உமையாள் புரம் அருகே நிறைய கோண்டு எனும் கோதண்டராமன் அப்பா தாத்தா வைத்த நிறைய நிலம், சொத்து எல்லாவற்றையும் பொறுப்பாக கஷ்டப்பட்டு புகையிலை, குடி, பீடி சிகரெட்டு, சீட்டுலே பாதிக்கு மேலே அழித்தான் . மீதியை அவன் பிள்ளை ராமுவுக்கு விட்டுவிட்டான். 51வயதில் ஒருநாள் வில் வண்டி கட்டிக்கொண்டு கும்பகோணம் போறேன் என்று சொன்னவன் போய்ட்டு ''வரேன்'' என்று ஏனோ சொல்லவில்லை. அவன் உறவினள் உமா வீட்டு கல்யாண சாப்பாட் டுக்குப் பிறகு கோண்டு வுக்கு எள்ளும் தண்ணீரும் தான் ஆகாரமாக போய்விட்டது. காவிரிக்கரையில் எரித்துவிட்டார்கள்.
மதத்துக்கு மதம் வழக்கங்கள் பழக்கங்கள் நம்பிக்கைகள் வித்தியாசப்படுகிறது. உடல்கள் சிலரால் புதைக்கப்பட்டாலும் அநேகரால் எரிக்கப்படுகிறது. நான் மஹாபாரத கதைகள் எழுதும்போது யக்ஷப்ரஸ்னம் அத்தியாயத்தில் தர்மனை யக்ஷன் ஒரு கேள்வி கேட்பதை எழுதினது நினைவுக்கு வருகிறது. :
''யுதிஷ்டிரா தெரிந்தால் சொல், உலகத்திலேயே எது பெரிய அதிசயம்?''
''ஒவ்வொருநாளும் எண்ணற்ற மனிதர்கள் திடீரென்று மரணமடைகிறார்கள் என்று தெரிந்தும் உயிரோடு இருப்பவர்கள் தாங்கள் என்றும் நிரந்தரமாக நிலைத்து வாழவேண்டும் என்று ஆசைப்படுவது மிகப்பெரிய ஆச்சர்யம் அதிசயம் ''
மரணத்தை எவனும் நினைத்துப் பார்க்கக்கூட விரும்புவதில்லை. அதைப் பற்றி பேசமாட்டான். பயம் தான் காரணம். எதற்கு பயம்? தனக்கு விருப்பமான, சுற்றம், உறவு, வீடு, வாசல், பணம் எல்லாவற்றையும் இழந்து வெறும் கையோடு, வந்தது போல், போக யாருக்காவது பிடிக்குமா?.
அவனவன் செய்வினைக்கு தக்கபடி நரகமோ, ஸ்வர்க்கமோ அமையும். பிறகு மறு பிறப்பு . கோண்டு என்று எல்லோரும் அழைத்த அந்த உடல் தான் எரிந்து மறைந்தது. ஆத்மாவுக்கு எந்த பெயரும் இல்லை. மரணமும் இல்லை. ஒரு கூடு விட்டு இன்னொரு கூட்டுக்கு, , உடலுக்கு செல்லும். அவ்வளவுதான். அது கடைசியாக ஒட்டிக் கொண்டிருந்த உடலின் தொடர்பு அந்த உடலை எரித்தவுடன் நின்று போனது.
எரிப்பதற்கு காரணம் ஹிந்துக்களுக்கு அக்னி புனிதமானது. சுத்தமானது. நெய் , வாசனை திரவியங்கள், சந்தன மரம், அழுக்கு, குப்பை எல்லாம் அதற்கு ஒன்றே. எல்லாவற்றையும் அழித்து வெண்ணிற சாம்பலாக்கும். சுப, அசுப காரியம் எதிலும் அக்னி உண்டு. எரித்த பின் பதினோறு நாள் காரியத்தில் கோண்டுவின் ஆவி போய்ச்சேர வேண்டிய இடத்துக்குபோக தேவையானவற்றை அவனது பிள்ளை ராமு வாத்தியாரை வைத்துக்கொண்டு மந்த்ரங்கள் மூலம் உதவினான். அந்த ஆவி முன்னோர்களுடன் சேர்ந்துகொண்டது. ' அட, நீங்கள் எல்லாம் இங்கே இருக்கீர்களா?''.
