இன்னும் மறக்கவில்லையே? J K SIVAN
வீட்டில் பூஜை பண்ணுகிறவர்களுக்கு தெரியும். மனதில் இனம்புரியாத ஒரு சந்தோஷம், நிறைவு இருக்கும். ஏன் தெரியுமா ? எந்த கடவுள்களை நாம் ஏற்று வரவேற்று உபசரித்து, அலங்கரித்து, ஆபரணம் வஸ்திரம் சமர்ப்பித்து, போற்றி, மலர் தூவி மந்திரம் சொல்லி நைவேத்தியம் படைத்து, ஆரத்தி காட்டுகிறோமோ அவர்கள் நம் சிறப்பு வி. ஐ .பி. விருந்தினர். அவர்களுக்கு உபசாரம் செய்வது நமக்கு சந்தோஷம் தருகிறது. அவர்களும் மகிழ்ந்து நமக்குத் தேவையா னதை அளிக்கிறார்கள். நாம் கேட்பதை அல்ல. நமக்கு என்ன கேட்கவேண்டும் என்றே இன்னும் தெரியவில்லையே?.
வீட்டுக்கு வரும் விருந்தினர்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், நமக்கு பரிசு கொண்டுவந்து தருகிறார்கள். அவர்களே இப்படி நடந்துகொள்ளும்போது சர்வ லோக நாயகன், நாயகி மனம் குளிர்ந்து, மகிழ்ந்து நம்மை ஆசிர்வதிக்க மாட்டார்களா?. அதனால் தான் நாம் உடலும் உள்ளமும் சுத்தத்தோடு பூஜை செய்வது. இதன் மஹிமை அருமை தெரியாதவர்களை பற்றி சிந்திக்கக்கூட நான் தயாரில்லை. அப்புறம் தானே வாக்கு வாதம்.
நமது முன்னோர்கள் பகவானுக்கு நாம் அளிக்கும் பதினாறு உபசாரங்களை அழகாக சொல்லி இருக்கிறார்கள். ஷோடச என்ற பதினாறு . உபசாரம் என்றால் தெரியும். சும்மா ஒரு லிஸ்ட் தருகிறேன். அவை என்ன என்று ஞாபகம் வரட்டுமே.
1.த்யானம். ஆவாஹனம் : கண்ணை மூடிக் கொண்டு மனதில் நாம் வணங்கும் உபச ரிக்கும் பகவானை முன் நிறுத்துவோம். வாங்கோ இங்கே என்று வரவேற்போம். மஞ்சளிலோ விக்ரஹத்திலோ அவரை ஆவாஹனம் செயகிறோம்.
2 ஆசனம்: நமது வீட்டில் எது இருக்கிறதோ இல்லையோ, வரவேற்பு அறை என்று சின்ன தாகவாவது ரெண்டு நாற் காலியோடு இருக்கும். வசதி இருக்கும் இடத்தில் பெரிய திண்டு திண்டு குண்டு குண்டு சோபாக்கள். எங்கள் வீட்டில் வெகுநாள் ஒரு ஸ்டூல் தான் இருந்தது. வந்தவர் அதில் உட்கார என் அப்பா நிற்பார்.
3.& 4. பாத்யம்:/அர்க்கியம்: வீட்டுக்கு வந்தவர்க்கு சூடா காப்பியா, ஜில்லுனு மோரா? எது சாப்பிடறேள்? என்று கேட்போம். இப்போது அவருக்கு கை கால் அலம்ப ஜலம் . கொரோனா காலமாச்சே ? பகவானுக்கு வீட்டுக்கு வந்தால் கை கால் அலம்ப அந்த காலத்திலேயே ஜலம் அர்ப்பணித்தார்கள்.
5. ஆசமனம்: மூன்று சிறு சொட்டுக்கள் அச்சுதன் பெயரைச் சொல்லி, வாயில் உதடுகளை துடைத்துக் கொள்ள அளிப்பது. இதுவும் சுகாதார அடிப்படையில் மட்டும் அல்ல. மந்திரங்கள் நல்ல வார்த்தைகள் சொல்லும் முன் நாக்கை, உதடை சுத்தப்ப டுத்திக் கொள்ள, ''சிலர் பேசும்போது ''டே அப்படி சொல்லாதே அவனைப்பத்தி, முதலில் வாயைக் கழுவு'' என்கிறோமே.
6. மதுபர்க்கம் - பருக இனிப்பாக ஏதாவது விருந்தாளிக்கு அளிக்கிறோமே . இனிப்பாக பாலோடு தேன் சேர்த்து பகவானுக்கு அளிப்பது.
7. ஸ்நானம்-- . பூஜை அறைக்குள் குளிக்காமல் செல்லும் பழக்கம் நிறைய வீடுகளில் இப்போது உள்ளது. கோவிலுக்கு குளிக்காமல் செல்வோமா? நமது பூஜை அறை சின்ன பிரத்யேக கோவில். பகவானுக்கு ஸ்னானம் செய்விக்க ஜலம் அர்பணிப்பது சம்ப்ரதாயம்.
8. வஸ்திரம், உபவீதம், -- புது வஸ்திரம், சுத்தமான வஸ்திரம், பூணல் ஆகியவற்றை அளிப்பது ஒரு உபசாரம். விசேஷங்க ளில் புது பூணல் நாம் மாற்றிக்கொள்வது பரிசுத்தமாக்கிக் கொள்ள.
