஹஸ்தன். பூணல் போட்டுக்கொண்ட பின் தான் கல்யாணம். மந்திரங்கள் அப்பாவிடம் அவர் சொல்ல அதை பெற்று அந்த நிலைக்கு செல்வது போல் உள்ளது. அப்பா தான் அவனுக்கு ஆசார்யன். குரு. அவன் அதற்கான மந்திரங்கள் சொல்லி பூஜை முடித்தபின் அவன் இடுப்பில் மஞ்சளில் தோய்த்த நூலை அணிகிறான். மஞ்சள் புனிதமானது. கல்யாணப்பெண்ணுக்கும் இந்த சடங்கு அவள் வீட்டில் நடக்கும். தீய சக்திகளிடமிருந்து அவனை/ அவளைக் காப்பதற்கு இந்த வழிபாடு. வழக்கம்.
பூணல் என்பது வெறும் நூலல்ல. அதற்கு ஆழமான அர்த்தம் உண்டு. மூன்று கடன் அவனுக்கு உள்ளதை நினைவுறுத்து பவை.
ஆச்சார்யனுக்கு செலுத்தவேண்டிய மனுஷ்ய ரிஷி கடன் .பெற்றோருக்கு மூதாதையருக்கு உண்டான கடன். பித்ருகடன், வழிபடும் தெய்வங் களுக்கும், காக்கும் தேவதைகளுக்கும் உண்டானது தேவ கடன்.
பூணலின் மூன்று நூல்கள், முப்புரிகள், முறையே ப்ரம்மா விஷ்ணு சிவனை குறிக்கும் என்றும் பார்வதி, சரஸ்வதி, லக்ஷ்மியை குறிக்கும் என்றும் விளக்குவது உண்டு. அவனுக்கு தேவையான சக்தியை அளிக்க சக்தி தேவதையான பார்வதி, ஞானத்துக்கு கல்விக் கடவுளான ஸரஸ்வதி , அவனுக்கு தேவையான செல்வத்தை அஷ்ட ஐஸ்வரியத்தை அளிக்கும் லக்ஷ்மி. இந்த மூன்றும் இல்லாவிட்டால் ஒருவன் வாழ்க்கை முழுமை பெறாது ஹிந்து சனாதன தர்மம் அவனுக்கு அறிவுறுத்தியது. .
பூணலில் போடப்படும் முடிச்சு ப்ரம்ம முடிச்சு. ப்ரம்மக்ரந்தி எனப்படும். காயத்ரி மந்திரம் சொல்லிய பிறகு தான் அதை அணிவிப்பார்கள். தேகத்தை புண்ய சடங்குகளால் மூடிக்கொள்வது தான் யக்னோபவீதம். யஞம் என்பது ஹோம சடங்கு. உபவீதம் என்பது கவசம். போர்த்திக்கொள்வது. அது இல்லாமல் எந்த சடங்கும், ஹோமமும், பண்ண அனுமதியில்லை. பூணலுக்கு இன்னொரு பெயர் ப்ரம்ம சூத்ரம். மூன்று புரிகள் கொண்டது ஒன்பது நூல்களை கொண்டது.
முதல் மூன்றை போடுவது ப்ரம்மச் சாரிக்கு, இதை ஒத்தைப் பூணல் என்கிறோம். பிரம்மச்சர்யம், பிள்ளை யாருக்கு ஒத்தை பூணல் போடுவார்கள். ஒரு ஜோடிபோடுவது கிரஹஸ்தனுக்கு , கிரஹஸ்தாஸ்ரமம் . மூன்றாவது தகப்பனார் இல்லாதவர் களுக்கு என்று சொல்வது ஒரு புறம் இருக்க, மேலே அங்கவஸ்திரத்துக்கு, உத்தரீயத்துக்கு பதிலாக என்றும் சொல்கிறார்கள். இதை வானப்ரஸ்த ஆஸ்ரமத்துக்கு என்று சொல்வது உண்டு.