அக்னியை வேதத்தில் ''பெரிதுக்கும் சிறிதுக்கும் பாலம், உருவத்துக்கும் அருவத்துக்கும் இணைப்பு, காண்பதற்கும் காணாததற்கும் தொடர்பு, தெரிந்ததற்கும் தெரியாததற்கும் சேர்க்கை, மனிதனுக்கும் தெய்வத்துக்கும் இடையே லிங்க் என்று சொல்கிறது.
இன்னொரு காரணமும் சொல்வார்கள். ''அக்னி தேவா என் உடலை அர்ப்பணிக்கிறேன். அதை ஏற்றுக்கொண்டு என்னை சுத்தமாக்கி, என் ஆவியை இருட்டிலிருந்து வெளிச்சத்துக்கு கொண்டு செல். என் சூக்ஷ்ம சரீரம் மேலே செல்லட்டும். பித்ருக்களை அடையட்டும், தெய்வத்தை நாடட்டும்.''
உடல் அழுகி நாய், நரி , புழு, பூச்சி, கழுகு குதறி அலங்கோலப்பட்டு நாற்றத்தோடு சீரழியக்கூடாது என்கிற நோக்கோடு, மரியாதையுடன் மதிப்போடு எரிக்கிறோம் . சந்ததிகள் இல்லாத துறவிகள், யோகிகள், தாமரை மலர் போல் அமர்ந்தகோலத்தில் சமாதியடைகிறார்கள்.
பௌதாயன சம்பிரதாயத்தில் கர்பிணிப்பெண்கள் இறந்தால் எரிக்கும் வழக்கம் இல்லை. புதைப்பார்கள் அல்லது ஓடும் நதியில் விட்டுவிடுவார்கள்.
பழங்கால எகிப்தியர்கள் இறந்தவன் ஆவி மீண்டும் உடலைத் தேடும் என்று நம்பி அதை பாதுகாத்தார்கள். அதோடு அதற்கு குடிக்க நீர், உணவு வைத்தார்கள்.அவற்றை ''மம்மிகள்'' என்று பார்க்கிறோம். இப்போது அப்படி செய்தால் எகிப்து பூராக எங்கு நோக்கினும் மம்மிகளாக தெரியுமே.
நாம் எல்லோரும் நம் வாழ்வில் ஒரு மரம் செடியாவது நடுபவர்கள். இயற்கைக்கு இது நம்மாலான சேவை.
மரணம் வயதாவதால் மட்டும் வருவதில்லை எந்த காரணத்தாலும் எப்போது வேண்டுமானாலும் நேரிடலாம்.
வியாதியஸ்தன் உடல் எரிக்கப்படுவதால் கிருமிகள் பரவ வாய்ப்பில்லை. ஹிந்துவின் நம்பிக்கைப்படி பஞ்ச பூதங்களிலிருந்து வந்த உடல் பஞ்சபூதங்களுடன் மீண்டும் சேர்கிறது.
இறந்தவனை நினைத்து அழுவதால் அவன் ஆவியின் புதுப்பயணம் தடைபடுகிறது என்கிறார்கள். மீண்டும் அது தனது பழைய உடலை நாடவேண்டிய அவசியம் இல்லை.புது உடல், புதிய வாழ்க்கை பாதையை நோக்கி செல்லட்டும். எரிப்பதால் அந்த பழைய உடல்மட்டுமல்ல அது சம்பந்தமான எல்லாமே இல்லாமல் போய் விடுகிறது. நதிக்கரைகளில் எரிக்கும் பழக்கம் நம் முன்னோருக்கு உண்டு. புண்யநதிகள் பாபத்தை கரைப்பவை என்று கருதுவதால் தான் இன்றும் காசிக்கும் கங்கைக்கும் உயிருடன் செல்கிறோம். உயிரை விடவும் காசிக்குப் போகிறவர்கள் இன்னும் இருக்கிறார்கள்.
No comments:
Post a Comment