9. & 10. கந்தம/தூபம் --- நறுமண ஊதுபத்தி, தசாங்கம், அகில், சந்தனம் , சாம்பிராணி போன்ற வாசனை பொருள்களை அளித்தால் அந்த பக்கம் வந்தாலே ஒரு தெய்வீக மணம் வீசும். இது நம் உடம்பில் போட்டுக்கொள்ளும் அத்தர் புனுகு, ஜவ்வாது சென்ட் வாசனை அல்ல.
11. புஷ்பம் -- இருக்கவே இருக்கிறது துளசி, வில்வம், மல்லிகை, சாமந்தி, நந்தியாவட்டை, பவளமல்லி இதழ்கள். இவற்றால் அலங் கரித்து, அர்ச்சனை.
12. தீபம் --- பெரிய பூஜை அறை இல்லா விட்டாலும் ஒரு சிறு பிரையோ, ஒரு சிறு மேஜை, ஸ்டூல் மேலேயே, ஒரு பலகை மேலேயோ, ஒரு சிறு படத்தை வைத்து மலர் அணிவித்து அகல் விளக்கு ஏற்றினாலும் போதும். சாந்நித்யம் வந்துவிடும் . நெய் தீபம் விசேஷம்.
13. நைவேத்தியம் --- நம் வீட்டுக்கு வந்தவருக்கு நாம் வெங்காயம், பாகற்காய், உருளை, பாயசம், அப்பளம், என்று ஏதாவது ருசியாக சமைத்து சாப்பிட வைக்கிறோம். அதை விருந்து என்கிறோம். பகவானுக்கு அதெல்லாம் ஒன்றுமே வேண்டாம், ஒரு காய்ந்த இல்லை, ஒரு உத்ரணி, துளி சுத்த ஜலம், ஏதாவது ஒரு கனி, ஒரே ஒரு காய்ந்த திராக்ஷை கூட போதும். திருப்தியாக நாம் அளிப்பதை ஏற்றுக்கொள்வான். வீடுகளில் குளித்துவிட்டு சமைத்த சாதம், துளி பருப்பு, நெய்யுடன், நைவேத்தியம் செய்து விட்டு காக்கைக்கு போட்டுவிட்டு பிறகு சாப்பிடு கிறோம். சாதம் ப்ரசாதமாகிறது. காலையில் காப்பிக்கு சுடவைக்கும் பாலில் சிறிது தனியாக எடுத்துவைத்து நைவேத்யம் பண்ணிவிட்டு பிறகு காப்பி சாப்பிடும் பழக்கம் உண்டு. நாம் என்ன சாப்பிடுகிறோமோ அதுவாக நாம் ஆகிவிடுகிறோம் என்பதால் தான் பலர் லாகிரி வஸ்துக்களை, பூண்டு, வெங்காயம், சில காய்கறிகளை உபயோ கிக்கவில்லை. சாத்வீக உணவு மனதை தெளிவாக்கும்.
14. தாம்பூலம் -- வீட்டுக்கு வந்தவர்களுக்கு சாப்பிட்ட பிறகு வெற்றிலை பாக்கு பழம் தட்டில் வைத்து அளிப்பது ராஜ மரியாதை. நம் வீட்டுக்கு நாம் அழைத்த சர்வேஸ்வரன், சர்வேஸ்வரிக்கு தாம்பூலம் அளிக்க வேண்டாமா?
15.ஆரத்தி -- கற்பூர ஹாரத்திக்காக காத்தி ருந்து கன்னத்தில் போட்டுக்கொள்ளும் பக்தர்கள் இன்னும் எண்ணிக்கையில் குறையவில்லை. வந்த விருந்தாளிக்கு உத்தரவு கொடுக்கவேண்டும். வந்தவரை வாசல் வரை சென்று வழியனுப்புகிறோம். நாம் ஆரத்தி பாடல்கள் பாடி மனநிறைவோடு அவரிடம் இருந்து விடை பெறுகிறோம்.
16. மந்த்ரபுஷ்பம் --- மனித விருந்தாளிக்கு இல்லாத உபச்சாரம் இது. மந்த்ரங்களை புஷ்பங்களாக அளித்து வாழ்த்தி வணங்குவது. ப்ரதக்ஷிணம் வந்து நமஸ்கரித்து ஆசி வேண்டுதல், பெறுதல்.
எத்தனையோ தலைமுறைகளாக வந்த இந்த பழக்கம் நின்று போக விடக்கூடாது. நாளையே சிலர் ஆரம்பிக்கலாம். குடும்பத்தினர் அனை வரும் இந்த சிறு வழிபாட்டில் கலந்து கொள்ளவேண்டும். ஒவ்வொருவரும் புஷ்பம் போட்டு வேண்டிக்கொள்வது.
மனசை சுத்தமாக்க இந்த வழிபாடு அவசியம். சித்தமலம் தெளிவித்து சிவமாக்கிவிடும். முன்னோர்கள் சந்தோஷமாகவே வாழ்ந் தார்கள். அவர்கள் அடிச்சுவட்டில் நடப்பது நல்லதே. கடவுள் நம்பிக்கை தன்னம்பிக் கையை வளர்க்கும். நமது சனாதன தர்மத்தில் ''லோகா சமஸ்தா சுகினோ பவந்து '' ஒரு அற்புதமான பரந்த மனப்பான்மை. எல்லோ ரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே'' வேறெந்த மத வழிபாட்டிலும் இருப்பதை அறியேன். இருந்தால் ரொம்ப சந்தோஷம்.
No comments:
Post a Comment