பூணல் போடுவதை ஒரு பெரிய விழா வாக கொண்டாடி லக்ஷக்கணக் காக செலவு செய்ய தேவையில்லை. கோவில்களில் வீடுகளிலேயே பூணல் போடலாம். வைதிக கர்மாக்கள் எதையும் புறக்கணிக்காமல் சாஸ்த்ர ஸம்ப்ர தாயம் குறைவில்லாமல் செய்ய வேண்டியது தான் அவசியம். இதையெல்லாம் விட அவசியம் பூணல் போட்டதும் நித்யம் சந்தியாவந்தனம் காயத்ரி ஜபம் 108 வது செய்ய வேண்டும். முகத்தில் தனி தேஜஸ் வருவதை பார்த்திருக்கிறேன். உத்தராயணத்தில் தான் உபநயனம் செய்து வைப்பார்கள்.
பையன்களுக்கு பள்ளி விடுமுறையில் பூணல் போட்டேன் ஸார் என்பது கேலி கூத்து. 7லிருந்து 11 வயது வரை ஒத்தைப் படை வயதில் பூணல் போடுவது வழக்கம். முப்புரியின் ஒன்பது நூல்க ளுக் கும் தேவதைகள்:
ஓங்காரம், அக்னி, நாகம், சோமன், (சந்திரன்) பித்ருக்கள் (முன்னோர்) பிரஜாபதி (பிரம்மன்) , வாயு, யமன், விஸ்வதேவதா. மூன்று நூலுக்கு ஒரு முடிச்சு. ஆகா மூன்று முடிச்சுகளும் ரிக்வேத, சாமவேத யஜுர்வேதத்தை குறிக்கும்.
வீட்டில் கிரஹத்தில் வளர்க்கும் ஹோமத்தீ கார்ஹபத்யம் , தெற்கு பக்கம் நோக்கி வளர்க்கும் அக்னி தக்ஷிணாக்னி, ஏதாவது ஒரு காரணத்தை ஒட்டி வளர்க்கும் தீ ஆஹ்வனியம் . அக்னியை ஞானம், பக்தி, கர்மாவுக்காக வளர்ப்பது வழக்கமாக இருந்தது.
பிரமத்தை அடைய இது முறையாக வழிபட்டது. மொத்தம் 96 கால நேரங்கள் கணக்கில் இருந்தது. அதாவது 15 திதிகள், வாரத்தின் 7 நாட்கள், 27 நக்ஷத்திரங்கள், 25 கோட்பாடுகள், 4 வேதங்கள், 3 சத்வ ரஜோ, தாமச குணங்கள், 3 வேளைகள் , 12 மாதங்கள், எல்லாம் சேர்த்தால் 96 இல்லையா, பூனலின் நீளம் 96 கட்டைவிரல் நீளம். அங்குலம் என்றால் கட்டை விரல் அகலம்.
இவ்வாறு மொத்த பூணல் முப்புரிகளின் நீளம் 96 கட்டைவிரல் அகலம் என்று கணக்கு வைத்திருந்தார்கள். பூணல் போட்டுக்கொள்ளும் மந்திரம் .
யக்னோபவீதம் பரமம் பவித்ரம் , ப்ரஜாபதேய சஹஜம் , புரஸ்தாத், ஆயுஷ்யமக்ரியம், ப் ரதி முஞ்ச சுப்ரம் யக்னோபவீதம் பலமஸ்து தேஜா:
இதற்கு அர்த்தம் :
நல்ல கார்யங்களை செய்வதற்கு பூணல் அணிவது இன்றியமையாதது. பூணலை தரித்தவன் நல்ல சிந்தனைகளை உடையவனாக, ஆரோக்கியமான வளமான பரோபகாரனாக வாழ பூணல் சக்தியும் தேஜஸும் அளிக்கிறது.
