ஹிந்துக்கள் வணங்கும், வழிபடும், ஒரு கண்கண்ட மஹான், ஜீவன் முக்தர் பெயர் சொல்லவேண்டுமானால் கண்ணை மூடிக்கொண்டு ஸ்ரீ ராகவேந்திரர் என்று சொல்லிவிடலாம். இன்னும் பக்தர்கள் வாழ்வில் நம்பிக்கையோடு வருபவர்களுக்கு அளவிலா நல்ல முடிவுகளை, திருப்பங்களை அடைய வழிகாட்டும் நம்பிக்கை விளக்கு.
துங்கபத்திரை நதிக்கரையில் மந்த்ராலயா சென்றிருப்பவர்களுக்கு அந்த அனுபவம் எவ்வளவு ஆச்சர்யமானது என்று தெரியும். இருமுறை மந்த்ராலய தரிசனம் எனக்கு கிட்டியது என் பாக்யம்.
1671ல் , கிட்டத்தட்ட 350 வருஷங்கள் ஆகப்போகிறது, ராகவேந்திரர் ஜீவ சமாதி அடைந்து. தானே எங்கு சமாதி அடையவேண்டும் என்று தீர்மானித்து குழி தோண்டி தயார் செய்யச்சொல்லி, முன்பே குறிப்பிட்ட நாளைச் சொல்லி தன்னை எப்படி சமாதியில் பிரதிஷ்டை செய்யவேண்டும் என்று நாள், நேரம், எல்லாம் கணித்துக் கொடுத்தவர். அவ்வாறே, பிருந்தாவனத்தில் அமர்ந்து, இன்றும் கற்பக விருக்ஷமாக, காமதேனுவாக பக்தர்களுக்கு வேண்டியதை அருள்பாலிப்
பவர்.'' நான் இன்னும் எழுநூறு வருஷங்கள் உங்களுக்காக இங்கே இருக்கிறேன்'' என்று சொன்னவர். நமக்கு அப்புறம் ஏழெட்டு தலைமுறைக்கு கூட இந்த பாக்யம் இருக்கிறது. நாம் கொடுத்து வைத்தவர்கள்.
கலியுகக் கடவுளாக திருப்பதி வேங்கடேசன் கோடிக்கணக்கான பக்தர்களை கவர்பவன். அதேபோல் மஹானாக ராகவேந்திரர். அவர் பெயரும் வேங்கடநாதன் தான். அவரது பெற்றோர்கள் திருப்பதி வெங்கடாசலபதி பக்தர்கள். அவருடைய முந்தைய பிறப்புகளில் ஒன்றில் அவர் சதுர்முக ப்ரம்மாவின் சீடர்களில் ஒருவராக மகாவிஷ்ணுவுக்கு தினமும் பூஜை செய்தவர். பக்த ப்ரஹலாதனின் மறுபிறப்பு. மாத்வர்கள் நிறையபேருக்கு ப்ரஹ்லாத ராவ் என்ற பெயர் உண்டு. என்னோடு எட்டாவது வகுப்பில் நுங்கம்பாக்கத்தில் படித்த C.K ப்ரஹ்லாத் என்ற ஜட்ஜ் கிருஷ்ணா ராவ் மகன், மிகப்பெரிய நிர்வாக திறமை கொண்ட பொருளாதார நிபுணன், MANAGAMENT GURU என்ற புகழோடு பல புத்தகங்கள் எழுதி அமெரிக்காவில் வாழ்ந்து மறைந்தவன்.
ராகவேந்திரர் கிருஷ்ணதேவராயரின் குரு , வியாஸராயரின் அவதாரம் என்பார்கள்.
ஹிரண்யகசிபு எனும் ராக்ஷஸனுக்கு மகனாக பிறந்தும், பிரஹலாதன் கருவில் தாய் வயிற்றில் இருக்கும்போதே நாரதரின் உபதேசம் மூலம் நாராயண மஹத்வம் உணர்ந்தவர். ஹிரண்யனுக்கு நேர் மாறாக அவன் மனைவி கயாது விஷ்ணு பக்தை. நாரதர் அவளை சந்திக்கிறார். நிறைமாத கர்ப்பிணி அவள். கொடுங்கோலன், பொல்லாதவன், விஷ்ணு விரோதி கணவன். இந்த நேரத்தில் நாரதர் வரவு மனத்துக்கு இதமாக இருக்கிறது அவளுக்கு. வரவேற்று உபசரிக்கிறாள்.
''சுவாமி என் மனதுக்கு நிம்மதியாக, அமைதி பெற சில உபதேசங்கள் அருளுங்கள்'' என கேட்கிறாள் . சந்தர்ப்பத்தை நழுவ விடுவாரா நாரதர். அவள் வயிற்றில் வளரும் சிசுவுக்கும் கேட்கும்படியாக விஷ்ணுவின் நாராயண நாம மஹாத்மியத்தை விவரிக்கிறார் அஷ்டாக்ஷர மந்திரமான ''ஓம் நமோ நாராயணாய'' என்று உச்சரித்தால் பெறும் பலன்களை உபதேசிக்கிறார். வயிற்றுக்குள்ளே கேட்டுக்கொண்டிருந்த ப்ரஹ்லாதன் இந்த உபதேசத்தை கெட்டியாக மனதில் வாங்கிக்கொண்டதால் பின்னால் நரசிம்ம அவதாரம் நிகழ்கிறது. அந்த கதை உங்களுக்கு தெரியுமே. ராகவேந்திரர் ப்ரஹ்லாதனின் அவதாரம். அவர் குடும்பம் நாராயண னான பதிருப்பதி வெங்கடேசனை வழிபட்டதிலோ, ராகவேந்திரருக்கு பெற்றோர் ''வேங்கடநாதன்'' என்று பெயர் வைத்ததிலோ ஆச்சர்யம் இல்லை. ப்ரஹ்லாத வாசனை இல்லாமலா போகும்?
பழைய புராணங்கள், இதிஹாசங்களில் ''பாஹ்லிகர்''களைப் பற்றி வருகிறது. பிரம்மாண்ட புராணம் சக்ஷு எனும் நதி பஹலவஸ் (பாஹ்லிகர்கள்) எனும் மக்கள் வசிக்கும் தேசத்தின் வழியாக ஓடியது என்கிறது. டில்லியில் உள்ள இரும்பு ஸ்தூபத்தில் பாஹ்லிகர்கள் சிந்து நதியில் மேற்குப்புறம் வசித்ததாகவும் ராஜா சந்திரன் என்பவன் நதி தாண்டி அவர்களை வென்றான் என்கிறது.
இந்த பால்ஹிக வம்ச பால்ஹிக ராஜாவாக ப்ரஹ்லாதன் அடுத்தபிறவியில் அவதரித்து மஹாபாரத யுத்தத்தில் பாண்டவர்களுக்கு எதிராக பீஷ்மருக்கு உதவி பாண்டவர்களால் கொல்லப்பட்டான். பிறகு வியாசராஜராக பிறந்தவன். வியாசராஜரின் சிஷ்யன் புரந்தரதாசராக பிறந்தவர் நாரதர் என்பது புராணம். நாரதரும் ப்ரஹ்லாதனும் நம்மோடு பல பிறவிகளில் பூமியில் பிறந்தவர்கள்.
வியாசராஜர் விஜயநகர சாம்ராஜ்ய கிருஷ்ண தேவராயருக்கு குரு. பின்னர் ராகவேந்திரராக நமக்கு அவதரித்து அருள்பவர். வேங்கடநாதனாக இளம் வயதில் வறுமையில் வாடியவர் இன்று ஒவ்வொருநாளும் எண்ணற்றோருக்கு அன்னதானம் மந்த்ராலயத்தில் வழங்குகிறார். மேற்கொண்டு சொல்கிறேன்.
No comments:
Post a Comment