வேதகாலத்தில் பிராமணர்களுக்கு கடின வேலை கிடையாது. உட்கார்ந்து கொண்டு பூஜை செய்வது, வேத மந்திர ம் உச்சரிப்பது, மட்டுமே வேலை என்பதால் கல்லீரலுக்கு உடற்பயிற்ச்சி இல்லை. பூணல் போடுவது இதற்கு சற்று உபயோகமாக இருந்திருக்கிறது. அடிக்கடி நமஸ்காரம் பண்ணுவது அவர்களுக்கு அதிகமாக சக்தியை அளித்தது.
பூணல் இறந்தபிறகு தான் உடலிலிருந்து அகற்றப்படும் வழக்கம் நம்மிடையே உண்டு. பூணல் அறுந்து போனாலோ, ஸ்ராத்த, மற்றும் சில நாட்களில் மாற்றிக்கொள்வது ஏற்புடைய தானது. அப்போது பூணலை தரித்துக் கொள்ளும் மந்திரத்தை சொல்லி அதை போட்டுக் கொள்ளலாம். காயத்ரி மந்த்ரத்தை சொல்லிய பிறகு தான் பூணலை அணிவது முறை.
.மலஜலம் கழிக்க செல்லும் முன் பூணலை இடது காதில் சுற்றிக் கொள்வ திலும் ஒரு விஞ்ஞான உண்மை இருக்கிறது என்று படித்தேன். நமது இடது காது வழியாக ஒரு சிறு ரத்தக்குழாய் செல்கிறதாம். அது தான் சிறுநீர் ஒழுங்காக வெளியேற உதவுகிறதாம். அந்த ரத்தக்குழாயை பூணலை இடது காதை சுற்றி மாட்டிக் கொள்வதால் பலப்படுத்த முடியுமாம். .
வேதகாலத்தில் பெண்களுக்கும் பூணல் போடும் வழக்கம் இருந்ததாம். யஜுர்வேதம் பெண்களுக்கு பூணல் உண்டு என்கிறது. கல்வி கற்பது யாகம் ஹோமம் பண்ணுவது எல்லாம் போகப் போக பெண்களிடமிருந்து ஆண்களின் பொறுப்பாக மாறி விட்டது. . கல்யாணம் ஆனவர்களுக்கு ரெண்டு பூணல் போடு வது ஒ
ன்று பெண்களுக்காக சேர்த்து என்று ஒரு விளக்கம் உண்டு.
ன்று பெண்களுக்காக சேர்த்து என்று ஒரு விளக்கம் உண்டு.
மனைவியின் அதிகாரம் இல்லாமல் ஹோமம் யாகம் பண்ண முடியாது. அவள் தர்ப்பையால் வலது தோளை தொடுவதும், ஹோமாக்னி மூட்டுவதும் இன்றும் பழக்கத்தில் உள்ளது. அவள் தீர்த்த பாத்ரத்தால் அர்க்கியம் செய்யாமல் தத்தம் கொடுக்காமல் தக்ஷிணை கொடுப்பது செல்லாது. பலனளிக்காது. அவள் ''தத்தம் ''கொடுக் காமல், அர்க்யம் விடாமல் உணவு உண்ண முடியாது. இதெல்லாம் பெண்களுக்கு இருந்த உரிமையை நிரூபிக்கிறது.
பூணல் இடது தோள்வழியாக வலது பக்கம் உடலில் இருப்பது எப்போதும். பித்ரு கடன் செய்யும்போது வலது தோளிலிருந்து இடது பக்கம் போட்டுக் கொள்வது வழக்கம். பூணலின் நீளம் தொப்புளுக்கு கீழே போவது உசித மல்ல. தொப்புளுக்கு மேலே இருந்தால் ஆயுள் க்ஷீணம். ஆயுள் குறைவு. கிழக்கு அல்லது வடக்கு பார்த்து தான் உட்கார்ந்து பூணல் போட்டுக்கொள்வது வழக்கம்.
இதெல்லாம் மறந்துவிட்டு பூணலால் ஒரே உபயோகம் முதுகை சொறிந்து கொள்வது என்பது ரொம்ப தப்பு ஸார்.
No comments:
Post a Comment